புவிசார் அரசியல் - புவிசார் பொருளாதார சூழலில்

சிங்கள ஊடகத்துறையின் போக்குகள் - தமிழ் ஊடகத்துறை செயற்பட வேண்டிய முறைகள் பற்றியும் விளக்கமளிப்பு

மொழி ஆளுமையை ஊடகவியலாளர்கள் வளர்க்க வேண்டியமை குறித்தும் திறந்த உரையாடல்
பதிப்பு: 2022 ஒக். 05 10:02
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 07 00:33
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி மற்றும் செய்தி இணையத் தளங்கள் உள்ளிட்ட ஊடகத்துறையின் செயற்பாடுகள் மற்றும் தமிழ்த்தேசிய அரசியல் பரப்பில் எதிர்காலத்தில் தமிழ் ஊடகங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பாகவும் கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணம் கரவெட்டியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது. வடமராட்சி ஊடக வட்டம் (Vadamarachchi Media Circle - V.C.M) என்ற பெயரில் உருவாக்கப்பட்ட அமைப்பின் ஏற்பாட்டில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது. இந் நிகழ்வில் கலந்துகொண்ட ஊடகத்துறை மற்றும் ஆசிரியர் தொழிற்துறையைச் சேர்ந்த பலரும் பங்குபற்றித் தத்தமது கருத்துக்களை வெளியிட்டனர்.
 
சிங்களக் குடியேற்றங்களை நியாயப்படுத்தியும், வடக்குக் கிழக்குச் சிங்கள மக்களின் பாரம்பரியப் பிரதேசம் என்ற கண்ணோட்டத்திலும் சில சிங்கள ஊடகங்களில் பிரசுரிக்கப்படும் விமர்சனங்களுக்குப் பதிலளிக்க வேண்டும் என்றும், அதற்குரியவாறு மொழி ஆளுமை தமிழ் ஊடகப் பரப்பில் வளர வேண்டும் எனவும் வளவாளர்கள் பரிந்துரைத்தனர்

யாழ் பல்கலைக்கழக அரச அறிவியல் துறைத் தலைவர், பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம், அரசியல் ஆய்வாளர் சி.ஆ.யோதிலிங்கம், யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டாளரும் மூத்த ஊடகவியலாளருமான ரட்னம் தயாபரன் மற்றும் கொழும்பில் வசிக்கும் செய்தியாளரும் ஊடகத்துறை விரிவுரையாளருமான அ.நிக்ஸன் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டு கருத்துக்களை முன்வைத்தனர்.

மூத்த ஊடகவியலாளர் சூரன் ஏ. ரவிவர்மா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கேள்விகளுக்கும் பதிலளித்தனர்.

2009 இற்குப் பின்னரான தமிழ் அரசியல் சூழலில் ஊடகத்துறையின் செயற்பாடுகளில் உள்ள பலவீனங்கள், தரம் குறைந்த ஆக்கங்கள் பற்றிய மதிப்பீடுகள் மற்றும் எவ்வாறு சரியான விடயங்களைக் கையாள்வது பற்றிய நுட்பமான விளக்கங்கள் (Subtle Explanations) வளவாளர்களினால் முன்வைக்கப்பட்டன.

குறிப்பாகப் புவிசார் அரசியல் - புவிசார் பொருளாதார (Geo Politics - Geo-Economics) மற்றும் இலங்கையின் சமகால அரசியல் நிலைமைகளை உற்று ஆய்ந்து செய்திகள், செய்திக் கட்டுரைகள் மற்றும் செய்தி ஆய்வுகளை எவ்வாறு எழுதுவது என்ற நுட்பமான எழுத்து முறைகள் பற்றி மேற்படி வளவாளர்கள் நீண்ட விளக்கமளித்தனர்.

