பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு விவகாரங்கள்-

ஒற்றையாட்சியை பாதுகாக்க முற்படும் சட்டத்தரணிகள் சங்கம்- கேள்வி எழுப்பத் தயங்கும் தமிழ்ச் சட்டத்தரணிகள்

எழுபது ஆண்டுகால இனப்பிரச்சினையே இன்றைய நெருக்கடியின் மூல காரணம் என்பதை மறுதலிக்கும் பரிந்துரைகள்
பதிப்பு: 2022 மே 09 10:12
புலம்: முல்லைத்தீவு
புதுப்பிப்பு: மே 13 11:40
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
பொருளாதார நெருக்கடி. விலைவாசி உயர்வுப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வைக் காணும் நோக்கில், சிங்களத் தலைமைகளை மையமாகக் கொண்ட இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம், மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடர்பாக எழும் கேள்விகள், சந்தேகங்கள் குறித்துத் தமிழ்ச் சட்டத்தரணிகள் அமைதியாக இருக்க முடியாதென்ற கருத்துக்கள் எழுந்துள்ளன. மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் உள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை நீக்க வேண்டுமென்ற பரிந்துரை மாத்திரம் தீர்வாகாது என்ற சட்ட வியாக்கியானங்களை வடக்குக் கிழக்குத் தமிழ்ச் சட்டத்தரணிகள் முன்வைக்க வேண்டும்.
 
எழுபது ஆண்டுகால இனப்பிரச்சினையும் முப்பது ஆண்டுகால போரின் பக்கவிளைவுகளுமே அதிகாரத் துஸ்பிரயோகம், ஊழல்மோசடிக்கு வழிவகுத்தது என்றால், அந்தப் பக்கவிளைவுகளுக்குத் தீர்வைக் காண முன்னர் மூலப் பிரச்சினையாகவுள்ள இனப்பிரச்சினைத் தீர்வுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்ற நியாயமான வாதங்களைத் தமிழ்ச் சட்டத்தரணிகள் முன்வைக்க வேண்டிய தருணம் இது

ஏனெனில் உடனடித் தீர்வுக்காக அமைக்கப்படவுள்ள இடைக்கால அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாகக் கொழும்பை மையமாகக் கொண்டியங்கும் இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்த பரிந்துரைகளில், இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பைச் சிறிய மாற்று ஏற்பாடுகளோடு (Small alternative arrangements) பாதுகாக்கும் அம்சங்கள் மாத்திரமே காணப்படுகின்றன.

குறிப்பாக அமைச்சரவையைக் கண்காணிக்கப் பதினொருபேர் கொண்ட ஆலோசனைக் குழு ஒன்றை அமைத்தல், அதுவும் மத்திய வங்கி ஆளுநர் உள்ளிட்ட முக்கியமான உயர் பதவிகளுக்குரிய நியமனங்களைச் செய்ய ஆலோசனை சபை ஒன்று அவசியம் என்ற தொனியில் அந்தப் பரிந்துரைகள் அமைந்துள்ளன.

கிட்டத்தட்ட இலங்கை ஒரு சிங்கள தேசம் என்ற அடிப்படைவாதத்துடன் பதின்மூன்று வகையான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக ஒற்றையாட்சியைப் பாதுகாக்கும் அரசியல் யாப்பின் அடி மூலமான நிறைவேற்று அதிகாரமுள்ள (Executive Power) ஜனாதிபதியின் அதிகாரங்களை 225 பேர் கொண்ட நாடாளுமன்றத்துக்குப் பாரப்படுத்துவது பிரதான அம்சமாகவுள்ளது.

அதாவது பௌத்த தேசிய இனவாதத்தை இயக்கும் சக்தி ஒன்று நாடாளுமன்ற முறைமை என்ற கருத்தியலுக்குள் பரவலாக்கம் செய்யப்படுகின்றதுபோல் தெரிகின்றது.

