யூலை ஒன்பதாம் திகதிக்குப் பின்னரான அரசியல் சூழலில்

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளும் வகையில் தமிழ்த்தேசிய அரசியல் பிரகடனம் மேற்கொள்ளப்பட வேண்டிய தருணம் இது

ஒற்றையாட்சி யாப்பை நிராகரித்துச் சுயநிர்ணய உரிமையைக் கோரத் தவறி வரும் தமிழ்த்தேசியத் தரப்புகள்
பதிப்பு: 2022 ஜூலை 14 11:55
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 19 16:11
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
கோட்டாபய ராஜபக்சவைப் பதவி விலகுமாறு கோரி தென் இலங்கையில் நடத்தப்பட்ட போராட்டங்களை ஒரு கிளர்ச்சியின் வெளிப்பாடுகளாக மட்டுமே ஈழத்தமிழர்கள் அணுக வேண்டும். அந்தக் கிளர்ச்சியானது ஓர் அரசியல் புரட்சி அல்ல என்ற புரிதல் இங்கு அவசியமாகிறது. புரட்சி என்றால் ஏதேனும் ஒரு கொள்கையோடு நடத்தப்பட்டிருக்க வேண்டும். இங்கே கிளர்ச்சியாளர்கள் பொருளாதார நெருக்கடி, எரிபொருட்கள் இல்லாமை போன்ற காரணங்களை முன் நிறுத்தி கோட்டாபயவுக்கு எதிரான கிளர்ச்சிகளை நடத்தியுள்ளனர். இக் கிளர்ச்சி கடந்த சனிக்கிழமை ஒன்பதாம் திகதியன்று மேலும் ஒரு தற்காலிக வெற்றியைப் பெற்றுக் கொண்டது. ஆனால், இந்தக் கிளர்ச்சியை இயக்கியவர்களால் ஓர் அரசியல் புரட்சியாக இதனை மாற்ற முடியாமல் போனதை ஈழத்தமிழர்கள் இரண்டு காரணங்கள் ஊடாக நோக்க வேண்டும்.
 
2009 இன் பின்னர் வடக்குக் கிழக்குத் தமிழர்களுக்குத் தலைமை இல்லை என்பதையே, 2022 யூலை ஒன்பதாம் திகதிக்குப் பின்னரான சூழலும் கோடிகாட்டியிருக்கிறது என்றால் அது மிகையாகாது

முதலாவது, இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பை (unitary constitution) இந்த தென்னிலங்கைச் சக்திகள் மாற்ற விரும்பாமை. அதாவது, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கான அதிகாரப் பங்கீட்டு முறைமையை (Power Sharing) உருவாக்க வேண்டும் என்பதை ஒத்துக்கொள்ளாமல் வெறுமனே சிறுபான்மை உரிமைகள் (minority rights) பற்றியும் பன்மைத்துவச் சமநிலை (pluralism and equality) பற்றியும் மட்டுமே பேசுகின்றமை.

அதாவது, இலங்கைத்தீவில் வரலாற்று ரீதியாகக் குறைந்த பட்சம் இரண்டு தேசங்கள் இருக்கின்றன என்பதையோ தேசிய இனப்பிரச்சினை என்பதை ஓர் மூலப் பிரச்சினை என்பதையோ ஒத்துக்கொள்ள மறைத்து, அல்லது ஒளித்து, அதன் பக்க விளைவான பொருளாதாரப் பிரச்சினையை மாத்திரமே முன் நிறுத்திப் பேசுகின்றமை.

இரண்டாவது, பௌத்த மதத்துக்கான அரசியல் யாப்பு ரீதியான முன்னுரிமையை மாற்றி மதசார்பற்ற அரசாக இலங்கையை மாற்ற விரும்பாமை.

மக்களாட்சி அரச முறையில் மதம் தொடர்புபடக்கூடாது என்பதை (religious interference in politics) தமது தற்காலிகத் தேவைக்காகச் சொல்ல முன்வரும் போராட்டக்காரர்கள், அரசியல் யாப்பில் நிலைபேறாக மதச் சார்பின்மை (constitutional secularism) உறுதிப்படுத்தப்படவேண்டும் என்றோ, இனப்பிரச்சினையின் மூல காரணங்களில் ஒன்றாகத் தொடர்ந்தும் சிங்களத் தேரவாத பௌத்தம் வடக்குக் கிழக்கில் முதன்மைப்படுத்தப்படுவதால், அதுவும் கிளர்ச்சிப் போராட்டம் தெற்கில் நடந்தபோதே தமிழ் மக்கள் வடக்குக் கிழக்கில் கண்ணுற்றுக் கொதித்தெழுந்த மதமேலாதிக்கம் கை ஓங்கியிருக்கும் அளவுக்கு கள நிலைமை, ஏற்படுத்தியுள்ள சிக்கல் பற்றி எந்தவித புரிதலையும் வெளிப்படுத்தவில்லை.

