இன அழிப்பு, போர்க்குற்றம் தொடர்பான சர்வதேச விசாரணை கோரப்படும் நிலையில்

ஜெனீவாவுக்குக் கணக்குக் காட்ட அரசாங்கத்துக்கு வசதியாக அமைந்த யாழ் ஆயர் யஸ்ரின் - ரணில் சந்திப்பு

சர்வதேசத்தை நோக்கிய அரசியல் வேலைத் திட்டங்களே இன்றைய அவசியத் தேவை
பதிப்பு: 2022 செப். 04 08:42
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: செப். 14 13:50
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
ஜெனீவா மனித உரிமைச் சபையின் அமர்வு எதிர்வரும் பன்னிரெண்டாம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில். இலங்கை ஒற்றையாட்சி அரசின் புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ் ஆயர் யஸ்ரின் ஞானப்பிரகாசத்தைச் சென்ற பதினெட்டாம் திகதி ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து உரையாடியிருக்கிறார். இச் சந்திப்புக்கு ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்தாரா அல்லது ஆயர் யஸ்ரின் சந்திப்பதற்கான நேரத்தைக் கேட்டெடுத்தாரா என்று தெரியவில்லை. ஆனாலும் இச் சந்திப்பின் மூலம் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் சார்பாகக் கவனம் எடுக்கின்றது என்ற ஒரு பொய்யான பரப்புரையைச் சர்வதேச அரங்கில் மேற்கொள்வதற்கு வசதியாக அமைந்துள்ளது.
 
தமிழ்த்தேசியக் கட்சிகள்தான் இப்படியான திருட்டுச் சந்திப்புக்களை நடத்தி வடக்குக் கிழக்குத் தமிழர்களின் அரசியல் விடுதலைக் கோரிக்கையை அடகுவைக்கின்றது என்றால், ஆயர் போன்ற மதப் பிரமுகர்களும் அதுவும் தமிழர் பிரச்சினையை சர்வதேச மட்டத்துக்குக் கொண்டு சென்று இன அழிப்பு என்று பேச வைத்த தமிழ்க் கத்தோலிக்க திருத்தச் சபையின் ஆயர் ஒருவர் இப்படியான சந்திப்புக்களைத் தவிர்த்திருக்கலாம்

2015 ஆம் ஆண்டில் இருந்து 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரையான காலத்தில் பிரதமராக இருந்தவர்தான் ரணில், ஆனால் ஜெனீவா மனித உரிமைச் சபையின் எந்தவொரு தீர்மானத்தையும் முழுமையாக நிறைவேற்றவில்லை. கால அவகாசம் கேட்டுக் கேட்டு இறுதியில் கொழும்பு அரசியல் நெருக்கடியைக் காரணம் கூறித் தப்பிச் சென்றவர்தான் இந்த ரணில் விக்கிரமசிங்க.

இப் பின்னணியில் துரதிஸ்டவசமாகச் சென்ற யூலை மாதம் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னரான சூழலில், வடக்குக் கிழக்குத் தாயகத் தமிழ்ப் பிரதிநிதிகள், பிரமுகர்கள், மதத்ததலைவர்கள் மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளையும் வளைத்துப் போட முற்படுகின்றார்.

அதற்கான விசேட பொறிமுறை அடங்கிய புதிய உத்தி ஒன்றையே ரணில் வகுத்துமிருக்கிறார்.

ரணில் விக்கிரமசிங்கவின் இந்த உத்திக்குள் பலர் கட்டுண்ட நிலையிலேயே யாழ் ஆயர் யஸ்ரின் ஞானப்பிரகாசமும் விழுந்துள்ளாரா என்ற கேள்வி எழுகின்றது. இன அழிப்பு, போர்க்குற்ற விசாரணை, மனித குலத்துக்கு எதிரான கொலைகள் பற்றிய சர்வதேச விசாரணைகள் எதற்குமே இணங்கிச் செல்லாத ஒற்றையாட்சி இலங்கை அரச கட்டமைப்பு, தன்னை சர்வதேச அரங்கில் நியாயப்படுத்த முழு முயற்சி எடுக்கின்றது.

இப்படியான நிலையில், ஆயர் யஸ்ரின் போன்றவர்கள் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து நிரந்தர அரசியல் தீர்வுபற்றிக் கூடப் பேசாமல், போரின் பக்கவிளைவுகள் பற்றி மாத்திரமே உரையாடியிருப்பது ஈழத்தமிழர்களின் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளுக்கு உகந்ததல்ல.

