பிக்குமாரின் இந்திய எதிர்ப்பும் இலங்கை ஒற்றையாட்சியும்

சிங்களவர்களிடம் விற்பனை செய்ய முடியாமல்போன நல்லிணக்கம்
பதிப்பு: 2023 பெப். 12 15:19
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 06 08:26
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
2002 இல் சமாதானப் பேச்சு ஆரம்பிக்கப்பட்ட காலத்தில், "மாற்றுக் கருத்து" என்பதை அரசாங்கத்தின் பக்கமாக அல்லது இலங்கை அரசு என்ற கட்டமைப்புடன் ஒத்துப் போகக்கூடிய முறையில், சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் மூலமாக வடக்குக் கிழக்கில் புகுத்திய அமெரிக்க - இந்திய அரசுகள், 2009 இற்குப் பின்னரான சூழலில் நல்லிணக்கம், நடைமுறைச் சாத்தியமானதைச் சிந்தித்தல், மனித உரிமைப் பாதுகாப்பு போன்ற சொல்லாடல்களைப் புகுத்தி தமிழ்த்தேசியக் கோட்பாட்டைச் சிதைக்க முற்பட்டு வருகின்றனர் என்பது பட்டவர்த்தனம். தமிழ்த்தேசியக் கட்சிகளும் மக்களில் சிலரும் குறிப்பாகக் கிழக்கு மாகாணத்தில் பலரும் அந்தக் கருத்துக்களை அதிகமாகவே உள்வாங்கிவிட்டனர். இருந்தாலும் அந்த அரசியல் பின்னணியின் ஆபத்துக்களை அவர்கள் அறியாதவர்களும் அல்ல.
 
மாற்றுக் கருத்து என்பதை அரசாங்கத்தின் பக்கமாக அல்லது அரசோடு ஒத்துப் போகக்கூடிய முறையில் 2002 இல் ஆரம்பிக்கப்பட்ட சமாதானப் பேச்சுக்காலத்தில் அரசசார்பற்ற நிறுவனங்கள் மூலமாக வடக்குக் கிழக்கில் புகுத்திய அமெரிக்க - இந்திய அரசுகள், 2009 இற்குப் பின்னரான சூழலில் நல்லிணக்கம், நடைமுறைச் சாத்தியமானதைச் சிந்தித்தல், மனித உரிமைப் பாதுகாப்பு போன்ற சொல்லாடல்களைப் புகுத்தி தமிழ்த்தேசியக் கோட்பாட்டைச் சிதைக்க முற்படுகின்றனர்

ஆனால் சிங்கள மக்களிடம் மேற்படி சொல்லாடல்களை அமெரிக்க - இந்திய அரசுகள் நிதி வழங்கும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் விற்பனை செய்ய முடியவில்லை. பதின்மூன்றுக்கு எதிரான சிங்கள அரசியல்வாதிகள், பௌத்த குருமாரின் கருத்து வெளிப்பாடுகள் அதனை எடுத்துக் கூறுகின்றன.

இந்திய - இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது கொழும்பில் இந்தியத் தூதுவராகப் பதவி வகித்திருந்த ஜே.என்.டிக்சிற், 1998 இல் எழுதிய அசேய்மன்ற் கொழும்பு (Assignment Colombo) என்ற நூலில் ஜே.ஆர்.ஜயவர்த்தனாவின் அரசியல் பிடிவாதம் பற்றி விபரித்திருக்கிறார்.

குறிப்பாக வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசம் (North East Tamil Homeland) என்று ஒப்பந்தத்தில் குறிப்பிட ஜே.ஆர் விரும்பில்லை என்றும் இதனால் வரலாற்று வாழ்விடங்கள் (Historic Habitats) என்ற சொல்லைப் பயன்படுத்தியதாகவும் விபரிக்கிறார்.

