பொருளாதார நெருக்கடியின் பின்னரான பௌத்ததேசம்-

மீள் எழுச்சி பெறப்போகும் சிங்கள மேட்டுக்குடி அரசியல்- சர்வதேச அரங்கில் மீண்டும் தமிழ்த்தேசத்துக்கு வரப்போகும் ஆபத்து

சுயநிர்ணய உரிமைக்கான கூட்டுச் சிந்தனையைக் கட்டமைக்க வேண்டிய தமிழர்தரப்பு
பதிப்பு: 2022 மே 21 21:05
புலம்: முல்லைத்தீவு
புதுப்பிப்பு: மே 22 23:54
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வுப் பிரச்சினைகளுக்குப் பதவியில் இருந்த அனைத்து சிங்கள ஆட்சியாளர்களும் பொறுப்பேற்க வேண்டுமென்ற கருத்துக்களை மறுத்துரைக்க முடியாது. ஊழல்மோசடி, அதிகாரத் துஷ்பிரயோகம் நீடிப்பதற்கும் அவை இலங்கை அரசின் ஒரு பகுதிபோன்று மாறுவதற்கும் முப்பது ஆண்டுகால போர் வழிவகுத்து என்பதே மூல காரணம். ஆனால் இதனைச் சிங்கள அரசியல் தலைவர்களும், சிங்கள முற்போக்குவாதிகள் பலரும் ஏற்க மறுத்துள்ளதொரு சூழலில் சிங்களச் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களின் ஆதரவுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தனது முற்கால அரசியல் நகர்வுகளை நியாயப்படுத்தும் செயற்பாடுகளில் சமீபகாலமாக ஈடுபட்டு வருகின்றார். எழுபது வருடகால இனப்பிரச்சினை மடைமாற்றப்படுகின்றது.
 
விழிப்படைதல் என்பது வெறுமனே கோசங்கள், மேடைப் பேச்சுக்கள் அல்ல. ஈழத்தமிழர்களின் இறைமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டுமென்ற அழுத்தம் திருத்தமான கோரிக்கைகள் ஒருமித்த குரலில் பலமாக எழவேண்டும். அதற்கான கூட்டுச் சிந்தனைகளைக் கட்டமைக்கப்பட வேண்டும்

வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில், சென்ற ஒன்பதாம் திகதி இடம்பெற்ற வன்முறைகள் பற்றி விவாதித்த அரசதரப்பு எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் 1983 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் மீது ஐக்கிய தேசியக் கட்சி நடத்த்திய தாக்குதல்கள், ராஜபக்ச அரசாங்கம் தமிழர்கள் மீது நடத்திய தாக்குதல்கள் பற்றி ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தினர்.

ஆனால் எழுபது வருடகால இனப்பிரச்சினைதான் இந்த நெருக்கடிக்குக் காரணம் என்று எவருமே கூறவில்லை. அதனை ஏற்கும் மன நிலையில் சிங்கள அரசியல்வாதிகள் எவருமே இல்லை என்பதும் பட்டவர்த்தனம்.

இந்தவொரு நிலையிலேதான் சந்திரிகா மீண்டும் தன்னை சமாதானத் தூதுவர்போன்று காண்பிக்க முற்படுகின்றார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் மகிந்த ராஜபக்சவின் நம்பிக்கைக்குரியவராகவும் இருந்த மைத்திரிபால சிறிசேனவை, 2014 ஆம் ஆண்டு நவம்பரில் ரணில் விக்கிரமசிங்கவோடு இணைந்து, எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக நியமித்ததில் இருந்து சந்திரிகாவின் அரசியல் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பித்திருந்தன.

ஆனால் 2015 ஜனவரியில் மைத்திரி- ரணில் அரசாங்கம் உருவாக்கப்பட்ட நோக்கம் நிறைவேறவில்லை.

இருந்தாலும் ரணில் விக்கிரமசிங்கவோடு சந்திரிகா தொடர்ந்து பயணித்து வருகின்றார். தற்போதைய நெருக்கடிச் சூழலில் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்றதன் பின்னணியில் சந்திரிகாவினுடைய மறைமுக வகிபாகம் உண்டு.