ஆகவே தமிழ்த்தேசியப் பிரச்சினைத் தீர்வுக்கான சர்வதேச அழுத்தங்கள், மற்றும் தமிழ் மக்களின் தொடர்ச்சியான கோரிக்கைகளை மடைமாற்றம் செய்யவே ஆயரின் இச் சந்திப்பு வழிவகுக்கும் என்பது வெளிப்படை.

அதாவது இலங்கை அரசாங்கம் இப்படியான சந்திப்புக்களைத் தமக்குச் சாதகமாக்கித் தமிழர்கள் இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புச் சட்ட திட்டங்களை ஏற்று வாழத் தயாராகின்றனர் என்ற செய்தி உலகத்துக்கு இலகுவாகப் போய் சேரும் என்பதில் சந்தேகமேயில்லை.

தமிழ்த்தேசியக் கட்சிகள்தான் இப்படியான திருட்டுச் சந்திப்புக்களை நடத்தி வடக்குக் கிழக்குத் தமிழர்களின் அரசியல் விடுதலைக் கோரிக்கையை அடகுவைக்கின்றன என்றால், ஆயர் போன்ற மதப் பிரமுகர்களும் அதுவும் தமிழர் பிரச்சினையை சர்வதேச மட்டத்துக்குக் கொண்டு சென்று இன அழிப்பு என்று பேச வைத்த தமிழ்க் கத்தோலிக்கத் திருச்சபையின் ஆயர் ஒருவர் இப்படியான சந்திப்பைத் தவிர்த்திருக்கலாம்.

அதுவும் ஜெனீவா மனித உரிமைச் சபை அமர்வு இடம்பெறவுள்ள சூழலில், ரணிலுடனான சந்திப்பு இலங்கை ஒற்றையாட்சி அரசின் மடைமாற்ற நகர்வுக்கு வழிவகுத்திருக்கின்றது என்றால், அது கலப்படம் இல்லாத உண்மை.

ஆயருடனான சந்திப்பை இலங்கை அரசாங்கம் ஜெனீவாவுக்குக் கணக்குக் காட்ட வசதியாகவும் அமைந்துள்ளது. ஆகவே கொழும்பில் உள்ள ஜெனீவா மனித உரிமைச் சபையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளை ஆயர் யஸ்ரின் சந்தித்துப் பேசியிருக்கலாம்.

2009 இற்குப் பின்னரான பதின்மூன்று ஆண்டுகளில்கூட இனப்பிரச்சினைக்கு நிரதந்தர அரசியல் தீர்வை முன்வைக்கச் சிங்கள ஆட்சியாளர்கள் எவருமே தயாராக இல்லை என்பதை ஆதாரத்தோடு முன்வைத்திருக்கலாம்.

தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தால் மாத்திரமே போரின் பக்க விளைவுகளுக்குக்கூடத் தீர்வை எட்ட முடியும் என்ற உண்மையை வரலாற்று அனுபவத்துடன் சர்வதேசப் பிரதிநிதிகளை ஆயர் சந்தித்து விளக்கியிருக்கலாம். ஆவணங்களையும் சமர்ப்பித்திருக்கலாம்.

தமிழ்த்தேசியக் கட்சிகள் தேர்தல் அரசியலுடன் மாத்திரம் நின்றுட்ட ஆபாயகரமான ஒரு நிலையில், தேசத்தைக் கட்டியெழுப்பச் சிவில் சமூக அமைப்புகள்கூட உரிய முறையில் செயற்படத் தயங்குகின்றன.

எனவே ஆயர் யஸ்ரின் போன்ற தமிழ்ச் சமூகத்தின் மதத் தலைவர்கள், புத்திஜீவிகள் உள்ளிட்ட கல்விச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சர்வதேசத்தை நோக்கிய நியாயத்தை முன் நகர்த்த வேண்டிய காலம் இது,

ரணில் விக்கிரமசிங்க அல்ல எந்த ஒரு சிங்களத் தலைவர்களைச் சந்தித்துப் பேசினாலும், ஈழத்தமிழர் விவகாரத்துக்கான தீர்வு வந்துவிடாது. ஆகவே அவசர அவசியமாகத் தேவைப்படுவதெல்லாம், சர்வதேசத்தை நோக்கிய அரசியல் வேலைத்திட்டங்கள் மாத்திரமே என்பதைத் தமிழ்த்தரப்பு புரிந்துகொள்ள வேண்டும்.

