ஜெனீவாவில் பீரிஸ் உரையாற்றுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக, ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களுக்கான (OCHA) யின் பேச்சாளர் ஜென்ஸ் லார்க்கே (Jens Laerke), இலங்கைத்தீவு முழுமையான மனிதாபிமான அவலத்துக்குள் செல்லவுள்ளது என்று அச்சம் வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் இருபத்து இரண்டு மில்லியன் மக்கள், கடந்த ஏழு தசாப்தங்களில் இதுவரை கண்டிராத பொருளாதார அனர்த்தத்துக்குள் மாட்டித் தவிர்க்கின்றார்கள் என்று தெரிவித்த அவர், இந்த நிலை முழுமையான மனிதாபிமான அவலத்தை நோக்கி விரைந்து நகரக்கூடும் எனவும் எச்சரித்திருக்கிறார்.
ஜென்ஸ் லார்க்கேயின் எச்சரிக்கையும் ஜெனீவாவில் இருந்தே எழுந்துள்ளது.
ஐ. நா. மனிதாபிமான (humanitarian) வட்டாரங்களிலும் மனித உரிமைப் (human rights) பரப்பிலும் வெளிப்படும், வெளிப்படுத்தப்படும், கருத்துக்களின் 'காலசூசியை' தமிழர்கள் கூர்மையாக அவதானிக்கவேண்டும்.
47.2 மில்லியன் அமெரிக்க டொலர் மனிதாபிமான உதவியை கடுமையாகப் பாதிக்கப்பட்ட 1.7 மில்லியன் மக்களுக்கு, ஜூன் தொடக்கம் செப்ரெம்பர் வரையான நான்கு மாதங்களுக்கு, வழங்க ஐ.நா. தனது திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
ரணில் விக்கிரமசிங்க பிரதமராகிய மீள்வருகையோடு இத் திட்டங்களைச் சாதிக்கமுடியும் என்ற துணிவு ஏற்பட்ட பின்னரே இலங்கை மீதான சர்வதேசச் சாட்சியப் பொறிமுறையை முற்றாகத் துவம்சம் செய்துவிட வேண்டுமென்ற தொனியில் பீரிஸ் ஜெனீவாவில் பேசியிருக்கின்றார்.
அமெரிக்காவும் இந்தியாவும் சேர்ந்து ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் 'அலுவலகச் சாட்சியப் பொறிமுறையில்' இருந்து இலங்கையை விடுவித்து, அதற்குப் பதிலீடாகத் தமக்கு வேண்டிய கேந்திர நலன்களை அடைந்துகொள்வதற்கு உகந்த, புவிசார் அரசியற் பேரம் பேசலுக்கு ஏற்றதொரு தளமாக, ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைப் பொறிமுறையை எதிர்வரும் மாதங்களில் பயன்படுத்தும் வாய்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், சீனா தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மிசல் பசிலெட் மீது அமெரிக்கா கடும் அழுத்தங்களைப் பிரயோகிக்க ஆரம்பித்துள்ளது. இதனால் மனமுடைந்த அவர், தனது இரண்டாவது பதவிக்காலத்தைத் தொடரப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், இலங்கை தொடர்பான ஆணையாளரின் அலுவலகச் சாட்சியப் பொறிமுறை பெருத்த பின்னடைவைச் சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஐ.நா.வின் சிறிய உதவி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக, 2022 ஜனவரியில் இருந்து தற்போது வரை, இந்திய அரசு 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை காசற்றுப் போன இலங்கை அரசுக்கு 'ஆபத்பாந்த' உதவியாக வழங்கியிருக்கிறது.
இந்த மூன்று பில்லியன்களை, 400 மில்லியன் டொலர் நாணய மாற்று ஒழுங்கு (currency swap), ஒரு பில்லியன் கடன் ஒத்திவைப்பு (deferred repayment of loans) மற்றும் அரை பில்லியன் கடன் வசதி (credit facility) என்று இந்தியா வழங்கியது மட்டுமன்றி, நாநூறு மெற்றிக் தொன் எரிபொருட்களோடு அத்தியாவசிய மருந்துகளாகவும் அனுப்பியிருந்தது.
அதாவது, இந்தியாவின் கோடிப்புறத்தில் ஏற்பட்டுள்ள பொருண்மியச் சிக்கலுக்குத் தானே பெருத்த காவலன் என்ற தோரணையில் இந்தியா இதுவரை செயற்பட்டுவந்துள்ளது என்றும் இதனை அரசியல் பார்வையில் நோக்கலாம்.



