சத்தம் சந்தடியின்றி தென்னிலங்கையில் இருந்து கொண்டுவந்து கிழக்குக் காடுகளில் விடப்படும்

மதங்கொண்ட யானைகள் சம்பூரை அண்மித்த காடுகளுக்குள் ஏவப்படுகின்றனவா?

இரவு வேளைகளில் கிராமங்களை விட்டு வெளியேறும் நிலையில் சம்பூர் மக்கள்
பதிப்பு: 2018 மே 23 13:07
புலம்: திருகோணமலை, ஈழம்
புதுப்பிப்பு: மே 27 15:09
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#wildelephant
#srilanka
#sampur
#muttur
#trinco
#trincomalee
திருகோணமலை மாவட்டம் மூதூர் கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சம்பூர் கிழக்கு பகுதியில் கடந்த மூன்று மாத காலமாக மக்கள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி இரவு வேளையில் மதங்கொண்ட யானைகள் வந்து செல்கின்றன. வனவிலங்குப் பாதுகாப்புத் திணைக்களத்தினது ஆதரவோடு ஆள் அரவமின்றி இரவு வேளைகளில் இந்த யானைகள் தென்பகுதிக் காடுகளில் இருந்து தமிழர் தாயகப் பகுதிகளை நோக்கிய காடுகளுக்குள் கொண்டுவந்து விடப்படுவதாக சம்பூர் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். இன அழிப்புப் போரினாலும், தொடரும் கட்டமைப்பு, பண்பாட்டு இன அழிப்பு நடவடிக்கைகளாலும் பாதிக்கப்படும் மக்கள், காட்டு விலங்குகளும் தம்மை வேட்டையாடுவது குறித்து விசனம் கொண்டுள்ளார்கள்.
 
இராணுவ மயமாக்கலுக்கும் பொருளாதார வலயங்களுக்காகவும் காடுகள் பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளமையும் இந்த நிலைக்கு மேலும் ஒரு முக்கிய காரணம் என்று சம்பூரில் மீளக்குடியேறியுள்ள ஈழத் தமிழர்கள் கூர்மை செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்கள்.

சம்பூரின் அமைவிடம்
சம்பூரின் அமைவிடம்

கடந்த மூன்று மாத காலமாக யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வந்து வாழைமரம், தென்னைமரம், நெல் மூட்டைகளை உட்கொள்வதுடன் உடமைகளையும் சேதப்படுத்துகின்றன. சம்பூர் பகுதியில் கொண்டுவந்து விடப்பட்ட 12க்கும் மேற்பட்ட யானைகள் நடமாடுவதாக கிராமத்தவர்கள் தெரிவிக்கின்றனர். மூன்று வாரங்களுக்கு முன்னர் மூதூர் வைத்தியசாலைக்கு பின்பக்கமாக வந்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2006ஆம் ஆண்டு சம்பூர் பகுதியில் இடம்பெற்ற உக்கிர போர் நடவடிக்கையினால் அப்பகுதி மக்கள் முற்றாக இடம்பெயர்ந்து 9 வருடங்களுக்கு பின்னர் மீள்குடியேறினர். போர் நடவடிக்கையினால் அனைத்து பொருளாதாரங்களையும் இழந்த சம்பூர் மக்களுக்கு தற்போது இனந்தெரியாத நபர்களினால் கொண்டுவந்து விடப்படும் யானைகளும் மேலதிக இழப்புக்களை ஏற்படுத்துகின்றன.

காட்டுப் பகுதி ஊடாக செல்லும் வீதியில் உள்ள மின்கம்பங்களில் வீதி விளக்குகளை பொருத்துவதன் மூலம் ஓரளவு குடியிருப்புப் பகுதிக்கு வரும் யானைகளைக் கட்டுப்படுத்த முடியும் என சம்பூர் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் கூர்மை இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.

யானைகளின் தொல்லைகள் தொடர்பாக, கிராம சேவகர், பிரதேச செயலாளர் மற்றும் இலங்கைக் காவல்துறையினக்கு எழுத்து மூலமாக முறைப்பாடு செய்யப்பட்ட போது, தாம் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய போதிலும், இதுவரைக்கும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனச் சம்பூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பூரை மையப்படுத்திய கட்டமைப்பு இன அழிப்பின் பரிமாணங்கள்

கடுமையான சிங்கள மயமாக்கலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள புவியியற் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை மாவட்டத்தில் எஞ்சியிருக்கும் சொற்பமான தமிழப்பகுதிகளில் ஒன்று தான் மூதூர் கிழக்கின் சம்பூர் பகுதி.

2006 இல் மாவிலாறு முரண்பாட்டுடன் தொடங்கிய இன அழிப்புப் போரின் ஆரம்பத்திலேயே மூதூர் கிழக்கின், குறிப்பாகச் சம்பூரின், அழிவுப் படலமும் ஆரம்பித்தது.

