2005 ஆம் ஆண்டு முதல், அமெரிக்க - இந்தியா கூட்டு, விரைவான வேகத்தில் வளர்ந்தது. ஆனால் இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் மற்றும் ஒரு கட்சி ஜனநாயகத்தின் சாதனைகளைப் பார்க்கும்போது, இந்தியாவின் ஜனநாயக விரோதப் போக்குகளை அமெரிக்க - இந்திய அரசுகளின் பகிரப்பட்ட மதிப்புகளாக வகைப்படுத்துவதன் மூலம் அமெரிக்கா தனது ஜனநாயக உருவத்தை இந்தியாவுடன் சமரசம் செய்திருக்கிறது என்றே பொருள் கொள்ள முடியும்.
டொனால்ட் ட்ரம்ப், மோடிக்கு வழங்கிய முக்கியத்துவம் ஜோ பைடன் ஆட்சியில் மாற்றமடையும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அமெரிக்கா மோடியின் ஜனநாயக விரோதங்களை ஒரு பக்கத்தில் வைத்துக் கொண்டு இந்தியாவுடன் தொடர்ந்தும் சமரசம் செய்திருக்கிறது.
இப் பின்புலத்திலேயே கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை அவதானிக்க முடியும். தாக்குதலுக்கு இந்தியா காரணம் என்று கனடா பிரதமர் நேரடியாகக் குற்றம் சுமத்தியிருந்தாலும் அதனை இந்தியா மறுத்திருக்கிறது. ஆனால் பின்னணியில் இந்தியாதான் என்று கனடா நம்புகிறது.
அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இது தெரியாததல்ல.
இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்கா கனடாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருந்தாலும் இந்தியாவை நேரடியாகப் பகைத்துக்கொள்ளும் நிலையில் இல்லை என்பதை அமெரிக்க ஊடகங்கள் வெளிப்படுத்துகின்றன.
அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் தம்மை மனித உரிமைகளின் பாதுகாவலர்கள் என்று மார் தட்டுகின்றன. அதற்காகத் தெற்காசியா உள்ளிட்ட ஏனைய நாடுகளைத் தினமும் கிண்டலாகவும் விமர்சிக்கின்றன.
ஆனால் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று கூறப்படும் இந்தியாவில் மோடியின் மனித உரிமை மீறல் செயற்பாடுகளைக் கண்டுகொள்ளாமல் அமெரிக்கா, இந்தியாவைப் பாராட்டுவதாக சீனாவின் குளோபல்ரைம்ஸ் (globaltimes) ஆங்கிலச் செய்தி இணையத் தளம் குற்றம் சுமத்தியுள்ளது.
புவிசார் அரசியல் - பொருளாதார நலன்கள் மற்றும் சீனாவுக்கு எதிரான நிகழ்ச்சி நிரலில் இந்தியாவையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற விரும்பத்தினால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குநாடுகள் இந்தியாவைப் பாராட்டும் நிலைக்குத் தூண்டப்படுவதாகவும் குளோபல் டைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
'மத சுதந்திரத்தின் கடுமையான மீறல்களுக்காக' பிரதமர் நரேந்திரமோடிக்கு ஒருமுறை அமெரிக்கா விசா வழங்க மறுத்திருந்தது. 2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான படுகொலைகளைக் கண்டித்து அமெரிக்கா மோடி மீது அப்போது கடும் விமர்சனத்தையும் முன்வைத்திருந்தது. ஆனால் தற்போது அமெரிக்கா மோடியை அரவணைக்கிறது.
2002 இல் இருந்து இன்றுவரை மோடியின் செயற்பாடுகளை நோக்கினால் மோடி அரசாங்கம் மத மற்றும் இன ரீதியில் சிறுபான்மையினரைக் குறிவைத்துக் கடுமையான சட்டங்களை இயற்றியுள்ளது. அச் சட்டங்கள் மூலம் சிவில் சமூகக் குழுக்களின் மீதான பிடியையும் மோடி அரசாங்கம் இறுக்கி வருகின்றது.
