இஸ்ரேல் வகுத்த வியூகத்தில் தமிழர்களின் நிலங்கள் அபகரிப்பு

பலஸ்தீன மேற்குக் கரை மற்றும் காஸா போன்று மாறிவரும் முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை

மகாவலி நீரை மையமாகக் கொண்டு ஜே.ஆர் ஆரம்பித்த திட்டத்தை ரணில் முழுமைப்படுத்துகிறார்
பதிப்பு: 2023 ஏப். 01 23:08
புலம்: முல்லைத்தீவு
புதுப்பிப்பு: ஏப். 03 08:59
main photo main photo main photo main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
இஸ்ரேல் ஜெருசலேம் முழுவதையும் தனது தலைநகர் என்கிறது. பலத்தீனம் கிழக்கு ஜெருசலேத்தை தனது எதிர்கால பலத்தீனிய நாட்டின் தலைநகராக கருதுகிறது. இஸ்ரேல், முழு நகரையும் உரிமையாக்க முற்படுவதை அங்கீகரித்துள்ள அமெரிக்காவும் வேறு சில ஐரோப்பிய நாடுகளும் கடந்த ஐம்பது ஆண்டுகளில் கிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட பகுதிகளில் ஆறு இலட்சம் யூதர்கள் குடியேற்றப்பட்டதைக் கண்டிக்கவில்லை. சர்வதேச சட்டங்களின்படி இக் குடியேற்றங்கள் தவறு என்றும் அமைதிக்குத் தடையாக உள்ளதாகவும் பலத்தீனம் கூறினாலும், இஸ்ரேல் அதனைத் தொடர்ந்து மறுக்கின்றது.
 
சிங்கள மயமாக்கல் துணிவோடும் இலங்கை ஒற்றையாட்சிச் சட்டங்களுக்கு அமைவாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமெரிக்க - இந்திய அரசுகளும் ஈழத்தமிழர் விவகாரம் குறித்து சிங்கள ஆட்சியாளர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப செயற்படுவதற்குத் தமிழ்த்தேசியக் கட்சிகளின் பலவீனமும் உறுதியற்ற கொள்கையும் காரணமாகிறது

அதேபோன்று வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகத்தில் எழுபது வருடங்களுக்கு மேலாக, குறிப்பாக 2009 இற்குப் பின்னர் தீவிரமாக இடம்பெற்று வரும் சிங்களக் குடியேற்றங்களை அமெரிக்க - இந்திய அரசுகள் இதுவரை கண்டிக்கவேயில்லை.

இஸ்ரேல் வழியில் இலங்கைத்தீவின் வடக்குக் கிழக்கில் 1948 இல் இருந்து இதுவரை ஏறத்தாழ இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான சிங்களவர்கள் குடியமர்த்தப்பட்டுப் பிரதேசச் செயலாளர், கிராம சேவகர் பிரிவுகளும் அமைக்கப்பட்டுள்ளன. முப்பது வருடங்கள் போர் நடைபெற்றதால் சிங்களக் குடியேற்றங்களில் தாமதம் ஏற்பட்டது.

2009 இற்குப் பின்னர் வடக்குக் கிழக்கில் உள்ள ஏறத்தாழ ஒன்றரை இலட்சம் வரையான இராணுவக் குடும்பஙகளுக்கும் காணிகள் வழங்கும் திட்டங்கள் உண்டு. அதற்கேற்ப பௌத்த விகாரைகளும் அமைக்கப்படுகின்றன.

ஆயிரம் விகாரைகளை அமைக்க வேண்டும் என்று சஜித் பிரேமதாச 2020 ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தார்.

சஜித்தின் தந்தையார் பிரேமதாச, கிழக்கில் ஜே.ஆர் வகுத்த திட்டத்திற்கு ஏற்ப அம்பாறைப் பிரதேச குடியேற்றத்தை முழுமைப்படுத்தினார். கிழக்குக் குடியேற்றத்தினால் திருகோணமலையில் ஒரேயொரு நாடாளுமன்ற பிரதிநிதியும் மட்டக்களப்பில் நான்கு பிரதிநிதிகளும் மாத்திரமே நாடாளுமன்றத் தேர்தலில் தெரிவாகும் ஆபத்தான நிலை தோன்றியது. இந்த எண்ணிக்கை அடுத்த தேர்தலில் மேலும் குறைவடையலாம்.

