இலங்கைத்தீவில் தொடரும் பொருளாதார நெருக்கடி

இந்தியா வழங்கியதையும்விட குறைவான நிதியுதவிகளை வழங்கிய சர்வதேச நாணய நிதியம்

சீர்திருத்தங்களைத் தொடர்ந்தால் மாத்திரமே நிதி கிடைக்கும் என்கிறார் பீற்றர் ப்ரூயர்
பதிப்பு: 2022 செப். 06 09:22
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: செப். 06 09:25
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#imf
இந்தியா ஆறு மாதங்களுக்குள் இலங்கைக்கு வழங்கிய சுமார் நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களையும் விட அரைவாசித் தொகையை மாத்திரமே ஐ.எம்.எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கியிருக்கின்றது. அதுவும் இலங்கை அரசாங்கம் உறுதியளித்தபடி தனது பொருளாதார சீர்திருத்தங்களை தொடர்ந்தால் மாத்திரமே தீர்மானிக்கப்பட்ட நிதியை வழங்க முடியுமென ஐ.எம்.எப் மூத்த அதிகாரி பீற்றர் ப்ரூயர் (Peter Breuer) கூறுகிறார். நீண்ட பாதையின் ஒரு ஆரம்பம் மாத்திரமே எனவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆகவே இரண்டு தசம் ஒன்பது பில்லியன் டொலர்களை வழங்குவதற்கான ஒப்பந்தம் ஒன்றைச் செய்தாலும், மெதுவான எச்சரிக்கை ஒன்றையும் ஐ.எம்.எப் இலங்கைக்கு விட்டுச் சென்றிருக்கின்றது.
 
சர்வதேச நாடுகளிடம் இருந்து பெற்றுக் கொண்ட கடன்களை எவ்வாறு மீளத் திரும்பிச் செலுத்துவது என்ற விடயத்தில் இலங்கை தெளிவான நிலைப்பாட்டை எடுக்கும்போதுதான் கடன் மறுசீரமைப்புக்கான சிறப்பு ஏற்பாடுகள் இயல்பாகவே உருவாகும்

ஆகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்துள்ள வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்கள் குறைவடைந்துள்ளன. அதுவும் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்கப் பிரதான எதிர்க்கட்சிகள் இணங்காத ஒரு சூழலில், ஐ.எம்.எப் பரிந்துரைகள் மற்றும் அதனூடான வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த ரணில் விக்கிரமசிங்க பெரும் சவால்களை எதிர்கொள்ள நேரிடும் எனலாம்.

ஐ.எம்.எப் மற்றும் இலங்கை அதிகாரிகள் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (Extended Fund Facility -EFF) கீழ் 48 மாத ஏற்பாட்டுடன் இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகளை அதிகரிப்பதற்கான அதிகாரிகள் மட்டத்திலான உடன்பாட்டை எட்டியிருந்தாலும், இந்த நிதி கிடைப்பதற்கு மூன்று அல்லது ஆறு மாதங்கள் வரை செல்லும்.

இலங்கையுடனான நிதியத்தின் கடந்தகாலச் செயற்பாடுகளை நோக்கும்போது நிதி கிடைக்கக்கூடிய கால எல்லையை நிர்ணயிக்கக்கூடியதாக உள்ளது.

EFF எனப்படும் வசதியின் கீழ் திட்டங்களை ஏற்பாடு செய்தல், நிதி ஸ்திரத்தன்மையைப் பாதுகாத்தல், ஊழல் பாதிப்புகளைக் குறைத்தல் மற்றும் இலங்கையின் வளர்ச்சித் திறனைத் தன்மைகளை ஊக்குவித்தல் போன்ற பரிந்துரைகள் மேற்படி ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளன. இதற்கு இலங்கை அதிகாரிகள் உடன்பட்டிருப்பதாகவும் ஐம்எப் கூறுகின்றது

இலங்கையின் உத்தியோகபூர்வ கடனாளர்களிடமிருந்து நிதியைப் மீளக் கையளிப்பதற்கான உறுதிமொழிகளைப் பெறுதல் மற்றும் ஒரு கூட்டு முயற்சியை அடைவதற்கான நம்பிக்கையின் அடிப்படையில், தனியார் கடனாளிகளுடன் ஒப்பந்தம், இலங்கையின் கடனாளிகளிடமிருந்து கடன் நிவாரணம் மற்றும் பலதரப்பு பங்காளிகளிடமிருந்து கூடுதல் நிதியுதவி போன்ற விவகாரங்களில் இலங்கை கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

இது குறித்து ஐ.எம்.எப் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. போதுமான வெளிப்புற உதவிகள், மற்றும் நீடிக்க முடியாத பொதுக் கடன் மாறும் தன்மை காரணமாக இலங்கைக்குப் பாதிப்புகள் அதிகரித்துள்ளன.

ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியால் பொருளாதாரம் 8.7 சதவீதம் சுருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றும் பணவீக்கம் சமீபத்தில் 60 சதவிகிதத்தை தாண்டியது. இதன் தாக்கம் ஏழைகள் மற்றும் நலிவடைந்த மக்கள் மத்தியில் பல தாக்கங்களைச் செலுத்தியிருந்ததாகச் கூட்டிக்காட்டியுள்ள ஐ.எம்.எப், தமது ஒப்பந்தத்தின் மூலம் பொருளாதார மீள்ச்சிக்கான சாதகமான சூழல் உருவாகும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளது.

ஆனால் கடந்த ஆறு மாதங்களுக்குள் இந்தியா வழங்கிய நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகளவில் எரிபொருள் இறக்குமதிக்கே பயன்படுத்தப்பட்டன். நான்கு பில்லியன் டொலர்களை இந்தியா வழங்கியிருந்தும், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் வேறு அவசியமான பொருட்கள் எதனையும் இறக்குமதி செய்வதற்கு இலங்கையிடம் டொலர்கள் இருக்கவில்லை.

இதன் பின்னணியில் ஐ.எம்.எப் வழங்கியுள்ள இரண்டு தசம் ஒன்பது பில்லியன் டொலாகள் மூலம் ஐ.எம்.எப் தனது அறிக்கையில் கூறியுள்ள பொருளாதார மீட்சியை எப்படி எட்ட முடியும் என்ற கேள்விகள் இயல்பாகவே எழுகின்றன.

ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியால் பொருளாதாரம் 8.7 சதவீதம் சுருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றும் பணவீக்கம் சமீபத்தில் 60 சதவிகிதத்தை தாண்டியது. இதன் தாக்கம் ஏழைகள் மற்றும் நலிவடைந்த மக்கள் மத்தியில் பல தாக்கங்களைச் செலுத்தியிருந்ததாக ஐ.எம்.எப் கூட்டிக்காட்டியுள்ளது

ஐ.எம்.எப் திட்டத்தின் முக்கிய கூறுகள்-

நிதி ஒருங்கிணைப்பை ஆதரிக்க நிதி வருவாயை உயர்த்துதல், உலகின் மிகக் குறைந்த வருவாய் மட்டங்களில் ஒன்றிலிருந்து தொடங்கி, இந்தத் திட்டம் பெரிய வரிச் சீர்திருத்தங்களைச் செயல்படுத்தும். இச் சீர்திருத்தங்களில் தனிநபர் வருமான வரியை மேலும் முற்போக்கானதாக மாற்றுவது மற்றும் பெருநிறுவன வருமான வரி மற்றும் வற் (VAT) ஆகியவற்றிற்கான வரி தளத்தை விரிவுபடுத்துவது ஆகியவை அடங்கும்.

2024 ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3 சதவீத முதன்மை உபரியை எட்டுவதை இந்த திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது.

அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் இருந்து எழும் நிதி அபாயங்களைக் குறைக்க எரிபொருள் மற்றும் மின்சாரத்திற்கான செலவு-மீட்பு அடிப்படையிலான விலையை அறிமுகப்படுத்துதல். அதிகாரிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கணிசமான வருவாய் நடவடிக்கைகள் மற்றும் எரிசக்தி விலை சீர்திருத்தங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

சமூக செலவினங்களை உயர்த்துவதன் மூலம் ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்கள் மீதான தற்போதைய நெருக்கடியின் தாக்கத்தைத் தணித்தல் மற்றும் சமூக பாதுகாப்பு வலைத் திட்டங்களையும் பொருளாதார இலக்குகளையும் மேம்படுத்துதல்;.

தரவு-உந்துதல் பணவியல் கொள்கை நடவடிக்கை, நிதி ஒருங்கிணைப்பு, பண நிதியளிப்பை படிப்படியாக நீக்குதல் மற்றும் நெகிழ்வான பணவீக்க இலக்கு. இலங்கை மத்திய வங்கியின் அரசியல் தலையீடுகள் அற்ற சுயாட்சித் தன்மை. புதிய மூலோபாயம் ஆகியவற்றின் மூலம் விலை ஸ்திரத்தன்மை மீளமைக்கப்படுவதை ஐ.எம்.எப் எதிர்பார்க்கிறது.