பேச்சு சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் மற்றும் இணைய முடக்கங்களைம் மோடி அரசு திணித்ததுள்ளது. குறிப்பாக ஊடகங்கள் மீதான கட்டுப்பாடுகள் மேலோங்கியிருப்பதாக ஜியோபொலிற்றிகல்nமொனிற்றர் (geopoliticalmonitor) என்ற ஆய்வுத்தளம் குற்றம் சுமத்துகிறது.
மோடியை அமெரிக்கா அனைத்துக்கொண்ட முறை என்பது அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் உள்ள பாசங்குத் தன்மையின் வெளிப்பாடு எனவும் அந்த ஆய்வுத்தளம் ஆதாரங்களோடு சுட்டிக்காட்டுகிறது.
அமெரிக்க அரவணைப்பு அல்லது இந்தியாவின் இரட்டைத் தன்மை கொண்ட வெளியுறவுக் கொள்கையை விரும்பியோ விரும்பாமலோ மேற்கு நாடுகள் குறிப்பாக அமெரிக்கா ஏற்றுக்கொள்கிறது என்ற காரண காரியங்களினால் இந்தியா உலக அரங்கிற்கு உயர்ந்து வரும் நிலையில் இருப்பது போன்ற தோற்றப்பாடு தென்படுகிறது.
ஆனால் இந்தியாவில் மிகச் சமீபகாலமாக நடந்து வரும் வகுப்புவாத வன்முறைகள், பாரபட்சமான நடைமுறைகள், மதமாற்றச் சட்டங்கள் மற்றும் துன்புறுத்தல்களால் இந்தியாவின் ஜனநாயக அந்தஸ்து குறைமதிப்பிற்கு உட்பட்டுள்ளது என்றே கூறலாம்.
ஜயோபொலிற்றிகல்மிரர் ஆய்வுத் தளத்தின் தகவல்களின் பிரகாரம் 2016 மற்றும் 2020 இற்கு இடையில் இந்தியாவில் வகுப்புவாதச் செயற்பாடுகளினால் ஐம்பதுக்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை சமீபத்திய காலத்தில் குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளதாகவும் அந்த ஆய்வுத்தளம் ஆதாரங்களை முன்வைக்கிறது.
சர்ச்சைக்குரிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவது, இந்தியாவில் மத சுதந்திரம் மற்றும் பன்மைத்துவம் குறித்த சூடான விவாதங்களையும் மேலும் தூண்டியுமுள்ளது.
2015 ஆம் ஆண்டு முதல், இந்தியாவில் ஜனநாயக நெறிமுறைகள் கணிசமான அளவு மோசமடைந்துள்ளன. அதன் ஜனநாயக மதிப்பெண் 2014 இல் 7.92 என்ற உச்சத்தில் இருந்து 2020 இல் 6.61 ஆக குறைந்துள்ளதாகவும் ஜியோபொலிற்றிக்கல்மிரர் தளம் சுட்டிக்காட்டியுள்ளது.
உலகளாவிய தரவரிசையில் 27 வது இடத்திலிருந்து 53 வது இடத்திற்கு இந்தியாவின் ஜனநாயகச் செயற்பாடுகள் வீழ்ச்சியடைய வழிவகுத்ததுள்ளன. இந்தச் சரிவுக்கு மோடியின் தலைமையிலான அரசாங்கமே காரணம் என்றும் அந்த ஆய்வுத் தளம் கூறுகிறது.
அப்படிப் பார்த்தால் இந்தியாவை 'ஜனநாயகத்தின் தாய்' என்று மோடியின் அரசாங்கத்தில் கூறக்கூடிய நம்பகத்தன்மை இருப்பதாகத் தெரியவில்லை. மோடியின், பிரதமர் அலுவலகம் மற்றும் தனிப்பட்ட பிரபலத்தை மத மற்றும் இன வெறுப்பை பரப்புவதற்கு பயன்படுத்தியதாகக் கூறப்படுவதாக செய்டா சபா பட்டூல் (Syeda Saba Batool) என்ற அரசியல் ஆய்வாளர் ஜியோபொலிற்றிகல்மொனிற்றர் என்ற ஆய்வுத் தளத்தில் எழுதிய கட்டுரையில் விபரிக்கிறார்.