ஆகவே புரிந்துகொள்ளக் கூடியது என்னவென்றால், பௌத்த பிக்குமாரைத் திருப்திப்படுத்தாமல் இலங்கைத் தீவில் எந்த ஒரு அரசியல் தீர்வும் சாத்தியம் இல்லை என்பதே.

பௌத்த பிக்குமாரும் சிங்கள மக்களும் எப்போதுமே இந்தியாவை விரும்பியவர்கள் அல்ல.

பதின்மூன்றுக்கு எதிராகக் கொழும்பில் நடைபெற்ற பௌத்த குருமாரின் போராட்டம் இந்திய எதிர்ப்பின் உண்மையைப் பகிரங்கப்படுத்தியுள்ளது. வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் சிங்களவர்கள் சீனாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களைச் செய்யதமை குறைவு. ஆனால் இந்தியாவுக்கு எதிராகச் செய்த போராட்டங்கள் அதிகம். சிங்கள ஆங்கில ஊடகங்களிலும் இந்திய எதிர்ப்பை அவதானிக்க முடியும்.

ஆனால் இந்தியா எப்போதுமே, அதாவது இந்திரா காந்தி காலத்தில் இருந்து சிங்கள ஆட்சியாளர்களையே திருப்திப் திருப்படுத்தி வருகின்றது. பதின்மூன்றுக்கு எதிராகப் புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்ற பௌத்த பிக்குமாரின் போராட்டம் இலங்கை அரசாங்கத்தை அல்ல இந்தியாவையே கேள்விக்கு உட்படுத்தியிருக்கின்றது.

இதனை இன்னமும் ஏன் இந்தியா புரிந்துகொள்ளவில்லை என்பதே ஈழத்தமிழர்களின் கேள்வியும் கவலையும். ராஜீவ் காந்தி படுகொலை விவகாரத்தை மையப்படுத்தி 1991 இல் இருந்து இன்றுவரை ஈழத்தமிழர்களை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டேயிருக்கும் இந்தியா, 1987 இல் கொழும்பில் ராஜீவ் காந்தியை அணிவகுப்பில் வைத்து இலங்கை இராணுவச் சிப்பாய் ஒருவர் தாக்கி அவமானப்படுத்தியதை மறந்துவிட்டது.

குறித்த இராணுவச் சிப்பாய் விடுதலை செய்யப்பட்ட பின்னர் இந்தியாவுக்கு எதிராக மேற்கொண்ட பிரச்சாரங்களைக் கூட இந்தியா கண்டுகொள்ளவேயில்லை. ஆனால் இன்றுவரை இந்தியா ஈழத்தமிழர்கள் பக்கம் இல்லை. வடக்குக் கிழக்கில் இந்தியா மேற்கொண்டு வரும் மனிதாபிமான உதவிகள் மற்றும் அபிவிருத்திக்கான உதவிகளைக் கூடப் புதுடில்லி இலங்கை மக்களுக்கானது என்றே கூறுகின்றது.

பொருளாதார நெருக்கடியின்போது தமிழ் நாடு அரசு, ஈழத்தமிழர்கள் - மலையகத் தமிழர்கள் என்று குறிப்பிட்டு வழங்க முன்வந்த நிவாரண உதவிகளைக்கூடப் பின்னர் இலங்கை மக்களுக்கான உதவி என்றே இந்தியா மடைமாற்றியது. ஆனால் அரபுநாடுகள் வழங்கும் உதவிகளை முஸ்லிம் மக்களுக்கென்று கூறியே வழங்குகின்றன.

ஆகவே ஜே.என்.டிக்சிற்றின் நூலில் கூறப்பட்டுள்ள ஜே.ஆர்.ஜயவர்த்தனாவின் பிடிவாதம் பற்றிய கருத்து முழுச் சிங்கள மக்களுக்கும் உரியது என்பதை 2009 இற்குப் பின்னரான இந்திய எதிர்ப்புகள் புடம்போட்டுக் காண்பிக்கின்றன.

