புவிசார் அரசியல் பொருளாதாரம்

ஆபிரிக்க நாடுகளின் அமெரிக்க எதிர்ப்பும் இந்தியாவும்

இலங்கை பாடம் கற்குமா? பிறிக்ஸ் மாநாடு பற்றிய புதுடில்லியின் குழப்பம்
பதிப்பு: 2023 ஓகஸ்ட் 13 21:50
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 27 16:39
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#niger
#west
#african
#states
#india
#us
அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிரான ரசிய - சீன வியூகங்களுக்கு இடமளிக்காமல் நெழிவு சுழிவுகளோடு பிறிக்ஸ் கூட்டமைப்புக்குள் இந்தியா பயணிக்க  முற்படும் நிலையில், மேற்கு ஆபிரிக்க நாடுகள், அமெரிக்கா - பிரான்ஸ் ஆகிய வல்லாதிக்க நாடுகளுடன் இராஜதந்திர உறவைத் துண்டித்து, ரசியாவுடன் கூட்டுச் சேருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகின்றன. புர்கினோ பசோ, மாலி, கினி, நைஜர் ஆகிய சிறிய ஆபிரிக்க நாடுகள் கடந்த மாதம் ரசியாவுடன் கூட்டுச் சேர்ந்தமை, புவிசார் அரசியல் பொருளாதார நிலைமைகளில் பாரிய தாக்கத்தைச் செலுத்துமென சர்வதேச ஊடகங்கள் அச்சம் கலந்த தொனியில் வர்ணிக்கின்றன.
 
ஆபிரிக்க நாடுகளில் இராணுவம், ஆட்சியாளர்களைக் கைது செய்து வீட்டுக்காவலில் வைத்திருப்பது போன்றதொரு கிளர்ச்சி, சிறிய தீவான இலங்கையில் ஏற்படக்கூடிய வாய்ப்புகளும் இல்லாமலில்லை. அப்படி ஒரு நிலைமை உருவாகினாலும் அது இந்திய அல்லது சீன ஆதிக்கத்துக்கும் போட்டிக்கும் இடமளிக்குமே தவிர, மக்களின் நலன் சார்ந்ததாக இருக்காது

பிறிக்ஸ் நாடுகள் பொதுநாணயப் பயன்பாடு பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில். மேற்கு ஆபிரிக்க நாடுகள் அமெரிக்காவுக்கும் டொலருக்கு எதிராகவும் கருத்திட்டிருப்பது துணிச்சல் மிக்க நடவடிக்கை எனலாம். இந்த நாடுகளில் கடந்த மாதம் ஏற்பட்ட இராணுவக் கிளர்ச்சிகளையடுத்தே இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

அமெரிக்கா பிரான்ஸ் ஆகிய நாடுகள் மேற்கு ஆபிரிக்க நாடுகளுக்குக் கடன் கொடுத்து, அந்த நாடுகளில் உள்ள இயற்கை வளங்களைச் சுரண்டியிருக்கின்றன. இதனால் ஆபிரிக்க நாடுகளில் வறுமையும் பசியும் தொடர்ச்சியாக நிலவி வந்தன.

இப் பின்புலத்திலேயே ரசியாவுடன் கூட்டுச் சேர்ந்து தத்தமது சிறிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளத் தயாராகி வருகின்றன. ரசியாவுடன் மேற்கு ஆபிரிக்க நாடுகளின் உறவு வளர்ச்சியடையலாம் என்று ஜியோபொலிற்றிக்கல் மொனிற்றர் என்ற (geopoliticalmonitor) ஆங்கில செய்தி ஆய்வுத்தளம் கூறுகிறது. 

உலகம் முழுவதும் உள்ள இயற்கை வளங்களில் குறைந்தது முப்பது சதவிகிதம் ஆபிரிக்காவில் உள்ளது. ஆனாலும்; ஆபிரிக்க நாடுகளில் வறுமையில் உள்ளன.  எந்தப் பக்கம் பார்த்தாலும் எலும்பும் தோலுமாய் இருக்கும் குழந்தைகளும், சிறிய ஓட்டைக் குடிசைகளும்தான் ஆபிரிக்காவின் அடையாளமாகத்  தொடர்ந்து விளங்குகின்றன.