இலங்கை ஒற்றையாட்சித் தன்மை, அதன் அரசியல் யாப்புச் சட்டங்களை அப்படியே பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனை சந்திரிகாவின் அடிப்படைக் கொள்கையாகும். அதற்காக ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்குரிய குறைந்தபட்சத் தீர்வை முன்வைக்க வேண்டியதொரு கட்டாயச் சூழலை சந்திரிகாவினால் நிராகரிக்கவும் முடியவில்லை.

இதே நிலைப்பாட்டில் தான் ரணில் விக்கிரமசிங்கவும் செயற்படுகின்றார் என்பது பகிரங்கம். அதாவது ராஜபக்ச குடும்பம் ஏற்படுத்திய இந்த அவல நிலைமை என்பது இலங்கையின் இறைமைக்குச் சர்வதேச மட்டத்தில் அபகீர்த்தி என்பதோடு, தமிழர்கள் முன்னிலையிலும் சிங்களச் சமூகம் தலைகுனிந்துள்ளது என்ற உணர்வு சந்திரிகா, ரணில் ஆகிய இருவரிடமும் மேலோங்கியுள்ளதையே சமீபகாலச் செயற்பாடுகள் காண்பிக்கின்றன.

ஆகவே வரலாற்றை மீட்டிப் பார்ப்போமாக இருந்தால், ரணில் தலைமை வகிக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சியும் சந்திரிகாவிடம் இருந்து பறிபோன, ஆனால் மீட்டெடுக்க முற்பட்டுக் கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுமே இனிவரும் காலங்களில் மாறி மாறி ஆட்சியமைக்கும் சாத்தியங்கள் தென்படுகின்றன.

அதாவது 2005 ஆம் ஆண்டில் இருந்து வெளிக்கிளம்பிய ராஜபக்ச குடும்ப ஆட்சி முறை நீக்கம் செய்யப்பட்டு இலங்கை சுதந்திரமடைந்த 1948 இல் இருந்து 2004 ஆம் ஆண்டு வரையான சந்திரிகாவின் ஆட்சி நிலவியது வரையும் காணப்பட்ட சிங்கள மேட்டுக்குடி அரசியல் நீரோட்டம் மீளவும் எழுச்சி பெறும் நிலை உருவாகி வருகின்றது.

இந்த அணுகுமுறை 2009 இற்குப் பின்னரான சூழலில், சர்வதேசத்தில் இருக்கும் ஈழத்தமிழர் தொடர்பான அற்சொற்ப ஆதரவுத் தளத்தையும் நீக்கம் செய்யக்கூடிய சந்தர்ப்பத்தையே அதிகரிக்கும்

அப்படிப் பார்ப்போமாக இருந்தால் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வுப் பிரச்சினைகளுக்கு யார் காரணம் என்பதும், ஊழல்மோசடி, அதிகாரத் துஸ்பிரயோகம் போன்றவை எங்கிருந்து ஆரம்பித்தது அல்லது அதற்குக் காரண கர்த்தாக்கள் யார் என்ற விபரங்களையும் அறிந்துகொள்ள முடியும்.

ஐக்கிய தேசியக் கட்சி 17 ஆண்டுகள் செய்த படுகொலை, அதிகாரத் துஸ்பிரயோகம், ஊழல்மோசடி ஆகியவற்றை விசாரணை செய்து தண்டிப்பேன் என்று 1994 ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற தேர்தலில் பிரச்சாரம் செய்தவர் தான் சந்திரிகா. மக்களைக் கொலை செய்த ஐக்கிய தேசியக் கட்சியை முற்று முழுதாக அழிப்பேன் என்றும் அன்று சபதம் எடுத்திருந்தார்.

அப்போது ஐக்கியதேசியக் கட்சியின் ஆட்சியில் ஜனாதிபதியாக இருந்த பிறேமதாச 1993 இல் கொல்லப்பட்டதால், பிரதமராகப் பதவி வகித்திருந்த டி.பி.விஜயதுங்க ஜனாதிபதியாக இருந்தார். அவர் 3 ரூபா 10 சதமாக இருந்த ஒரு றாத்தல் பாணை 5 ரூபாவாக உயர்த்தினார்.

