புவிசார் அரசியல் - புவிசார் பொருளாதார போட்டிகளுக்கு மத்தியில்

நேட்டோ பிளஸ் அணியில் இணையும் இந்தியா?

வடக்குக் கிழக்கு பௌத்த மயமாக்கலின் பின்னணிகள்
பதிப்பு: 2023 ஜூன் 04 09:25
புதுப்பிப்பு: ஜூன் 08 13:27
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இந்தோ - பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் ரசிய - உக்ரெயன் போர் ஆகிய விவகாரங்களில் அமெரிக்க - இந்திய அரசுகளிடையே நீடித்துக் கொண்டிருக்கும் பனிப்போரும் இரு நாடுகளினதும் உறவுக்குரிய இணக்க முயற்சிகளும் புவிசார் அரசியல் - பொருளாதார விடயங்களில் எவருக்குமே பயனில்லாத ஒன்றாகவே தென்படுகின்றன. குறிப்பாகத் தேசிய விடுதலை கோரி நிற்கும் பலஸ்தீனியர்கள் ஈழத்தமிழர்கள் மற்றும் குர்திஸ் இன மக்களின் அரசியல் உரிமைகளுக்கு விரோதமாகவே இச் செயற்பாடுகள் காணப்படுகின்றன. பிரதமர் மோடியை அமெரிக்காவும் அவுஸ்திரேலியாவும் மாறி மாறிப் புகழாரம் சூட்டுவதோடு, இந்தியப் பொருளாதார வளர்ச்சிகள் மற்றும் தத்தமது நாடுகளுக்கிடையிலான சர்வதேச வர்த்தகங்கள் பற்றிய நீண்ட உரையாடல்களையும் நடத்தி வருகின்றன.
 
தமிழர்களுக்குரிய சர்வதேச அதரவுகளை ரணில் தனது நுட்பங்கள் மூலம் இலங்கையின் உள்ளக விவகாரமாகத் திசை திருப்பி வருகிறார். அரசுக்கு அரசு என்ற இச் செயற்பாடுகளினால் தேசிய விடுதலை கோரி நிற்கும் சமூகங்கள், இன ஒடுக்கலுக்கு உள்ளாவதைப் புவிசார் அரசியல் - பொருளாதாரப் போட்டிகள் மூடி மறைத்து விடுகின்றன

ரசிய உக்கெரய்ன் போரினால் தற்போது உலகத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள், பண வீக்கங்களைக் கட்டுப்படுத்த, முரண்பாடுகளில் உடன்பாடுகளை உருவாக்கித் தமக்குரியவாறு புவிசார் அரசியல் - பொருளாதார நலன்களை பெறும் உத்திகளை இந்த நாடுகள் கையாளுகின்றன.

குறிப்பாக பலஸ்தீனம், ஈழத்தமிழர்கள் மற்றும் குர்திஸ்தான் போன்ற மக்களின் அரசியல் விடுதலை குறித்த விவகாரங்களைக் கைவிட்டுத் தமக்குரிய உலக அரசியல் ஒழங்குகளுக்குரிய ஏற்பாடுகளிலேயே கவனம் செலுத்துகின்றன.

தமக்கு வசதியாக இணக்க அரசியலுக்குள் செல்ல வேண்டும் என்ற கதைகளை இந்த வல்லாதிக்க நாடுகள் போதிக்கின்றன. இதன் காரணமாக இன ஒடுக்கல் செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இஸ்ரேல் மற்றும் சிறிய நாடான இலங்கை போன்ற அரசுகளுக்குத் தமது ஒற்றையாட்சிக் கட்டமைப்பை உறுதிப்படுத்தும் வல்லமைகள் தற்போது கிடைத்திருக்கின்றன.

குறிப்பாக ரசிய உக்ரெயன் போர்ச் சூழலில் பாலஸ்தீனத்தில் மிக வேகமாக அதிகரித்து வரும் இஸ்ரேலின் குடியேற்றங்கள், இலங்கைத்தீவின் வடக்குக் கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் பௌத்த மயமாக்கல் போன்ற இன ஒடுக்கல் செயற்பாடுகள் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டது போன்ற உணர்வுகளைத் தோற்றுவித்திருக்கின்றன.

எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் கூடவுள்ள ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை விவகாரம் சூடு பிடிக்குமென எதிர்பார்க்கப்பட்டாலும், தத்தமது புவிசார் அரசியல் பொருளாதார நலன்களுக்கு ஏற்ப இலங்கை போன்ற சிறிய நாடுகளையும் இஸ்ரேல் போன்ற சக்தி மிக்க நாடுகளையும் தமக்குச் சாதகமாக மாற்றும் நகர்வுகளில் வல்லாதிக்க நாடுகள் ஈடுபடுகின்றன.

குறிப்பாக அமெரிக்கா அவுஸ்திரேலியா, சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா போன்ற வல்லாதிக்க நாடுகள், ஈழத்தமிழினம், பலஸ்தீனம் போன்ற தேசிய விடுதலை வேண்டி நிற்கும் சமூகங்களின் அரசியல் நலன்களைத் தமக்குரியவாறு மாற்ற முனைகின்றன. பௌத்த மயமாக்கல் குறித்து இலங்கைக்குக் கண்டனம் தெரிவிக்காத பின்னணிக்கும் இந்த நாடுகளின் அரசியல் பொருளாதார நலன்களே காரணம்.

இந்தியாவைப் பொறுத்தவரை பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை அரசியல் தீர்வாக முன்வைக்க வேண்டுமென இலங்கைக்குக் கடும் அழுத்தம் கொடுத்து வருகின்றது. ஆனால் அமெரிக்கா முற்று முழுதாக இலங்கையின் ஒற்றையாட்சி நலன்களுக்கு ஏதுவாகவே செயற்படுகின்றது. பிரித்தானி கனேடிய அரசுகளும் இதற்கு விதிவிலக்கல்ல.

இந்தியாவுடன் இருக்கக்கூடிய அரசியல் பொருளாதார பனிப்போர் காரணமாக பாகிஸ்தானுடன் அமெரிக்கா அதிகளவு இராணுவ உறவுகளைப் பேணும் அதேநேரம், இலங்கைத்தீவின் வடக்குக் கிழக்கில் இந்தியாவுடன் இணைந்து சீனாவுக்கு எதிரான இராணுவ வியூகங்களையும் வகுக்கின்றது.

இந்த வியூகங்களை ஜனாதிபதி ரணிலும் தமிழர்களின் அரசியல் விடுதலைக் கோரிக்கைகளை நீக்கம் செய்யும் நோக்கில் இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குச் சாதகமாக்கியுள்ளார்.

உலகளவில் பத்து ஆண்டுகளில் இந்தியா முக்கிய இடத்தை பிடித்திருப்பதாகவும், 2014 ஆண்டு நரேந்திரமோடி பிரதமராகப் பதவியேற்ற பின்னர் பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டதால், குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதாகவும் அமெரிக்காவின் மோர்கன் ஸ்டான்லி நிறுவனத்தின் ஆய்வறிக்கை கூறுகின்றது.

அமெரிக்க இந்திய பனிப்போருக்கு மத்தியில் ஏதோவொரு வகையில் புகழாரம் சூட்டி வரும் அமெரிக்கா, கடந்த வாரம் தனது மோர்கன் ஸ்டாலின் நிறுவனத்தின் மூலம் மோடியைப் புகழ்ந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவின் பிரபல வர்த்தக நிறுவனமான அதானி குழுமத்தின் மீது பாரிய குற்றச் சாட்டுக்களை அமெரிக்காவின் கணக்கியல் ஆய்வு நிறுவனம் முன்வைத்திருந்தது.

இந்த நிலையில் கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியா முக்கிய இடத்தைப் பிடித்திருப்பதாகப் புகழாரம் சூட்டியிருப்பதன் மூலம் இந்தோ - பசுபிக் மற்றும் ரசிய – உக்ரெயன் போர் விவகாரங்களில் இந்தியா தமக்குச் சாதமாகச் செயற்பட வேண்டுமென அமெரிக்கா எதிர்பார்ப்பதையே எடுத்துக் காட்டுகின்றன.

இருபதாவது ஆண்டு சங்ரி-லா உரையாடல் சிங்கப்பூரில் சென்ற வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி நடைபெற்று வரும் பின்னணியில் ஆசியப் பிராந்தியப் பாதுகாப்புகள் குறித்துப் பல தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பு அமெரிக்காவுக்கு அவசியமாகிறது.

