சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம்

தவறவிடப்பட்ட வாக்களிப்பும் திறக்கப்பட்டுள்ள ஆபத்தான கோணமும்

சஜித் எடுத்துக்கூறிய அளவுக்கு இன ஒடுக்கல் பற்றி எடுத்துரைக்கத் தவறிய தமிழரசுக் கட்சி
பதிப்பு: 2023 மே 01 06:51
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மே 02 07:31
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
மொத்தக் கடன்களில் ஆகக் குறைந்தது முப்பத்தைந்து பில்லியன் டொலர்களைத் திருப்பிச் செலுத்த ஒப்புக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி ரணில், இலங்கை மத்திய வங்கி அதிகாரிகளுடன் கடந்தவாரம் இடம்பெற்ற சந்திப்பில் கூறியிருந்தார். இந்த நிலையில் மூன்று பில்லியன் கடன்களைப் பெற ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியத்துடன் மார்ச் மாதம் கைச்சாத்திட்ட ஒப்பந்தம், வெள்ளிக்கிமை இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில் அங்கீகாரம் பெற்றுள்ளது. இதன் மூலம் சிங்கள பௌத்த தேசியப் பொது பொறிமுறைக்கும்  (General Mechanism)  அங்கீகாரம் கிடைத்திருக்கின்றது போல் தெரிகிறது. 
 
கண்ணீர்ப்புகைக் குண்டுகளால் ஆர்ப்பாட்டத்தில் சிலர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இதற்கு இரசாயன விஷக் கலவை காரணமா அல்லது காலாவதியான கண்ணீர்ப்புகைக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதா என்று சஜித் நாடாளுமன்றத்தில் நேரடியாகக் கேள்வி தொடுத்திருந்தார். ஐஎம்எப் பிரதிநிதிகளுக்கும் அறிவித்திருநந்தார். ஆனால் இன ஒடுக்கல் செயற்பாடுகள் பற்றி தமிழ்த்தேசியக் கட்சிகள் வாய் திறக்கவில்லை

இலத்திரனியல் முறையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஆதரவாக நூற்று இருபது வாக்குகளும் எதிராக  இருபத்தைந்து வாக்குகளும் பெறப்பட்டன. தொண்ணூற்தைந்து மேலதிக வாக்குகளினால் ஒப்பந்தம் நிறைவேற்றியுள்ளது. 

இங்கே வேடிக்கை என்னவென்றால், ஒப்பந்தத்திற்குக் கடும் எதிர்ப்பு வெளியிட்ட சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, சம்பந்தன் தலைமையிலான தமிழரசுக் கட்சியை மையப்படுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்பட்ட  தமிழ்த்தேசியக் கட்சிகள், விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. ரணிலுக்கு எதிரானவர்களில் மொத்தம் எழுபத்தொன்பது உறுப்பினர்கள் வாக்களிப்பில் பங்குபற்றவில்லை.

ஆக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, ஜே.வி.பி மற்றும் டலஸ் அழகப்பெரும, விமல் வீரவன்ச தலைமையிலான அணி ஆகிய கட்சிகள் மாத்திரமே எதிர்த்து வாக்களித்துள்ளன.

நாடாளுமன்றத்தில் எதிரணியில் சுயாதீனமாக செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா, துமிந்த திஸாநாயக்க,சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே, பிரியங்கர ஜயரத்ன ஆகியோர் ஆதரவாக வாக்களித்தனர். ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஏ.எச்.எம் பௌசி ஆதரவாக வாக்களித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் கையொப்பமிட்ட ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படும் திகதி, ஒப்பந்தத்தின் படி மறுசீரமைப்புக்கு உள்ளாகும் அரச நிறுவனங்கள், அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகள் பற்றி எதிர்க்கடசித் தலைவர் சஜித் பிரேமதாசா, நாடாளுமன்றத்தில் ஏற்கனவே விளக்கம் கோரியிருந்தார்.