தமிழ்த்தேசியக் கட்சிகள் ஒன்பதாம் திகதிக்குப் பின்னர் வடக்குக் கிழக்கில், யாழ்ப்பாணத்திலோ வவுனியாவிலோ, அல்லது மட்டக்களப்பிலோ திருகோணமலையிலோ, பாரம்பரியத் தமிழர் தாயகத்தின் எங்கேனும் ஒரு புள்ளியில் ஒன்றுகூடி அரசியல் பிரகடனம் ஒன்றைச் செய்திருக்க வேண்டும்

மாறாக, ஈழத்தமிழர்களின் தலைமைகள் தொடர்ச்சியாக நிராகரித்து வந்துள்ள சிங்கக் கொடியின் கீழ் தமிழர்களும் இணைந்து போராட முன்வர வேண்டுமென்று தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றமை.

இந்த இரண்டு அடிப்படை இயலாமைகள் தொடர்பான புரட்சிகரமான சிந்தனைகளை வெளிப்படுத்த தென்னிலங்கைச் சக்திகள் தயாராகாத நிலையில், தமிழர்களின் ஈடுபாட்டுடன் இந்தக் கிளர்ச்சி முழுத் தீவுக்குமான ஒன்றிணைந்த ஓர் அரசியல் புரட்சியாக மாற முடியாது.

காலிமுகத்திடல் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்ற இளைஞர்கள் இதை அரசியல் ரீதியாகப் புரிந்திருக்க வாய்ப்பில்லை என்றால், அவர்களுக்குத் தேவையான புரிதலை, கிளர்ச்சியில் இணையாமல் வெளியில் நின்றவாறே புகட்டியிருக்க வேண்டிய கடமை ஈழத்தமிழர்கள் தெரிவு செய்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய தலையாய கடமை.

அந்தக் கடமையைத் தனித்தனியாக மேற்கொள்ளாமல், கட்சி பேதங்களுக்கு அப்பால் சென்று, இயன்ற அளவு தமக்குள் இணைந்து, பதின்மூன்று தமிழ்த்தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது கடமையைச் சரிவர, காலம் தாழ்த்தாது நிறைவேற்றியிருக்க வேண்டும்.

இதற்குச் சுமந்திரனும் சாணக்கியனும் ஒத்துவரவில்லை என்றால், எஞ்சியிருக்கும் விக்னேஸ்வரன், சிறிதரன், கஜேந்திரகுமார் ஆகியோர் தமது கட்சி, கூட்டு வேறுபாடுகளுக்கு அப்பாற் சென்று, தமிழ் மக்களின் திரட்சியோடு ஒன்றிணைந்து தமிழ்த்தேசியப் பெரும்பான்மை நிலைப்பாடு எதுவென்பதைத் தென்னிலங்கை மக்கள் சமூகத்துக்கு தெளிவாக எடுத்துரைத்திருக்க வேண்டும்.

ஆனால் இது நடைபெறவில்லை. ஏன் நடைபெறவில்லை என்பதற்கு வடக்குக் கிழக்கில் சிவில் சமூகத்தினர் என்றும் கருத்துருவாக்கிகள் என்றும் செயற்பட்டு வருவோரும் தமக்கான பொறுப்புக்கூறலுடன் விளக்கம் தரக் கடமைப்பட்டுள்ளனர்.

இந்தத் தலையாய கடமையை ஏற்கனவே செய்யத் தவறியது ஒட்டுமொத்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வரலாற்றுத் தவறு என்றால், கடந்த ஒன்பதாம் திகதிக்குப் பின்னர் இவர்கள் செய்யத் தவறியிருப்பதை, தமிழ்த்தேசிய அரசியலில் வரலாற்றுத் துரோகமாகவே பார்க்கவேண்டியுள்ளது.