2009 இற்குப் பின்னர் வடக்கில் வவுனியாவில் ஏறத்தாள நான்காயிரம் சிங்களக் குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளன. வவுனியா நெடுங்கேணி பிரதேசத்துக்கு உட்பட்ட கொக்கச்சான்குளம், கலாபோவசேவ என்ற சிங்களப் பெயராக மாற்றப்பட்டு மூவாயித்து ஐநூறு சிங்களக் குடும்பங்கள் 2017 இல் குடியமர்த்தப்பட்டுள்ளன. கொக்கொச்சான்குளத்தின் சில பகுதிகள் முல்லைத்தீவு மாவட்டத்துக்குரியது.

ஏற்கனவே வவுனியா தெற்குப் பிரதேச சபை சிங்களவர்களுக்கு உரியதாக இருக்கும் நிலையில், மகிந்தவின் 2010 ஆம் ஆண்டு திட்டத்துக்கு ஏற்ப 2017 இல் பிரதமராக இருந்த தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொக்கச்சான்குளத்தை சிங்களக் குடியேற்றமாகச் சட்டரீதியாக அங்கீகரித்தார்.

கலாபோவசேவ என்ற சிங்களப் பெயருடைய கொக்கச்சான்குள கிராமம், அனுராதபுர மாவட்ட செயலகத்துக்குக் கீழ் இயங்கினாலும் ரணில் ஜனாதிபதியாக இருப்பதால், வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துடன் இணைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று மணலாறு எனப்படும் வெலியோயா சிங்களக் கிராமம் அனுராதபுர செயலகத்தின் கீழ் இயங்கினாலும் தனியான பிரதேச செயலகமாக முல்லைத்தீவு மாவட்டத்துடன் இணைக்கும் முயற்சிகளும் இடம்பெறுகின்றன.

கிழக்கில் திருகோணமலை மாவட்டத்தின் இனப்பரம்பல் ஏற்கனவே மாற்றப்பட்டுள்ள நிலையில், வடக்கில் முல்லைத்தீவு வவுனியா மாவட்டத்தின் இனப்பரம்பலில் மாற்றம் ஏற்பட்டு சிங்களப் பிரதிநிதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் ஆபத்து உண்டு.

வவுனியா. முல்லைத்தீவு ஆகியவற்றின் வடக்கு எல்லைக் கிராமங்களும், கிழக்கில் திருகோணமலை அம்பாறை ஆகியவற்றின் எல்லைக் கிராமங்களும் சிங்களக் குடியேற்ற நோக்கில் பிரிக்கப்பட்டு அனுராதபுரம், பொலன்னறுவை ஆகிய மாவட்டச் செயலகங்களின் கீழ் இயக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், மீண்டும் வவுனியா. முல்லைத்தீவு, திருகோணமலை மாவட்டச் செயலகங்களின் கீழ் சேர்க்க முற்படுவதன் ஊடாக வடக்குக் கிழக்கில் தமிழ், முஸ்லிம் மக்களின் இனப்பரம்பலில் மாற்றங்களை மேற்கொள்ளும் திட்டத்தை ரணில் அரசாங்கம் நுட்பமாக ஆரம்பித்துள்ளது.

திருகோணமலை தென்னமரமாடிக்கும் அக்கரைவெளி பிரதேசத்துக்கும் இடையில்தான் பறையானறு கிராமம் அமைந்துள்ளது. இந்த பறையனாறு கிராமம்தான் திருகோணமலையையும் முல்லைத்தீவையும் இணைக்கின்றது

2009 இற்குப் பின்னர் வவுனியா பிரதேச செயலகத்தில் பத்து சிங்கள உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை அடுத்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மேலும் அதிகரிக்கும். அத்துடன் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய வன்னி மாவட்டத்தில் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களில் இருவர் சிங்கள உறுப்பினராக வரக்கூடிய ஆபத்தும் உண்டு.

