பொருளாதார நெருக்கடி- ஒற்றையாட்சிக்கு உட்பட

இலங்கைத்தீவுக்கான நல்லிணக்கத்தை மாத்திரமே நிபந்தனையாக முன்வைக்கும் சர்வதேச நாணய நிதியம்

மடைமாற்றம் செய்யப்பட்டுள்ள ஈழத்தமிழர் விவகாரம்- அறிக்கைகள் மட்டும் வெளியிடும் தமிழ்த்தேசியக் கட்சிகள்
பதிப்பு: 2022 ஓகஸ்ட் 21 13:12
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 26 11:45
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கைத்தீவின் கடன் நெருக்கடி மேலும் அதிகரித்துச் செல்லும் நிலையில், சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்தால் மாத்திரமே, பொருளாதார நெருக்கடியில் இருந்து குறைந்தபட்சம் மீண்டெழ முடியும். இதற்காகவே தேசிய அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முற்படுகிறார். தேசிய அரசாங்கத்தை அமைக்காமல் ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்களுடன் மாத்திரம் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை அமைத்தால், பாரிய நிதியுதவிகள் எதனையும் சர்வதேச நாணய நிதியும் வழங்காது.
 
எதிர்க்கட்சிகள் மீதான தாக்குதல்களை நிறுத்துவது, போராட்டக்காரர்கள் கைது செய்யப்படுவதைத் தடுப்பது, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள், வடக்குக் கிழக்கில் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் என்ற வரையறைக்குள் அடங்குபவைதான் சா்வதேச நாணய நிதியும் நிபந்தனையாகக் கூறுகின்ற நல்லிணக்கம் என்பது

இது தொடர்பாக சர்வதேச நாணய நிதிய உறுப்பு நாடுகளின் கொழும்பில் உள்ள பிரதிநிதிகள், இலங்கை அரச அதிகாரிகள் மட்டத்தில் நடத்திய கலந்துரையாடல்களில் ரணில் தரப்புக்கு விபரமாக எடுத்துக் கூறியுள்ளததாகக் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச நாணய நிதியத்தின் உயர் அதிகாரிகள் குழு ஒன்றும் விரைவில் கொழும்புக்கு வருகை தந்து ரணில் விக்கிரமசிங்கவையும் மற்றும் நிதியமைச்சு, மத்திய வங்கி அதிகாரிகளைக் குழு சந்திக்கவுள்ளது.

அதிகாரிகள் மட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட எந்த ஒரு பேச்சுக்களிலும், ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்கு நிரந்த அரசியல் தீர்வை முன்வைப்பதன் மூலமே வடக்குக் கிழக்கில் இருந்து அந்நியச் செலவாணியை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும் என்ற விடயம் விவாதிக்கப்படவேயில்லை.

தமிழ்த்தேசியக் கட்சிகள் உள்ளிட்ட தமிழ்த்தரப்புகள் சர்வதேச நாணய நிதியததின் கொழும்பில் உள்ள உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் எவரையும் சந்தித்து உரையாடவுமில்லை.

சர்வதேச நாணய நிதியம் விதிக்கும் ஏனைய கடுமையான நிபந்தனைகளுக்குள் ஈழத்தமிழர்கள் விவகாரத்துக்கான தீர்வு குறித்த அம்சங்கள் எதுவுமே இல்லை. ஆனால் முழு இலங்கைத்தீவுக்குமான நல்லிணக்கம் பற்றியே சர்வதேச நாணய நிதியத்தின் கொழும்பில் உள்ள பிரதிநிதிகள் கவனம் செலுத்தியிருக்கின்றனர்.

அதற்கேற்றவாறு பொருளாதார நெருக்கடியோடு ஈழத்தமிழர் விவகாரம் இலங்கைத்தீவின் பொதுவான மனித உரிமைப் பிரச்சினையாக சிங்கள ஆட்சியாளர்களினால் மடைமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை அமெரிக்க - இந்திய அரசுகளும் ஏற்றிருக்கின்றன.

நிதிகளை வழங்குவதற்காகச் சர்வதேச நாணய நிதியம் வெறுமனே இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கு அமைவான விடயங்களை மாத்திரமே நிபந்தனைகளாக முன் வைத்திருக்கின்றது.

