இலங்கைத்தீவில் தொடரும் பொருளாதார நெருக்கடி

சர்வதேச நாணய நிதியத்தை இறுக்கிப் பிடிக்கும் சீனா

கடன் திட்டங்களை இலகுபடுத்துமாறு கோரியிருக்கிறார் ரணில்- மூன்றரை பில்லியன் டொலரைப் பெற முயற்சி
பதிப்பு: 2022 ஓகஸ்ட் 28 23:13
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 30 22:32
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னரான இலங்கைத்தீவின் பொருளாதார நிலைமை அடுத்த இரண்டு வாரங்கள் தீர்மானமிக்கதாக அமையுமென வடமேல் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவம் மற்றும் நிதி பீடத்தின் பேராசிரியர் அமிந்த மெத்சில பெரேரா பி.பி.சி செய்திச் சேவைக்குக் கூறியுள்ளார். அதிகளவு கடன் வழங்கிய சீன அரசு, இலங்கைக்கு மேலும் கடன் வழங்கவும் வழங்கிய கடன்களை மீளப் பெறுவதற்கும் விதிக்கப்படும் நிபந்தனைகள் இலங்கைக்கு மேலும் சிரமத்தைக் கொடுத்துள்ளதாகக் கருதப்படும் நிலையில் இக் கருத்தைப் பேராசிரியர் வெளியிட்டிருக்கிறார். இப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டுமானால், நிலையான மத்திய வங்கி வேண்டும்.
 
சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியுமாயின், இலங்கைக்கு மூன்று அல்லது மூன்றரை பில்லியன் அமெரிக்க டொலர் கிடைக்கும். அதாவது வருடமொன்றுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் வீதம் கிடைக்கும்

சுதந்திரமாகவும் நடைமுறை ரீதியாகவும் சிந்திக்கக்கூடிய மத்திய வங்கி ஆளுநர் ஒருவர் தேவையெனவும் பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதாவது கடந்த இரண்டு வருடங்களில் மாறி மாறிப் பதவியில் இருந்த மத்திய வங்கியின் ஆளுநர்கள் உரிய முறையில் பொருளாதார ஆலோசனைகளை முன்வைக்கத் தவறியுள்ளனர் என்ற தொனியில் கருத்துரைத்துள்ளார்.

இந்த நிலையில். கொழும்புக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகள் கொழும்பில் சந்திப்புக்களை நடத்தியபோதும். பரிந்துரைக்கப்பட்ட நிபந்தனைகள் பலவற்றை இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை என அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கை மத்திய வங்கி ஆளுநர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் புதன்கிழமை நடத்தப்பட்ட உரையாடல்களில் திருப்தி இல்லையென நிதியமைச்சின் தகவல்கள் கூறுகின்றன. கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கமோ, சர்வதேச நாணய நிதியமோ அதிகாரபூர்வமாக ஊடகங்களுக்கு எதுவுமே தெரிவிக்கவில்லை.

ஆனாலும் சர்வதேச நாணய நிதியம் பரிந்துரைத்துள்ள கடும் நிபந்தனைகளுடனான கடன் திட்டங்களை இலகுபடுத்துமாறு இலங்கை கோரியுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

இலங்கையின் நிதி மற்றும் சட்ட ஆலோசனைக்காக வெளிநாடுகளில் இருந்து அமர்த்தப்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனும் சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் பேச்சு நடத்தியுள்ளனர். ஆனாலும் அரச சேவையில் இருந்து குறைந்தது ஒரு இலட்சம் பேரையாவது உடனடியாகப் பணியில் இருந்து நிறுத்தும் திட்டத்திற்கு அரசாங்கம் தயக்கம் காண்பிக்கின்றது என்ற தகவலையே இப் பேச்சுக்களில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் கேட்டிருக்கின்றனர்.

வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இரண்டாம் கட்டப் பேச்சுக்களும் நம்பிக்கை தரவில்லை என்றே பிரதிநிதிகள் கூறுகின்றனர். இலங்கையின் ஸ்திரமற்ற அரசியல் நிலைமையும் எதிர்க்கட்சிகள் பொருளாதாரத் திட்டங்களை அரசியலாக்கி மக்கள் மத்தியில் தவறான பிரச்சாரங்கள் செய்வதாலும், அடுத்த கட்ட நகர்வை மேற்கொள்வது கடினம் என்ற கருத்தை சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டப் பிரதிநிதி ஒருவர் கொழும்பில் தெரிவித்திருக்கிறார்.