அதற்குரிய முன்னேற்பாடாகக் கோட்டாபய ராஜபக்சவினால் 2021 ஆம் ஆண்டு ரத்துச் செய்யப்பட்ட 19 ஆவது திருத்தச் சட்டத்தை மீளவும் புதுப்பித்து 21 ஆவது திருத்தச் சட்டமாக மீண்டும் கொண்டுவருவதற்கான முன்மொழிவுகளும் அந்த விதப்புரைகளில் உண்டு.

அதாவது ராஜபக்ச அரசாங்கம் கொண்டுவந்த 20 ஆவது திருத்தச் சட்டத்தை முற்றாக நீக்குவது என்ற பரிந்துரைகளாகும். ஆகவே அரச நிறுவனங்கள் சுயாதீனமாக இயங்கினால், ஊழல்மோசடி - அதிகாரத் துஸ்பிரயோகம் இடம்பெறாது என்ற நம்பிக்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் இந்தப் பரிந்துரைகளில் வெளிப்படையாகவே காண்பிக்கப்படுகின்றது.

ஆனால் எழுபது ஆண்டுகால இனப்பிரச்சினை, இனரீதியாக வகுக்கப்பட்ட பொருளாதாரத் திட்டங்கள்தான் இன்றைய நெருக்கடிக்கு மூல காரணம் (Root Cause) காரணம் என்ற வாசகங்களோ, அதற்குரிய தீர்வுமுறைகளோ பரிந்துரைக்கப்படவேயில்லை. அவை முற்றாகவே மறுத்துரைக்கப்பட்டிருக்கின்றன.

வெறுமனே ஊழல்மோசடி- அதிகாரத் துஸ்பிரயோகம் என்ற விவகாரம் மாத்திரம் முன்னிலைப்படுத்தப்பட்டு ஏற்கனவே நடைமுறையில் உள்ள பௌத்த சமயத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் இலங்கை ஒற்றையாட்சி அரசியல யாப்பில் சிறிய மாற்றமே இப் பரிந்துரைகளெனலாம்.

அதாவது நிறைவேற்று அதிகாரங்களை இடம்மாற்றிக் கூட்டுச் செயற்பாட்டின் மூலமானதொரு (Collaborative Mechanism) இன ஒடுக்கல் அரசியல் ஏற்பாட்டைக் கையாளக்கூடிய பொறிமுறை ஒன்றையே சட்டத்தரணிகள் சங்கம் பரிந்துரைத்திருக்கின்றது.

அதிகாரங்களை இடம் மாற்றி நாடாளுமன்றத்தின் மூலமாக இயங்கவைக்கப்படவுள்ள அந்தச் சட்டரீதியான ஏற்பாட்டில் கூட, தமிழ் - முஸ்லிம் மக்கள் தங்கள் நியாயமான அரசியல் கோரிக்கைகளை முன்வைக்கக்கூடிய அளவுக்கு இடம் கிடைக்க வாய்புகள் இருக்காது.

ஏனெனில் நாடாளுமன்றத்துக்கு நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியின் அதிகாரங்களை மாற்றினால், அங்கு பெரும்பான்மையாகவுள்ள சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களே அனைத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக மாறுவார்கள்.

அதாவது கட்சி அரசியல் ரீதியாக வெளியில் நின்று பச்சை பச்சையாகப் பேசிய இனவாத எண்ணங்கள் அனைத்துமே நாடாளுமன்றத்திற்குள் சட்டரீதியாக மாறும்.

அரச உயர் அதிகாரிகளை நியமனம் செய்யும் ஆணைக்குழுக்களில்கூட தமிழ் - முஸ்லிம்கள் அங்கம் வகிப்பதற்கான வாய்ப்புகள் இருக்காது. அப்படி ஒருவர் இருவர் நியமனம் பெற்றாலும், தீர்மானம் எடுக்கும் சக்தியாக சிங்கள உயர் அதிகாரங்களைக் கொண்ட அந்தச் சுயாதீன ஆணைக்குழு முழு அதிகாரத்தோடு செயற்படும் என்பது பட்டறிவு.