தற்போது, இந்தியாவின் இந்தப் பெரும் பங்களிப்பை வரவேற்பதில் அமெரிக்காவும் சீனாவும் போட்டி போட்டுக் கொண்டுள்ளன.
சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ழாவோ லிஜான் (Zhao Lijian) தனது நாடு ஐநூறு மில்லியன் சீன யுவான்களை (ஏறத்தாழ 73 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) மனிதாபிமான உதவியாக இலங்கைக்கு வழங்கியிருப்பதாக, கடந்த 8 ஜூன் புதன்கிழமையன்று பீக்கிங்கில் வெளிப்படுத்தியிருந்தார்.
அப்போது அவர், இந்தியாவின் இலங்கைக்கான பேருதவியை வரவேற்பதாக வெளிப்படையாகக் குறிப்பிட்டிருந்தமை தமிழர் தரப்பால் உற்று நோக்கப்படவேண்டியது.
இவ்வருட ஆரம்பத்தில், தமிழர் தாயகத்தை மையப்படுத்திய ஒரு தந்திரோபாய நகர்வை இலங்கையின் சிங்கள இராஜதந்திரிகள் மேற்கொண்டிருந்தனர். சீனா பெரும் எடுப்புடனான மின்சக்தி வேலைத் திட்டம் ஒன்றை தமிழர் தாயகத்தில், குறிப்பாக வடக்கில் முன்னெடுக்கவிருப்பதாக சீனாவும் இலங்கை அரசும் அறிவித்தன.
இதை இந்தியா தடுக்க முற்படும் என்பதை முற்கூட்டித் தெரிந்தே சிங்கள இராஜதந்திரிகள் சீனாவை வடக்கு நோக்கி அனுப்பியிருந்தார்கள்.
இதன் உட்கிடக்கையைச் சரிவரப் புரிந்துகொள்ளாத தமிழர் தரப்புகள் அலறியடிக்க ஆரம்பித்தனர். ஆனால், சீனத் தலையீடு தொடர்பான ஈழத்தமிழர் தரப்பிலும் தமிழ்நாட்டிலும் அலறலும் புலம்பலும் வெளிப்படும் என்பதை முற்கூட்டியே உணர்ந்த நிலையில் தான் இந்த நகர்வை கொழும்பின் இராஜதந்திரிகள் மேற்கொண்டிருந்தனர்.
அவர்கள் எதிர்பார்த்தது போலவே, இந்தியாவின் கோபமும், தமிழர்களின் அலறலும் புலம்பலும், இலங்கை அரசுக்குச் சாதகமான படிக்கற்களை உருவாக்கின. விளைவாக, வடக்கு நகர்வில் இருந்து சீனா பின்வாங்கியது. அப்போது, தான் வடக்கில் மேற்கொண்ட நகர்வு முறைப்படி 'விலைமனுக்கோரல்' முறை ஊடாகவே முன்னெடுக்கப்பட்டதாகவும், அதை வேறு சக்தி உள்நோக்கத்தோடு தடுத்திருப்பதாகவும், ''விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை,'' என்ற தோரணையில், இந்தியாவைச் சுட்டிய கண்டிப்போடு சீனா விலகிக்கொண்டிருந்தது.
அதே சீனா தான், தற்போது இந்தியப் பேருதவியை வரவேற்றுள்ளது.
சீனா இவ்வாறு வரவேற்று ஒரு கிழமையில், அதாவது 15 ஜூன் புதனன்று, அமெரிக்கா சீனா வழங்கியதை விட இரட்டிப்பு மடங்கில் தனது உதவியை அறிவித்துள்ளது.



குறிப்பாக, நுண் (micro), சிறிய (small) மற்றும் நடுத்தர (medium-sized) வணிக நிறுவனங்களை நோக்கிய அமெரிக்க உதவியாக, தனியார் வங்கியான இலங்கை வர்த்தக வங்கி ஊடாக இந்தக் கடன் உதவியை அமெரிக்கா வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
அமெரிக்க கடன் உதவியில், 15 மில்லியன் டொலர்கள் தென்னிலங்கையில் பொலியெஸ்ரர் நூல் தயாரிப்பை மேற்கொள்ளும் பி.பீ.பீ.எல் (BPPL Holdings PLC) எனும் பிளாஸ்டிக் மீள்சுற்றிகரிப்பில் தலையோங்கியுள்ள தனியார் நிறுவனத்திற்கு, நீண்டகால கடன் முதலீட்டு அடிப்படையில், வழங்கப்படுகின்றன.