2022 இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிச் சூழலில் தமிழர் தாயகமான வடக்குக் கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவின் பொருளாதார அபிவிருத்திக்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென சர்வதேச நாணய நிதியம் பரிந்துரைத்துள்ள சூழலில், வடக்குடன் கிழக்கை இணைக்கும் தமிழர் பாரம்பரியப் பிரதேசங்கள் திட்டமிடப்பட்டு சட்ட ரீதியாகச் சிங்கள மயமாக்கப்படுகின்றன.

இதற்குப் பெருமளவு நிதிகள் விரயமாக்கப்படுவதாக தமிழ்த்தரப்பு சர்வதேச நாண நிதியத்துக்கு உரிய முறையில் எடுத்துக் கூறியபோதும், அது கவனத்தில் எடுக்கப்படவில்லை.

ஏறத்தாள பலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் குடியேற்றங்கள், ஆக்கிரமிப்புகளை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் பார்த்துக் கொண்டுடிருப்பது போன்றதொரு நிலை இது.

வடக்குக் கிழக்கில் 1948 இல் ஆரம்பிக்கப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் 1979 இல் ஜே.ஆர் ஜயவர்த்தன உருவாக்கிய மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் விசேட நிலப்பகுதி எனப் பிரகடணப்படுத்தி நிலங்களைப் பெற முடியுமென நாடாளுமன்றத்தில் அப்போது அங்கீகரிக்கப்பட்டிருந்தது.

இத் திட்டம் தற்போது ஜே.ஆரின் மருமகனான ரணிலின் அரசாங்கத்தில் முழுமை பெறுகின்றது. பிரேமதாச, சந்திரிகா, ராஜபக்ச ஆகியோரின் ஆட்சியிலும் தொடரப்பட்டு விரிவாக்கப்பட்டது. தற்போது சர்வதேசம் ஏற்கக்கூடிய முறையில் தமிழ்த்தேசியக் கோட்பாட்டை நிறுவ முடியாது என்று காரணம் கூறக்கூடிய சட்ட ரீதியான காரியங்களை ரணில் செய்து முடிக்கிறார்.

அதற்கான இறுதிக் கட்டமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களின் பூர்வீக பிரதேசங்களான கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, செம்மலை ஆகிய கிராமங்களின் எட்டு கிராம சேவையாளர் பிரிவுகளை மகாவலி அதிகார சபையின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரும் நடவடிக்கைகள் இரகசியமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பிரேமதாசா ஜனாதிபதியாக இருந்தபோது 1988 இல் விசேட வர்த்தமானி மூலம் மகாவலி 'எல் -(L) ' வலயம் உருவாக்கப்பட்டது. அதன் பின் 2007 இல் மகிந்த ஜனாதிபதியாக இருந்தபோது மற்றொரு வர்த்தமானியில் அது மேலும் விஸ்தரிக்கப்பட்டது.

இப் பின்புலத்தில் மகாவலி நீரை மையப்படுத்தி வடக்கையும் கிழக்கையும் நில அடிப்படையில் பிரிக்கும் திட்டம் படிப்படியாக வகுக்கப்பட்டு வந்துள்ளது. இதற்கு வசதியாகத் தமிழர்களின் காணிகளைப் பொறுப்பேற்கும் பணிகளில் கொழும்பை மையமாகக் கொண்ட மகாவலி அதிகார சபை ழுமுழமையாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது.

தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தின் மணலாற்றின் கற்தூண், அக்கரைவெளி, வண்ணாமடு, மணற்கேணி ஆகிய பகுதிகளில் மிக நுட்பமாக சிங்கள மயமாக்கல் இடம்பெறுகின்றது.

பெயர்கள் மாற்றப்பட்டுச் சிங்கள மயமாக்கும் ஏற்பாடுகள் முழுமை பெற்றுள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மணற்கேணிப் பிரதேசத்தில் பிக்குமார் கால்பதித்தமை இவற்றுக்குச் சான்று.