குறிப்பாக மின்சார சபை, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் உள்ளிட்ட நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களைத் தனியார் மயப்படுத்தல் மற்றும் ஆகக் குறைந்தது ஆறு இலட்சம் அரச ஊழியர்களை பணியில் இருந்து இடை நிறுத்தல் உள்ளிட்ட பல நிபந்தணைகளை சர்வதேச நாயண நிதியும் முன்வைத்துள்ளது.

மானியங்கள் வழங்குவது உள்ளிட்ட மக்களுக்கான சலுகைகள் அனைத்தும் குறிப்பிடட சில வருடங்களுக்கு நிறுத்தப்பட வேண்டும் என்பது சர்வதேச நாணய நிதியத்தின் பிரதான பரிந்துரைகள என்று அறியமுடிகின்றது.

ஆகவே அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டால் மாத்திரமே இந்த நிபந்தனைகளை நிறைவேற்றும்போது அரசியல் ரீதியான எதிர்ப்பு இருக்காது. இல்லையேல் எதிர்க்கட்சிகள் சர்வதேச நாணய நிதியத்தின் மேற்படி நிபந்தனைகள் பற்றி அரசியல் ரீதியாக மக்கள் மத்தியில் பிரச்சாரங்களைச் செய்து ரணிலின் ஆட்சியைக் கவிழ்க்கும் ஆபத்து உருவாகலாம்.

இந்த ஒரு அச்சமான சூழலைத் தவிர்க்கும் நோக்குடன் மாத்திரமே சர்வதேச நாணய நிதியம் தேசிய அரசாங்கம் அல்லது அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய சர்வகட்சி ஆட்சி முறையை ஏற்படுத்துமாறு மறைமுகமாக வற்புறுத்தி வருகின்றது.

அத்துடன் இலங்கையுடன் செய்யப்படவுள்ள ஒப்பந்தத்துக்கு நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தைச் சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்க்கின்றது. அதாவது வழங்கவுள்ள கடன்களை மீளப் பெறும் உத்தரவாதத்துக்காகவும் நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தை உறுதிப்படுத்த சர்வதேச நாயண நிதியம் கடும் முயற்சி எடுக்கிறது.

ஆகவே தாம் வழங்குகின்ற நிதியை மீளப் பெறுவதற்கான உத்தரவாதத்துக்கு மாத்திரம் கவனம் செலுத்தும் சர்வதேச நாணய நிதியம், இலங்கைத்தீவில் நிலவும் எழுபது ஆண்டுகளுக்கும் மேலான இனப்பிரச்சினைத் தீர்வுக்கு அழுத்தம் கொடுக்கவேயில்லை. அது பற்றிப் பேசியதாகவும் தெரியவில்லை.

நிதி வழங்கும்போது சர்வதேச நாணய நிதியம் உள்நாட்டு அரசியல் விவகாரங்களில் தலையிடாது.

ஆனால் நிதியை வழங்குவதற்கான நிபந்தனைகளின்போது, அரசியல் விடுதலை தொடர்பாகப் பாதிக்கப்பட்ட மற்றைய இனம் ஒன்று விபரங்களைச் சமர்ப்பிக்குமனால், அது பற்றிக் கவனம் செலுத்தக்கூடிய சந்தர்ப்பங்கள் இல்லாமலில்லை.

ஆனால் இச் சந்தர்ப்பத்தைத் தமிழ்த்தரப்பு உரிய முறையில் பயன்படுத்தத் தவறிவிட்டது.

தமிழ்த்தேசியக் கட்சிகளும் வேலைத்திட்டங்களைச் சரியான முறையில் முன்னெடுக்கவில்லை. அறிக்கைகளோடு மாத்திரம் அமிழ்ந்துவிடுகின்றன. வடக்குக் கிழக்குச் சிவில் சமூக அமைப்புகளும் கொழும்பில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளைச் சந்திப்பதற்கான முற்சிகளில் ஈடுபடவுமில்லை

அதேவேளை, சர்வதேச நாணய நிதியும் முன்வைத்துள்ளதாகக் கூறப்படும் இலங்கை ஒற்றையாட்சிக்கு உட்பட்ட மேற்படி நிபந்தனைகள், பரிந்துரைகள் தொடர்பாக அரசாங்கம் இதுவரை அதிகாரபூர்வமாகக் கூறவில்லை. சர்வதேச நாணய நிதியமும் எந்தவொரு இடத்திலும் இலங்கைக்கான தமது மேற்படி நிபந்தனைகளை அதிகாரபூர்வமாக எங்குமே வெளியிடவில்லை.