அதைப்போல, 5 மில்லியன் டொலர்கள் மாத்தளையை மையப்படுத்தி இயங்கும் தனியார் உணவு நிறுவனமான எம்.ஏ'ஸ் (MAs Tropical Food Processing [Private] Limited) எனும் மாரியோ டி அல்விஸ் என்பவரின் குடும்ப நிறுவனத்துக்கு கடன் அடிப்படையில் முதலீடாக வந்து சேருகின்றன.
இந்த உதவிகள் கிடைக்கும் சூழலிலேயே, ஐ.நா.வின் உதவியையும் பெற்றுக்கொண்டு, இலங்கையின் வெளிவிவகார அமைச்சரான ஜி.எல்.பீரிஸ், ஜெனீவாவில் இருந்து போர்க்காலப் பொறுப்புக்கூறலுக்கான சர்வதேச விசாரணைப் பொறிமுறையை அகற்றுமாறு தற்போது கர்ஜித்திருக்கிறார் என்பதை தமிழர் தரப்புகள் நூதனமாக விளங்கிக்கொள்ளவேண்டும்.
தொடர்ந்தும் சீனாவை மட்டும் குற்றஞ்சாட்டி, இந்திய-அமெரிக்க ஆதரவு சர்வதேச நீதி எனும் பக்கத்தில் தமக்கு இலகுவாகக் கிடைத்துவிடும் என்றும், அரசியல் தீர்வு பதின்மூன்றாம் சட்டத்திருத்தப் பாதையில் வந்துவிடும் என்றும், எடுத்த எடுப்பிலேயே எதிர்பார்த்து தமிழர் தரப்பு இயங்கிவருவது பரிதாபகரமானது.
இலங்கைக்கு ஏற்பட்டுள்ள மொத்தப் பொருண்மியச் சிக்கல் ஐம்பதுக்கு மேற்பட்ட அமெரிக்க பில்லியன் தொகையாகும். இதிலே, இந்தியாவும் அமெரிக்காவும் சீனாவும், மற்றும் ஐ.நா. போன்ற சர்வதேசப் பொறிமுறைகளும் தற்போதுவரை தற்காலிக விமோசனங்களையே, குறித்த சில மாதங்களுக்கான தற்காலிக 'சுவாசப்பை உதவி' போலச் செய்து வருகின்றன.
பெருத்த நகர்வு ஒன்றை மேற்கொள்வதற்கு இலங்கைத் தீவில் அரசியல் ஸ்திரத்தன்மை உருவாகவேண்டும் என்று அனைத்து சக்திகளும் சொல்லிவருவதற்குப் பின்னால், புவிசார் அரசியல் மந்திரம் ஒன்று புதைந்திருக்கிறது. அதாவது, தமது தெரிவை மேற்கொள்ள ஏதுவான, தமக்கு நம்பகமான ஆளும் தரப்பு ஒன்று உறுதிப்படுத்தப்படவேண்டும் என்பதே அது.
எதிர்வரும் ஆறுமாதங்களுக்கு 'சுவாசித்துச் சமாளிப்பதற்கு' இலங்கைக்கு சுமார் ஆறு பில்லியன்கள் தேவைப்படுகின்றன.
தமிழர்களுக்கு, அரசுகள் எவரும் நண்பர்கள் அல்ல என்பதே வரலாறு மட்டுமல்ல, தற்காலமும் எடுத்தியம்பும் செய்தி. இதைப் புரிந்த நிலையில், தமிழர் தாம் தமக்குள் ஒன்றித்து, சுயமாகவும், எந்தச் சக்தியிலும் தங்கியிராமலும் இயங்க முன்வரவேண்டும்.
இதற்கிடையில், விலைவாசி உயர்வுக்கான சிங்கள மக்களின் போராட்டங்களில் வடக்குக் கிழக்குத் தமிழர்களும் பங்கெடுக்க வேண்டுமென, சிங்கள முற்போக்காளர்களாகத் தம்மை அடையாளப்படுத்தும் சிங்கள சிவில் சமூக அமைப்புகள், சிங்களத் தொழிற் சங்கங்களின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு போன்ற இடங்களுக்கு அண்மைய நாட்களில் சென்று அழைப்பு விடுத்துகொண்டுள்ளார்கள்.