இந்த வறுமை நிலையை மாற்றுவதாக கூறிக் கடன் வழங்கிய அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய வல்லாதிக்க நாடுகள் இந்த கடனை வைத்து ஆபிரிக்க நாடுகளின் அரசாங்கங்களில் தலையிட்டு, அங்கிருந்து இயற்கை வளங்களை சுரண்டிக் கொண்டிருந்தன. 

இதன் காரணமாகவே ஆபிரிக்க நாடுகளில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. இதனால் எழுந்த கிளர்ச்சியின் பின்னர் அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுடனான உறவு துண்டிக்கப்பட்டுச் சுமார் ஐம்பத்து மூன்று ஆபிரிக்க நாடுகளில் நாற்பத்து ஒன்பது நாடுகள் ரசியாவுடன் இணைவதற்கான சாத்தியங்களை வெளிப்படுத்தி வருகின்றன.   ரசிய ஜனாதிபதி புட்டின் இதனை வரவேற்றுள்ளார். சென்ற வாரம் நூற்று எண்பத்தியொரு செயற்திட்டங்களுக்குரிய யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளதாக ஒன்இந்தியா (oneindia) என்ற ஆங்கில செய்தித் தாளம் கூறுகிறது. 

இதன் பிரகாரம் ஆபிரிக்க நாடுகளுக்கு ரசியா, தனது நாணயத்தில் வழங்கிய சுமார் பத்தொன்பது இலட்சம் கோடி ரசிய ரூபிள் பெறுமதி மிக்க கடன்களை ரத்துச் செய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் ஆபிரிக்க நாடுகளுக்கு அவசியமான நிவாரணங்கள் உதவிகளை வழங்கவும் ரசியா இணங்கியுள்ளது. இத் திட்டங்கள் பற்றி புட்டின் கடந்த வாரம் மேற்கு ஆபிரிக்க மாற்றுக் குழுவுடன் உரையாடியிருக்கிறார். 

கடந்த சில ஆண்டுகளாக உக்ரெய்ன் நாட்டில் இருந்து ஆபிரிக்காவுக்கு அனுப்ப வேண்டிய மூன்று தசம் இருபத்தியெட்டுக் கோடி தொன் உணவு தானியத்தில் மூன்று சதவிகிதம் மட்டுமே கிடைத்திருக்கிறது. மற்ற தானியங்கள் அனைத்தும் ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன.

எனவே ஆபிரிக்க நாடுகள் தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற இந்த நிவாரண உதவி கைகொடுக்கும் என்று ரசியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக ஆபிரிக்க நாடுகளுடனான வர்த்தகம் அந்தந்த நாடுகளின் சொந்த நாணயங்களிலேயே மேற்கொள்ளப்படும் என்றும் ரசியா உறுதியளித்திருக்கிறது.

ஏற்கனவே ரசிய - இந்திய எண்ணெய் வர்த்தகம் இந்திய நாணயங்களில்தான் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெறுகிறது. பிரேசில், ரசியா, சீனா, இந்தியா மற்றும் தென் ஆபிரிக்க நாடுகள் தத்தமது சொந்த நாணயங்களில் வர்த்தகம் செய்யத் தீர்மானம் எடுத்துள்ளன.

இப் பின்னணியில் தற்போது மேற்கு ஆபிரிக்க நாடுகளும் இணையவுள்ளன. இதனால் ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்க டொலரின் செவ்வாக்கு குறைவடைந்து வரும் சூழல் உருவாகியுள்ளது. 

பிறிக்ஸ் மாநாட்டின் பின்னர் ரசியாவும் சீனாவும் உலக நாடுகளின் பொருளாதார மாற்றங்களையும் அதன் வளர்ச்சியையும் தீர்மானிக்கும் சக்தியாக மாறும் என்று பொருளியல் நிபுணர்கள் கருதும் நிலையில், ஆபிரிக்க நாடுகள் ரசியாவுடன் கூட்டுச் சேர எடுத்துள்ள முடிவு அமெரிக்காவுக்குப் பெரும் எச்சரிக்கையாகும்.  

இதனை ஆபிரிக்க அரசியலின் நீண்டகால மற்றும் உடனடி மாற்றங்களாகவும் நோக்க முடியும். புர்கினோ பசோ, மாலி, கினி, நைஜர் போன்ற சிறிய ஆப்பிரிக்க நாடுகளில் கிடைக்கும் யுரேனியம் உலகில் வேறு எந்த பகுதிகளிலும் கிடைக்காது. யுரேனியம் அணு குண்டு தயாரிக்க அடிப்படையாக அமைகிறது.