ரசிய உக்ரெயன் போர்ச் சூழலில் பாலஸ்தீனத்தில் மிக வேகமாக அதிகரித்து வரும் இஸ்ரேலின் குடியேற்றங்கள், இலங்கைத்தீவின் வடக்குக் கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் பௌத்த மயமாக்கல் போன்ற இன ஒடுக்கல் செயற்பாடுகள் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டது போன்ற உணர்வுகளைத் தோற்றுவித்திருக்கின்றன

ஆகவே இதனை மையமாகக் கொண்டே அவுஸ்திரேலியாவும் கடந்த வாரம் மோடியைப் புகழ்ந்துள்ளதுடன் மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் இந்தியா ஒன்றித்துச் செயற்படும் என்ற நம்பிக்கையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆகவே தற்போதைய சிக்கலான புவிசார் மூலோபாய சூழலை எதிர்கொள்ளும் பின்னணியும் தென் பசுபிக் காலநிலை மாற்றத்தின் விளைவுகளும் இந்தியாவை நட்பு சக்தியாக மாற்றும் நிலைமைக்குள் மேற்குலக நாடுகளைத் தூண்டியிருக்கிறது போலும்.

அமெரிக்கா, கனடா, உக்ரைன், சீனா, சிங்கப்பூர் மற்றும் பிரித்தானியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட இராஜதந்திரிகள் எனப் பலரும் பங்குகொண்டிருக்கும் சங்ரி-லா உரையாடல் மாநாட்டில் தற்போதைய உலகப் பாதுகாப்பு மற்றும் உலக அரசியல் ஒழுங்குகள் பற்றித் தனித்தனியாகவும் சந்திப்புகள் நடந்துள்ளன.

அணு ஆயுதங்கள் சரிபார்க்கப்பட்டு மீளமுடியாமல் அகற்றப்பட வேண்டும் என்ற நீண்டகாலப் பார்வையை மீண்டும் வலியுறுத்தவும் பிராந்திய பாதுகாப்புக்கான அணு பரிமாணங்கள் பற்றிய குழு விவாதங்களிலும் வல்லாதிக்க நாடுகளின் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் பங்கெடுத்துள்ளனர். ஆனால் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

நியூசிலாந்து நீண்டகால அணுசக்தி இல்லாத கொள்கையைக் கொண்டுள்ளது. அணு ஆயுதங்கள் இல்லாத உலகத்திற்காக தொடர்ந்து வலுவான சட்டத்தரணிகளாகச் செயற்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சர் ஆண்ட்ரூ லிட்டில் கூறியதாக சிங்கப்பூர் அரச செய்தி நிறுவனமான mindef.gov.sg கூறியுள்ளது.

சிங்கப்பூரில் உள்ள சர்வதேச மூலோபாய ஆய்வுகள் நிறுவனம் (International Institute for Strategic Studies -IISS) சங்கிரி-லா உரையாடலை நடத்துகின்றது இன்று ஞாயிற்றுக்கிழமை நிறைவடையும் இந்த மாநாட்டில் ரசிய உக்கெரய்ன் போர் விவகாரத்துக்கு முடிவு காணும் தீர்மானங்கள் அல்லது அமைதிக்கான உடன்பாடுகள் ஏற்படுமென அந்த செய்தி நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

ஆகவே சங்ரி-லா உரையாடலுக்கு முன்னதாக இந்தியாவைக் கவர்ந்திழுக்கும் முயற்சிகளை அமெரிக்கா முடுக்கிவிட்டுள்ளமை தற்போது பகிரங்கமாக வெளிப்பட்டுள்ளது.

அமெரிக்காவை மையப்படுத்திய நேட்டோ இராணுவ அணியின் நேட்டோ பிளஸ் ('NATO Plus) கட்டமைப்பில் சேர வேண்டுமா என்பதை இந்தியா தீர்மானிக்க வேண்டும் என்று புதுடில்லியில் உள்ள இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, வியோன் (WION) என்ற செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய நேர்காணலில் கூறியிருக்கிறார்.

