தமிழகத்தில் வதை முகாம்

கருணைக் கொலை செய்துவிடுமாறு கேட்குமளவுக்குத் திருச்சி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் இளைஞர்களின் அவலம்

பெண்கள், குழந்தைகள், சிறுவா்களின் துயரநிலை- உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது
பதிப்பு: 2022 ஜூன் 08 08:45
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 08 23:01
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
#tamil
#nadu
தமிழ் நாடு திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு பகுதியில் உள்ள சிறப்பு முகாம் எனப்படும் மத்திய சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் இளைஞர்கள் பதினேழுபேர் இருபது நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கு விசாரணைகள் முடிவடைந்து விடுதலை செய்யப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்கள் பலர் தம்மை விடுதலை செய்து உறவினர்களுடன் சேர்ந்து வாழ அனுமதிக்குமாறு கோரியுள்ளனர். சிறப்பு முகாம் எனப்படும் வதை முகாம் அதிகாரிகள் தம்மைத் துன்புறுத்துவதாகவும், தேவையற்ற முறையில் ஒருவர் மீது பல வழக்குகளைத் தாக்கல் செய்து தொடர்ந்தும் தம்மைத் தடுத்து வைத்திருப்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ள இளைஞர்கள், வேதனை தாங்க முடியாததால் தங்களைக் கருணைக் கொலை செய்யுமாறும் கோரியுள்ளனர்.
 
நீதிமன்ற உத்தரவுகளையும் மீறித் தடுத்து வைக்கப்பட்டிருப்பது நீதிமன்றத்திற்குத் தெரியாது. தமது சட்டத்தரணிகள் வந்து தம்மைச் சந்திக்கவும் முடியாது. ஏதேனும் கையொப்பம் தேவையென்றால் மாத்திரமே சட்டத்தரணிகளை முகாமுக்கு உள்ளே வர அதிகாரிகள் அனுமதிக்கின்றனர்

சிறப்பு முகாம் என உலகத்துக்கு காண்பிக்கப்படும் இந்த வதை முகாமில் தமக்கு இழைக்கப்படும் அநீதிகள், அடிப்படை மனித உரிமை மீறல்கள் தொடர்பாகத் தமிழக அரசு உரிய முறையில் விசாரணை நடத்தத் தவறியுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் கண்ணீர்மல்க வேதனைப்பட்டனர்.

நூற்றி நான்கு ஈழத்தமிழ் இளைஞர்கள் சிறப்பு முகாம் எனக் கூறப்படும் வதை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 17 இளைஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உடல் நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கடுமையாகச் சுகவீனமடைந்த இரண்டு இளைஞர்கள் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வேறு சிலர் தூக்க மாத்திரைகளை உட்கொண்டதால் மயக்கமடைந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்க சுகாதார அதிகாரிகள் அக்கறை செலுத்தவில்லை. உடனடியாக வந்து பார்வையிடவுமில்லை.

அரச மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் உரிய முறையில் சிகிச்சையளிக்கப்படவில்லை என்றும், அதிகாரிகள் அசமந்தமாகச் செயற்படுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் அல்லது வேறு குற்றச் செயல்களில் ஈடுபட முற்பட்டவர்கள் என்று பொய்க் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியே தம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பல இளைஞர்கள் சுமார் பதினைந்து வருடங்களுக்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் கூறுகின்றனர்.

ஒரு வழக்கு விசாரணை முடிவடைந்தால், மீண்டும் வேறொரு பொய்யான குற்றத்தைச் சுமத்தி மற்றுமொரு வழக்குத் தாக்கல் செய்யப்படுவதாகவும், பின்னர் அந்த வழக்கு விசாரணை நான்கு வருடங்களுக்கும் மேலாக இழுபறி நிலையில் இருக்கும் எனவும் கூறியுள்ள இளைஞர்கள், வேறு பலருக்குப் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக குற்றப் பத்திரிகை எதுவுமே தாக்கல் செய்யப்படாமல் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டி வேதனைப்பட்டனர்.

புழல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது கடும் சித்திரவதைகளை எதிர்நோக்கியதாகவும் விடுதலை செய்யப்பட்ட பின்னர் மீண்டும் சிறப்பு முகாம் எனப்படும் இந்த வதை முகாமில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறிய இளைஞர் ஒருவர், தனது மனைவி பிள்ளைகளைச் சந்திக்க இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என்றும் கவலைப்பட்டார்.