1984ஆம் ஆண்டு தமிழ் மக்கள் குறித்த பகுதிகளிலிருந்து இடம்பெயர்வதற்கு முன்பு கற்தூண் பகுதியில் வைரவர் ஆலயமும் அக்கரைவெளியில் முனியப்பர் ஆலயமும் இருந்ததாக மக்கள் கூறுகின்றனர். ஆனால் இந்த இரண்டு கோவில்களும் தற்போது உடைக்கப்பட்டு பௌத்த பகுதிகளாக மாற்றுவதற்கு இராணுவ ஒத்துழைப்புடன் சிங்கள அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். சைவ வழிபாட்டு அடையாளங்கள் அழிக்கப்பட்டுமுள்ளன.

அக்கரைவெளியில் 1984 இற்கு முன்னர் பதிவுசெய்யப்பட்ட கூட்டுறவுச் சங்கம், மாட்டுப்பண்ணைகள் இருந்திருக்கின்றன. இது தமிழர்களின் விவசாய நிலமாகும்.

அக்கரைவெளிப் பகுதியில் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், மணற்கேணி, வண்ணாமடுப் பகுதிகளிலும் கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி பிரதேசங்கள் விவாசயத்திற்குரியவை.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அங்கு சென்ற பிக்குமார் உள்ளிட்ட சிங்கள அதிகாரிகள் குழு தமிழ் மக்களை அச்சுறுத்தி விவசாய நடவடிக்கைகளை நிறுத்தியதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அதிகாரபூர்வமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள குழு ஒன்று கொழும்பு நிர்வாகத்தின் கீழ் இத் திட்டங்களை முன்னெடுப்பதாக அறிய முடிகின்றது. இப் பின்புலத்திலேதான் வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயம் உடைக்கப்பட்டமையும் நீதிமன்ற உத்தரவை மீறி முல்லைத்தீவு குருந்தூர் மலையில் விகாரை கட்டுப்படுவதையும் அவதானிக்க முடியும்

பாதிக்கப்பட்ட மக்களின் வேண்டுகோளுக்கு அமைவாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடந்த வாரம் அங்கு சென்று நிலமைகளை அவதானித்துள்ளார்.

ஏற்கனவே தமிழர்களின் பாரம்பரிய பிரதேசமான மணலாற்றுப் பகுதியின் பிரதான விவசாயக் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு வெலிஓயாவாக மாற்றப்பட்டுள்ளன. மணலாற்றுக்கு அருகாகவுள்ள மானாவாரி விவசாய நிலங்களையும் ஆக்கிரமித்து பௌத்த சிங்கள மயமாக்கலுக்குரிய ஏற்பாடுகள் ஆரம்பமாகியுள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.

திருகோணமலை தென்னமரமாடிக்கும் அக்கரைவெளி பிரதேசத்துக்கும் இடையில்தான் பறையானறு கிராமம் அமைந்துள்ளது. இந்த பறையனாறு கிராமம்தான் திருகோணமலையையும் முல்லைத்தீவையும் இணைக்கின்றது. அக்கரைவெளியில் இருந்து அதற்கு நேராக வரும் காணிகளில்தான் தமிழர்கள் விவசாயச் செய்கைகளில் ஈடுபடுகின்றனர்.

குறிப்பாக மாரியாமுனை அக்கரைவெளி மணற்கேணி பிரதேசங்கள் அனைத்தும் விவசாயக் காணிகளாகும்.

வடக்குக் கிழக்கை இணைக்கும் முல்லைத்தீவு - திருக்கோணமலை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள தென்னமரவாடிக் கிராமம் திருக்கோணமலை நகரத்திலிருந்து புல்மோட்டை ஊடாக சுமார் அறுபது கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

திருக்கோணமலை மாவட்ட செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் இக் கிராமம் அமைந்துள்ளது. தென்னமரவாடி கிராமம் தனியான கிராம சேவகர் பிரிவாகும். இக் கிராமத்தில் தரம் ஐந்து வரை கல்வி கற்கும் பாடசாலை ஒன்று உள்ளது. ஆனால் போக்குவரத்து வசதிகள் இல்லை. இருப்பினும் முல்லைத்தீவு பேருந்து மூலம் சென்று வரலாம்.