மூதூர் கிழக்கு இலங்கையின் இராணுவ ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டபின்னர் சீனா, இந்தியாவுடனான திருகோணமலை தொடர்பான இலங்கை அரசின் பேரம்பேசலுக்காக கொழும்பின் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் சம்பூர் மீள் குடியேற்றம் மறுதலிக்கப்பட்டது.

அனல் மின் நிலையத் திட்டத்தூடாக இந்தியாவுடனும், பொருளாதார வலயத் திட்டத்தினூடாக சீனாவுடனும் ராஜபக்ச அரசாங்கம் பேரம்பேசல்களை மேற்கொண்டது.

நிலைமை கைமீறிப் போவதைப் பார்த்திருந்த அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் ராஜபக்ச அரசாங்கத்தை மாற்றி சிறிசேன, விக்கிரமசிங்க, சந்திரிகா பண்டாரநாயக்கா கூட்டு ஒன்றை நல்லாட்சி என்ற போர்வையில் ஏற்படுத்தியபோது அந்த நகர்வுக்குள் இந்தியாவும் சேர்ந்து கொண்டது.

சம்பூர் ஈழத் தமிழரின் விவசாயப் பெருநிலங்களில் ஒன்று.

இங்கு எதிர்காலச் சிங்கள மயமாக்கலுக்கான பொருளாதார வலயமாக ஒரு புறமும் அனல் மின் நிலையம் என்று இன்னொரு புறமும், பொருளாதார வலயம் என்று மறுபுறமும், அதீத பெரும்பான்மையாக சிங்களவர்களைக் கொண்ட கடற்படைத் தளங்களை அமைப்பது வேறொரு புறமுமாக ஈழத்தமிழரின் தாயகப் புலமான சம்பூர் கட்டமைப்பு இன அழிப்புக்கு ஆளாக்கப்பட்டது.

சீனாவுடன் பிரதானமாகவும், இந்தியாவுடன் சமாளிப்புக்காகவும் பேரம்பேசல்களை மேற்கொண்டிருந்த ராஜபக்ச அரசாங்க காலத்து திட்டங்களைத் தவிடுபொடியாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டதே நல்லாட்சி என்று தன்னைத் தானே சொல்லிக்கொள்ளும் அணிவகுப்பு.

தமிழ் மக்களை ஒரு சிலநூறு ஏக்கர்களுக்குள் மீளக்குடியமர அனுமதித்த விடயம் இந்த அணிவகுப்பு மாறும் தருணத்திலேயே நடந்தேறியது.

புதிய அணிவகுப்பில், மேற்குலகின் கை மேலோங்கியிருக்கிறது. அதேவேளை சீனாவையும், இந்தியாவையும் சமாளிக்கும் அணுகுமுறையும் இணைந்திருக்கிறது.

இந்தப் புதிய சூழலிலும் தமிழர் தலைமை தக்கமுறையில் மூதூர் கிழக்கு விடயத்தில் தமிழ் மக்களின் நலன்களையும் உரிமைகளையும் மையப்படுத்திய பேரம்பேசல்களைச் செய்யத்தவறியது.

இன்றுவரை சம்பூர் மக்களுடைய காணிகள் சட்டபூர்வமாக அந்த மக்களுக்குச் சொந்தமாகாத நிலைக்கும் தொடரும் கடுமையான இராணுவமயமாக்கலுக்கும் இதுவே காரணம்.

தற்போது சம்பூர் மண்ணில் ராஜபக்ச காலத்தை விடவும் அதிநவீன கடற்படைப் பயிற்சித்தளம் ஒன்று ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் காடுகளை அழித்தும், வயற்காணிகளைப் பிடித்தும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டமைப்பு இன அழிப்பில் தற்போது தொல்லியல் திணைக்களமும் சில கடும்போக்குத் தீவிரவாத புத்த துறவிகளும் ஈடுபட்டுள்ளார்கள்.

பேரம்பேசலுக்கு அப்பாற்பட்ட இணக்கப்பாட்டு அரசியல் என்ற பொறிக்குள் தமிழர் தலைமைகளை இந்தியாவும் அமெரிக்கா தலைமையிலான ஒபாமா காலத்து மேற்குலகமுமே தள்ளிவிட்டிருந்தன.

ராஜபக்ச சகோதரர்களின் காலமாயிருப்பினும் சரி, சிறிசேன, விக்கிரமசிங்க, குமாரதுங்க கூட்டின் காலமாயிருப்பினும் சரி ஒரே அணுகுமுறையே தொடர்கிறது என்பதை திருகோணமலை தொடர்பான புவிசார் அரசியல் அவதானிப்பில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் ஓர் அரசியல் ஆய்வாளர் கூர்மை செய்தித் தளத்திற்கு எடுத்தியம்பினார். இந்த விவகாரத்தில் கருத்துச் சொல்வபவராகத் தனது பெயரை ஊடகங்களில் பகிரங்கப்படுத்துவதை அந்த ஆய்வாளர் விரும்பவில்லை.