அதேநேரம் வடக்குக் கிழக்கு மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் இடம்பெறும் நிகழ்வுகள், உள்ளகப் பிரச்சினைகள், அபிவிருத்திகள், அபிவிருத்திக் குறைபாடுகள், தேவைகள் ,கல்விப் பிரச்சினைகள் மற்றும் குடும்ப வன்முறைகள், குழு மோதல்கள் பற்றிய விவகாரங்களைச் செய்திகளாகக் வெளிக்கொண்டு வருவதைச் சமூக நலன் நோக்கில் கையாள வேண்டிய முறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்த விடயங்களைப் பிரதானப்படுத்தி நாளிதழ்கள், செய்தி இணையத் தளங்களில் பிரசுரமாகும் செய்திகளின் தலைப்புகள் பரபரப்பாக மாத்திரமே இருக்கின்றன. ஆனால் செய்தியின் உள்ளடக்கத்தில் எதுவும் இருப்பதில்லை என்று சில ஊடகவியலாளர்கள் வளவாளர்களிடம் சுட்டிக்காட்டினர்.

சில யூரியுப் தொலைக்காட்சிகள் வருமானத்தை மாத்திரம் நோக்கமாகக் கொண்டு பரபரப்புகளுக்கும் அர்த்தமற்ற காட்சி அமைப்புகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றமை பற்றிய கவலைகளும் கலந்துரையாடலில் பங்குபற்றிய சில ஊடகவியலாளர்களினால் வெளிப்படுத்தப்பட்டன.

அத்துடன் ஆங்காங்கே நடைபெறும் சமூகச் சீரழிவுச் சம்பவங்களை ஊதிப் பெருப்பித்துக் காண்பிக்கின்றனர். இதனால் தமிழ்ச் சமூகத்தின் வாழ்வியல் இப்படித்தான் என்ற தோற்றப்பாடுகள் உருவாக்கப்பட்டு, தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான பிரதான கருத்துக்கள் திட்டமிட்டுத் திசை திருப்பப்படுவதாகவும் கலந்துரையாடலில் விரிவாகப் பேசப்பட்டது.

அதேவேளை, வடக்குக் கிழக்கில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சிங்களக் குடியேற்றங்கள், புத்தர் சிலை வைத்தல், விகாரை அமைத்தல் போன்ற விவகாரங்கள் பற்றிக் கொழும்பில் வெளிவரும் சிங்கள - ஆங்கில ஊடகங்கள் எவ்வாறு செய்திகள், கட்டுரைகளைப் பிரசுரிக்கின்றன என்பது தொடர்பாகத் தமிழ் ஊடகத்துறையினர் அவதானிக்க வேண்டும் எனவும் ஆலோசனை முன்வைக்கப்பட்டது.

சமூகச் சீரழிவுச் சம்பவங்களை ஊதிப் பெருப்பித்துக் காண்பிக்கின்றனர். இதனால் தமிழ்ச் சமூகத்தின் வாழ்வியல் இப்படித்தான் என்ற தோற்றப்பாடுகள் உருவாக்கப்பட்டு, தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான பிரதான கருத்துக்கள் திட்டமிட்டுத் திசை திருப்பப்படுவதாகவும் விரிவாகப் பேசப்பட்டது

சிங்களக் குடியேற்றங்களை நியாயப்படுத்தியும், வடக்குக் கிழக்குச் சிங்கள மக்களின் பாரம்பரியப் பிரதேசம் என்ற கண்ணோட்டத்திலும் சில சிங்கள ஊடகங்களில் பிரசுரிக்கப்படும் விமர்சனங்களுக்குப் பதிலளிக்க வேண்டும் என்றும், அதற்குரியவாறு மொழி ஆளுமை தமிழ் ஊடகப் பரப்பில் வளர வேண்டும் எனவும் மேற்படி வளவாளர்கள் பரிந்துரைத்தனர்.

ஜெனீவா மனித உரிமைச் சபை அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட ஆணையாரின் அறிக்கை மற்றும் அந்த அறிக்கையின் உண்மையான உள்ளடக்கங்கள் உரிய முறையில் தமிழ் ஊடகங்களில் வெளி வரவில்லை.