ஆனால் ஒப்பந்தத்துக்கு எதிராக அவர் வாக்காளிக்கவில்லை. 

ஆகவே சர்வதேச நாண நிதியத்தின் பரிந்துரைகள், இலங்கையின் பொருளாதார மீட்ச்சிக்கு அவசியமானது என்பதைச் சஜித் ஏற்றிருக்கிறார் என்றே பொருள் கொள்ள வேண்டும்.

ஐஎம்எப் ஒப்பந்தத்தின் மூலம் அடுத்த நான்கு ஆண்டுகளில் மூன்று பில்லியன் அமெரிக்க டொலர்கள் உதவி பெறப்படும். முதல் தவணையில் முந்நூற்று முப்பது மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கவுள்ளது. 

ஐஎம்எப் கடன் திட்டத்தைக் காண்பித்து உலக வங்கி மற்றும் ஏனைய கடன் வழங்குபவர்களிடமிருந்து மேலும் ஏழு பில்லியன் டொலர் துரித கடன் உதவியை அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

வடக்குக் கிழக்கில் சிங்களக் குடியேற்றங்கள், புத்தர் சிலை வைத்தல் பௌத்த விகாரைகள் கட்டுதல் போன்ற செயற்பாடுகளுக்காகச் சர்வதேச நாணய நிதியம் நிதி வழங்குவதாகக் குற்றம் சுமத்தியிருந்த தமிழரக் கட்சி, மற்றும் தமிழ்த்தேசியக் கட்சிகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் தவிர்த்தன் மூலம், இரட்டைவேடத்தைப் பகிரங்கப்படுத்தியுள்ளன.

எதிராக வாக்களித்ததன் மூலம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தமிழர் தாயகத்தில் 2009 இற்குப் பின்னரும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் இன அழிப்புச் செயற்பாடுகளுக்கு ஐஎம்எப் ஆதரவு வழங்குகின்றது என்ற கருத்தைக் குறிப்பிட்ட அளவேனும் பதிவு செய்திருக்கிறது.

பொருளாதார நெருக்கடிக்கு எதிரான போராட்டங்களை அடக்க ரணில் அரசாங்கம் கையாண்ட ஆபத்தான முறைகள் பற்றி சிங்களக் கட்சிகள் கொழும்பில் ஐஎம்எப் பிரதிநிதிகளுக்கு நேரிலும் எழுத்து மூலமாகவும் முறைப்பாடுகள் செய்திருந்தன.

ஊழல்மோசடி, அதிகாரத் துஸ்பிரயோகம் மற்றும் முறைகேடான அரசியல் - பொருளாதார அணுகுமுறைகளினால் சர்வதேச நிதி விரையம் செய்யப்படுவதாகவும் சிங்களக் கட்சிகள் கொழும்பில் பகிரங்கப்படுத்தியிருந்தன.

கண்ணீர்ப்புகைக் குண்டுகளால் ஆர்ப்பாட்டத்தில் சிலர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இதற்கு இரசாயன விஷக் கலவை காரணமா அல்லது காலாவதியான கண்ணீர்ப்புகைக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டமைதான் காரணமா என்று சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் நேரடியாகக் கேள்வி தொடுத்திருந்தார்.

குறிப்பாக 2022 மே ஒன்பதாம் திகதியன்று அலரி மாளிகை அருகில், 2022 ஜூலை பதின்மூன்றாம் திகதியன்று காலி வீதியில் உள்ள பிரதமர் அலுவலகம் அருகிலும் 2023 பெப்ரவரி இருபத்து ஆறாம் திகதியன்று கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்திற்கு அருகிலும் மற்றும், 2023 மார்ச் ஏழாம்; திகதியன்று கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அருகிலும் நடந்த போராட்டங்களைக்  கலைக்கப் பயன்படுத்தப்பட்ட சிஎஸ் ஷெல்ஸ் காஸ் (CS Shells) மற்றும்  கண்ணீர் புகை குண்டுகளின் உற்பத்தி திகதிகள் மற்றும் காலாவதி திகதிகள் தொடர்பாக சஜித் விளக்கம் கோரியிருந்தார்.