இலங்கையின் வெளிநாட்டுக் கடன் சுமார் இருபத்து ஒன்பது பில்லியன் டொலர்கள் என்று நிதியமைச்சின் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் 28 பில்லியன் டொலர் என்று ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறார். கடன் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நிலையில். கடந்த மூன்று மாதங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு இரண்டாவது தடவையாகவும் பயணம் செய்திருக்கின்றனர்.

தற்போது எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியில் இருந்து ஓரளவு நிவாரணம் பெற சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கை மூன்று பில்லியன் டொலர்களை எதிர்பார்க்கிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் அதிகாரிகள் மற்றும் இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள ஆலோசகர்களான லாசாடஸ், (Lazard´s) கிளிபோர்ட் (Clifford) ஆகிய பிரதிநிதிகளுடனும் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடியுள்ளனர்.

இலங்கை செலுத்த வேண்டிய இருதரப்புக் கடனின் அளவு சுமார் ஒன்பது தசம் ஆறு பில்லியன் டொலர்கள் மற்றும் சர்வதேச இறையாண்மை பத்திரங்கள் மற்றும் தனியார் கடன்களின் தொகை பத்தொன்பது தசம் எட்டு பில்லியன் டொலர்கள் என நிதி அமைச்சின் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனா வழங்கிய கடன்கள்தான் கூடுதலானவை எனவும், அந்தக் கடன்கள்தான் இலங்கையை அதளபாதாளத்துக்குள் தள்ளிவிடும் என்றும் அமெரிக்கா கூறிய கருத்துத் தவறானது என்று சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜாவோ லிஜியன் ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்

இலங்கை தனது இருதரப்பு கடனில் பெரும்பகுதியை ஜப்பான், சீனா ஆகிய இரண்டு நாடுகளுக்குமே செலுத்த வேண்டியுள்ளது.

இவற்றில் சீனாவுக்கு செலுத்த வேண்டிய கடன் மூன்று தசம் ஐந்து பில்லியன் டொலர்களாக இருந்தது. அத்துடன் இந்த இரு நாடுகளிடம் இருந்து பெறப்பட்ட கடன்களையும் சேர்த்துப் பார்க்கும் போது, இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடனில் ஐந்தில் ஒரு பங்கு சீனாவிடம் உள்ளதாகவே தெரிகின்றது.

இலங்கை உடனடியாகப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இன்று வரை 160 மில்லியன் அமெரிக்க டொலரை அவசர தேவைக்காக வழங்கியுள்ளதாக உலக வங்கி கூறுகின்றது. உலக வங்கியின் இந்த உதவிகள் குறித்தும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட சந்திப்புகளில் பேசப்பட்டிருக்கின்றது.

அத்தியாவசிய மருந்துப் பொருட்கள், கல்விச் செயற்பாடுகள் குறித்த செலவினங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு உடனடிக் கடனாக உலக வங்கி இத் தொகையை வழங்கியுள்ளது.

ஆனால் இலங்கையின் நிலையற்ற அரசியல் செயற்பாடுகள் தொடர்பான அச்சம் கலந்த எச்சரிக்கை ஒன்றையும் உலக வங்கி விடுத்திருக்கின்றது. இப் பின்புலத்திலேதான் எதிர்வரும் ஆறு மாத காலத்திற்குள் பாரிய பிரச்சினைகளை இலங்கை எதிர்நோக்க நேரிடுமென இலங்கையின் பொருளாதார நிபுணரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹர்ஷா டி சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால் பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எச்சரிக்கை பொய்யானவை என்றும், பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு நட்பு நாடுகள் உதவியளிக்கத் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் காஞ்சன விஜயசேகர கொழும்பில் செய்தியாளர் மத்தியில் கூறியிருக்கிறார்.

இந்த நிலையிலேதான் இலங்கையின் கடன் தொடர்பாக அபாய எச்சரிக்கை விடுத்து வரும் அமெரிக்கப் பொருளாதா நிபுணர்களின் கருத்துக்களைச் சீனா மறுத்துள்ளது. சீனா வழங்கிய கடன்கள்தான் கூடுதலானவை எனவும், அந்தக் கடன்கள்தான் இலங்கையை அதளபாதாளத்துக்குள் தள்ளிவிடும் என்றும் அமெரிக்கா கூறிய கருத்துத் தவறானது என்று சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜாவோ லிஜியன் ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.