பாண் விலையைக் குறைப்பேன் என்று சந்திரிகா தேர்தல் பிரச்சாரத்தின்போது மார் தட்டினார். சிங்களவர்கள் மரம் என்றும் அதனைச் சுற்றியுள்ள செடி கொடிகள்தான் தமிழர்கள் முஸ்லிம்கள் என்றும் அப்போதைய ஜனாதிபதி விஜதுங்க, மேடைப் பேச்சொன்றில் ஏதோ தெரியாமல் வாய்தடுமாறிச் சொல்லிவிட்டார்.

ஆனால் அந்த வசனத்தைப் பயன்படுத்திச் சந்திரிகா வடக்குக் கிழக்கு, மலையகத்தில் செய்த பிரச்சாரம் நன்றாகச் சூடு பிடித்தது. சந்திரிகா மீட்பர் என்று தமிழர்களும் நம்பினர்.

தேர்தலில் வெற்றிபெற்று பிரதமரானார் சந்திரிகா. பாணின் விலையை மீண்டும் மூன்று ரூபா 10 சதத்திற்குக் குறைத்தார்.

அடுத்து நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் இதே பிரச்சாரத்தை வேகமாகத் தொடர்ந்தார். இலங்கை வரலாற்றில் 64 சதவீத வாக்குகளில் முதன் முறையாக வெற்றிபெற்ற ஜனாதிபதி என்ற பெயரையும் சம்பாதித்தார்.

வடக்குக் கிழக்குத் தமிழர்கள் சந்திரிகாவை இந்திரா காந்தியின் தரத்துக்கு மதித்தனர். நம்பினர்.

வெற்றி பெற்று ஜனாதிபதியாகப் பதவியேற்றார். ஆனால் மூன்று மாதங்களில் பாணின் விலை மீண்டும் 5 ரூபாவாக உயர்ந்தது. ஐக்கிய தேசியக் கட்சி மீதான விசாரணை எதுவுமே நடத்தப்படவில்லை. 1995 ஆம் ஆண்டு ஏப்ரலில் மீண்டும் போர் ஆரம்பிக்கப்பட்டது.

முதன் முதலாக அரசியலில் 1993 ஆம் ஆண்டு கால் பதித்து ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சர் பதவியை ஏற்றவர்தான் இந்தச் சந்திரிகா.

அந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் போதாது என்றும் இனப்பிரச்சினைக்கு 13 ஆவது திருத்தச் சட்டம் தீர்வல்ல என்றும் பிரச்சார மேடைகளில் முழங்கினார். அது மாத்திரமல்ல, 1987 இல் மாகாண சபை முறையைப் புலிகள் நிராகரித்தமை சரியான நடவடிக்கை என்றும் புகழ்ந்தார்.

இந்தப் பிரச்சார வேகத்துடன் 1994 நவம்பரில் ஜனாதிபதியாகப் பதவியேற்ற சந்திரிகா, 1995 இல் ஏப்ரலில் மீண்டும் போர் ஆரம்பித்ததும் புதுடில்லிக்குச் சென்று புலிகளைப் பற்றித் திட்டித்தீர்த்தார்.

ராஜீவ் காந்தியைப் புலிகள்தான் கொலை செய்தார்கள் என்றும் இந்து நாளிதழுக்கு வழங்கிய நேர்காணலில் பகிரங்கமாகவே கூறினார்.

1995 இல் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியதும். யாழ்ப்பாணம் என்ற பெயரை யாப்பா பட்டுனே என்று சிங்களத்தில் மாற்றினார். அதற்கான கேடயத்தை பாதுகாப்பு அமைச்சராக இருந்த சந்திரிகாவினுடைய மாமனார் அனுருத்த ரத்தவத்த முப்படைகளின் தளபதி என்ற முறையில் சந்திரிகாவிடம் ஒப்படைத்தார்.

இந்த நிகழ்வு காலிமுகத்திடலில் நடைபெற்றபோது, கொழும்பில் சிங்களவர்கள் வெடிகொழுத்தி மகிழ்ந்தனர். குறிப்பாக வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி ஆகிய பிரதேசங்களில் வாழும் வடக்குக் கிழக்குத் தமிழர்கள் சிலரின் வீடுகளுக்குள் வெடி கொழுத்திப் போட்டனர்.