சிங்கள எதிர்க்கட்சியுடன் இணைந்து அரசாங்கத்தை எதிர்த்து அரசியலில் ஈடுபட்டு மண் கவ்விக் கொண்டிருக்கும் தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கு கிடைத்த செய்தி என்னவென்றால், சிங்களக் கட்சிகள் தமது அரசியலுக்காகத்தான் அரசாங்கத்தை எதிர்க்கிறார்களே தவிர, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறப்படும் நிதிகளை இலங்கைத்தீவுக்கான உதவித் திட்டமாகவே கருதுகின்றன

குறித்த போராட்டங்களில் பயன்படுத்தப்பட்ட சிஎஸ் ஷெல்ஸ் காஸ், கண்ணீர்ப் புகை குண்டுகளின் தரத்தை உறுதி செய்ய முறையான பரிசோதனை நடத்தப்பட்டதா என்றும் பரிசோதனை செய்து அந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சஜித் கோரியிருந்தார்.

ஆயிரத்து ஐறூறு சிஎஸ் ஷெல்ஸ் காஸ் மற்றும் கண்ணீர் புகைக் குண்டுகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதா, இதற்காக மதிப்பிடப்பட்ட தொகை எவ்வளவு என்றும் சஜித் நாடாளுமன்றத்தில் கேள்வி தொடுத்துடன், இது பற்றி ஐஎம்எப் பிரதிநிதிகளுக்கும் அறிவித்திருநந்தார்.

கொழும்பில் உள்ள தூதரங்களுக்கும் சஜித் பகிரங்கப்படுத்தியிருந்தார்.  இதனை அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய நாடுகள் சபையும் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

பிரதான எதிர்க்கட்சியாகவும் ஆளும் கட்சியாகவும் வரக்கூடிய அந்தஸ்த்தில் இருந்து கொண்டு சஜித் பிரேமதாசா இத்தனை விளங்கங்களையும் குறிப்பாக ரணில் அரசாங்கத்தின் மனித உரிமை மீறல் செயற்பாடுகள் என்று காண்பித்திருக்கிறார்.

ஆனாலும் ஐஎம்எப்பின் பரிந்துரைகள் குறிப்பாக ஒப்பந்தம் மூலம் கிடைக்கவுள்ள கடன்கள் இலங்கைத்தீவுக்குரியது. அது ரணில் அரசாங்கத்துக்குச் சொந்தமானதல்ல என்பது சஜித்துக்கு நன்கு தெரியும். ஏன், ரணிலை விமர்சிக்கும் ஜே.வி.பி, டளஸ் அழகபெரும தலைமையிலான அணி, விமல் வீரவன்ச உள்ளிட்ட அனைத்துச் சிங்கள உறுப்பினர்களுக்கும் அந்தப் புரிதல் உண்டு.

அதன் காரணமாக எதிர்ப்பது பின்னர் ஆதராவக வாக்களிப்பது அல்லது வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் அவர்கள் விலகிச் செல்கின்றனர். சீனாவுக்கு எதிராக தமிழரசுக் கட்சி உறுப்பினர் சாணக்கியன் நாடாளுமன்றத்தில் கருத்திட்டபோது, சஜித் அணி உறுப்பினரான ஹர்ஷா டி சில்வா, சாணக்கியன் மீது பாய்ந்தார்.

அமெரிக்கா, சீனா போன்ற வல்லரசு நாடுகளுடன் இலங்கை அரசு ஒத்துழைத்துச் செயற்பட வேண்டும் என்று அவர் இடித்துரைத்திருந்தார். அதாவது தமிழ்க் கட்சிகள் போன்று சிங்களக் கட்சிகள் செயற்பட முடியாது என்பதே ஹர்ஷ டி சில்வா கூறியதன் பொருள். அவருடைய ஆவேசம் அந்தத் தொனியை வெளிப்படுத்தியிருந்தது. 