மாகாண சபையும் அதற்குரிய பதின்மூன்றாவது திருத்தச் சட்டமும் வடக்குக் கிழக்கு மாகாணத்துக்கு மாத்திரமே உரியது. ஆனால் ஜே.ஆரின் பிடிவாதத்தினால் சிங்களவர்களைத் திருப்திப்படுத்தவே இலங்கைத்தீவு முழுவதும் ஒன்பது மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டு மாகாண சபைகள் முறை அமுல்படுத்தப்பட்டதை தமிழ்த் தலைவர்களிடம் டிக்சிற் அன்று சுட்டிக்காட்டியிருந்ததாகவும் ஒரு தகவல் உண்டு.

நாற்பது ஆண்டுகள் ஈழத்தமிழர்கள் போராடியது சிங்கள மக்களுக்கு மாகாண சபைகள் பெற்றுக்கொடுக்கவா என்று விடுதலைப் புலிகளின் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் அப்போது பகிரங்கமாக வேதனையோடு கேள்வி எழுப்பியிருந்தார்.

ஆகவே சிங்கள மக்களின் குறிப்பாக பௌத்த குருமாரின் மன நிலை என்பது இன்றுவரை மாறாத ஒன்று. ஆனாலும் இந்தியா இன்றுவரையும் ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பாகக் கொழும்புடன் நேரடியாக உறவைப் பேணி வருகின்றது.

பதின்மூன்றை நியாயப்படுத்துகின்ற பௌத்த பிக்குமார், பதின்மூன்றை எதிர்க்கும் பௌத்த பிக்குகளுக்கு ஆதரவு. அதாவது இந்த இரண்டு தரப்பும் இலங்கை ஒற்றையாட்சியைப் பாதுகாக்கின்றன

அதாவது பதின்மூன்றை அமுல்படுத்துங்கள் என்பதுதான் இந்தியாவின் பேச்சும் நம்பிக்கையும். இதனையே இந்தியா தமிழ்த்தேசியக் கட்சிகளிடமும் திணித்து வருகின்றது.

வடக்குக் கிழக்கு இணைந்த முழுமையான சுயாட்சிக் கட்டமைப்புத்தான் நிரந்தரத் தீர்வு என்று கோருகின்ற தமிழ்த் தரப்பு நியாயங்களை இந்தியா செவிமடுப்பதாக இல்லை.

பௌத்த தேசியவாதத்துக்குள் இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பு. இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்குள் பௌத்ததேசியவாதம். இதுதான் இலங்கைத்தீவின் அரசியல் விதி என்பது இந்தியாவுக்குப் புரியாததல்ல.

இந்த இரண்டும் ஒன்றுக்குள் ஒன்றாகக் குடிகொண்டிருக்கும் நிலையில், இலங்கைத்தீவில் அரசியல் நிம்மதிக்கும் இடமில்லை. இந்த உண்மையைச் சிங்கள மக்கள் புரிந்துகொள்ள விரும்புவதாக இல்லை என்பது வேறு. ஆனால் சிங்கள ஆட்சியாளர்கள் தமக்கு ஆதரவு தரக்கூடியவர்கள் என்று இந்தியா இன்றுவரை நம்புவதுதான் வேடிக்கை.

அரசியல் யாப்பும், பௌத்த தேசியமும் ஒன்றுக்குள் ஒன்று குடிகொண்டிருப்பதை ஜே.வி.பி உள்ளிட்ட பிரதான சிங்கள அரசியல் கட்சிகள் பாதுகாக்கின்றன. சிங்கள ஊடகங்கள் அந்தப் பாதுகாப்புக்கு வழி சொல்லிக் கொடுக்கின்றன.

சிங்களத்தை மையப்படுத்திய ஆங்கில ஊடகங்கள் கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு ஏற்ப அதனைக் கொஞ்சம் இராஜதந்திரமாகக் கையாண்டு, இலங்கை ஒற்றையாட்சியை ஜனநாயகப் பன்முகத் தன்மை என்று கூறிப் பாதுகாக்கின்றன. பதின்மூன்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற தொனியைக் கொஞ்சம் நியாயப்படுத்தி அமெரிக்க - இந்திய அரசுகளை இந்த ஆங்கில ஊடகங்கள் சமாளிக்கின்றன.