கட்சி அடையாளங்களுக்கும், கூட்டுகளுக்கும் அப்பாற் சென்று, பதின்மூன்று தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெருபான்மையைத் தற்போது நிறுவத் தவறும் எவரும் இப்போதல்ல, இனி எப்போதும் தமிழ்த் தேசிய அரசியலுக்கு உரியவர்கள் அல்ல என்பது பலமாக உணர்த்தப்படவேண்டும்

தென்னிலங்கைச் சமூகத்துக்குச் சொல்லவேண்டியதை ஒன்பதாம் திகதிக்கு முன்னர் இணைந்து சொல்லத் தவறியது வரலாற்றுத் தவறு என்றால், ஒன்பதாம் திகதிக்குப் பின்னரும், சர்வதேச தரப்புக்கு ஒன்றிணைந்து தமிழர் தரப்புச் சொல்லத்தவறியது வரலாற்றுத் துரோகமாகிறது.

ராஜபக்ச குடும்பத்தைத் துரத்திவிட்டால் எல்லாமே சரியாகிவிடும் என்ற கருத்தையே சிங்கள இளைஞர்களுக்குக் கிளர்ச்சியின் பின் நின்று இயக்கியவர்கள், அதுவும் அவர்களுக்குப் பின்னால் ஏதேனும் சர்வதேச சக்திகள் இருந்தால் அவையும் உள்ளடங்கலாக, திணித்திருந்தார்கள்.

வடக்குக் கிழக்குத் தமிழர்கள் ஆரம்பம் தொடக்கம் ஒன்பதாம் திகதிவரை காலிமுகத் திடல் கிளர்ச்சியில் பங்குகொள்ளாமைக்கு இந்த மட்டுப்படுத்தலும் காரணமாகியது. தொடர்ந்தும் இந்த நிலை நீடிக்கவும் அந்தக் காரணம் இருக்கப் போகிறது. இதைவிடுத்து, சர்வதேச மட்டத்திற்க்குச் சொல்லப்படவேண்டியது தக்க வகையில் சொல்லப்படவேண்டும். அதற்கான காலம் தமிழர் தரப்பின் கையைவிட்டுப் போக ஒன்பதாம் திகதி முதல் ஆரம்பித்துள்ளது.

ஒன்பதாம் திகதியோடு இலங்கை அரசியல் யாப்பின் நியாயாதிக்கம் தகர ஆரம்பித்துள்ளது.

இந்தச் சூழலில், தமிழ்த்தேசியக் கட்சிகள் வடக்குக் கிழக்கில், யாழ்ப்பாணத்திலோ வவுனியாவிலோ, அல்லது மட்டக்களப்பிலோ திருகோணமலையிலோ, பாரம்பரியத் தமிழர் தாயகத்தின் எங்கேனும் ஒரு புள்ளியில் ஒன்றுகூடி, அரசியல் பிரகடனம் ஒன்றைச் செய்திருக்க வேண்டும்.

தமிழ் பேசும் மக்களுடன் தேவையான புரிதல் ஏற்படுத்தப்பட்டு, தமிழ் மக்கள் திரட்சியை ஒன்று திரட்டி, வடக்குக் கிழக்கு இணைந்த சுயநிர்ணய உரிமை அங்கீகாரத்துடனான அரசியல் தீர்வுக்கும், இன அழிப்பு நீதிக்கான சர்வதேசப் பொறுப்புக் கூறலுக்குமான பிரகடனம் ஒன்றை வெளியிட்டிருக்க வேண்டும்.

குறிப்பிட்டுச் சொல்வதானால் தமிழ்த்தேசியக் கோட்பாட்டை தற்போதைய சூழலுக்கு ஏற்றவகையில் தென்னிலங்கைச் சக்திகளும் மதிக்கத்தக்க வகையில் எடுத்தியம்பி, அதை மேலும் நியாயப்படுத்தி, வலியுறுத்தி, நிறுவுவதற்கான அரசியல் புரட்சியை அகிம்சை வழியில் கனகச்சிதமாகச் கையாண்டிருக்க வேண்டும்.

இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்குள் நின்று கொண்டும், இலங்கை நாடாளுமன்றத்தின் மூலமும் தமிழ்த்தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்பது ஈழத் தமிழ்த் தேசியக் கோட்பாட்டின் தெளிந்த விளக்கம்.