ரணிலுடன் இடம்பெற்ற சந்திப்புத் தொடர்பாக யாழ் ஆயர் இல்லம் வெளியிட்ட அறிக்கையை அப்படியே தருகின்றோம்.

தமிழ் தேசியப் பிரச்சினைத் தீர்வுக்கான சர்வதேச அழுத்தங்கள், மற்றும் தமிழ் மக்களின் தொடர்ச்சியான கோரிக்கைகளை மடைமாற்றம் செய்யவே ஆயரின் சந்திப்பு வழிவகுக்கும்

யாழ் ஆயர் பேரருட் கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களை கடந்த மாதம் 18ம் திகதி மாலை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து வடக்கில் மக்களின் தேவைகளையும் அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் பற்றியும் உடன் கவனம் செலுத்தி ஆவண செய்யுமாறு வேண்டிக் கொண்டார்.

வடக்கு மக்களின் அத்தியாவசியப் பிரச்சினைகள், தேவைகள் பற்றி எடுத்துக் கூறும் நோக்குடனேயே இச் சந்திப்பு இடம் பெற்றது. இச் சந்திப்பின் போது யாழ் ஆயர் அவர்கள் ஜனாதிபதியிடம் முன்மொழிந்த விடயங்களாவன:-

வடக்கில் தமிழ் மக்களின் வாழ் நிலங்களும், விளை நிலங்களும் இன்றும் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ளன. அவற்றை உடன் விடுவித்து மக்கள் சுதந்திரமாக தம் சொந்த மண்ணில் வாழ விடுங்கள்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அழுகுரலுக்கு செவிமடுத்து, அவர்களுக்கு ஆறுதல் வழங்க உடன் நடவடிக்கை எடுங்கள்.

போர்க் குற்றங்களுக்காக நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டோர் விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்.

வடக்கின் உயர்கல்வி நிறுவனங்கள் இல்லாமையால் இளம் ஆண், பெண் பிள்ளைகள் தம் மேற்கல்வியை தொடர முடியாத அவல நிலையில் உள்ளனர்.அவர்கள் உயர்கல்வியை தொடர வாய்ப்பை ஏற்படுத்தி உயர்கல்வி நிறுவனங்களை வடக்கில் ஆரம்பியுங்கள்.

வேளாண்மை வடக்கின் பிரதான தொழிலாகும். வேளாண்மை தொழிலை வடக்கில் அபிவிருத்தி செய்யுங்கள்.

நோர்வேயின் முன்னாள் அமைச்சர் மீன்பிடி படகுகள் உற்பத்தியை வடக்கில் ஆரம்பிக்க அனுமதியளியுங்கள், அதன் வழியாக எம் இளையோர் வேலைவாய்ப்பு பெறும் சாத்தியம் அதிகம் ஏற்படும்.

கிளிநொச்சியில் மிளகாய் செய்கையை அதிகரிக்க உதவுங்கள். இதன் வழியாக மிளகாயை இறக்குமதி செய்யப் பயன்படும் பெரும்தொகை அமெரிக்க டொலர்கள் மிகுதியாகும்.

அதே போல் பால் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து, இந்திய யுஆருடு நிறுவனத்தின் அனுசரனையுடன் வெண்ணை மற்றும் பால் உற்பத்திப் பொருட்களை கூடுதலாக உற்பத்தி செய்ய உதவுங்கள்.

பலாலியில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தை பயன்பாட்டுக்கு அனுமதியுங்கள்.

காங்கேசந்துறை துறைமுகத்தின் ஊடாக இந்திய போக்குவரத்தை ஆரம்பித்து தென்னிந்தியாவிற்கு மக்கள் யாத்திரை மேற்கொள்ளவும், மக்கள்பொருட்களை கொண்டுவரக்கூடிய வகையில் அதன் பாவனையை மேம்படுத்துங்கள்.

மேற்கூறப்பட்ட விடயங்களை உடன் கருத்தில் எடுத்து வடக்கு கிழக்கு மக்கள் அமைதியான வாழ்வு வாழ வழிசமைக்குமாறு ஆயர் அவர்கள் இச் சந்திப்பின் போது ஜனாதிபதியிடம் வலியுறுத்திக் கேட்டிருந்தார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.