இந்தோ-பசிபிக்' பாதுகாப்பு கட்டமைப்பிற்கு சாதகமான பொதுக் கருத்துச் சூழலை வடிவமைப்பதில் அமொிக்க - இந்திய உறவு தங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆனால் நேட்டோவை நோக்கிச் சாய்வதை இந்தியா விவேகமற்ற முறையில் தேர்வு செய்தால், அது புதுடில்லியின் மூலோபாய சுயாட்சி, சர்வதேச அந்தஸ்து மற்றும் அயல் நாடுகளுடனான உறவுகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சீனாவின் குளோபல்ரைம்ஸ் செய்தி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தைவான் பிரச்சினையில் சீனாவின் ஆக்கிரமிப்பைத் தடுக்க இந்தியாவை நேட்டோ இராணுவ அணியில் சேர்க்க ஒரு கொள்கை முன்மொழிவை அமெரிக்க ஹவுஸ் கமிட்டி சென்ற மே மாதம் இருபத்தியேழாம் திகதி ஏற்றுக்கொண்டதாக சிங்குவா பல்கலைக்கழகத்தின் தேசிய வியூகக் கழகத்தின் ஆராய்ச்சித் துறையின் இயக்குநர் கியான் ஃபெங், கூறியதாக குளோபல் டைம்ஸிடம் சென்ற வியாழக்கிழமை செய்தி வெளியிட்டிருந்தது.

ஆகவே சீனாவை எதிர்கொள்ளும் நோக்கில் நேட்டோ கட்டமைப்பின் மூலம் ரசியாவை எதிர்கொள்ளக்கூடிய முன் மாதிரி ஒன்றை ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா பரீட்சித்துப் பார்க்க விரும்புவதையே இது வெளிக்காட்டுகிறது.

இந்தோ-பசிபிக் மூலோபாயம் வெற்றிபெறுமா என்பதைத் தீர்மானிக்கும் முக்கிய இணைப்பாக அமெரிக்கா இந்தியாவைக் கருதுகிறது என்றும் கூறலாம்.

அதேநேரம் நேட்டோ இராணுவக் கட்டமைப்பின் மூலம் தனது செல்வாக்கை அதிகரிக்க இந்தியாவும் விரும்புகிறது. ஓரளவிற்கு சீனாவுடனான அதன் மூலோபாய செல்வாக்கை அதிகரிக்கவும் இந்தியா முற்படுகின்றது.

ஆனால் ரசியாவுடன் மரபுவழி உறவைப் பேணிக் கொண்டு அதுவும் உக்ரெயன் போரில் ரசியாவைக் கண்டிக்காத ஒரு பின்னணியிலும் எந்த அடிப்படையில் நேட்டோ அணியில் இணைய இந்தியா விரும்புகின்றது என்பது புதிராகவே உள்ளது.

அல்லது அவ்வாறு விரும்புவது போன்று காண்பித்தக் கொண்டு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் பகைத்துக் கொள்ளாமல், ரசியாவுடனும் உறவைப் பேணி அதன் ஊடே சீனாவுடனான் வட இந்திய எல்லைப் பிரச்சினைகளுக்கும் சுமூகமான ஒரு தீர்வை உருவாக்க இந்தியா முற்படலாம்.

ஆனாலும் சர்வதேச உறவு முறையில் இரட்டைத் தன்மை கொண்ட வெளியுறவுக் கொள்கை நீண்டகாலம் நீடிப்பதற்குரிய வாய்ப்புகள் இல்லை. அதுவும் சர்வதேச வர்த்தகததில் இந்திய ரூபாவை ரசியாவுடன் சேர்ந்து ஈடுபடுத்தும் ஏற்பாடுகளில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவின் இரட்டைத்தனமான சர்வதேசக் கொள்கை எந்தளவு தூரம் வெற்றியளிக்கும் என்று கூற முடியாது.

ஆனாலும் ஜூன் இருபத்தியிரண்டாம் திகதி வோசிங்டன் டிசிக்கு மோடியை அதிகாரபூர்வமாக அழைப்பதற்கு முன்னதாகவே இந்தியாவைக் கவரும் அமெரிக்காவின் இந்த முயற்சிகள் அரங்கேறி வருகின்றன.

எதிர்வரும் ஐந்தாம் திகதி, அமெரிக்கப் பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஒஸ்டின் தனது ஏழாவது இந்தோ - பசிபிக் சுற்றுப் பயணத்தின் போது, புதுடில்லியில் அமெரிக்க -இந்தியக் கூட்டுப் பாதுகாப்புப் பற்றி உரையாவுள்ளதாக இந்துஸ்தான் ரைமஸ் கூறுகின்றது.

இப் பின்புலத்தில் நேட்டோவுடன் இந்தியாவின் நெருக்கமான ஒத்துழைப்பை நிராகரிக்கவே முடியாத சூழல் உண்டு. ஏனெனில் டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோதும் அவ்வாறான நெருக்கத்துடன் மோடி உறவைப் பேணியிருந்தார்.