ஆனாலும் குறிப்பிட்ட நிபந்தனைகள் தொடர்பாகக் கொழும்பில் உள்ள சர்வதேச நாணயத்தின் பிரதிநிதிகள் கட்சித் தலைவர்கள், மற்றும் பிரமுகர்களைச் சந்தித்து இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு தொடர்பாக உரையாடும்போது விளக்கமளித்திருக்கிறார்கள்.

நிபந்தனைகள் இலங்கை ஒற்றையாட்சிக்கு உட்பட்டது என்ற நம்பிக்கையும் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

ஆனாலும் நிபந்தனைகள் சாதாரண மக்களுக்குக் கடுமையான வலிகளாகவே இருக்கும். ஆகக் குறைந்தது ஐந்து வருடங்களுக்காவது இந்த வலிகளைத் தாங்கினால் மாத்திரமே நிரந்தரமாகப் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியும் என்ற தகவலையும் சர்வதேச நாணய விரிவாகக் கூறியிருக்கின்றது.

ஒவ்வொரு கட்சிகளின் தலைவர்களை மாத்திரமல்ல முக்கிய உறுப்பினர்கள் மற்றும் கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு விளக்கமளிக்கக்கூடிய பிரதிநிதிகள் மற்றும் மதத் தலைவர்கள் உள்ளிட்ட பலரையும் சர்வதேச நாணய நிதியத்தின் கொழும்பில் உள்ள பிரதிநிதிகள் சந்தித்து விளக்கமளித்து வருகின்றனர்.

ஆனால் இச் சந்திப்புகள் பகிரங்கமாக இடம்பெறுவதில்லை. பொருளாதார நெருக்கடிக்கான தீர்வை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கோடு நடத்தப்படும் இச் சந்திப்புகள், சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்துக்கு தீவில் அரசியல் ரீதியான எதிர்ப்புகள் இருக்கக்கூடாது என்பதே.

இலங்கைத்தீவின் பொதுநலன் என்ற நோக்கில் சஜித் பிரேமதாசாவும் ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்காவும் சிந்திக்க முற்பட்டால், அல்லது சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் அவர்களின் மன நிலையில் மாற்றங்களை ஏற்படுத்திவிட்டால், ரணில் விக்கிரமசிங்கவுக்கு அது மேலும் வாய்ப்பாகவே இருக்கும்.

இருந்தாலும் இலங்கைத்தீவின் நலன் என்பதைவிட தனிப்பட்ட கட்சி அரசியல் நலன்கள் மாத்திரமே சிங்கள அரசியல் கட்சித் தலைவர்களிடம் விஞ்சிக் காணப்படுகின்றன. இப் பின்னணியிலேதான் தமது புவிசார் அரசியல் நோக்கில் அமெரிக்க - இந்திய அரசுகளும் சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் இலங்கைக்குக் கடன் வழங்கும் திட்டங்களை ஊக்குவித்து வருகின்றன.

2022 ஆம் ஆண்டில் நான்கு பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புடைய கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது. யூலை மாதம் செலுத்தப்பட வேண்டிய ஒரு பில்லியன் கடன் செலுத்தப்படவில்லை என இலங்கை மத்திய வங்கி அறிக்கை கூறுகின்றது.

மொத்தமாக தங்கப் பத்திரங்கள் மூலம் 11.8 டொலர்கள் பில்லியன் மதிப்புள்ள கடன்கள் பெறப்பட்டுள்ளன. ஆசியாவில் 14.3 சதவீத பங்குடன் அதிக கடன் பெற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது. சீனாவிடம் அதிகமாக கடன் பெற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளது.

சீனாவிற்கு இலங்கை செலுத்த வேண்டிய மொத்தக் கடன் 8 பில்லியன் அமெரிக்க டொலர்கள். இது இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடனான 45 பில்லியன் அமெரிக்க டொலர்களில் கிட்டத்தட்ட ஆறில் ஒரு பங்காகும்.

