இலங்கைத்தீவில் சிங்கள

இனவாதத்தை இடமாற்ற முற்படும் வேலை நிறுத்த போராட்டங்கள்

ரணிலின் அடக்கு முறை என்று விமர்சித்துக் கொண்டு புதிய வியூகம் வகுக்கும் இடதுசாரிகள்
பதிப்பு: 2023 மார்ச் 12 10:03
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 13 09:53
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் அடக்கு முறைக்கு எதிராக முப்பது அரச - தனியார் துறை தொழிற் சங்கங்கள் சில இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவுடன் நடத்தி வரும் தொடர் போராட்டங்கள், சர்வதேச நாணய நிதியம் வழங்கவுள்ள கடன் திட்டங்கள் மற்றும் சுற்றுலாத்துறைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்துக்கள் விஞ்சிக் காணப்படுகின்றன. தொடர் போராட்டங்களினால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று அரசாங்கம் கூறுவதை நம்பக் கூடிய மன நிலையில் மக்கள் இல்லை. பிரித்தானிய அரசாங்கம் தமது பிரஜைகளுக்கு அறிவுறுத்திய பயண எச்சரிக்கை இலங்கைத்தீவின் அரசியல் நெருக்கடியையும் பகிரங்கப்படுத்தியுள்ளது. இப் போராட்டத்தில் பிரதான எதிர்க் கட்சியான சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி நேரடியாகப் பங்குபற்றில்லை. ஆனாலும் ஆதரவு கொடுத்துள்ளது.
 
ரணில் அரசாங்கத்தின் அடக்கு முறையை பிரதான கருப்பொருளாக்கி போராட்டம் நடத்தும் தொழிற் சங்கங்கள், வடக்குக் கிழக்கு அரச நிறுவனங்கள் எழுபது வருடங்களுக்கும் மேலாக புறக்கணிக்கப்படுகின்றமை மற்றும் கொழும்பு நிர்வாகத்தின் அரசியல் தலையீடுகள், இராணுவப் பிரசன்னங்கள் பற்றியும் பேச வேண்டும்

பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பில் நடத்தும் போராட்டங்களின் பின்னணியிலும் இடதுசாரிகள் என்பது வெளிப்படை.

ஆகவே போராட்டங்கள் நிறுத்தப்பட்டால் மாத்திரமே பொருளாதார மீழ்ச்சியைக் காண முடியும் என்பது உண்மை. இது போராட்டங்களில் ஈடுபடும் தொழிற் சங்கங்கங்களிற்குத் தெரியாததல்ல.

ஆனால் அரசாங்கத்தின் ஜனநாயக அடக்கு முறையை நிறுத்தாமல் பொருளாதார முன்னேற்றம் சாத்தியம் இல்லை என்றே சோசலிச சமத்துவக் கட்சி உள்ளிட்ட இடதுசாரிகள் கூறுகின்றன.

ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த காலத்தில் இருந்து இடதுசாரிகள் என்று கூறிவரும் சிறிய கட்சிகள் சிங்கள இனவாதத்தையே விதைத்திருக்கின்றன என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

2009 இல் போர் இல்லாமல் செய்யப்பட்டமைக்கான காரணிகளில் சிவப்புச் சட்டை போட்டு பௌத்ததேசிய அரசியலை முன்னெடுத்து வரும் ஜே.வி.பியும் ஒன்றும், தற்போது ஜே.வி.பியில் இருந்து பிரிந்து குமார் குணரட்னம் தலைமையில் இயங்கி வரும் முன்னிலை சோசலிசக் கட்சியும் இனவாதத்தையே கையில் எடுத்திருக்கின்றது.

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராகக் கடந்த ஆண்டும் ரணில் விக்கிரமசிங்கவை விமர்சித்து இந்த ஆண்டும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் இலங்கை ஒற்றையாட்சி அரசின் கட்டமைப்பை மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எதனையும் முன்வைக்கவில்லை.