அதேநேரம் பெரும்பகுதி பௌத்த பிக்குகள் பதின்மூன்றை எதிர்க்கக் குறிப்பிட்ட சில பௌத்த பிக்குகள் பதின்மூன்றை நியாயப்படுத்திப் பேசுகின்ற அரசியல் தந்திரமும் உண்டு. 2004 இல் சுனாமிப் பொதுக் கட்டமைப்புக்கு எதிராகக் கொழும்பில் பிக்குகள் போராட்டம் செய்த அதேநேரம், பொதுக் கட்டமைப்பு அவசியம் என்று வலியுறுத்தித் தமிழர்களுக்காக மற்றுமொரு பகுதி பௌத்த பிக்குமார் குரல் கொடுத்திருந்தனர்.

இத் தந்திரத்தின் அரசியல் உள்நோக்கம் என்னவென்றால் இலங்கைத்தீவில், எது நடந்தாலும் பௌத்த பிக்குகள் சம்மதித்து அனைத்தும் நடக்க வேண்டும் என்பதே. 1920 இல் இலங்கைத்தேசிய இயக்கம் பிளவுபட்ட காலப் பகுதியில் இருந்து இன்றுவரை இத் தந்திரத்தைச் சிங்களவர்கள் நுட்பமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

பௌத்த பிக்குகள் வெவ்வேறாகப் பிரிந்து நின்று எதிர்ப்பதும் ஆதரிப்பதும் என்ற தந்திரத்தைப் பின்பற்றினாலும், அதற்குள்ளும் ஒரு அடிப்படை ஒற்றுமை உண்டு.

இலங்கை ஒற்றையாட்சியையும் அரசியல் யாப்பில் பௌத்த சமயத்துக்கு முன்னுரிமை என்பதையும் விட்டுக்கொடுப்பதில்லை என்பதே இந்த அடிப்படை ஒற்றுமை. பதின்மூன்றை நியாயப்படுத்துகின்ற பௌத்த பிக்குமார், பதின்மூன்றை எதிர்க்கும் பௌத்த பிக்குகளுக்கு ஆதரவு. அதாவது இந்த இரண்டு தரப்பும் இலங்கை ஒற்றையாட்சியைப் பாதுகாக்கின்றன.

எவ்வாறாயினும் அரசியல் யாப்பும் பௌத்த தேசியமும் ஒன்றுக்குள் ஒன்று நீண்டகாலத்துக்குத் தொடர்ந்து குடிகொண்டிருக்க வாய்ப்பில்லை. உடைந்து சிதைவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக உண்டு. ஏனெனில் சிங்கள மன்னர்கள் தங்களுக்குள் தாங்களே அடிபட்டுக் காட்டிக் கொடுத்த கதைகள் பௌத்த வரலாற்றுப் பாடநூல்களில் உண்டு.

ஆனால் தங்களைத் தாங்களே முற்போக்குவாதிகள் என்றும் மிதவாதிகள் எனவும் கூறிக் கொண்டும் திரியும் ஈழத்தமிழர்களில் சிலர், உடனடியாக முண்டு கொடுத்து பௌத்த தேசியம் உடைவதைக் காப்பாற்றி விடுவர்கள் என்பதுதான் இங்கே பெரும் துயரம்.

அவ்வளவு அரசியல் மனிதாபிமானம் உள்ளவர்கள் தமிழ் முற்போக்காளர்கள். மிதவாதம் என்று கூறுகின்ற தமிழ் அரசியல்வாதிகளிலும் அப்படிக் காப்பாற்றுகின்ற அரசியல் வருத்தம் உண்டு.