சீனாவுக்கு இலங்கை உடனடியாக திருப்பிச் செலுத்த வேண்டிய தொகை சுமார் 400 முதல் 500 மில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. மீதமுள்ள கடன் இந்தியா போன்ற நாடுகளுக்கும் உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடு உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களுக்கும் இலங்கை செலுத்த வேண்டும்.

இந்த அவல நிலைமையில் தேசத்தை மீட்பது பற்றி சஜித்தும் அனுரகுமார திஸாநாயக்கவும் சிந்திப்பார்களா? அல்லது கட்சி அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்களா என்ற கேள்வியை சிங்கள பௌத்த தேசியவாதிகள் எழுப்புகின்றனர்.

சீனாவிற்கு இலங்கை செலுத்த வேண்டிய மொத்தக் கடன் 8 பில்லியன் அமெரிக்க டொலர்கள். இது இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடனான 45 பில்லியன் அமெரிக்க டொலர்களில் கிட்டத்தட்ட ஆறில் ஒரு பங்காகும்

விழுந்து கிடக்கும் தனது கட்சியை மீட்கும் திட்டத்தை ரணிலும் முழுமையாக் கைவிட்டுப் பொருளாதார நெருக்கடித் தீர்வு பற்றி நேர்மையாகச் சிந்திப்பாரானால், சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் இலகுவாக நிறைவேறுமென எதிர்த்தரப்பும் கூறுகின்றது.

ஆனால் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக் கோரிக்கைகக்கு உரிய தீர்வு முன்வைக்கப்பட வேண்டுமென இதுவரையும் சிங்கள பௌத்ததேசிய வாதிகளும் சஜித், அனுரகுமார திஸாநாயக்க போன்ற எதிர்த்தரப்புகளும் வாய்திறக்கவேயில்லை.

சுமார் நான்கு பில்லியன்வரை நிதியுதவி வழங்கிய இந்தியாவும் ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு முன்வைக்கப்பட வேண்டுமென எந்தவொரு அழுத்தத்தையும் கொடுக்கவில்லை. மாறாக வடக்குக் கிழக்கில் தமக்கான புவிசார் அரசியல் நலன்களையே இந்தியா பேரம் பேசுகின்றது.

பல நிபந்தனைகளை முன்வைத்து வரும் சர்வதேச நாணய நிதியமும் நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டுமென்று மாத்திரமே இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கின்றது.

ஆனால் நல்லிணக்கம் என்பது முழு இலங்கைத்தீவுக்கும் உரியது.

அதாவது எதிர்க்கட்சி ஆதரவாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துவது, போராட்டக்காரர்கள் கைது செய்யப்படுவதைத் தடுப்பது, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள், வடக்குக் கிழக்கில் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் என்ற வரையறைக்குள் அடங்குபவைதான் நல்லிணக்கம் என்பது.

புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகள் சில தனி நபர்கள் மீதான இலங்கை அரசாங்கத்தின் தடை நீக்கமும் நல்லிணக்கம் என்றுதான் காண்பிக்கப்படும்.

ஆனால் பொருளாதார நெருக்கடிக்குரிய மூலம் காரணம் முப்பது வருட போரும், 2009 இன் பின்னரான பதின்மூன்று ஆண்டுகளில் வடக்குக் கிழக்கில் இராணுவ மயமாக்கல், சிங்களக் குடியேற்றங்கள் அதற்குரிய வரையறையற்ற செலவுகளே காரணம் என்பதை சிங்கள அரசியல் தலைவர்கள், சிங்கள முற்போக்காளா்கள் என்று கூறப்படுகின்ற இடதுசாரி அமைப்புகள், சிங்களச் சிவில் சமூக அமைப்புகள் எதுவுமே இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

தமிழ்த்தேசியக் கட்சிகளும் அறிக்கைகளோடு மாத்திரம் அமிழ்ந்துவிடுகின்றன. வடக்குக் கிழக்குச் சிவில் சமூக அமைப்புகளும் கொழும்பில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளைச் சந்திப்பதற்கான முற்சிகளில் ஈடுபடவில்லை.