ஆகவே பிரதான எதிர்க்கட்சியுடன் இணைந்து அரசாங்கத்தை எதிர்த்து அரசியலில் ஈடுபட்டு மண் கவ்விக் கொண்டிருக்கும் தமிழரசுக் கட்சியும் மற்றும் தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கும் கிடைத்த செய்தி என்னவென்றால், பிரதான சிங்களக் கட்சிகள் தமது அரசியலுக்காகத்தான் அரசாங்கத்தை எதிர்க்கிறார்களே தவிர, சர்வதேச நாணய நிதியம் போன்ற நிதி நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நாடுகளிடம் இருந்து பெறப்படும் அத்தனை நிதிகளையும் இலங்கைத்தீவுக்கான உதவித் திட்டமாகவே கருதுகின்றன.

அதாவது சிங்களத் தேசியத்தைக் கட்டியெழுப்புதல் என்ற பொதுவான இலக்கில் அவர்கள் தெளிவாகவுள்ளனர். எதிர்ப்பது பின்னர் சேர்ந்து பயணிப்பது அல்லது எதிர்த்து விட்டுப் பின்னர் அமைதியாக இருப்பது என்பது அவர்களுடைய உள்ளக ஜனநாயகக் கட்சி அரசியல். அது நியாயமான அரசியலும்கூட.

ஜே.வி.பி கூட நாளைக்கு ஆளும் கட்சியாக வந்துவிட்டால் அல்லது ஆளும் கட்சிக்கு ஆதரவு கொடுக்கும் சூழல் ஏற்பட்டால், சஜித் மேற்கொள்ளும் அரசியலையே அவர்களும் செய்வர் என்பது கண்கூடு.

ஆனால் அப்படியொரு கட்சி அரசியலைத் தமிழ்த்தேசியக் கட்சிகள் முன்னெடுக்கக் கூடிய சூழல் இல்லை. தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் அதாவது ஈழத்தமிழர்களின் தனித்த இறைமை என்று வாதிட்டு நூல் ஒன்றை எழுதிய திருச்செல்வம் 1965 இல், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுப் பொறுப்பை ஏற்றிருந்தார். 

பின்னர் விரக்தியடைந்து அமைச்சுப் பொறுப்பில் இருந்து விலகி வெளியே வந்தார். சிங்களக் கட்சிகளை நம்பமுடியாது என்றார். 2015 இல் மைத்திரி – ரணில் அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுத்துவிட்டுப் பின்னர் சுமந்திரன் என்ன சொன்னார்? தற்போது ரணில் ஜனாதிபதியாகப் பதவி வகிக்கும் நிலையில் சுமந்திரன் கூறுவதென்ன?

சட்ட மறுப்புப் போராட்டத்தை நடத்துவோம் என்று மார் தட்டும் அளவுக்கு சுமந்திரனைத் தூண்டிய காரண - காரியம் புரிகின்றதல்லவா? 

ஆகவே பட்டறிவு இருந்தும் தமிழரசுக் கட்சியும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பாக இணைந்து செயற்பட்டிருந்த தமிழ்த்தேசியக் கட்சிகளும் சிங்கள எதிர்க்கட்சிகளின் அரசியலுக்குள் கரைந்துபோக வேண்டிய அவசியமில்லையே? ஐஎம்எப் ஒப்பந்தத்துக்கு எதிராக வாக்களித்திருக்க வேண்டுமல்லவா?  