புல்மோட்டை - கொக்குத்தொடுவாய் பகுதிகளில் உள்ள குடா பகுதிகளின் வாயில் கதவுகளாக தென்னமரவாடி பிரதேசம் அமைந்துள்ளது.

இப் பகுதியில் 2009 இற்குப் பின்னரான சூழலில் மீன் பிடித் துறைமுகம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழர்கள் அதனைப் பயன்படுத்த முடியாது. அருகில் உள்ள சிங்கள குடியேற்றக் கிராம மக்கள் மாத்திரமே பயன்படுத்த முடியும்.

1984 ஆம் ஆண்டு மார்கழி மாதம் தென்னமரவாடியில் வாழ்ந்த தமிழர்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டனர். பலர் அச்சத்தால் திருக்கோணமலை நகரப்பகுதி, தம்பலாகமம், வடக்கின் விஸ்வமடு போன்ற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தனர்.

2009 இற்குப் பின்னர் நூறு குடும்பங்கள் மாத்திரமே மீள குடியேறியுள்ளன.

தற்போது ரணில் அரசாங்கத்தில் தென்னமரவாடி கிராமத்தைப் பிரித்து பதவிஸ்ரீபுர எனப்படும் திருக்கோணமலையின் சிங்கள பிரதேசச் செயலாளர் பிரிவு ஒன்றில் இணைக்கும் இரகசியத் திட்டங்கள் தற்போது கசிந்துள்ளன.

அரசியல் ரீதியாகவும் சிங்கள உயர் அதிகாரிகள் மட்டத்திலும் பிக்குமாரை உள்ளடக்கி அதிகாரபூர்வமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள குழு ஒன்று கொழும்பு நிர்வாகத்தின் கீழ் இத் திட்டங்களை முன்னெடுப்பதாக அறிய முடிகின்றது.

இப் பின்புலத்திலேதான் வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயம் உடைக்கப்பட்டமையும் நீதிமன்ற உத்தரவை மீறி முல்லைத்தீவு குருந்தூர் மலையில் விகாரை கட்டுப்படுவதையும் அவதானிக்க முடியும்.

1948 இல் ஒருதலைப் பட்சமாகச் சுதந்திரம் வழங்கிவிட்டு வெளியேறிய பிரித்தானியர் இன்றுவரை ஈழத்தமிழர் அரசியல் நிலைமை பற்றிச் சிந்தித்தாக இல்லை. அதேபோன்று 1947 இல் பலஸ்தீனம் யூதர் மற்றும் அரபு பகுதி என இரு பிரிவுகளாக உருவாக ஐ.நா வாக்களித்தது. இதனால் ஜெருசலேம் சர்வதேச நகரமானது.

இந்த திட்டம் யூதத் தலைவர்களால் ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால் அரபுத் தரப்பில் ஏற்கப்படவில்லை. இச் சிக்கலுக்குத் தீர்வை முன்வைக்காமல், பிரித்தானிய ஆட்சியாளர்கள் அங்கிருந்து வெளியேறினர். இதனால் யூத தலைவர்கள் இஸ்ரேல் உருவானதாக அறிவித்தனர்.

1967 ஜுனில் எகிப்து, ஜோர்தான், சிரியா. லெபனான் என்பனவற்றின் மீது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஒத்துழைப்புடன், இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்புப் போரில் காஸா இஸ்ரேலின் ஆக்கிரமிப்பாக மாறியது.

தமிழ்த்தேசியக் கட்சிகள் 2009 இற்குப் பின்னர் அவ்வப்போது சிங்கள ஆட்சியாளர்களுடன் இணைந்து கோரிக்கையின் முக்கியத்துவத்தைக் குறைத்துள்ளன. சிங்கள எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து அரசியல் வேலைகளில் ஈடுபடுகின்றன. இதன் காரணமாகவே சிங்கள மயமாக்கல் துணிவோடும் இலங்கை ஒற்றையாட்சிச் சட்டங்களுக்கு அமைவாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

அன்றில் இருந்து இன்றுவரை காஸா மக்கள் அடக்குமுறைகளுக்கு உட்பட்டுள்ளனர். மிக நுட்பமாக காஸாவிலும் மேற்குக் கரையிலும் இஸ்ரேலின் நில அபகரிப்புத் தொடருகின்றது.