இந்த அழைப்புகளையும் அமைச்சர் பீரிஸ் ஜெனீவாவில் வெளிப்படுத்திய வியூகத்தையும் இணைத்து நோக்க வேண்டும்.
மேலும், வடக்கு-கிழக்கு தமிழர் தாயகத்தில் பெரும் விவசாய முன்னெடுப்புகளை இலங்கை இராணுவமும், தென்னிலங்கை நிறுவனங்களும் கையகப்படுத்தி வருகின்றன.
இச் செயற்பாடுகள் அனைத்தையும் தனித்தனி விடயங்களாக நோக்காமல், ஒன்றோடு ஒன்று இணைத்து நோக்கும் ஊடகப் பார்வையும் ஈழத்தமிழர்கள் நடாத்துகின்ற ஊடகங்கள் பலவற்றுக்கு மட்டுமல்ல, கருத்துருவாக்கிகள் பலருக்கும் இல்லாதிருக்கின்றது.
குறிப்பாக 46/1 தீர்மானத்தின் மூலம் பரிந்துரைக்கப்படட ஐ.நா. மனித உரிமை ஆணையர் அலுவலகத்தின் சாட்சிய சேகரிப்புப் பொறிமுறையை இலங்கை நிராகரிப்பதாக கடந்த காலத்தில் கூறியிருந்ததை மீண்டும் பீரிஸ் பொருளாதார வறுமையின் மத்தியிலும் தனது உரையில் இடித்துரைத்திருக்கிறார்.
இந்தப் பொறிமுறையானது இலங்கையின் உள்ளக விசாரணைக்குத் தடையாகவுள்ளது எனவும் ஐ.நா. அலுவலகச் சாட்சிய சேகரிப்பு முறையானது வளங்களை விரயமாக்குவதுடன், இலங்கைக்குப் பயனற்றது என்ற தொனியிலும் பீரிஸ் தனது கருத்தை நியாயப்படுத்துகிறார்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற ஜெனீவா மனித உரிமைச் சபை அமர்வுக்குப் பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் திருத்தம் செய்து அந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இருபத்து இரண்டு பேரை விடுதலை செய்துள்ளதாகவும், பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் இழப்பீடுகளை வழங்க மேலதிகமாக 53 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது எனவும் மார் தட்டியுள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம் தொடர்ந்தும் இயங்கி வருவதாகவும் ஐ.நா.விடம் கையளிக்கப்பட்டிருந்த முறைப்பாடுகளில் தொடர்புடைய குடும்பங்களில் 83 வீதத்துக்கும் அதிகமானவா்களைச் சந்தித்து விபரங்களை உறுதிப்படுத்தும் வேலைகள் நடைபெற்றுள்ளதாகவும் பீாிஸ் கணக்குக் காண்பித்துள்ளார்.


இதற்குள் புலம்பெயர் சமூகத்துடன் செயற்படுவதற்கு இலங்கை தயாராக இருப்பதாகவும் பீரிஸ் தனது உரையில் புரளியைக் கிளப்பியுள்ளார்.
ஆகவே பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், அமைச்சர் பீரிஸ் ஜெனீவா மனித உரிமைச் சபையில் வெளியிட்ட இக் கருத்துக்கள், இலங்கையில் உள்ளக விசாரணைக்கு மட்டுமே சர்வதேசம் இடமளிக்க வேண்டுமென்பதோடு, இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்குள் அரசியல் தீர்வை உருவாக்கிவிடலாம் என்ற தவறான நம்பிக்கையையும் வெளிப்படுத்துகின்றது.
குறிப்பாகத் தற்போதைய பொருளாதார நெருக்கடிச் சூழலுக்குள் தமிழர்களும் பாதிக்கப்பட்டுள்ளதால், சர்வதேசம் கூறுகின்ற போர்க் குற்றங்கள், மனிதத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விசாரணைகூட அவசியம் இல்லை என்ற தொனி பீரிஸின் உரையில் வெளிப்பட்டு நிற்பதை அவதானிக்க முடியும்.