பலஸ்தீனத்தில் யாசீர் அரபாத்தின் இயக்கத்துக்கு மாற்றாகக் கமாஸ் இயக்கம் போராடியதை மாற்றுக் கொள்கை என்று கூறலாம். அதாவது யாசீர் அரபாத்தின் சமாதானப் பேச்சுக்கான அணுகுமுறைகளை விமர்சித்துக் கொண்டு இஸ்ரேல் அரசோடு கமாஸ் இயக்கம் சேர்ந்து இயங்கவில்லை. இஸ்ரேல் அரசை கமாஸ் நியாயப்படுத்தவுமில்லை

உதாரணம்-01- சரத்பொன்சேகாவுக்கு 2010 இல் வெள்ளையடித்து மக்களையும் வாக்களிக்கத் தூண்டினர்.

உதாரணம்-02- மைத்திபால சிறிசேனவுக்கு 2015 இல் வெள்ளையடித்து வாக்களிக்க வைத்தனர்.

உதாரணம்-03- 2015 இல் நடந்த இலங்கைச் சுதந்திர தின வைபவத்தில் பங்குபற்றினர்.

உதாரணம்-04- ரணிலின் ஜனநாயக உரிமைக்காக 2018 இல் உயர்நீதிமன்றம் சென்றனர். அதாவது 2015 இல் வெள்ளையடித்த மைத்திரிக்கு எதிராக வழக்குத் தொடுத்தனர்.

உதாரணம்-05- சஜித் பிரேமதாசவை 2020 இல் நியாயப்படுத்தினர்.

உதாரணம்-06- கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக 2022 இல் நடந்த காலிமுகத்திடல் போராட்டத்தைச் சிங்கள மக்களின் மன மாற்றம் என்று வர்ணித்தனர்.

உதாரணம் 07- சந்திரிகாவைச் சிலர் ஜனநாயக வாதி என்று 2009 இற்குப் பின்னர் நியாயப்படுத்தி வருகின்றனர்.

ஆகவே முற்போக்கு, மிதவாதம், மனிதாபிமானம் அல்லது நடைமுறைச் சாத்தியமான அரசியல் தீர்வைக் கோர வேண்டும், புலிகள் காலத்து அரசியல் சிந்தனையைக் கைவிட வேண்டும் என்று மார்தட்டுகின்ற ஈழத்தமிழ் ஆய்வாளர்கள் சிலரின் இயலாமை எழுத்துக்களினால், இலங்கை ஒற்றையாட்சி பலமடைவதையே கண்கூடாகக் காணமுடிகின்றது.

ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான கோரிக்கையை, தமிழ்த்தேசிய - தமிழர் வாழ்வியல் நாகரீகமாக அணுக வேண்டுமே தவிர, புலிகள் இயக்கம் பற்றிய தனிப்பட்ட வன்மங்களோடும், தத்தமது விருப்பங்களுக்கு ஏற்றவாறும் தமிழ்த்தேசியக் கோட்பாட்டை மடை மாற்றக் கூடாது.

இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்குள் நின்றும் இலங்கை நாடாளுமன்றத்தின் வழியாகவும் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வைக் காண முடியாது என்பதன் அடிப்படையில் எழுந்ததே தமிழ்த்தேசியக் கோட்பாடு.

அதற்குள் சாதிமத, பிரதேச வேறுபாடுகள் கூட இல்லை. இதனை மையப்படுத்தியே தமிழ்த்தேசியக் கோட்பாடு என்பதன் வரைவிலக்கணம் மேலும் விரிவடையும்.

அப்படி விரிவாக்கம் செய்யும்போது முற்போக்கு, மிதவாதம், நடைமுறைச் சாத்தியம், நல்லிணக்கம், மனித உரிமை மீறல் என்ற தமிழ்த்தேசியத்தை நீக்கம் செய்யவதற்கான சொல்லாடல்களுக்கு இடமளிக்க முடியாது.