குறைந்தபட்சம் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தக் கூட இந்த இடதுசாரிகளுக்கு மனம் இல்லை. பிரதான சிங்கள அரசியல் கட்சிகள் சிலவேளை வாக்கு அரசியல் நோக்கில் உடன்பட்டாலும், இந்த இடதுசாரிகள் அதனை இனவாத மூலதனமாக்கி அரசாங்கத்துக்கு எதிராகப் போராடுவார்கள். இதுதான் இலங்கைத்தீவு இடதுசாரிகளின் வரலாறு.

இந்த வரலாற்றுப் பின்புலங்களைக் கொண்ட இடதுசாரிகள்தான் ரணில் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களையும் அடையாள வேலை நிறுத்தப் போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றன. வாழ்க்கைச் செலவு கடந்த ஒரு வருடத்தில் பல மடங்காக அதிகரித்ததாலும் பொருளாதார நெருக்கடி தொடருவதாலும் மக்கள் சலிப்படைந்துள்ளனர். அரச ஊழியர்களின் மனங்களும் நொந்துபோயுள்ளன.

இவற்றை மூலதனமாக்கி சோசலிச சமத்துவம் என்று சாயம் பூசி வடக்குக் கிழக்குத் தமிழர்களையும் அதில் அரவணைப்பது போன்ற தோற்றப்பாட்டை இடதுசாரிகள் காண்பிக்க முற்படுகின்றன.

கோட்டாவுக்கு எதிரான காலிமுகத் திடல் போராட்டத்தை ஈழத்தமிழர்கள் ஆதரித்திருந்தாலும் அதில் பங்கெடுக்கவில்லை. அதற்கான காரண காரியம் அப்போது இந்த இடதுசாரிகளுக்கும் முற்போக்குச் சிங்களப் புத்தி ஜீவிகளுக்கும் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு பிரதேசங்களில் நடந்த உரையாடல்களில் புரியவைக்கப்பட்டது.

அதனை ஏற்றுக்கொள்வது போன்று காண்பித்திருந்தாலும், அதற்குரிய பதிலை வெளிப்படையாகச் சொல்ல முடியாத நிலையில் "பொருளாதார நெருக்கடி" என்ற பொதுப்பிரச்சினையைக் காரணம்கூறி ரணிலுக்கு எதிரான அரசியலை வேலை நிறுத்தப் போராட்டம் என்ற வடிவில் இந்த இடதுசாரிகள் ஆரம்பித்திருக்கின்றன.

ஆனால் எழுபது வருடகால இனப்பிரச்சினையில் முப்பது ஆண்டுகால போரும் 2009 இன் பின்னரான கடந்த பதின்மூன்று வருடங்களில் நிரந்த அரசியல் தீர்வுகள் முன்வைக்கப்படாமையுமே பொருளாதார நெருக்கடிக்கான பிரதான மூல காரணம் என்பதை இவர்கள் ஏற்கத் தயாராக இல்லை.

ரணிலுக்கு எதிரான போராட்டம் என்ற போர்வையில் சிங்கள இனவாதத்தை வேறொரு தளத்திற்கு இடமாற்றும் அரசியல்தான் வேலை நிறுத்தப் போராட்டங்களே தவிர, இலங்கை அரசு என்ற கட்டமைப்பின் அதிகாரங்களைப் பங்கீடு செய்து ஏனைய தேசிய இனங்களின் குறிப்பாக தமிழர்களின் அரசியல் விடுதலைக்கு வழிசமைக்கும் அரசியல் உத்தியல்ல இது

"இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து இனரீதியான அரசியல் - பொருளாதார திட்டங்கள் வகுக்கப்பட்டு வந்தமையே பொருளாதார நெருக்கடிக்கு காரணம்" என்று கடந்த ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி கொழும்புரெலிகிராப் என்ற ஆங்கில இணையத்தளத்தில் அசோக லியனகே என்ற விமர்சகர், தனது அரசியல் பத்தி எழுத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.

முப்பது வருட போர் நடைபெற்ற காலத்திலேதான் சிங்கள ஆட்சியாளர்கள் அதிகாரத் துஸ்பிரயோகத்திலும் ஊழல் மோசடிகளிலும் கூடுதலாக ஈடுபட்டிருந்ததாகவும் சிங்கள மக்களுக்கு இப்போதுதான் இது புரிகிறது எனவும் அந்தக் கட்டுரையில் அவர் விளக்கியிருந்தார்.