ஆனால் இலங்கையின் உண்மையான நிதி நிலைமை என்பது சீனாவின் அதிகரித்த கடன் திட்டங்களும் குறுங்கால ஆனால் அதிகளவு வட்டியுடன் கூடிய கடன்களே இலங்கையின் கழுத்துவரை நிற்பதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதி ஒருவர் கூறுகிறார். அதாவது இலங்கைக்குக் கடன் வழங்கும் சர்வதேச நாணய நிதியத்தின் புதிய திட்டங்களில் சீனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதை அந்தப் பிரதிநிதி ஒப்புக்கொள்கிறார்.

ரணில் விக்கிரமசிங்கவுடன் நடத்தப்பட்ட சந்திப்பில் சீனாவின் ஆதிக்க நிலைமை பற்றிச் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் விரிவாக எடுத்துக் கூறியிருந்தனர். இதன் பின்னணியிலேயே சீனா தனது கடன் திட்டங்களிலும் வட்டி வீதக் குறைப்புகளிலும் சலுகை வழங்க வேண்டுமென ரணில் விக்கிரமசிங்க ஜப்பான் ஊடகத்துக்குக் கருத்து வெளியிட்டிருந்தார்.

இதேவேளை சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனமான பிரிஜ் ரேட்டிங்க்ஸ் நிறுவனம் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைக்க முடியாதென்ற கருத்தை வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனம் அமெரிக்காவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக் குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனமாகும்.

ஆகவே இந்த நிறுவனத்தின் மதிப்பீட்டின் பிரகாரம் ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவுக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் கூடுதல் செல்வாக்கு இருந்தாலும், மக்கள் மத்தியில் அந்தக் கட்சிக்கு ஆதரவு இல்லை என்று இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் விபரித்துள்ளது.

இதனால் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் அமெரிக்க - இந்திய அரசுகள் வழங்கும் கடன்களை மீளப் பெறும் உத்தரவாதம் தொடர்பாகவும் பிரிஜ் ரேட்டிங்ஸ் நிறுவனம் சந்தேகம் கொண்டுள்ளது.

அதாவது வழங்கப்படவுள்ள கடனுதவிகளில் பெரும் தொகையை இலங்கை சீனாவிடம் பெற்ற கடனை அடைக்கப் பயன்படுத்தும் என்ற தொனியே பிரிஜ் ரேட்டிங்ஸ் நிறுவனத்தின் சந்தேகத்தில் வெளிப்படுகின்றது.

ஆகவே கடன் மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன்களைப் பெற்றுக்கொள்ளும் விவகாரங்களில் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் தொடர்ந்தும் பல சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

பரிந்துரைக்கப்பட்ட முபத்து ஒன்பது அரச நிறுவனங்களில் குறைந்தது பன்னிரெண்டு அரச நிறுவனங்களைத் தனியார் மயப்படுத்துதல், ஆறு இலட்சத்துக்கும் அதிகமான அரச ஊழியர்களைப் பணியில் இருந்து இடை நிறுத்துதல் போன்ற பரிந்துரைகளுக்கான அங்கீகாரங்களை இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவது கடினமான காரியம் என்றே கருதப்படுகின்றது.

இலங்கையின் சமகால பொருளாதார உத்திகள் நம்பிக்கை தருவதாக இல்லை என்றே நிதி வழங்கும் சர்வதேசப் பிரதிநிதிகள் கூறுவதாக கொழும்பு உயர்மட்ட அரசியல் வட்டரங்கள் கூறுகின்றன

பிரிஜ் ரேட்டிங்க்ஸ் நிறுவனத்தின் பரிந்துரைகளின் மூலமே இலங்கைக்குக் கடன் உதவிகள் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. இதனால் பிரிஜ் நிதி கிடைக்குமென இலங்கை கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக எதிர்ப்பார்த்திருந்ததாக பொருளாதார நிபுணரும் சஜித் அணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹர்சா டி சில்வா கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.

ஆனால் இலங்கையின் சமகால பொருளாதார உத்திகள் நம்பிக்கை தருவதாக இல்லை என்றே நிதி வழங்கும் சர்வதேசப் பிரதிநிதிகள் கூறுவதாக கொழும்பு உயர்மட்ட அரசியல் வட்டரங்கள் கூறுகின்றன.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியுமாயின், இலங்கைக்கு மூன்று அல்லது மூன்றரை பில்லியன் அமெரிக்க டொலர் கிடைக்கும். அதாவது வருடமொன்றுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் வீதம் கிடைக்கும்.

எனினும், அது கிடைக்கும் வரை அத்தியாவசியப் பொருட்களை எவ்வாறு இறக்குமதி செய்வது ஏன்பது தொடர்பாகவே இலங்கை தற்போது தீவிரமாகப் பரிசீலித்து வருகின்றது.