தமிழ்ச் சட்டத்தரணிகள் ஒன்றினைந்து இலங்கைச் சட்டத்தரணிகள் முன்வைத்துள்ள பரிந்துரையின் ஒற்றையாட்சித் தன்மை குறித்துக் கண்டனம் வெளியிட வேண்டும். இனப்பிரச்சினைத் தீர்வுக்கான யோசனைகளைப் பரிந்துரைத்து அமையவுள்ள இடைக்கால அரசாங்கத்தில் அதற்குரிய தீர்வை ஏன் கொண்டு வர முடியாது என்ற நியாயமான கேள்விகளை எழுப்ப வேண்டும்

சட்டத்தரணிகள் சங்கத்தின் இச் செயற்பாடானது கூட்டுச் செயற்பாட்டின் மூலமான இன ஒடுக்கல் முறை என்று வரையறை செய்ய முடியும். கொள்கை மற்றும் தீர்மானம் எடுக்கும் சக்திகளாக சிங்களவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட நாடாளுமன்றம் மாற்றமடையும்.

ஆகவே பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வுப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு அரசியல் யாப்பில் சிறிய மாற்றத்தைச் செய்ய முற்படும் சட்டத்தரணிகள் சங்கம், கடந்த எழுபது ஆண்டுகளாக சிங்கள அரசியல் தலைவர்கள் செய்த அதே அணுகுமுறையைத்தான் கையாளுகின்றதோ என்று யாரும் கேள்வி எழுப்பினால், அதில் மாற்றுக் கருத்திருக்காது.

அதாவது எந்தவொரு நெருக்கடிச் சூழல் இலங்கைத்தீவில் ஏற்பட்டாலும் சிங்களத் தேசியத்தைக் காப்பாற்றக்கூடிய எண்ணக் கருவுடனேயே அரசியல் யாப்பில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன என்பது கண்கூடு.

2004 ஆம் ஆண்டு சுனாமிப் பேரலை ஏற்பட்டபோது, வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு நிவாரணங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளை நேரடியாகச் செய்யும் நோக்கில் அமைக்கப்பட்ட பொதுக் கட்டமைப்பு பேரினவாத சக்திகளின் எதிர்ப்புக் காரணமாகக் கைவிடப்பட்டது.

கொழும்பை மையமாகக் கொண்ட நிதிக் கட்டமைப்பின் மூலமே வடக்குக் கிழக்குப் பகுதிகளுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டன. 1987 இல் இந்திய - இலங்கை ஒப்பந்தம் மூலம் வடக்குக் கிழக்குப் பிரதேசங்களுக்கு மாகாண சபை முறை உருவாக்கப்பட்டபோது, இலங்கைத்தீவின் ஏனைய பகுதிகளும் எட்டு மாகாணங்களாகப் பரிக்கப்பட்டு சிங்கள மக்கள் வாழும் பிரதேசங்களுக்கும் மாகாண சபை முறை உருவாக்கப்பட்டது.

ஆகவே ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் ஒற்றையாட்சி அரசியல் யாப்பைப் பாதுகாக்கும் நோக்குடனேயே சிங்கள அரசியல் தலைவர்கள் செயற்பட்டு வந்தனர்.

1980 ஆம் ஆண்டு ஜே.ஆர் முன்வைத்த மாவட்ட அபிவிருத்திச் சபை யோசனைகளில் இருந்து, இன்று இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ள பரிந்துரைகள் வரை ஒற்றையாட்சி என்ற கோட்பாட்டுப் பட்டியல் நீளுவதையே தமிழர்கள் காண்கிறார்கள்.