இதேபோன்று தமிழர்கள் நடத்திய போரும் 2009 இல் அமெரிக்க - இந்திய, சீன அரசுகளின் ஒத்துழைப்புடன் இல்லாமல் ஒழிக்கப்பட்டது. அதன் பின்னரான பதின்மூன்று ஆண்டுகளில் இராணுவ ஆக்கிரமிப்புகளும் அச்சுறுத்தல்களும் மற்றும் காணி அபகரிப்புகள் - குடியேற்றங்களும் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றன. உரிய பொறிமுறையைச் சிங்கள ஆட்சியாளர்கள் வகுத்துள்ளனர்.

1987 இல் இந்திய - இலங்கை ஒப்பந்ததின் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்று கூறி பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை உருவாக்கிய இந்தியா, இன்றுவரை தமிழர் பகுதிகளில் இடம்பெற்று வரும் பௌத்த மயமாக்கலுக்கு எதிராக ஒரு வார்த்தையேனும் பேசவில்லை.

மாறாக தமிழ்த்தேசியக் கோட்பாட்டைச் சிதைக்க இந்துத்துவக் கொள்கை ஊட்டப்படுகின்றது. ஆனால் பௌத்தத்தையும் உள்ளடகியதே இந்துத்துவக் கொள்கை என்ற இந்திய மன நிலையை ஈழத்தமிழ் சமய அறிஞர்கள் சிலர் புரிந்துகொள்ள மறுக்கின்றனர்.

ரணில் அரசாங்கத்துக்கு எதிராகக் கொழும்பில் சிங்களவர்கள் நடத்தும் போராட்டத்துக்குத் தமிழர்களின் ஆதரவை சிங்கள இடதுசாரிகள் கேட்கின்றனர். தமிழ்த்தேசியக் கட்சிகள் மதில்மேல் பூனைபோன்று பார்த்துக் கொண்டிருக்கின்றன.

தற்போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுக்கு எதிராக இஸ்ரேலிய மக்கள் போராட்டங்களை நாடத்துகின்றனர். ஆனால் பலஸ்தீனியர்கள் இஸ்ரேல் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கவில்லை. ஏனெனில் அது இஸ்ரேலிய மக்களின் பிரச்சினை.

அத்துடன் பலஸ்தீன மக்களை ஒரு இனமாகக்கூட ஏற்கும் மன நிலையில் இஸ்ரேலிய மக்களும் இல்லை. ஆகவே தற்போது அரசின் அடக்கு முறை என்று கோசமிட்டுக் கொண்டு இஸ்ரேல் மக்கள் நாடத்தும் போராட்டங்களுக்கு ஆதரவு கொடுக்க முடியாது என்பதை பலஸ்தீனியர்களுக்கு ஆதரவான சமூகவலைத்தளங்களில் காண முடிகின்றது.

ஆனால் ஈழத்தமிழர் சார்பான தமிழ்த்தேசியக் கட்சிகள் 2009 இற்குப் பின்னர் அவ்வப்போது சிங்கள ஆட்சியாளர்களுடன் இணைந்து தமது கோரிக்கையின் முக்கியத்துவத்தைக் குறைத்துள்ளன. சிங்கள எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து அரசியல் வேலைகளில் ஈடுபடுகின்றன.

காரணமாகவே சிங்கள மயமாக்கல் துணிவோடும் இலங்கை ஒற்றையாட்சிச் சட்டங்களுக்கு அமைவாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமெரிக்க - இந்திய அரசுகளும் ஈழத்தமிழர் விவகாரம் குறித்து சிங்கள ஆட்சியாளர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப செயற்படுவதற்குத் தமிழ்த்தேசியக் கட்சிகளின் பலவீனமும் உறுதியற்ற கொள்கையும் காரணமாகிறது.