ஆகவே பிரதான சிங்களக் கட்சிகள் தாம் ஆட்சியமைக்க வசதியாகக் கிளப்பிவிடுகின்ற இனவாதத்திற்கும், ஆட்சியைப் பிடிக்கவே முடியாத இந்த இடதுசாரிகள் பேசுகின்ற இனவாதத்திற்கும் இடையே வேறுபாடுகள் இல்லை என்பதையே தமிழர்களுடனான இடதுசாாிகளின் இப் போராட்ட அணுகுமுறை பகிரங்கப்படுத்துகின்றது.

பிரதான கட்சிகள் ஆட்சியமைக்க இந்த இடதுசாரிகள் அவ்வப்போது ஆதரவும் வழங்கி அமைச்சுப் பொறுப்புக்களையு ஏற்றிருந்தவர்கள் என்பதும் கண்கூடு.

சென்ற செவ்வாய்க்கிழமை கொழும்பில் இருந்து வெளிவரும் டெயிலி மிரர் நாளேடு வெளியிட்ட செய்தியின் பிரகாரம், வடக்குக் கிழக்கில் உள்ள அரச ஊழியர்கள் மற்றும் மருத்துவத்துறையினர் போராட்டத்தில் பெருமளவு பங்குகொள்ளவில்லை என்பது தெரிகின்றது. வடக்கு மாகாண அரச ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் பற்றிய தகவல் அந்தச் செய்தியில் இல்லை.

அரசாங்கத்தின் அடக்கு முறையைப் பிரதானமாகக் கொண்டு வரிக் கொள்கை, உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது மற்றும் சம்பள உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கொழும்பை மையமாகக் கொண்ட தொழிற் சங்கங்கள், சில இடதுசாரிகளின் ஒத்துழைப்புடன் நடத்தும் போராட்டம் நியாயமானது என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனாலும் வடக்குக் கிழக்கில் இப் போராட்டம் அவசியம் இல்லை என்றே தமிழ் அரச ஊழியர்கள் உணர்கிறார்கள் என்பது பகிரங்கமாகப் புரிகிறது.

இப் புரிதலில் உண்மை உண்டு. ஏனெனில் முப்பது வருட போரினாலும் 2009 மே மாதத்திற்குப் பின்னரான கடந்த பதின்மூன்று வருடங்களிலும் வடக்குக் கிழக்கு மக்கள் அரசாங்கத்தின் தொடர் அடக்குமுறைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

ஆகவே கொழும்மை மையமாகக் கொண்ட சிங்கள தொழிற் சங்கங்கள் வடக்குக் கிழக்கு அரச ஊழியர்களுக்கு ஆதரவாக எந்தவொரு போராட்டங்களையும் நடத்தவில்லை. விக்கிரமபாகு கருணாரட்ன, சிறிதுங்க ஜயசூரிய ஆகியோரின் இடதுசாரிக் கட்சிகளைத் தவிர வேறு எந்தவொரு சிங்கள இடதுசாரிகளும் செவிமடுக்கவே இல்லை. சில இடதுசாரிகள் நீலிக் கண்ணீர் மாத்திரம் வடித்திருந்தன. இதனைத் தமிழர்கள் அறியாதவர்கள் அல்ல.

இருந்தாலும் கடந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஆரம்பித்த பொருளாதார நெருக்கடியின் பின்னரான சூழலில், சிங்களத் தொழிற்சங்கங்கள் நடத்தி வரும் பல போராட்டங்களுக்கு வடக்குக் கிழக்கு தமிழ் அரச ஊழியர்கள் தங்கள் ஒத்துழைப்பை வழங்கி வந்தனர்.

தற்போது நடக்கும் போராட்டங்களுக்குக்கூட ஆதரவு தெரிவிக்கின்றனர். ஆனால் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பாரிய அளவில் அவர்கள் பங்களிப்புச் செய்யவில்லை.