மன நலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவரை நீதிபதி விடுதலை செய்தபோதும், அந்த இளைஞர் தொடர்ந்தும் சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் உறவினர் ஒருவர் தெரிவித்தார்.

குழந்தைகள், சிறுவர்கள் தங்கள் தாய்மாருடன் அகதி முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், அவர்கள் உணவுக்குக் கூடக் கஷ்டப்படுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் கூறுகின்றனர்.

ஒரு வழக்கு விசாரணை முடிவடைந்தால், மீண்டும் வேறொரு பொய்யான குற்றத்தைச் சுமத்தி மற்றுமொரு வழக்குத் தாக்கல் செய்யப்படுவதாகவும், பின்னர் அந்த வழக்கு இழுபறி நிலையில் இருக்கும் எனவும் கூறியுள்ள இளைஞர்கள், வேறு பலருக்குப் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக குற்றப் பத்திரிகை எதுவுமே தாக்கல் செய்யப்படாமல் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டி வேதனைப்பட்டனர்

மனைவி பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ அனுமதிக்குமாறு நீதிமன்றத்தில் கோரியபோது, அதற்குரிய ஏற்பாட்டைச் செய்யுமாறு நீதிபதிகள் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். ஆனால் அதிகாரிகள் வேறு காரணங்களைக் கூறிச் சிறப்பு முகாம் எனப்படும் வதை முகாமிலேயே தொடர்ந்தும் தடுத்து வைத்துள்ளனர்.

நீதிமன்ற உத்தரவுகளையும் மீறித் தடுத்து வைக்கப்பட்டிருப்பது நீதிமன்றத்திற்குத் தெரியாது. அத்துடன் தமது சட்டத்தரணிகள் வந்து தம்மைச் சந்திக்கவும் முடியாது. ஏதேனும் கையொப்பம் தேவையென்றால் மாத்திரமே சட்டத்தரணிகளை முகாமுக்கு உள்ளே வர அதிகாரிகள் அனுமதிக்கின்றனர் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் கூறுகின்றனா்.

'நாங்கள் ஈழத்தமிழர்கள் எங்களை ஏன் இங்கு தடுத்து வைத்திருக்கிறீர்கள். எங்களைத் தாயகத்துக்கு அனுப்பி விடுங்கள் நாங்கள் அங்கு சென்று வாழ்கின்றோம்' எனப் பலதடைவை கோரியும், எந்தவொரு அதிகாரிகளும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இளைஞர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

சிறப்பு முகாமில் தமக்கு இழைக்கப்படும் அநீதிகள் வெளியில் உள்ள தமிழக உயர் அரச அதிகாரிகள் பலருக்குத் தெரியாது. உயர் அதிகாரிகள் சிலர் முகாமைப் பார்வையிட வந்தாலும், முகாம் அதிகாரிகள் அவர்களுக்குப் பொய்களைக்கூறி அனுப்பிவிடுவார்கள்.

முகாமில் உள்ள அதிகாரிகளினால் தமக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து நீதிமன்ற விசாரணையின்போது வாய்விட்டு அழுது புலம்பி முறையிட்டாலும், முகாம் அதிகாரிகள் அதனை மறுத்து நீதிபதிகள் நம்பும் வகையில் பொய் கூறுவார்கள். முகாமில் சகல விதமான சொகுசு வசதிகளும் உண்டு என்றும் நீதிபதிகளிடம் பொய் சொல்வார்கள்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்களைப் போதைவஸ்த்துக் குற்றவாளிகள் போன்றே முகாம் அதிகாரிகள் நீதிமன்றத்தில் குற்றங்களைச் சுமத்துவார்கள். ஆனால் குற்றத்துக்குரிய ஆவணங்களை அவர்களினால் சமர்ப்பிக்க முடிவதில்லை.

2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலிலும், தமிழ் நாடு திருச்சி மாவட்டத்தில் உள்ள இந்த சிறப்பு முகாமில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் இளைஞர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமெனக் குரல் கொடுக்குமாறு ஊடகங்கள், பொதுமக்கள் மற்றும் தமிழ்த்தேசியக் கட்சிகளிடம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.