அதேபோல மின்சார உற்பத்தியில் மிகப்பெரும் பங்கு வகிக்கிறது. அணு உலைகளில் எரிபொருளாக இந்த யுரேனியம்தான் பயன்படுகிறது. ஏனைய உலக நாடுகளில் கிடைக்கும் யுரேனியத்தை விட மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் யுரேனியம் அதிக நேரம் எரியும் தன்மை கொண்டது.

இவ்வாறு ஏராளமான வளங்கள் ஆபிரிக்க நாடுகளில் உண்டு. ஆனாலும் உலகின் மிகவும் ஏழ்மை நாடுகளின் பட்டியலில் ஆபிரிக்க நாடுகள் முன்னணியில் இருப்பதற்கு அமெரிக்க பிரான்ஸ் நாடுகளே பிரதான சூத்திரதாரிகள். 

குறிப்பாகக் கடன்களை அள்ளி வழங்கிவிட்டு அங்கிருந்து யுரேனியம் போன்ற இயற்கை வளங்களை அமெரிக்காவும் பிரான்ஸூம் சுரண்டிச் செல்வதாக ஆபிரிக்க மக்கள் தற்போது பகிரங்கப்படுத்தி  வருகின்றனர். 

சுரங்கம் அமைத்து அதன் ஊடாக யுரேனியத்தைத் தமது நாடுகளுக்குக் கொண்டு சென்றிருக்கின்றன. ஆபிரிக்க நாடுகளின் ஆட்சியாளர்களும் இதற்கு நீண்டகாலமாக உடந்தையாக இருந்திருக்கின்றனர்.

எண்பது வருட இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வும் தமிழ் மக்களை உள்ளடக்கிய பொருளாதாரத் திட்டங்களையும் வகுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தைச் சமகால உலக அரசியல் சூழல் சிங்கள ஆட்சியாளர்களுக்கு உணர்த்தியிருக்கின்றது

புர்கினோ பசோ, மாலி, கினி, நைஜர் உள்ளிட்ட நாடுகளின் இராணுவம் பொது மக்களின் ஒத்துழைப்புடன் கிளர்ச்சி செய்து அமெரிக்க – பிரான்ஸ் நாடுகளின் கைகூலியாகச் செயற்பட்ட தமது ஆட்சியாளர்களைக் கைது செய்திருக்கிறது.

ஆனாலும் நைஞர் நாட்டில் கடந்த வாரம் பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி அலஸ்ஸேன் ஒளட்டாரா, பாஸூமின் மீண்டும் பதவி ஏற்க வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. ரொய்டர், பிபிசி போன்ற ஆங்கில ஊடகங்கள் அமெரிக்கச் சார்பு கருத்துக்களுக்கு மாத்திரமே முக்கியத்துமளித்துள்ளன. 

இப் பின்னணியிலேதான் மக்களின் கிளர்ச்சிகளுக்கு மத்தியில் கடந்த வாரம் நடைபெற்ற ரசிய - ஆபிரிக்க நாடுகளின் உரையாடல், மேற்கு. ஐரோப்பிய நாடுகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

ஐம்பத்து நான்கு ஆபிரிக்க நாடுகளில் நாற்பத்து ஒன்பது நாடுகள் இந்த உரையாடலில் பங்கேற்றிருககின்றன. அதில் அமெரிக்கா, பிரான்ஸ் நாட்டிற்கு எதிராகத் தாங்கள் ஓரணியில் திரள்வதாக  மேற்கு ஆபிரிக்க மக்கள் உறுதியளித்திருக்கின்றனர்.

இந்த உரையாடலை நன்கு அவதானித்த அமெரிக்கா பிரான்ஸ் போன்ற வல்லாதிக்க நாடுகள், ஆபிரிக்க நாடுகளின் குறிப்பாக, புர்கினோ பசோ, மாலி, கினி, நைஜர் ஆகிய சிறிய நாடுகளின் கிளர்ச்சி படைகளைத் தீவிரவாதிகள் என்று வர்ணித்துள்ளன. 

கிளர்ச்சியாளர்கள் நைஞர் நகரில் புட்டினின் படங்களுடன் வீதிகளில் வலம் வருகின்றனர். ஆகவே கிளர்ச்சிப் படைகள் என்று முத்திரை குத்தினாலும் அமெரிக்கா. பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு இந்த விவகாரம் தலைவலிதான் என்பதில் சந்தேகமேயில்லை. ஏற்கனவே இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் சீனா தனது பொருளாதாரத் திட்டங்களை விஸ்தரித்து வருகின்றது.