ஆகவே தற்போது அதே அணுகுமுறையில் இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கமும் செயற்படுகின்றது என்பது புதியதல்ல. தமது பரிந்துரைகள் தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட சிறிய கட்சிகளுடனும் சட்டத்தரணிகள் சங்கம் பேச்சு நடத்தியிருக்கிறது. இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசியதாகத் தெரியவில்லை. பேசுவதற்கான வாய்ப்புகள் இல்லாமலுமில்லை.

ஆகவே இந்த விடயம் தொடர்பாக வடக்குக் கிழக்குத் தமிழ்ச் சட்டத்தரணிகள் கேள்வி எழுப்ப வேண்டும். இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினர்களாக இருக்கும் தமிழ்ச் சட்டத்தரணிகள், புதிய பரிந்துரைகள் தொடர்பான எதிர்வினைகளை வெளிப்படுத்த வேண்டும்.

நிறைவேற்று அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்குப் பாரப்படுத்தும் அதேநேரம். வடக்குக் கிழக்குத் தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான அதிகாரப் பங்கீட்டு முறைகளும் பரிந்துரைகளில் உள்ளடக்கப்பட வேண்டும். இல்லையேல் கூட்டுச் செயற்பாட்டின் மூலமானதொரு (Collaborative Mechanism) இன ஒடுக்கல் முறையாகவே இப் பரிந்துரைகள் மாறும் அபாயமுள்ளது.

எழுபது ஆண்டுகால இனப்பிரச்சினையும் அதற்கான போரும் அதன் பின்னரான பன்னிரெண்டு ஆண்டுகால செயற்பாடுகளுமே இன்றைய பொருளாதார, விலைவாசி உயர்வுப் பிரச்சினைகளுக்கான மூல காரணம் என்பதை இதுவரை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட சிங்கள முற்போக்காளர்கள்கூட ஏற்றுக்கொண்டதாக இல்லை.

குறிப்பிட்ட சில சிங்களக் கல்வியாளர்கள் அவ்வாறு கூறினாலும், ராஜபக்ச குடும்பத்தைப் பதவியில் இருந்து இறக்கினால், அனைத்துப் பிரச்சினைகளும் முடிவுக்கு வந்துவிடும் என்ற பிழையானதொரு கற்பிதத்தையே சட்டத்தரணிகள் சங்கத்தின் இந்த முயற்சி கோடிட்டு காட்டுகின்றது.

கொழும்பில் அமெரிக்க போன்ற மேற்குலக நாடுகள், ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள்கூட சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாடியதாகக் கொழும்பு உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன. புவிசார் அரசியல் நோக்கில் மேற்குலக நாடுகளும் சீனாவும் இலங்கையை அணுகுகின்றன. அதற்கேற்பத் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குரிய தீர்வை முன்வைக்கவே அவர்களும் விரும்புகின்றனர்.

ஆனால் நீண்டகால இனப்பிரச்சினைக்குரிய தீர்வை முன்வைத்தால் மாத்திரமே இலங்கைத்தீவின் அனைத்துப் பிரச்சினைகளும் முடிவுக்கு வரும் என்ற அடிப்படை உண்மையை அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் பரிந்துரைக்கவில்லை. ஆனால் வெறுமனே மனித உரிமைப் பிரச்சினைகளாகக் காண்பித்து இலங்கை மக்களின் ஜனநாயகத்துக்கான போராட்டமாகவே சித்தரிக்கின்றன. இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல.

ஆகவே தமிழ்ச் சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து இலங்கைச் சட்டத்தரணிகள் முன்வைத்துள்ள பரிந்துரையின் ஒற்றையாட்சித் தன்மை குறித்துக் கண்டனம் வெளியிட வேண்டும். இனப்பிரச்சினைத் தீர்வுக்கான யோசனைகளைப் பரிந்துரைத்து அமையவுள்ள இடைக்கால அரசாங்கத்தில் அதற்குரிய தீர்வை ஏன் கொண்டு வர முடியாது என்ற நியாயமான கேள்விகளை எழுப்ப வேண்டும்.