ஆனால் அந்த அடிப்படையை நிறுவுவதக்கான நல்ல சந்தர்ப்பத்தைத் தமிழ்த்தேசியக் கட்சிகளும் வடக்குக் கிழக்குத் தமிழ்ச் சிவில் சமூக அமைப்புகளும் பயன்படுத்த ஒன்பதாம் திகதிக்கு முன்னர் தவறின, அதன் பின்னர் தொடர்ந்தும் தவறி அரசியற் துரோகத்தின் எல்லைக்குச் செல்கின்றன.

காலிமுகத் திடல் கிளர்ச்சியாளர்கள் சென்ற ஒன்பதாம் திகதி ஜனாதிபதி மாளிகை, பிரதமர் மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகத்தைக் கைப்பற்றியதும் முழு இலங்கைத்தீவுக்கான அரசியற் புரட்சியாக அதை எடுத்துக்காட்டக்கூடிய சூழ் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு ஓர் அரசியல் புரட்சியாக மாறிவிடக்கூடாது என்ற நோக்கிலேதான் ஒன்பதாம் திகதி மாலை பௌத்த குருமார் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் ஒன்றிணைந்த கரையோரச் சிங்கள அமரபுர மற்றும் ராமண்ய மதபீடங்களின் ஓமல்பே சோபித தேரர், பௌத்ததேசியம் மற்றும் பௌத்த அதிகாரத்தை எவராலும் அழிக்க முடியாது என்றும், அது நிலையானது எனவும் பகிரங்கமாகக் கூறியிருந்தார் என்பதை இங்கு விளங்கிக்கொள்ள வேண்டும்.

பௌத்த தேசிய சக்தியை ராஜபக்ச குடும்பம் இழந்ததினாலேயே மக்கள் கிளர்ச்சி செய்து துரத்தியதாக சோபித தேரர் மார்தட்டியிருந்தார்.

காலிமுகத்திடல் போராட்டம் வெறுமனே பெருளாதார நெருக்கடிக்கான, சிங்கள தேசியவாதத்தில் இருந்து விடுபடாத, அதுவும் குறிப்பாக ஊழலுக்கு எதிரான பேரினவாதச் சக்திகளின் அரவணைப்போடு நடைபெறுகின்ற ஒரு கிளர்ச்சியாகவே தன்னை வெளிபடுத்துகிறது, அல்லது அந்தப் போக்கில் இருந்து போராட்டம் மடைமாற்றம் பெறாது தக்கவைக்கும் ஆற்றலை அது கொண்டிருக்கிறது.

இதற்கு முண்டுகொடுப்பதாகவே, ஈழத்தமிழர் தேசியத் தரப்புகள் வாளாவிருக்கும் மயான அமைதியும் நடைமுறையில் முடிந்து விடுகிறது.

இந்த நிலையில் இருந்து ஈழத் தமிழ்த் தேசிய சக்திகள் என்று தம்மை அடையாளங்காட்டும் தரப்புகள் விரைவில் விடுபடவேண்டும்.

தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதின்மூன்று பேரினதும் மனச்சாட்சி, கூட்டு மனச்சாட்சி ஆகும் தன்மையையும் வலிமையையும் தன்னகத்தே கொண்டது. அதை நடைமுறையில் சாதிப்பதே அடிமட்டத் தமிழ் பொது அமைப்பினரின் தற்போதைய கடமையாகும்
முப்பது ஆண்டுகால போர் மட்டுமல்ல, அதற்கு முன்னரான அரச அடக்குமுறை, 2009 இற்குப் பின்னரான பதின்மூன்று ஆண்டுகளிலும் வடக்குக் கிழக்கில் மேற்கொள்ளப்படுகின்ற பௌத்த சிங்களப் பேரினவாத இராணுவமயமாக்கல், அந்நியச் செலவாணியைப் பெறுவதற்கான வளங்கள் அபிவிருத்தி செய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்டமை போன்ற காரணங்களே, இன்றைய பொருளாதார நெருக்கடிக்குப் பிரதான காரணம் என்பதை ஒன்றுகூடிச் சர்வதேசத்துக்குப் பகிரங்கப்படுத்தியிருக்க வேண்டும்.

சர்வதேச சமூகத்துக்கு இது நன்கு தெரியுமென்றாலும், அதைத் தொடர்ந்து தமிழர் தரப்பு திரட்சியடைந்தும் உணர்வுபூர்வமாகவும், கோட்பாட்டுரீதியாகவும் வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.