போர்க்குற்றங்களை விசாரிப்பது என்ற போர்வையில் இலங்கை அரசை மட்டுமல்ல, தமிழர் தரப்பையும் குற்றங்களின் சமதரப்பாக சர்வதேச அணுகுமுறை கையாளுகின்றது. தமிழர்களின் பிரதான கோரிக்கையான இன அழிப்புத் தொடர்பான விசாரணை எதுவும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை.
அதுமட்டுமன்றி, தமிழர்கள் இணைந்து கோரிய சுயாதீனச் சர்வதேச சாட்சியப் பொறிமுறை உரிய முறையில், சர்வதேச சுயாதீன சாட்சியப் பொறிமுறையாக அமைக்கப்படவும் இல்லை. மாறாக மட்டுப்படுத்தப்பட்ட அலுவலக விசாரணைப் பொறிமுறை ஒன்றையே ஐ. நா. மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் முன்னெடுத்தது.
இந்தச் சூழலியே மட்டுப்படுத்தப்பட்ட விசாரணைப் பொறிமுறையைக்கூட இல்லாது செய்துவிட வேண்டுமென்பதை தனது உத்தியாக பீரிஸ் கையில் எடுத்திருக்கின்றார்.
இலங்கை அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட காணாமல் போவோரைக் கண்டறியும் அலுவலகத்தை, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அமைப்புகள் முற்றாக நிராகரித்து விட்டன. ஆனாலும், வலுக்கட்டாயமாக, அல்லது வேறு கதைகள் கூறப்பட்டு, அழைக்கப்பட்ட குறிப்பிட்ட சிலரிடமே அந்த அலுவலகம் வாக்குமூலங்களைப் பெற்றிருந்தது.
அவ்வாறு வாக்குமூலம் வழங்கியிருந்த உறவினர்களும் அந்த அலுவலகத்தின் செயற்பாடுகளில் பின்னர் நம்பிக்கையிழந்திருந்தனர்.
அத்துடன், உறவினர்கள் பலரிடம் இலங்கைப் புலனாய்வுத்துறை விசாரணை நடாத்தியிருக்கிறது என்ற குற்றச்சாட்டுகளும் பரவலாக எழுந்திருந்தன.



அதேநேரம், வடக்குக் கிழக்கில் இன்றுவரை இராணுவத்தின் துணையுடன் தமிழ் மக்களின் பாராம்பரியக் காணிகள் அபகரிக்கப்படுகின்றன. வலிகாமம் வடக்குப் பகுதியில் கடந்த வாரமும் பொது மக்களுக்குச் சொந்தமான காணிகள் இராணுவப் பயன்பாட்டுக்காக அளவீடு செய்யப்படும்போது மக்களால் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டிருந்தது. புத்தர் சிலைகள் தொடர்ந்தும் விஸ்தரிக்கப்படுகின்றன.
இந்த நிலையில், 92 சதவீதமான காணிகள் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன என்றும் பீரிஸ் கணக்கு காட்டிவருகிறார்.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் ஈழத்தமிழர்களின் விவகாரத்தைச் சர்வதேச அரங்கில் இருந்து மேலும் மட்டுப்படுத்தியும் திசை திருப்பியும் தமக்குச் சாதமான முறையில் மாற்றியமைக்க இலங்கையின் ஆளுந்தரப்புச் சிங்கள இராஜதந்திரிகள் மேற்கொள்ளும் பிரதான நகர்வுகள் சில பீரிஸ் வெளிப்படுத்திய கருத்துக்கள் மூலம் பகிரங்கமாகியுள்ளன.
பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வுப் பிரச்சினைகளுக்கு எதிராக வடக்குக் கிழக்குத் தமிழர்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென தென்பகுதியில் இயங்கும் சிங்கள முற்போக்கு அமைப்புகள் விடுக்கின்ற அழைப்புகளுக்குப் பின்னாலும் இதேபோன்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.
பொருளாதார நெருக்கடியினால் கொழும்பிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் போராடுகின்ற சிங்கள மக்கள், சிங்கம் பொறிக்கப்பட்ட சிங்களத் தேசியத்தை அடையாளப்படுத்தும், சிங்கள பௌத்த தேசியத்தை முதமைப்படுத்தும் இலங்கைத் தேசியக் கொடியைக் கைகளில் ஏந்தியவாறே போராடுகின்றனர்.