இத் திட்டத்தின் கீழ் விரிவான கொள்கைத் தொகுப்பால் ஆதரிக்கப்படும் சந்தை நிர்ணயிக்கப்பட்ட மற்றும் நெகிழ்வான மாற்று விகிதத்தை மீட்டெடுப்பதன் மூலம் வெளிநாட்டு இருப்புக்களை மீண்டும் கட்டியெழுப்புதல்.

ஆரோக்கியமான மற்றும் போதுமான மூலதன மயமாக்கப்பட்ட அரச வங்கி அமைப்பை உறுதி செய்வதன் மூலம் நிதி ஸ்திரத்தன்மையைப் பாதுகாத்தல், மற்றும் திருத்தப்பட்ட வங்கிச் சட்டத்துடன் நிதித் துறைப் பாதுகாப்பு வலைகள் மற்றும் ஒழுங்குமுறை தரநிலைகளை மேம்படுத்துதல்;.

நிதி வெளிப்படைத்தன்மை மற்றும் பொது நிதி நிர்வாகத்தை மேம்படுத்துவதன் மூலம் ஊழல் பாதிப்புகளை குறைத்தல், வலுவான ஊழலுக்கு எதிரான சட்டக் கட்டமைப்பை அறிமுகப்படுத்துதல் மற்றும் ஐ.எம்.எப் தொழில்நுட்ப உதவியால் பலவீனமான திட்டங்களைக் கண்டறிதல் ஆகியவை ஐ.எம்.எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதான எதிர்பார்ப்புகள்.

ஆனால் இவற்றை முழுமையாக செயற்படுத்தக்கூடிய மன நிலை இலங்கை அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களிடம் இருப்பதாகக் கூற முடியாது. ஏனெனில் ஐ.எம்.எப்பிடம் இருந்து ஆகக் குறைந்தது நான்கு பில்லியன் டொலர்களை இலங்கை எதிர்பார்த்தது.

வேறு வகையான திட்டங்களுக்குரிய ஒத்துழைப்புகள் இலகுக் கடன், நன்கொடை போன்றவற்றையும் இலங்கை ஐ.எம்.எப்பிடம் இருந்து எதிர்பார்த்திருந்தது.

கொழும்பில் நடத்தப்பட்ட பேச்சுக்களில் இந்த விடயங்களை இலங்கை அதிகாரிகள் பகிரங்கமாக ஐ.எம்.எப் அதிகாரிகளிடம் வெளிக்காட்டியிருக்கின்றனர். ஆனால் ஐ.எம்.எப் அதிகாரிகள் அதற்கு உடன்படவில்லை.

மேற்படி ஒப்பந்தத்தில் முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளைச் செயற்படுத்தி நம்பிக்கையை உருவாக்கினால் மாத்திரமே நான்கு பில்லியன் டொலர்களுக்கும் மேலான அதுவும் வருடத்துக்கு இரண்டு பில்லியன் என்ற வட்டிவீதம் குறைந்த நீண்டகாலக் கடன்களைப் பரிந்துரைக்க முடியும் எனவும் ஐ.எம்.எப் அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.

இலங்கை அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுக்களில் பரிந்துரைக்கப்பட்ட மற்றும் இலங்கை அதிகாரிகளினால் முன்வைக்கப்பட்டு மறுக்கப்பட்ட விடயங்கள் எதனையும் ஐ.எம்.எப் தனது அறிக்கையில் கூறவில்லை. ஊடகங்களுக்கும் வெளிப்படுத்தவில்லை.

ஆனால் உள்ளகத் தகவல்களின் பிரகாரம், கூடுதல் நிதியைப் பெறுவதற்கு இலங்கை அதிகாரிகளினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிகள் பலவற்றை ஐ.எம்.எப் அதிகாரிகள் நிராகரித்துள்ளனர் என்றே அறிய முடிகின்றது.

அதிகாரிகள் மட்டத்தில் மூன்று கட்டப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கின்றன. இதில் கடன் மறுசீரமைப்புத் தான் மிக முக்கிய பிரச்சனையாக இருந்தது.