ரசியாவுக்கு எதிரான போரில் உக்ரெய்னுக்கு எவ்வளவுதான் ஆயுத உதவிகளை வழங்கினாலும் போரில் ரசியாவுக்கு எதிராகப் பெரிய மாற்றங்கள் நிகழவில்லை. 

ஆகவே இப் பின்புலத்தில் ஆபிரிக்க நாடுகள் ரசியாவுடன் கூட்டுச் சேர்ந்துள்ளமை, அடுத்த வாரம் தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள பிறிக்ஸ் மாநாட்டில் எடுக்கப்படவுள்ள பொருளாதாரம் பற்றிய தீர்மானங்களில் மேலும் புதிய திட்டங்கள் வகுக்கப்படக்கூடிய வாய்ப்புகள் அதிகமாகியுள்ளன.   

ரசிய - ஆபிரிக்க நாடுகள் கூட்டின் பின்னணியிலும், இந்தியாவை பிறிக்ஸ் கூட்டமைப்பில் இருந்து பிரித்து எடுக்கும் நோக்கிலும் அமெரிக்கச் சார்பு சர்வதேச ஊடகங்கள் பிறிக்ஸ் பற்றிய பல விமர்சனங்களை முன்வைக்கின்றன.

”ஐீ-7 செல்வாக்குச் செலுத்தும் உலக ஒழுங்கின வெற்றிடத்தில் தன் சிறகுகளை அடித்துக்கொள்ளும் ஒரு பயனற்ற பட்டாம்பூச்சி” என்று ரொய்டர் ஆங்கில செய்தித் தளம் கிண்டலடித்துள்ளது. 

ரசியாவையும் சீனாவையும் தனிமைப்படுத்தும் வாதங்களை புளூம்பேகஸ் (bloombergnews) என்ற அமெரிக்க ஊடகம் தூண்டி விடுகின்றது. 

இந்த இடத்தில் இந்தியா, ரசியவுடன் குறிப்பாக ரசிய – சீன பொருளாதாரக் கூட்டுக்குள் நிற்பதா அல்லது அமெரிக்க உள்ளிட்ட மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரக் கூட்டில் நிற்பதா என்று இதுவரையும் சரியான நிலைப்பாட்டை முன் வைக்கவில்லை. 

அரசியல், பொருளாதார, மற்றும் இராணுவக் கூட்டு முறைகளில் தனித்தனி இயங்கு நிலையை, இந்தியா விரும்புகின்றது. ஆனால் ரசிய - சீன கூட்டுக்கு எதிராக, மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் அரசியல், பொருளாதார, மற்றும் இராணுவச் செயற்பாடுகளை ஒரு குடையின் கீழ் இணைந்துச் செயற்படுத்தும் உத்திகளையே கையாண்டு வருகின்றன.   இதே உத்தியைத்தான் மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிரான ரசிய – சீன கூட்டும் வகுத்துள்ளது. ஆனால் இந்தியா விரும்புவதுபோன்று தமது வசதிக்கு ஏற்ப இரண்டு வகையான சர்வதேசக் கொள்கைகளை வகுக்க ரசிய - சீனக் கூட்டு தயாராக இல்லை. 

அத்துடன் பிறிக்ஸில் மேலும் பல நாடுகளை இணைக்கும் திட்டங்களும் சீன, ரசியாவிடம் உண்டு. ஆகவே ஆபிரிக்க நாடுகள் ரசியாவுடன் இணையவுள்ள சூழலில் அமெரிக்க ஐரோப்பிய எதிர்ப்பு வலுக்கும் நிலையும் அதிகரித்து வருகின்றது. அதேநேரம் அமெரிக்காவும் ஆபிரிக்க நாடுகளைத் தொடர்ந்து தனது பிடியில் வைத்திருக்கக் கடும் முயற்சி செய்கிறது. 

மேற்கு ஆபிரிக்க நாடுகள், அமெரிக்கா பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளுக்கு எதிராக ரசியாவுடன் கூட்டுச் சேரவுள்ளதொரு பின்னணியிலேதான், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மெனுவல் மைக்ரோன் தென் பசுபிக் பிராந்தியத்துக்கான பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பும் வழியில் இலங்கைக்கு வருகை தந்திருக்கிறார்

அதாவது உக்ரெய்னில் நடந்து கொண்டிருக்கும் அமெரிக்க - ரசிய போர் கடந்த வாரத்தில் இருந்து மேற்கு ஆபிரிக்க நாடுகளுக்கு மாறிக் கொண்டிருப்பதாகக் கருதலாம்.  