அரசாங்கத்துக்கு எதரான போராட்டங்களில் பயன்படுத்திய கண்ணீர்ப்புகைக் குண்டுகள், ஷெல் காஸ் போன்றவை குறித்துச் சஜித் கேள்வி எழுப்பியது போன்று வடக்குக் கிழக்குக் குடியேற்றங்கள், காணி அபகரிப்புகள் புத்தார் சிலை வைத்தல் மற்றும்  தமிழர் பிரதேசங்களில் அதிகரித்த இராணுவ முகாம்கள் போன்ற இன அழிப்புச் செயற்பாடுகளை ஆதராங்களுடன்  பட்டியலிட்டிருக்க வேண்டும் அல்லவா? அதற்குரிய அரச செலவுகள் பற்றி ஐஎம்எப் பிரதிநிதிகளுக்குச் சொல்லியிருக்க வேண்டுமல்லவா? 

2009 இற்குப் பின்னரும் கடந்த பதின்மூன்று வருடங்களில் இடம்பெறும் இன ஒடுக்கல் முறைகள் பற்றி விபரித்திருக்க வேண்டும் அல்லவா?

மாறாக தேர்தலில் வெற்றி பெறும் வியூகங்களை மாத்திரம் வகுத்து, இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்திற்குள் ஆசனங்களின் எண்ணிக்கையை அதிகரித்து ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலையைப் பெற்றுவிட முடியாது என்பது முடிந்த முடிவு.

புவிசார் அரசியல் - பொருளாதார போட்டிகளின் சூழலில் தேர்தல் அரசியல் மூலம் வடக்குக் கிழக்குத் தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்பதை நிறுவ வேண்டிய தேவை உண்டு. அதற்காகக் கட்சி அரசியலிலும் ஈடுபட வேண்டும். 

ஈழத்தமிழர் விவகாரத்தில் சிங்களக் கட்சிகளப் பொதுப் பொறிமுறை ஒன்றை வகுத்துச் செயற்படுவது போன்று ஒருமித்த குரலுடன் கூடிய அணுகுமுறையைத் தமிழ்த்தரப்புக் கையாள வேண்டிய காலமிது

ஆனால் கட்சி முரண்பாடுகளை வளர்த்தும், தனிநபர் செல்வாக்குகளை உயர்த்த முற்பட்டுக் கொண்டும் தமிழ்த்தேசிய விடுதலையை அடைய முடியாது. சாதி - சமய உட்பூசல்களுக்கு இடமளித்துக் கொண்டும். அல்லது கண்டும் காணாதது போன்று செயற்படுவதன் ஊடாகவும் தமிழ்த்தேசிய அரசியல் விடுதலையைப் பெறவே முடியாது. 

வடக்குக் கிழக்குத் தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்பதை நிறுவக்கூடிய மெய்யியல் விளக்கங்கள், ஆதாரங்கள் இருந்தும், அந்தத் தமிழ்த்தேசிய அரசியல் சரியான புரிதலோடு முன்னெடுக்கப்படவில்லை. ஐஎம்எப் ஒப்பந்தத்திற்கு எதிராக வாக்களிக்காமல் தவிர்த்ததன் மூலம், அத் தவறு புதியதொரு  ஆபத்தான கோணத்தில் (Dangerous Angle) வெளிப்பட்டிருக்கிறது.      தமிழ்த்தேசியக் கட்சிகள் ஒவ்வொன்றும் தமக்குள் விட்டுக் கொடுத்துச் செயற்படும் ஜனநாயகச் சூழலை முதலில் வளர்க்க வேண்டும். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்குத்தான் இப் பொறுப்பு அதிகமாகவுள்ளது.

ஓரமாக நின்று தனித்துப் பேசும் அரசியல் அல்லது புலிகளின் நீட்சியாகத் முன்னணியைச் சித்தரிப்பது, தமிழ்த்தேசிய அரசியல் விடுதலைக்கு ஒத்துவரக்கூடிய உத்தியல்ல அது.

ஈழத்தமிழர் விவகாரத்தில் சிங்களக் கட்சிகளப் பொதுப் பொறிமுறை ஒன்றை வகுத்துச் செயற்படுவது போன்று ஒருமித்த குரலுடன் கூடிய அணுகுமுறையைக் கையாள வேண்டிய காலமிது.