நிதி வழங்கும் ஐ.எம்.எப்பின் உறுப்பு நாடுளுடன் இலங்கை பேச்சுக்களை நடத்தி முடித்துள்ளது. ஆனால் சீனாவுடன் மாத்திரமே இலங்கை இன்னமும் பேசி முடிக்கவில்லை.

இலங்கைக்கு வழங்கிய கடன்களை மீளப் பெறுவதிலும், கடன்களுக்குரிய வட்டி வீதங்களைக் குறைப்பதற்கும் சீனா விட்டுக் கொடுப்பதாக இல்லை. இதனால் ஐ.எம்.எப்பின் கடன் வழங்கும் திட்டத்திலும் இழுபறி ஏற்பட்டுள்ளது.

இதனாலேதான் இரண்டு தசம் ஒன்பது பில்லியன் டொலர்களை மாத்திரம் பரிந்துரைத்திருக்க முடிந்ததாக ஐ.எம்.எப் வட்டாரங்கள் கூறுகின்றன.

சர்வதேச நாடுகளிடம் இருந்து பெற்றுக் கொண்ட கடன்களை எவ்வாறு மீளத் திரும்பிச் செலுத்துவது என்ற விடயத்தில் இலங்கை தெளிவான நிலைப்பாட்டை எடுக்கும்போதுதான் கடன் மறுசீரமைப்புக்கான சிறப்பு ஏற்பாடுகள் இயல்பாகவே உருவாகும்.

புவிசார் அரசியல் நோக்கில் கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளும் இந்தியாவும் இலங்கையோடு இணக்கத்துக்கு வரக்கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு.

ஆனால் சீனா அவ்வாறு வரக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை. இதனால் எழப்போகும் புவிசார் அரசியல் விவகாரங்களையும், பொருளாதார நெருக்கடிகளையும் இலங்கை எவ்வாறு சமாளிக்கப் போகின்றது என்ற கேள்விகள் எழுகின்றன.

அதுமாத்திரமல்ல ஐ.எம்.எப் முன்வைத்த திட்டங்களை எதிர்க்கட்சிகள் அரசியலாக்கி மக்கள் மத்தியில் தவறாகப் பிரச்சாரம் செய்தால், அதனால் எழக்கூடிய சவால்களையும் ரணில் விக்கிரமசிங்க எவ்வாறு சமாளிக்கப் போகிறார் என்ற வினாக்களும் உண்டு.

ஐ.எம்.எப் முன்வைத்த திட்டங்களை எதிர்க்கட்சிகள் அரசியலாக்கி மக்கள் மத்தியில் தவறாகப் பிரச்சாரம் செய்தால், அதனால் எழக்கூடிய சவால்களையும் ரணில் விக்கிரமசிங்க எவ்வாறு சமாளிக்கப் போகிறார் என்ற வினாக்களும் உண்டு

ஆகவே கட்சி அரசியலைவிட தேசத்தைக் கட்டியெழுப்புதல் என்ற சிந்தனை சிங்கள அரசியல் தலைவர்களிடம் உருவாக்காதவரை இந்த நெருக்கடி தொடரும். அதுவும் இனப்பிரச்சினைக்கு உரிய அரசியல் தீர்வு முன்வைக்கப்படாதவரை அரசாங்கம் நம்புகின்ற சில புலம்பெயர் தமிழ் அமைப்புகளிடம் இருந்துகூட நிதியை எதிர்பார்க்கவே முடியாது.

இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வு பற்றி அதிகாரபூர்மற்ற முறையிலும், இலங்கைத்தீவில் மீள் நல்லிணக்கம் என்பதை அதிகாரபூர்வமாகவும் ஐ.எம்.எப் முன்வைத்ததாகவும் உள்ளகத் தகவல் கூறுகின்றது. ஆனாலும் ஒப்பந்தம் தொடர்பாக ஐ.எம்.எப் வெளியிட்ட அறிக்கையில் மீள் நல்லிணக்கம் பற்றி எதுவுமே குறிப்பிடப்படவில்லை.

இனப்பிரச்சினைத் தீர்வு, எதிர்க்கட்சிகளைக் கையாளுதல் ஆகியவற்றில் ரணில் தனக்குச் சாதகமான அரசியலில் ஈடுபடுகின்றார் என்ற தொனியையும் ஐ.எம்.எப் அறிக்கை மறைபொருளாகச் சுட்டி நிற்கின்றதெனலாம்.