இருந்தாலும் இப்போதைக்கு எல்லைப் பிரச்சினைகளினால் சீன - இந்திய உறவுகள் குறைவாக இருந்தாலும் கூட, அமெரிக்கச் செயற்பாடுகளினால் சீனாவுடன் நேரடி மோதல் ஒன்றுக்குத் தள்ளப்படுவதில் இந்தியா எச்சரிக்கையாக உள்ளது என்பதையும் அவதானிக்க முடியும்.

அதாவது அமெரிக்க - ரசிய உறவு மோசமடைந்து, ரசிய - உக்ரைன் மோதலின் தொடர்ச்சியின்போது, இந்தியா ரசியாவுடனான தனது நீண்டகால ஒத்துழைப்பைக் கருத்தில் கொண்டு அமெரிக்காவுடன் ஒரு குறிப்பிட்ட தூரத்தைக் கடைப்பிடிக்கும் வாய்ப்புகளே கூடுதலாக உண்டு எனலாம்.

ஆகவே இவ்வாறான புவிசார் அரசியல் போட்டிகளை நன்கு அவதானித்துச் செயற்படும் இலங்கை இராஜதந்திரிகள், மிக நுட்பமாக இலங்கை ஒற்றையாட்சியைப் பலப்படுத்தச் சர்வதேச முதலீட்டாளர்களையும் சர்வதேச ஒத்துழைப்புகளையும் பெற்று வருகின்றனர்.

சர்வதேச வர்த்தகததில் இந்திய ரூபாவை ரசியாவுடன் சேர்ந்து ஈடுபடுத்தும் ஏற்பாடுகளில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவின் இரட்டைத்தனமான சர்வதேசக் கொள்கை எந்தளவு தூரம் வெற்றியளிக்கும்?

இஸ்ரேல் அரசு வல்லாதிக்க சக்தியாக இருப்பதால் மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் அந்த அரசின் ஒத்துழைப்பை பெறவிரும்புவர் என்பது கண்கூடு. ஆனால் இலங்கை சிறிய நாடாக இருந்தாலும். இந்தோ - பசுபிக் விவகாரத்தில் இந்தியாவுக்குப் பக்கபலமாகக் கொழும்பு செயற்பட வேண்டும் என்பதற்குரிய கோணங்களில் மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் சிந்திக்கின்றன.

இது இலங்கைக்கு வாய்ப்பாகவே உள்ளது. குறிப்பாக ஈழத் தமிழர்களுக்குரிய சர்வதேச அதரவுகளைக்கூட ரணில் தனது நுட்பங்கள் மூலம் இலங்கையின் உள்ளக விவகாரமாகத் திசை திருப்பி வருகிறார்.

ஆகவே அரசுக்கு அரசு என்ற இச் செயற்பாடுகளினால் தேசிய விடுதலை கோரி நிற்கும் சமூகங்கள், இன ஒடுக்கலுக்கு உள்ளாவதைப் புவிசார் அரசியல் - பொருளாதாரப் போட்டிகள் மூடி மறைத்து விடுகின்றன என்ற முடிவுக்கு இலகுவாக வந்துவிடலாம்.

தேவை ஏற்பட்டால் மாத்திரமே இன ஒடுக்கல் செயற்பாடுகளை வல்லாதிக்க நாடுகள் மீளவும் தோண்டி எடுக்கும்.

அவ்வாறு தோண்டி எடுக்கப்படும்போது பலஸ்தீனத்துக்குச் சில சமயங்களில் அது வாய்பாக அமைந்தாலும், ஈழத்தமிழர்களுக்கு வரக்கூடிய சந்தர்ப்பங்களை இந்தியப் புவிசார் அரசியல் பொருளாதார நலன்கள் தடுத்துவிடுகின்றன.

எனவே இதற்கு ஏற்ற முறையில் அதாவது சமகாலப் புவிசார் அரசியல் பொருளாதாரப் போட்டிச் சூழலில் சிங்களத் தரப்பு எப்படி வியூகங்களை வகுக்கின்றதோ அதற்கும் மேலாகச் சென்று தமிழ்த்தரப்பு தமக்குரிய அணுகுமுறைகளில் புதிய படிப்பினைகளைத் தேட வேண்டும்.