2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில்

திருகோணமலை உள்ளிட்ட கடற்பிரதேசங்களை ஜப்பான் அரசும் கையாளும்- அச்சுறுத்தலுக்கு இணங்கியதா இலங்கை அரசு?

சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்க புதுடில்லி மேற்கொள்ளும் நகர்வு
பதிப்பு: 2018 ஓகஸ்ட் 23 15:36
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 23 20:14
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையின் அம்பாந்தோட்டைத் துறைமுகம் தொடர்பாக ஜப்பான் எழுப்பிய பல கேள்விகளுக்கு மைத்திரி- ரணில் அரசாங்கம் விளக்கமளித்திருக்கின்றது. குறிப்பாக சீன அரசின் இராணுவ மூலோபாங்களுக்கு அம்பாந்தோட்டைத் துறைமுகம் பயன்படுத்தப்படும் என்பதில் சந்தேகமே இல்லையென ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா (Itsunori Onodera) கொழும்பில், இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகளுடனான சந்திப்பில் கூறியிருந்தார். ஆனால் இந்த சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கைப் பாதுகாப்பு அமைச்சர் ரூவான் விஜேரட்ன, இட்சுனோரி ஒனோடெரா கூறியதை மறுத்துள்ளார். அதாவது சீனாவின் எந்தவொரு இராணுவத் தேவைக்கும் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தைப் பயன்படுத்த இலங்கை அரசாங்கம் அனுமதிக்காது என உறுதியளித்துள்ளார்.
 
இலங்கை முப்படைகளின் தளபதி என்ற அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர், சீன அரசுக்கு அது தொடர்பாக கூறியுள்ளதாகவும் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சர் ரூவான் விஜேரட்ன கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் 70 ஆண்டுகால அரசியல் போராட்டத்தை அழிக்க உதவியளித்த இந்த நாடுகள், தற்போது புவிசார் அரசியலுக்காக இலங்கை அரசு என்ற கட்டமைப்பையே தமது அடிமைத் தனத்திற்குள் கொண்டு வந்துள்ளதாக சிங்கள இடதுசாரிகள் சிலர் கவலை வெளியிட்டுள்ளனர் ஆனாலும் இது சிங்கள அரசியல் தலைவர்களுக்கு நல்ல படிப்பினை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஜப்பான் அரசு சந்தேகப்படுவதுபோன்று அம்பாந்தோட்டைத் துறைமுகம் எந்தவொரு நாட்டினதும் இராணுவ மூலோபாயங்களுக்காகப் பயன்படாது எனவும் அமைச்சர் ரூவான் விஜேவர்த்தன உறுதியளித்துள்ளார்.

அதேவேளை, இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்புச் செயற்பாடுகள் குறித்து புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றைக் கைச்சாத்திடுவது குறித்தும் இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணங்கியுள்ளார்.

அம்பாந்தோட்டைத் துறைமுகம் அனைத்து நாடுகளினுடைய கடல்வழி போக்குவரத்து மையமாக மாற்றியமைக்கப்படும் எனவும் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.

சுதந்திரமான கப்பல் போக்குவரத்தை உறுதிப்படுத்த சீன அரசினால் குத்தகைக்குப் பெறப்பட்டுள்ள அம்பாந்தோட்டை துறைமுகம், சகல நாடுகளுக்கும் திறந்து விடப்பட வேண்டும் என இட்சுனோரி ஒனோடெரா வலியுறுத்தியிருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும்போதுதான் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு உறுதியளித்ததாக கொழும்பில் உள்ள ஜப்பான் தூதரகத் தகவல்கள் கூறுகின்றன.

அம்பாந்தோட்டைத் துறைமுகம் தொடர்பான இந்த இணக்கம் குறித்து, ஜப்பான்- இலங்கை ஆகிய இரு நாடுகளும் எழுத்து மூலமான உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடலாம் எனவும் ஜப்பான் தூதரகத் தகவல்கள் கூறுகின்றன.

ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா சென்ற திங்கட்கிழமை இரவு கொழும்புக்கு வருகை தந்து இரண்டு நாட்கள் தங்கியிருந்து, இலங்கையில் சீன அரசின் தலையீடுகள் குறித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இந்தச் சந்திப்புக்களின்போதுதான் இவ்வாறான இணக்கப்பாடுகள் ஏற்பட்டதாக கொழும்பில் உள்ள ஜப்பான் தூதரக தகவல்கள் கூறுகின்றன.