இப் பின்புலத்திலேதான், பிறிக்ஸ் கூட்டமைப்புக்குள் இருந்து இந்தியாவை வெளியில் எடுத்துத் தம்முடன் இணைக்க மேற்கு மற்றும் ஐரோப்பிய ஊடகங்கள் முனைப்புக் காட்டுகின்றன.

மோடி, பிறிக்ஸ் மாநாட்டில் பங்குகொள்ளமாட்டார் என்றும் பிறிக்ஸில் சீன - இந்திய முரண்பாடுகள் வலுப்பதாகவும் மேற்கு ஊடகங்கள் தொடர்ச்சியாக விமர்சிப்பதன் மூலம்  இதனைப் புரிந்துகொள்ள முடியும்.

அதேநேரம் மேற்கு ஆபிரிக்க நாடுகள், அமெரிக்கா பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளுக்கு எதிராக ரசியாவுடன் கூட்டுச் சேரவுள்ளதொரு பின்னணியிலேதான், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மெனுவல் மைக்ரோன் தென் பசுபிக் பிராந்தியத்துக்கான பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பும் வழியில் சென்ற யூலை 28 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்திருக்கிறார்.

பொருளாதார மீட்சிக்கான ஆதரவு, கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட பல அபிவிருத்தி உதவிகள் பற்றி ஜனாதிபதி ரணிலிடம் மைக்ரேன் கொழும்பில் நின்ற சில மணிநேரங்களுக்குள் உறுதி வழங்கியுள்ளார்.

ஆனால் ஆபிரிக்க நாடுகள் எதிர்கொண்ட பட்டறிவுகளை இலங்கை கற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் பிறிக்ஸ் உள்ளிட்ட சர்வதேசக் கூட்டுப் பற்றிய இந்திய நிலைப்பாடு எதுவென்று புரியாத நிலையில், அமெரிக்க - சீன உறவை அதுவும் சீனாவுடனான பொருளாதார உறவுகளைப் பேணுவதன் ஊடாகச் சமநிலையில் இருப்பதாக இலங்கை உணரலாம். இந்தியாவைத் திருப்திப்படுத்துவதாகவும் நம்பலாம்.

ஆனால் வருமானத்தை அதிகரிக்க இலங்கையின் ஏற்றுமதிப் பொருளாதாரத்திற்குரிய பொறிமுறை ஒன்றை மேற்கொள்ளாமல், வெறுமனே சர்வதேசக் கடன் உதவிகளை மாத்திரம் நம்பிக் கொண்டிருக்க முடியாது. 

இவ்வாறு கடன் பெறும் வழமை நீடித்தால், ஆபிரிக்க நாடுகளில் எலும்பும் தோலுமாய் இருக்கும் குழந்தைகளையும் சிறிய ஓட்டைக் குடிசைகளையும் இலங்கைத்தீவிலும் எதிர்காலத்தில் காணக்கூடிய ஆபத்துகள் வரலாம்.

ஆபிரிக்க நாடுகளில், இராணுவம் ஆட்சியாளர்களைக் கைது செய்து வீட்டுக்காவலில் வைத்திருப்பது போன்றதொரு கிளர்ச்சி, சிறிய தீவான இலங்கையில் ஏற்படக்கூடிய வாய்ப்புகளும் இல்லாமலில்லை. அப்படி ஒரு நிலைமை உருவாகினாலும் அது இந்திய அல்லது சீன ஆதிக்கத்துக்கும் போட்டிக்கும் இடமளிக்குமே தவிர, மக்களின் நலன் சார்ந்ததாக இருக்காது.   இந்த இடத்திலேதான் எண்பது வருட இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வும் தமிழ் மக்களை உள்ளடக்கிய பொருளாதாரத் திட்டங்களையும் வகுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தைச் சமகால உலக அரசியல் சூழல் சிங்கள ஆட்சியாளர்களுக்கு உணர்த்தியிருக்கின்றது.

ஈழத்தமிழ்த்தரப்பு எத்தகைய பொறிமுறைகளை வகுக்க வேண்டும் என்பது குறித்து இப் பத்தியில் ஏற்கனவே விபரிக்கப்பட்டுள்ளது.