வெறுமனே பரபரப்பாகவும் ஏதோ தமிழ் மக்களுக்குச் சாதகமாக ஜெனீவாவில் எல்லாமே அரங்கேறுகின்றது என்ற கோணத்திலும் செய்திகள், செய்திக் கட்டுரைகள் வெளிவருகின்றமை தொடர்பாகவும் வளவாளர்கள் சுட்டிக்காட்டினர்.

சிங்கள - ஆங்கில நாளிதழ்கள், சிங்களச் செய்தி இணையங்கள் ஜெனீவா விவகாரம் பற்றிய செய்திகளுக்கு முக்கியத்தும் கொடுப்பதில்லை. வேண்டுமானால், விடுதலைப் புலிகள் மீதான குற்றச்சாட்டாகவே ஜெனீவா அமர்வைச் சில சிங்கள ஊடகங்கள் காண்பிக்கும். இருதரப்புக் குற்றங்களாக ஆங்கில நாளிதழ்கள் சித்தரிக்கும்.

அரசாங்கத்தைத் தூய்மைப்படுத்திச் சில ஆங்கில நாளிதழ்களின் ஆசிரியர் தலையங்கங்கள் (Editorials) அமைந்திருக்கும்

வேறு சில சிங்களச் செய்தி இணையங்கள், ஜெனீவா புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்குச் சார்பானது என்ற தொனியில் செய்திகளை வெளியிடும். போர்க் குற்ற விசாரணை விடுதலைப் புலிகளின் போராளிக்குரியது என்ற பின்புலங்களும் சிங்கள அரசியல் கட்டுரைகளில் வெளிப்படும்.

இந்தியா தமிழர்களுக்கு ஆதரவு என்ற பார்வையில், இலங்கையில் இந்திய முதலீடுகள் குறித்த எதிர்ப்புகளைச் சிங்கள ஊடகங்கள் கன கச்சிதமாகக் கையாளுகின்றன. சீனா இலங்கையில் முதலீடு செய்வதை எதிர்ப்பது போன்ற தொனி தென்பட்டாலும், சீன ஆதரவுப் போக்கு சிங்கள நாளிதழ்களின் ஆசிரியர் தலையங்கங்களில் (Editorials) வெளிப்படுவதை அவதானிக்க முடியும்.

இதனால், தமிழ் ஊடகங்களின் பணி என்னவாக இருக்க வேண்டும் என்ற மையப் பொருளில் ஆக்கபூர்வமான பரிந்துரைகளை மேற்படி வளவாளர்கள், முன்மொழிந்தனர். சிங்கள ஊடகத்துறையுடனான தமது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

முகவரியில்லாத இணையத் தளங்கள் மற்றும் யூரியுப் தொலைக் காட்சிகள் பிரதான ஊடகங்கள் (Mainstream Media) அல்லது பிராந்திய ஊடகங்கள் (Regional Media) என்ற மரபு வழி ஊடகங்களாகக் கருதப்பட முடியாதென்றும், அவை சமூக ஊடகங்கள் (Social Media) என்ற வரையறைக்குள் மாத்திரமே உள் அடங்கும் என்றும் வளவாளர்களினால் விளக்கமளிக்கப்பட்டது.

முகநூல், ருவிற்றர் ஆகியவையும் சமூக ஊடக வரையறைக்குள் அடங்கும்.

அதாவது பிரதான ஊடகம் என்பதும், சமூக ஊடகம் என்பதும் ஒன்றல்ல. சமூக வலைத் தளங்கள் எனப்படும் சமூக ஊடகம், தற்போதைய நவீன உலகில் அனைவருக்கும் உள்ள உரிமை.

அந்தச் சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் கருத்துக்கள், அர்த்தமற்ற காட்சிகள் (Pointless Visual), திருத்தப்படாத காட்சிகள் (Unedited Visual) படங்கள் மற்றும் விமர்சனங்கள் பற்றிய உண்மைத் தன்மைகள் தொடர்பாகப் பல கேள்விகள் உண்டு. அதன் சரி - பிழைகள் (Errors) பற்றித் தீர்மானிக்க வேண்டிய பொறுப்பு அவரவர்களுக்குரிய கடமையும் பொறுப்புமாகும்.