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை நீக்கி, அரச உயர் அதிகாரிகளுக்கான நியமனங்களை வழங்குவதற்கான சுயாதீன ஆணைக்குழுக்கள் உள்ளிட்ட ஆலோசனை சபைகளையும், பதினெட்டு மாதங்களில் நாடாளுமன்றத்தில் அங்கீகரித்த பின்னர், பொதுத் தேர்தலுக்குச் செல்ல முடியுமென்றால். ஏன் இனப்பிரச்சினைக்கான நிரந்த அரசியல் தீர்வையும் அதில் உள்ளடக்க முடியாது என்ற கேள்வி நியாயமானதல்லவா?

சிங்கள அரசியல் கட்சிகள், சிங்கள அரசியல் தலைவர்களின் பிடியில் இருந்து இலங்கையின் ஒற்றையாட்சி அரசியல் யாப்பை பாதுகாப்புக்கும் முறைமை எப்படி மாற்றமடைந்து வருகின்றதோ, அதேபோன்றதொரு அரசியல் சூழ்நிலை தமிழ்ச் சட்டத்தரணிகள் மத்தியிலும் ஏற்பட வேண்டும். தமிழ்ச் சிவில் சமூக அமைப்புகளும் ஒன்றினைய வேண்டிய காலமிது

இடைக்கால அரசாங்கத்தினால், குறிப்பிட்ட பரிந்துரைகளை செய்ய முடியும் என்ற நம்பிக்கை சட்டத்தரணிகள் சங்கத்துக்கு இருக்குமானால். இலங்கைத்தீவின் முதுகெலும்புப் பிரச்சினையாகவுள்ள ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான தீர்வுக்கல்லவா முதலில் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்?

ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறை இருந்தாலும் ஒன்றுதான் நாடாளுமன்ற ஆட்சிமுறை இருந்தாலும் ஒன்றுதான்- இப் பரிந்துரை மூலம் இன ஒடுக்கல் கட்டமைப்பு இடம் மாற்றப்படுகின்றது என்ற எண்ணம் மாத்திரமே தமிழர்களின் மனதில் தோன்றுகின்றதே தவிர, சட்டத்தரணிகள் சங்கத்தின் பரிந்துரை நிரந்தர அரசியல் தீர்வல்ல என்றே கருதுகின்றனர்.

ஆகவே எழுபது ஆண்டுகால இனப்பிரச்சினையும் முப்பது ஆண்டுகால போரின் பக்கவிளைவுகளுமே அதிகாரத் துஸ்பிரயோகம், ஊழல்மோசடிக்கு வழிவகுத்தது என்றால், அந்தப் பக்கவிளைவுகளுக்குத் தீர்வைக் காண முன்னர் மூலப் பிரச்சினையாகவுள்ள இனப்பிரச்சினைத் தீர்வுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்ற நியாயமான வாதங்களைத் தமிழ்ச் சட்டத்தரணிகள் முன்வைக்க வேண்டிய தருணம் இது.

2009 இற்குப் பின்னரான அரசியல் சூழலில் தமிழ்த்தேசியக் கட்சிகள் விட்ட அதே தவறை வடக்குக் கிழக்குத் தமிழ்ச் சட்டத்தரணிகளும் செய்யக்கூடாது-

பிரதான சிங்கள அரசியல் கட்சிகள், சிங்கள அரசியல் தலைவர்களின் பிடியில் இருந்து இலங்கையின் ஒற்றையாட்சி அரசியல் யாப்பை பாதுகாக்கும் முறைமை எப்படி மாற்றமடைந்து வருகின்றதோ, அதேபோன்றதொரு அரசியல் சூழ்நிலை தமிழ்ச் சட்டத்தரணிகள் மத்தியிலும் ஏற்பட வேண்டும். தமிழ்ச் சிவில் சமூக அமைப்புகளும் ஒன்றிணைய வேண்டிய காலமிது.