இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்புச் சட்டங்களுக்கு உட்பட்ட

உள்ளக விசாரணையை வலியுறுத்தும் ஜெனீவாத் தீர்மானம்- உறுப்பு நாடுகளிடம் வரைபு கையளிப்பு

வழமைபோன்று 13 ஐ நடைமுறைப்படுத்துமாறும் பரிந்துரை- 2024 ஆம் ஆண்டுவரை கால அவகாசம்
பதிப்பு: 2022 செப். 14 21:31
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: செப். 16 07:52
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
ஜெனீவா மனித உரிமைச் சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கை தொடர்பான தீர்மானத்தில் இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புச் சட்டதிட்டங்களின் படி சர்வதேச தரத்திலான விசாரணைக்கு ஏற்றவாறு உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைகளை வலுப்படுத்துமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் ஒத்துழைப்புடன் அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்டு வரும் தீர்மானத்தின் பிரதிகள், தற்போது இலங்கை விவகாரம் தொடர்பான கருக்குழு நாடுகளிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றன. விசாரணையின்போது சர்வதேசத் தொழில்நுட்ப உதவிகளுக்குரிய ஒத்துழைப்புகளைப் பெற வேண்டுமெனவும் ஆலோசனை வழங்கப்பட்டிருக்கின்றது. ஆறு பக்கங்களில் குறித்த தீர்மானம் தயாரிக்கப்பட்டுள்ளது.
 
ராஜபக்சக்களை மையமாகக் கொண்ட ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கம் அமெரிக்க - இந்திய அரசுகள் ஊடாக ஜெனீவாவில் கால அவகாசத்தைக் கோரியிருந்ததாக அறிய முடிகின்றது

இலங்கையைச் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திடம் (International Criminal Court-ICC) பாரப்படுத்த வேண்டுமெனத் தமிழ்த்தேசியக் கட்சிகள் கோரியிருந்தன.

ஆனால் ஈழத்தமிழர்களுக்கு நடந்தது இன அழிப்பு என்றும், இன அழிப்புத் தொடர்பாக சர்வதேசச் சிறப்பு நீதிமன்றம் ஒன்றை அமைத்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென வடக்குக் கிழக்குத் தமிழ்த்தரப்புகளும் சில புலம்பெயர் அமைப்புகளும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தன.

இந்த நிலையில் இலங்கை அரசாங்கத்துக்கும், அமெரிக்க - இந்திய அரசுகளுக்கும் விசுவாசமாகச் செயற்பட்டு வரும் தமிழ்த்தேசியக் கட்சிகள் கோரியுள்ள சர்வதேசக் குற்றவியல் நீதிமன்ற விசாரணையைக்கூட ஜெனீவா மனித உரிமைச் சபை பரிந்துரைக்கத் தவறியுள்ளது.

2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற அமர்வில் ஜெனீவா மனித உரிமைச் சபை ஆணையாளர் வெளியிட்ட ஆரம்ப அறிக்கையில் இலங்கையைச் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்துக்குப் பாரப்படுத்த வேண்டுமென உறுப்பு நாடுகளிடம் கேட்டிருந்தார்.

ஆகவே இந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் நடைபெறுகின்ற அமர்வில் உள்ளக விசாரணைப் பொறிமுறைக்குரிய பரிந்துரைகள் விடுக்கப்பட்டுள்ளதாக வெளிவரும் தகவல்கள் மூலம், இலங்கை தொடர்பான வல்லரசு நாடுகளின் புவிசார் அரசியல் போட்டித் தன்மைகள் வெளிப்படுகின்றன.

உள்ளக விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்தும் இந்த வரைவு குறித்துத் தற்போது உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பரிசீலித்து வருவதாகக் கூறப்பட்டபோதும், ரசிய - உக்ரெய்ன் போரினால் உள்ளகப் பிரச்சினைகள் பலவற்றை எதிர்நோக்கி வரும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், இலங்கை விவகாரம் குறித்த அமெரிக்க - இந்தியத் தயாரிப்பை அப்படியே ஏற்றுக்கொள்ளும் என்றே எதிர்பார்க்கலாம்.

செவ்வாய்க்கிழமை மாலை பகிரங்கப்படுத்தப்பட்ட இத் தீர்மானம் குறித்த இந்த வரைவில் போர்க்குற்ற விசாரணைகளில் பயன்படுத்தக்கூடிய தகவல்களை சேகரிப்பதற்கும், ஒருங்கிணைப்பதற்கும், அவற்றை பகுப்பாய்வு செய்வதற்கும் மற்றும் பாதுகாப்பதற்கும் ஜெனீவா மனித உரிமைச் சபை ஆணையாளர் அலுவலகம் உத்வேகப்படுத்த வேண்டுமென்ற பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

மனித உரிமைச் சபையின் இத் தீர்மானத்தை இலங்கை செயற்படுத்த எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு வரை கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.

ராஜபக்சக்களை மையமாகக் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கம் அமெரிக்க - இந்திய அரசுகள் மூலமாக ஜெனீவாவில் கால அவகாசத்தைக் கோரியிருந்ததாகவும், இதனாலேயே கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அறிய முடிகின்றது.

அதேவேளை, வழமைபோன்று அரசியல் தீர்வாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை இலங்கை அமுல்படுத்த வேண்டுமெனவும், மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டுமென்றும் தீர்மானத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.