ஏனெனில் போர்க் காலத்திலும் அதற்குப் பின்னரான சூழலிலும் உரிய நிவாரணங்கள், சலுகைகள் குறிப்பாக அரச ஊழியர்கள் வெற்றிடங்கள் நிரப்பப்படாமை, நிரந்த நியமனங்கள் வழங்குவதில் இழுபறி, மற்றும் அரச அலுவலகங்களில் போதிய வசதிகள், வளங்கள் இன்மை போன்ற பல நெருக்கடிகள் குறித்து இத் தொழிற் சங்கங்களுக்கு அறிவித்தும் பயன் கிடைக்கவேயில்லை.

அவ்வப்போது ஏற்படுகின்ற இராணுவத் தலையீடுகள், கொழும்பு சிங்கள அதிகாரபீடம் வடக்குக் கிழக்கில் இயங்கிய மாகாண அரச அதிகாரங்களைக் கடந்து, அரச ஊழியர்களின் நியமனங்கள். செயற்பாடுகளில் தலையிட்டமை குறித்தும் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஆனால் கொழும்மை மையமாகக் கொண்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அவற்றைக் கண்டுகொள்வதில்லை. இங்கே வடக்குக் கிழக்கை அரசாங்கம் புறக்கணிப்பது என்பது வேறு. ஆனால் இடதுசாரிகளின் ஒத்துழைப்புடன் தொழிலாளர்களின் உரிமைக்காகப் போராடும் தொழிற் சங்கங்கள் இனரீதியாகத் தம்மை அடையாளப்படுத்தக்கூடாது.

அரசியலுக்காகவும் சர்வதேச சமூகத்துக்குக் காண்பிக்கவும் குறிப்பிட்ட சில அரச நிறுவனங்கள் நவீனமயப்படுத்தப்பட்டிருந்தாலும், சிங்களப் பிரதேசங்களில் இயங்கும் அரச நிறுவனங்கள் பெற்றுள்ள நவீன வசதி வாய்ப்புகள் வடக்குக் கிழக்கில் இல்லை என்ற உண்மையை இத் தொழிற் சங்கங்கள் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ரணில் அரசாங்கத்தின் அடக்கு முறையை பிரதான கருப்பொருளாக்கி போராட்டம் நடத்தும் தொழிற் சங்கங்கள், வடக்குக் கிழக்கு அரச நிறுவனங்கள் எழுபது வருடங்களுக்கும் மேலாக புறக்கணிக்கப்படுகின்றமை மற்றும் கொழும்பு நிர்வாகத்தின் அரசியல் தலையீடுகள், இராணுவப் பிரசன்னங்கள் பற்றியும் பேச வேண்டும்.

ஆனால் இவர்களோடு பேசிப் பயனில்லை என்பது வடக்குக் கிழக்குத் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் நன்கு தெரியும்.

ஆகவே இலங்கை அரசாங்கம் கடந்த எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் மேற்கொண்டு வரும் திட்டமிட்ட அரசியல் ரீதியான அத்தனை புறக்கணிப்புகளுக்கும் இத் தொழிற்சங்கங்களும் சிங்கள இடதுசாரிக் கட்சிகளும் பொறுப்புக்கூற வேண்டும்.

அரசியல் கட்சிசாராத குறிப்பிட்ட சில சிங்களத் தொழிற் சங்கங்கள் வடக்குக் கிழக்கு அரச ஊழியர்கள் மற்றும் மக்களின் நலன்களில் கவனம் செலுத்தியிருக்கின்றன. ஜோசப் ஸ்ராலின் தலைமையிலான இலங்கை ஆசிரியர் சங்கம் போர் மற்றும் அதற்குப் பின்னரான காலங்களிலும் தமிழ் ஆசிரியர்கள் விவகாரங்களில் அதீத கவனம் செலுத்தியிருந்தது.

ஆனால் இடதுசாரிகள் என்று தம்மைத்தாமே மார்தட்டிக் கொண்டிருக்கும் ஜே.வி.பி போன்ற அரசியல் கட்சிகள் சார்ந்த தொழிற்சங்கங்கள், ஈழத்தமிழர்கள் பற்றிய சிங்கள ஆட்சியாளர்களின் சிந்தனைக்கு ஒப்பாகவே இன்றுவரை செயற்பட்டு வருகின்றன.