ஆனால் தேசியம் பற்றிய இலக்குமாறாத மாற்றுச் சிந்தனைகள், மாற்றுப் பாதைகளுக்கான விமர்சனங்கள் தாராளமாக முன்வைக்கப்பட வேண்டும். இந்த இடத்திலேதான் இந்தியா, தமிழ்த்தேசியக் கோட்பாட்டை நீக்கம் செய்யும் வேலைத்திட்டங்களில் அன்றில் இருந்து இன்று வரை ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடியும்.

2009 இற்குப் பின்னர் அதனை இந்தியா மிக இலகுவாகக் கையாளுகின்றது. குறிப்பாகத் தமிழ்த்தேசியக் கட்சிகள் மத்தியில் பிளவுகளை உருவாக்கி வருகின்றது.

"கொழும்புக்கும் வன்னிக்கும், செல்வதற்கு முன்னரும் சென்று வந்த பின்னரும் பேசிய விடயங்களைப் புதுடில்லிக்குச் சென்று ஒப்புவிப்பேன்" என்று சமாதானத் தூதுவராக இருந்த எரிக்சொல்கேய்ம் நேர்காணல் ஒன்றில் வெளிப்படையாகவே கூறியிருந்தார்.

ஆகவே சமாதானப் பேச்சுக்கூட புலிகளின் இராணுவ பலத்தினால் நோர்வேயின் அனுசரனையோடு ஆரம்பிக்கப்பட்டாலும், சர்வதேச அரங்கில் இருந்து புலிகளின் அரசியல் கோரிக்கையை முற்றாக நீக்கம் செய்யும் அரசியல் வேலைத் திட்டங்களை இந்தியா கன கச்சிதமாகச் செய்திருக்கின்றது என்பதையே சொல்கேய்மின் கூற்று பகிரங்கப்படுத்தியிருந்தது.

சமாதானப் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து 2009 போர் இல்லாதொழிக்கப்பட்ட பின்னரான அரசியல் சூழலிலும், அமெரிக்க - இந்திய அரசுகள் அரச சார்பற்ற நிறுவனங்கள் மூலமாக வடக்குக் கிழக்கில் குறிப்பாக தமிழ் இளைஞர்கள், தமிழ் ஊடகவியலாளர்களுடன் நடத்திய பல கலந்துரையாடல்களில் மாற்றுக் கருத்து, நல்லிணக்கம், மனித உரிமைப் பாதுகாப்பு, நடைமுறைச் சாத்தியமானதைச் சிந்தித்தல் என்ற போதனைகளையே அதிகமாக விதைத்தனர்.

தமிழ்த்தேசியக் கோட்பாட்டை நீக்கம் செய்யும் நோக்குடனேயே இச் சொல்லாடல்கள் இறக்குமதி செய்யப்பட்டு இன்று வரை போதிக்கப்பட்டும் வருகின்றன.

ஆனால் மாற்றுக் கருத்து என்பது பல்வேறு விடயங்களுக்கு உரியது. அதாவது ஒரு கருத்தில் அல்லது ஒரு கொள்கையில் இருந்து மாறுபட்ட, ஆனால் நோக்கத்தைக் குழப்பாமல் (Without Confusing the Objective) இருக்கக் கூடியதாக அமைவதே மாற்றுக் கருத்தாகும்.

சிங்கள மக்கள் பௌத்த தேசியத்தை மையப்படுத்திய இலங்கை ஒற்றையாட்சியைப் பாதுகாக்க கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் ஒருமித்த குரலில் செயற்படுகின்றனரோ, அதேபோன்று தமிழர்களும் இயங்க வேண்டிய காலம் இது என்பதை அமெரிக்க - இந்திய அரசுகளின் இலங்கை குறித்த அணுகுமுறைகளும் பௌத்த குருமாரின் போராட்டங்களும் நியாயப்படுத்தியுள்ளன

உதாரணமாக இன விடுதலைப் போராட்டம் ஒன்றின் கொள்கைக்கு மேலும் உரமூட்ட அல்லது மேலும் சீர்திருத்தி திருப்பத்தை ஏற்படுத்தக் கூடியதாக மற்றுமொரு கருத்து எழுந்தால், அதனை மாற்றுக் கருத்து என்று அழைக்கலாம்.