ஆனால் தமிழ்தேசிய அரசியல் பரப்பில் சமூக ஊடகங்கள் கூடப் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும், வெறுமனே பொழுதுபோக்காக மாத்திரம் அவற்றைப் பயன்படுத்தக்கூடாதென்றும் மேற்படி வளவாளர்கள் அறிவுரை வழங்கினர்.

குறிப்பாகச் சமூக ஊடகங்களைச் சிங்கள மக்களும், சிங்கள ஊடகத்துறையினரும் தமது இலங்கைத் தேசியம் (Sri Lankan Nationalism) என்ற கட்டமைப்பை மேலும் மேற்படுத்தும் நோக்கில், எவ்வாறு கையாளுகின்றனர் என்பது பற்றியும் வளவாளர்கள் எடுத்துக் காண்பித்து அறிவூட்டினர்.

ஆகவே சமூக ஊடகங்களைத் தமிழ் மக்கள் அறிவுசார்ந்து பயன்படுத்த வேண்டும் என்றும், குறிப்பாகத் தமிழ் ஊடகத்துறையினர் அதனை மேலும் செம்மைப்படுத்தித் தமிழ்த்தேசிய அரசியல் சூழலில் (Political Environment of Tamil Nationalism) தமிழர்களை விழிப்புணர்வூட்டக்கூடிய கருத்துக்கள், காட்சி அமைப்புகளுக்கு மாத்திரமே முக்கியம் வழங்க வேண்டும் எனவும் வளவாளர்கள் பரிந்துரைத்தனா்.

சிங்களச் செய்தி இணையங்கள், ஜெனீவா புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்குச் சார்பானது என்ற தொனியில் செய்திகளை வெளியிடும். போர்க் குற்ற விசாரணை விடுதலைப் புலிகளின் போராளிக்குரியது என்ற பின்புலங்களும் சிங்கள அரசியல் கட்டுரைகளில் வெளிப்படும்

பொழுதுபோக்கு அம்சங்களைக் கூடத் தமிழ்ப் பண்பாட்டு விழுமியங்களோடு வடிவமைக்க வேண்டிய அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இப் பொறுப்பு வடக்குக் கிழக்குத் தமிழ் ஊடகத்துறையினருக்கு அதிகமாகவே உண்டு.

அதற்கேற்ப மொழி அறிவு குறிப்பாக தமிழ் மொழியைச் சரியான உச்சரிப்பு மற்றும் உரிய வாக்கிய அமைப்புகளுடன் எழுத்துப் பிழைகள், கருத்துப் பிழைகள் இன்றியும் விடயத்தை வெளிப்படுத்தக் கூடிய ஆற்றல் வளர்த்தெடுக்கப்பட வேண்டுமென மேற்படி வளவாளர்கள் வலியுறுத்திக் குறிப்பிட்டனர்.

அதேவேளை, சில தமிழ்ச் செய்தி இணையத்தள நிறுவனங்களின் நிர்வாகம், ஊடகவியலாளர்களைத் தரமற்ற முறையில் மரியாதைக் குறைவாக (Disrespectful) நடத்துவது பற்றியும், ஊடகத் தொழில் உரிமை மீறப்பட்டு (Violation of media rights) அவமதிக்கப்படுகின்றமை குறித்தும் கலந்துரையாடலில் பங்குபற்றிய சில ஊடகவியலாளர்கள் தங்கள் மன ஆதங்கங்களைப் பதிவு செய்தனர்.

ஊடகம், கல்வி உட்பட ஒவ்வொரு துறைகள் பற்றியும் மாதம் ஒரு கலந்துரையாடலை நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. வடமராட்சிப் பிரதேசம், ஊடகத்துறையில் சிறந்த ஆளுமையுள்ள ஊடகவியாளர்களைத் தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.