அவ்வாறு செய்யாது விட்டு, தமிழ்த் தேசியத் தரப்புகள் ஒருவித 'கள்ள மௌனத்தில்' இருப்பதாகவும், ஒருவித 'மூளைச்சாவை' (brain death) அவை அடைந்துள்ளதாகவும், ஈழத் தமிழ்த் தேசியம் ஓர் அரசியல் முழுமயக்க நிலையை (political coma) அடைந்துள்ளதாகவும், சர்வதேசத் தரப்பால் அனுமானிக்கப்படும் நிலை தற்போது தோன்றியுள்ளது.

கட்சி அடையாளங்களுக்கும், கூட்டுகளுக்கும் அப்பாற் சென்று, பதின்மூன்று தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையைத் தற்போது நிறுவத் தவறும் எவரும், இப்போதல்ல இனி எப்போதும், தமிழ்த் தேசிய அரசியலுக்கு உரியவர்கள் அல்ல என்பது பலமாக உணர்த்தப்படவேண்டும்.

தேர்தலில் போட்டியிடுவதும், தேர்தலுக்காவே தமிழ்த்தேசியத்தைப் பேசுவது என்பதும், யூலை ஒன்பதாம் திகதிக்குப் பின்னரான அரசியல் சூழல், தமிழ் மக்கள் முன்னிலையில் தமிழ்த்தேசியக் கட்சிகளைப் புடம்போட்டுக் காண்பித்துள்ளன.

கொழும்பை மையப்படுத்திய அரசியலுக்கான 'கள்ள மௌனம்' இப்படித்தான் இருக்கும்.

தமிழ்த் தேசிய 'துரோக'க் கூட்டமைப்பு, தமிழ் தேசிய 'துரோக' மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேச 'துரோக'க் கூட்டணி என்று இந்தக் கட்சிகளும் கூட்டுகளும் தம்மை அடையாளப்படுத்துபடுகின்ற வரலாற்றுத் தீர்ப்பு எழுதப்படுகின்ற நாட்கள் இன்றைய நாட்கள் என்பதை இந்தக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – தனிப்பட்ட ரீதியில் மூளைச் சாவு அடையாதவர்களாக இருக்க விரும்பினால் – புரிந்துகொள்ள வேண்டும்.

கட்சிகளும் கூட்டுகளும் அரசியல் மூளைச்சாவுக்கும் முழுமயக்க நிலைக்கும் உள்ளாகலாம், ஆனால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக 'நானும் அவ்வாறு தான் இருக்கிறேன்' என்ற பழி வந்து சேர்ந்துவிட்டதே என்ற பயம் பதின்மூன்று கதிரைகளில் குந்துகின்ற ஒவ்வொருவருக்கும் உருவாகவேண்டும்.

இந்தப் பயம் ஒன்றே தமிழ்த் தேசியத்தின் தற்போதைய பலம்.

2009 இன் பின்னர் வடக்குக் கிழக்குத் தமிழர்களுக்குத் தலைமை இல்லை என்பதையே, 2022 யூலை ஒன்பதாம் திகதிக்குப் பின்னரான சூழலும் கோடிகாட்டியிருக்கிறது என்றால் அது மிகையாகாது.

இந்த நிலையில் இருந்து ஈழத் தமிழ்த் தேசம் விழிப்படைந்து ஆக்கபூர்வமான நகர்வுகளை விரைந்து மேற்கொள்ளவேண்டும்.

தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதின்மூன்று பேரினதும் மனச்சாட்சி, கூட்டு மனச்சாட்சி ஆகும் தன்மையையும் வலிமையையும் தன்னகத்தே கொண்டது. அதை நடைமுறையில் சாதிப்பதே அடிமட்டத் தமிழ் பொது அமைப்பினரின் தற்போதைய கடமையாகும்.

ஈழத் தமிழ்த் தேசிய அரசியலில் ஈடுபடுவதாகத் தம்மைக் காட்டி தேர்தல் அரசியல் நாற்காலிகளைக் குறிவைத்திருப்போரின் தனிப்பட்ட அறம் சார்ந்த பயம் மேலெழுந்து தமிழ்த்தேசிய அரசியலின் பலமாக பரிணாமமும் பரிமாணமும் பெறவேண்டும்.