ஆனால் இலங்கை அரசாங்கம் இந்த விடயங்கள் குறித்து உள்ளூர் ஊடகங்களுக்கு எதுவுமே தெரிவிக்கவில்லை. குறிப்பாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெராவின் இலங்கைப் பயணம் தொடர்பாக கொழும்பில் உள்ள சிங்கள, ஆங்கில ஊடகங்கள் எதுவுமே முக்கியப்படுத்தவில்லை.

எவ்வாறாயினும ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெராவுடன் இடம்பெற்ற சந்திப்புக்களில் ஜப்பான் அரசின் பல அழுத்தங்களுக்கு மைத்திரி- ரணில் அரசாங்கம் உடன்பட்டுள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை, இந்து சமூத்திரப் பிராந்தியத்தில் திருகோணமலைத் துறைமுகம் பிரதான கேந்திர மையமாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளதால் அதன் அபிருத்திகளை ஜப்பான் செய்ய வேண்டும் என இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஜ்ப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா கேட்டுள்ளார்.

திருகோணமலைத் துறைமுகம் மற்றும் அதைனச் சூழவுள்ள கடல்சார் பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதுடன் அதற்கான பாதுகாப்பு உடன்படிக்கைகள் குறித்தும் ரணில் விக்கிரமசிங்கவிற்கு அவர் விளக்கமளித்துள்ளார்.

ஆனால், திருகோணமலைத் துறைமுகத்தை ஜப்பான் அரசு அபிவிருத்தி செய்ய வேண்டும் எனத் தாமே கேட்டுக் கொண்டதாக ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

கொழும்பில் இட்சுனோரி ஒனோடெரா நடத்திய சந்திப்புக்களின்போது இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் கெனிச்சி சுகநுமா, ஜப்பானிய பாதுகாப்பு கொள்கைப் பிரிவின் பணிப்பாளர் அகிஹிரோ சுச்சிமிச்சி, கூட்டுப்படைத் தளபதிகளின் உதவித் தலைவர் லெப்.ஜெனரல் தகரி மொரோமட்சு ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர்.

சென்ற ஞாயிற்றுக்கிழமை புதுடில்லி்க்குச் சென்று இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுடன் நடத்திய பேச்சுக்களின் பின்னரே ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா, மைத்திரி- ரணில் அரசாங்கத்தை இறுக்கிப் பிடித்ததாக கொழும்பில் உள்ள ஜப்பான் செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.

அதேவேளை. வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் திருகோணமலை உள்ளிட்ட கடற்பிரதேசங்களை தம்வசப்படுத்தும் நோக்கில், இந்திய மத்திய அரசு ஜப்பான் அரசின் ஊடாக நகர்வை மேற்கொண்டு வருவதாக அவதானிகள் கூறுகின்றனர்.

எவ்வாறாயினும் மைத்திரி - ரணில் அரசாங்கம் தற்போது ஜப்பான் அமைச்சர் இட்சுனோரி ஒனோடெராவினுடைய இலங்கைப் பயணத்தின் பின்னர் குழப்பத்தில் உள்ளதாகக் கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன.

குறிப்பாக கொழும்பு போட் சிற்றி, அம்பாந்தோட்டைத் துறைமுகம் உள்ளிட்ட முக்கியமான அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளிட்ட 75 சதவீதமான கட்டுமானப் பணிகள் சீனாவிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதனால், ஜப்பான் அமைச்சர் இட்சுனோரி ஒனோடெராவுக்கு வழங்கிய உறுதிமொழிகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதிலும் சிக்கல் நிலைகளை மைத்திரி- ரணில் அரசாங்கம் எதிர்நோக்கியுள்ளதாக கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை, தமிழர்களின் 70 ஆண்டுகால அரசியல் போராட்டத்தை அழிக்க உதவியளித்த சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள், தற்போது புவிசார் அரசியலுக்காக இலங்கை அரசு என்ற கட்டமைப்பையே தமது அடிமைத் தனத்திற்குள் கொண்டு வந்துள்ளதாக சிங்கள இடதுசாரிகள் சிலர் கவலை வெளியிட்டுள்ளனர்

ஆனாலும் இது இலங்கையின் சிங்கள அரசியல் தலைவர்களுக்கு நல்ல படிப்பனை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, இறுதிப் போருக்கு உதவியளித்த இந்த நாடுகள் இன்றுவரை நிரந்த அரசியல் தீர்வுகள் எதுவும் ஏற்படாத நிலையிலும், தொடந்தும் தமது புவிசார் நலன்களின் அடிப்படையில் தமிழர் தாயகக் கடற்பிரதேசங்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக தமிழ் அரசியல் ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ளார்.