தமிழிலும் 'சிறீலங்கா மாதா' கீதம் இசைக்கப்படுவதை அவர்கள் விரும்புகிறார்கள். 'ஒரே நாடு ஒரே சட்டம்' என்ற தொனியை வெளிப்படுத்தும் அந்தத் தேசியக் கொடியின் கீழ் ஈழத்தமிழர்களையும் ஒன்றிணைந்து போராட வைப்பதன் ஊடே, வடக்குக் கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவு மக்களின் ஒட்டுமொத்த தேசியம் என்ற ஒரு கோட்பாட்டுக்குப் பின்னால் தமிழர்களையும் சிறுபான்மை ஆகத் தம்மைத் தாமே சிறுமைப்படுத்திக்கொள்ளச் செய்யும் பொறி மிக நூதனமாக வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பொறிக்குள் இதுவரை வடக்கு கிழக்கு மக்கள் மாட்டிக்கொள்ளவில்லை. ஆனால், பொருளாதாரச் சிக்கலைப் பயன்படுத்தி ஈழத் தமிழரைத் தமது கோட்பாடுகளுக்கு ஏற்றவாறு மடை மாற்றம் செய்துவிடலாம் என்று பிற்போக்குத்தனமான சிங்கள 'முற்போக்குவாதிகள்' சிலர் கருதுகின்றனர்.
தற்போது, வெளியுறவு அமைச்சராகவுள்ள பேராசிரியர் பீரிஸ், 2002 சமாதானப் பேச்சுக்காலத்தில் ரணில் பிரதமாரய் இருந்தபோது அவருக்குக் கீழ் பேச்சுவார்தை அணியின் முதன்மைப் பிரதிநிதியாகத் தீவிரமாகச் செயற்பட்ட ஒருவர்.
அப்போது இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் உடன்பட்ட பல விடயங்களை இலங்கை அரசாங்கம் செயற்படுத்தத் தவறியிருந்தது. சர்வதேச அரங்கில் பல திரிபுபடுத்தல்களை அப்போது பீரிஸ் மேற்கொண்டிருந்தார்.
அந்த திரிபுபடுத்தல்களுக்கு நோர்வே உள்ளிட்ட ஸ்கண்டிநேவிய நாடுகளும், அமெரிக்க, இந்தியா, ஜப்பான் போன்ற இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளும் இடமளித்தன. அவற்றுக்கு ஏற்றவாறே அந்த நாடுகள் தமது அரசியல் காய்களை அன்று நகர்த்தியிருந்தன.
இதற்கு ஏற்றால்போல், தமிழ்த்தரப்பும் செய்ய வேண்டியவற்றை இடமும் காலமும் அறிந்து செய்யத் தவறுவதால், மறைமுகமாக ஒத்துழைக்கின்றன.
அமைச்சர் பீரிஸ், ஜெனீவா ஐம்பதாவது கூட்டத் தொடரில் நிகழ்த்திய உரை ஈழத்தமிழர் தொடர்பாகக் கூறிய விடயங்கள் முற்றிலும் உண்மைக்கு மாறானவை என்று எந்தவொரு தமிழ்த்தேசியக் கட்சியும் இதுவரை மறுப்பு வெளியிடவில்லை.
வடக்குக் கிழக்கில் செயற்படுகின்ற சிவில் சமூக அமைப்புகளும் அமைதியாக இருக்கின்றன.
ஆனால், தமிழர் பகுதிகளுக்குச் சென்று, விலைவாசி உயர்வுக்கான சிங்கள மக்களின் போராட்டத்தில் இணைந்து கொள்ளுங்கள் என்று சிங்கள முற்போக்குவாதிகளை உள்ளடக்கிய சிவில் சமூக அமைப்புகள் கோரிக்கை விடுப்பது நடைமுறையில் நடந்துகொண்டிருக்கிறது.
ஆனால் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை அறிக்கையில் தனக்கு நம்பிக்கை இலலை எனக்கூறி, ஜெனீவா மனித உரிமைச் சபையில் பேராயர் கர்தினால் ரஞ்சித் மல்கம் ஏற்கனவே முறையிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
கர்தினால் ரஞ்சித் சிங்கள கத்தோலிக்கர்களுக்கு விசுவாசமாக குரல் கொடுக்கும் அளவுக்குத் தமிழர் தரப்பு தனக்கு நடைபெற்ற பெரும் குற்றத்துக்கு குரல் கொடுத்திருக்கிறதா என்று தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டும்.