வர்த்தக நிலையங்களில் பணியாற்றிய மலையகத் தமிழ் இளைஞர்கள் நையைப் புடைக்கப்பட்டனர். இந்த வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட சந்திரிகா, சென்ற 18 ஆம் திகதி நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின்போது கொழும்பில் உள்ள தனது வீட்டில் தீபம் ஏற்றிவிட்டுத் தனது படத்துடன் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.

2009 இற்குப் பின்னரான சூழலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை மையப்படுத்திய தமிழரசுக் கட்சி அவ்வப்போது எடுத்த நிலைப்பாடுகளும் சிங்கள மேட்டுக்குடி அரசியலுக்கு ஒத்தூதலாம். ஆனால் தமிழ்த்தேசிய அரசியல் விடுதலைக்கு அந்த ஒத்தூதல் ஆபத்தானதே

ஈழத்தமிழர்கள் கோருகின்ற இன அழிப்புக்கான சர்வதேச விசாரணைக் கோரிக்கையை நீத்துப் போகச் செய்யும் முறையில். மக்கள் அழிப்பு போர் என்று சந்திரிகா சிங்கள மொழியில் பதிவிட்டிருந்தார். அதனை மில்லியன் கணக்கானோர் வாசித்திருக்கின்றனர்.

அந்தப் பதிவின் உள் அர்த்தம் என்னவென்றால், சிங்கள தமிழ் மக்கள் முப்பது வருட போரில் ஒருதரப்பை மறுதரப்பு மக்கள் அழிப்புச் செய்திருக்கின்றனர் என்பதே. ஆனால் அந்தப் பதிவைச் சில தமிழர்கள், தமிழ் மக்கள் மீதான இன அழிப்புப் போர் என்று சந்திரிகா தனது பதிவில் குறிப்பிட்டிருப்பதாகக் கூறிச் சமூகவலைத்தளங்களில் பெருமையாகப் பதிவிட்டிருந்தனர்.

ஆனால் அது தவறு.

சந்திரிகாவின் சிங்கள மொழியிலான பதிவை சமூகவலைத்தளத் தானியங்கி ஆங்கில மொழிபெயர்ப்பு ஜெனோசைட் என்ற சொல்லாக வெளிப்படுத்தியை அடையாளம் காணாது தவறாகப் புரிந்துகொண்ட தமிழர்களின் பதிவுகள் மீண்டும் அரசியலுக்குள் நுழைய வேண்டுமென்ற சந்திரிகாவின் விருப்பத்துக்கு உரம் ஊட்டுவதாவே அமைந்துள்ளன. ஆனால் தமிழ் இன அழிப்பு என்று சொல்வது சந்திரிகாவின் நோக்கம் அல்ல. பதிவின் கருத்தும் அப்படியல்ல.

ஈழத்தமிழர்களின் விவகாரத்தை 2009 இற்குப் பின்னரான சூழலில் சர்வதேச மட்டத்தில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்பது தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க எடுத்திருக்கும் அதே நிலைப்பாட்டையே சந்திரிகாவும் விரும்புகின்றார்.

ராஜபக்ச குடும்பம் நேரடியாக இனவாதத்தைத் தூண்டித் தமது பதவிகளைத் தக்கவைத்தது போலல்லாது, தமிழர்கள் நம்பக்கூடிய விதமான அணுகுமுறைகள் ஊடே புதிய நகர்வுகளை ரணில் - சந்திரிகா என்ற இரண்டு பிரதான அரசியல் தலைவர்களும் கையாண்டு வருகின்றனர்.