இதன் காரணத்தினாலேதான் தற்போது ரணில் அரசாங்கத்துக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது சூழல் உருவாகியிருக்கின்றது.

போராட்டங்களை சஜித் பிரேமதாச மதில்மேல் பூபோன்று பார்த்துக் கொண்டிருக்கிறார். மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, போன்ற கடும் எதிர்ப்பில்லாத எதிர்க்கட்சிகள் அவ்வப்போது ரணில் மீதான விமர்சனங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன

வேலை நிறுத்தம் பற்றிய அரசாங்கக் கணக்கெடுப்பை மேற்கோள்காட்டி, சென்ற செவ்வாய்க்கிழமை வெளியான டெய்லி மிரர் ஆங்கில நாளிதழ் செய்தியின் பிரகாரம், இலங்கைத்தீவில் ஒன்பது மாகாணங்களிலும் உள்ள பதின் நான்கு இலட்சத்து எண்பத்து நான்காயிரத்து ஐம்பத்து ஒரு அரச ஊழியர்களில் நாற்பத்து நான்காயிரத்து ஐநூற்று ஐம்பது பேர் மாத்திரமே வேலைநிறுத்தில் ஈடுபடுவதாகத் தெரிகின்றது.

வடமேற்கில் முப்பத்தி ஆறு வீதமும், வட மத்திய பகுதியில் நாற்பது வீதமும், தெற்கில் நாற்பத்து ஒன்று வீதமும், மத்திய பகுதியில் இருபத்து ஐந்து வீதமும், கிழக்கில் இருபத்து ஒரு வீதமும், ஊவாவில் பத்தொன்பது வீதமும் அடங்கும். ஆனால் வட மாகாணம் பற்றிய மதிப்பீடு குறித்த செய்தியில் இல்லை.

கிழக்கில் இருபத்து ஒன்பது வீதம் என்பதில் முஸ்லிம்கள், சிங்களவர்களையும் சேர்த்தே உள்ளடங்கும் அப்படிப் பார்ப்பதாக இருந்தால் கிழக்கில் தமிழ் அரச ஊழியர்களின் வேலை நிறுத்தம் என்பது மிகவும் குறைந்தளவிலேயே உள்ளது.

ஆகவே ஈழத்தமிழ் அரச ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் பெரியளவில் கவனம் செலுத்தவில்லை என்பது தெரிகின்றது.

ஜே.வி.பி தலைமையிலான அகில இலங்கை பொது துறைமுக ஊழியர் சங்கத் தகவல்களின் படி ஐந்து இலட்சம் அரச ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் அத்தியாவசிய சேவைகளைத் தவிர ஏனைய ஊழியர்கள் அலுவலகங்களுக்குச் செல்லவில்லை எனவும் கூறப்படுகின்றது. (ஆனால் இவை சுயாதீன அமைப்புகள் மேற்கொண்ட மதிப்பீடுகள் அல்ல)

இப் போராட்டங்களை சஜித் பிரேமதாச மதில்மேல் பூனை போன்று பார்த்துக் கொண்டிருக்கிறார். மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, போன்ற கடும் எதிர்ப்பில்லாத எதிர்க்கட்சிகள் அவ்வப்போது ரணில் மீதான விமர்சனங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.

மகிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ரணிலுக்கு நேரடி ஆதவை வழங்கி வருகின்றது. டளஸ் தலைமையிலான அணி திரிசங்கு நிலையில் உள்ளது.

ரணிலுக்கு எதிரான போராட்டம் என்ற போர்வையில் சிங்கள இனவாதத்தை வேறொரு தளத்திற்கு இடமாற்றும் அரசியல்தான் வேலை நிறுத்தப் போராட்டங்களே தவிர, இலங்கை அரசு என்ற கட்டமைப்பின் அதிகாரங்களைப் பங்கீடு செய்து ஏனைய தேசிய இனங்களின் குறிப்பாகத் தமிழர்களின் அரசியல் விடுதலைக்கு வழிசமைக்கும் அரசியல் உத்தியல்ல இது.