அதாவது இன விடுதலைக்கான இலக்கைக் குழப்பாமல் அந்த இலக்கை அடைய வேறு பாதைகளை உருவாக்குவது (Creating Different Paths) என்று கூறலாம்.

ஆனால், இங்கே ஈழத்தமிழர் அரசியல் விடுதலை விவகாரத்தில் விடுதலைப் புலிகளின் போராட்டம் தொடர்பாக எவருமே மாற்றுக் கருத்தைக் கொண்டிருக்கவில்லை.

எதிரானவர்கள் இலங்கை அரசாங்கம் அல்லது சிங்களக் கட்சிகளின் பக்கம் நின்றும், வேறு சிலர் இந்திய அரசின் கதைகளைக் கேட்டும் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தினார். அதாவது நியாயமான அரசியல் விடுதலைக் கோரிக்கைக்கு அரசியல் வஞ்சகம் (Political Traitors) செய்வோரை இப்போதும் இருக்கிறார்கள்.

ஆகவே இன விடுதலையைக் கொச்சைப்படுத்துவோரை மாற்றுக் கருத்தாளர்கள் என்று அழைக்க முடியாது. ஆனால் அவர்கள் தங்களை மாற்றுக் கருத்தாளர்கள் என்றும் மாற்று இலக்கியப் படைப்பாளிகள் - கவிஞர்கள் என்றும் தங்களைத் தாங்களே அழைப்பதற்கு அமெரிக்க - இந்திய அரசுகளே காரணம்.

பலஸ்தீனத்தில் யாசீர் அரபாத்தின் இயக்கத்துக்கு மாற்றாகக் கமாஸ் இயக்கம் போராடியதை மாற்றுக் கொள்கை என்று கூறலாம். அதாவது யாசீர் அரபாத்தின் சமாதானப் பேச்சுக்கான அணுகுமுறைகளை விமர்சித்துக் கொண்டு இஸ்ரேல் அரசோடு கமாஸ் இயக்கம் சேர்ந்து இயங்கவில்லை. இஸ்ரேல் அரசை கமாஸ் நியாயப்படுத்தவுமில்லை.

ஆனால் வடக்குக் கிழக்கில் மாற்று அரசியல் என்று சொல்லிக் கொண்டு, பலர் இலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்குகின்றனர். 2009 இற்கு முன்னரும் 2009 இற்குப் பின்னரும் தமிழ்த்தேசிய அரசியலில் இதுதான் நடந்து கொண்டிருக்கின்றது.

ஆனால் மாற்றுக் கருத்துக்கள் என்று கூறி ஈழத்தமிழர்களிடம் வலிந்து திணிக்கப்பட்ட "நல்லிணக்கம்", "நடைமுறைச் சாத்தியமான சிந்தனை" என்ற நஞ்சுத்தனமான சொற்களை அமெரிக்க - இந்திய அரசுகளினால் சிங்கள மக்களிடம் திணிக்கவும் போதிக்கவும் முடியவில்லை என்பதைக்கூட அந்த நாடுகள் உணருவதாகத் தெரியவில்லை.

ஆகவே சிங்கள மக்கள் பௌத்த தேசியத்தை மையப்படுத்திய இலங்கை ஒற்றையாட்சியைப் பாதுகாக்க கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் ஒருமித்த குரலில் செயற்படுகின்றனரோ, அதேபோன்று ஈழத்தமிழர்களும் இயங்க வேண்டிய காலம் இது என்பதை அமெரிக்க - இந்திய அரசுகளின் இலங்கை தொடர்பான அணுகுமுறைகளும் பௌத்த குருமாரின் போராட்டங்களும் நியாயப்படுத்தியுள்ளன.