தற்போதைய பொருளாதார நெருக்கடி, ஊழல்மோசடி. அதிகாரத்து துஷ்பிரயோகம் மற்றும் இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டமை போன்றவற்றுக்கு ராஜபக்ச குடும்பமே காரணம் என்று கூறிப் பழியைச் சுமத்திவிட்டு, மீண்டும் ஐக்கிய தேசியக்கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அதாவது எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கா, டி.எஸ்.சேனநாயக்கா, ஜே.ஆர்.ஜயவர்த்தன என்ற சிங்கள மேட்டுக்குடி அரசியல் பண்பாட்டைக் கொண்டு வந்து அதற்குள் தமிழர்களையும் அமுக்கி, இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்பைப் புனிதப்படுத்தும் கைங்கரியங்களே மெதுவாக அரங்கேறி வருகின்றன.

இந்த அணுகுமுறை 2009இற்குப் பின்னரான சூழலில், சர்வதேசத்தில் இருக்கும் ஈழத்தமிழர் தொடர்பான அற்பசொற்ப ஆதரவுத் தளத்தையும் நீக்கம் செய்யக்கூடிய ஆபத்தையே அதிகரிக்கும்.

மகாநாயக்க தேரர்கள் ராஜபக்சவின் பௌத்ததேசியவாதச் செயற்பாட்டை விரும்பியிருந்தாலும், கொழும்பு, கண்டி பிரதேசங்களை மையப்படுத்திய சிங்கள மேட்டுக்குடி அரசியல் பண்பாட்டு முறை மீண்டும் புத்தெழுச்சி பெறுவதை ஏற்கும் மனநிலையும் மெதுவாக வெளிப்படுகின்றது.

ரணில் விக்கிரமசிங்கவோடு சந்திரிகா தொடர்ந்து பயணித்து வருகின்றார். தற்போதைய நெருக்கடிச் சூழலில் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்றதன் பின்னணியில் சந்திரிகாவினுடைய மறைமுக வகிபாகம் உண்டு

ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்ற பௌத்த பிக்குமார் சிலரின் கருத்துக்களும், சந்திரிகாவின் அணுகுமுறைகளும் அதனைப் புடம்போட்டுக் காண்பிக்கின்றன. இதன் பின்னணியிலேயே சஜித் பிரேமதசாவும் பிரதமர் பதவியைப் பெறமுடியாமல்போனது என்ற அரசியல் தகவல்களும் உண்டு.

அத்துடன் கடன்களை வழங்க சர்வதேச நாணய நிதியம் விதிக்கும் நிபந்தனைகளும் சிங்கள மேட்டுக்குடி அரசியல் பண்பாட்டுக்கு மெருகூட்டுவது போன்றே தெரிகின்றது. அடுத்து வரவுள்ள மூன்று அல்லது ஐந்து மாதங்களில், சந்திரிகா - ரணில் என்ற சிங்கள மேட்டுக்குடி ஆட்சிக்கு வழி திறக்கப்படும் ஏது நிலையும் தெரிகின்றது.

அதாவது ஐக்கிய தேசியக் கட்சியும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஆளும் கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் மாறி மாறி பதவி வகிக்கும் அரசியல் சூழல் உருவாகும் வாய்ப்புக்கள் தெரிகின்றன.

அழுத்தம் திருத்தமாகச் சொல்வதானால் 2004 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு முந்திய அரசியல் பின்னணிதான் இனிமேல் இலங்கை அரசியலில் நிலைபெறப் போகின்றது.

2009 இற்குப் பின்னரான சூழலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை மையப்படுத்திய தமிழரசுக் கட்சி அவ்வப்போது எடுத்த நிலைப்பாடுகளும் சிங்கள மேட்டுக்குடி அரசியலுக்கு ஒத்தூதலாம். ஆனால் தமிழ்த்தேசிய அரசியல் விடுதலைக்கு அந்த ஒத்தூதல் ஆபத்தானது. தமிழ்ச் சிவில் சமூக அமைப்புகள் விழிப்படைய வேண்டிய காலமிது.

விழிப்படைதல் என்பது வெறுமனே கோசங்கள், மேடைப் பேச்சுக்கள் அல்ல. ஈழத்தமிழர்களின் இறைமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டுமென்ற அழுத்தம் திருத்தமான கோரிக்கைகள் ஒருமித்த குரலில் பலமாக எழவேண்டும். அதற்கான கூட்டுச் சிந்தனைகளைக் கட்டமைப்பதே விழிப்படைதலாகும்.