இந்தியாவை இந்து நாடாக மாற்ற மோடி முற்படுகிறார். இது இந்துக்கள் அல்லாதவர்களைத் துன்புறுத்துவதற்கும், மீறுவதற்கும் வழிவகுக்கும். அவர்களின் மனித உரிமைகள். இந்துத்துவா சித்தாந்தத்தின் மேலாதிக்க வடிவமைப்பு தெற்காசியாவின் பிராந்திய பாதுகாப்பை எவ்வாறு சீர்குலைக்கிறது என்பதையும் காட்டுகிறது.
தற்போதைய இந்திய ஆட்சியின் ஜனநாயக விரோத நற்சான்றிதழ்கள், ஜனநாயக நெறிமுறைகளில் மோடியின் அர்ப்பணிப்பு இல்லாததற்கு போதுமான சான்றாகவே உள்ளது.
ஆனாலும் மோடியின் தொடர்ச்சியான ஜனநாயக மீறல் செயற்பாடுகளின் பின்னணியோடுதான் கனடா தற்போது இந்தியாவுடன் முரண்படுவதாகக் கூற முடியாது.
இருந்தாலும் காலிஸ்தான் தீவிரவாதத் தலைவர் கொலை செய்யப்பட்டமைக்கு இந்தியா காரணம் என்ற கனடா பிரதமர் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகளுக்குப் பின்னர் கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் தடம் புரண்டுள்ளன என்பது உண்மை.
இச் சூழலில் மேற்குலக நாடுகளுக்குச் சவால்விட சீனாவுக்கு இதுவொரு நல்ல வாய்ப்பு என்று கருதலாம். கனடா - இந்தியா சர்ச்சையைச் சீனா தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளக்கூடும் என்று கனேடிய ஊடகங்கள் எதிர்வு கூறுகின்றன.
இந்தியச் செயற்பாட்டுக்கு எதிரான தனது நடவடிக்கைகளுக்குக் கனடா சர்வதேச ஆதரவைத் திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்று அமெரிக்காவும் அவுஸ்திரேலியாவும் புதுடில்லியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.
கனேடிய செய்தி இணையதளமான டொராண்டோ ஸ்டாரில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், வில்லனோவா பல்கலைக்கழகத்தின் சார்லஸ் விகர் சட்டக் கல்லூரியின் சர்வதேசச் சட்டத்தின் உதவிப் பேராசிரியரான பிரஸ்டன் ஜோர்டன் லிம், இந்தச் சர்ச்சை மீது சீனா எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை விபரிக்கிறார்.
கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே அதிகரித்து வரும் முரண்பாட்டினால் மேற்கத்திய நாடுகளிடையே குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. ஏனெனில் சீனாவுக்கு எதிரான ஒற்றுமையை அது குறைத்துவிடும் என்று ஜோர்டன் லிம் விமர்சிக்கிறார்.
அமெரிக்கத் தலைமையை மையமாகக் கொண்டு பேசப்படும் பிராந்திய பாதுகாப்பில், இந்தியாவின் பலவீனமான நிலை காரணமாக சீனாவுக்கு பலன் கிடைக்கும் என்றும் அவர் நம்புகிறார்.
இந்தியாவுக்கு எதிராகக் கனடா உறுதியான ஆதாரங்களை வழங்கினால் அது வெளிநாட்டுத் தலையீட்டை ஒரு புதிய நிலைக்குக் கொண்டு செல்லும் என்று பிரஸ்டன் ஜோர்டன் லிம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தோ பசிபிக் விவகாரத்தில், சீனாவும் கனடாவும் எதிரும் புதிருமாக உள்ளன. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவைப் போலவே, கனடாவும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவை ஒரு முக்கிய சக்தியாக நோக்குகிறது.
இந்தோ-பசிபிக் தந்திரோபாயத்தில், 'சீனா ஸ்திரமின்மையை ஏற்படுத்தும் உலக சக்தியாக உள்ளது' என்று ஏற்கனவே கனடா கூறியுள்ளது. ஆகவே சீனாவை எதிர்கொள்ளத் தன் நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்படுவதே கனடாவின் சமகால உத்தியாக இருக்கின்றது.
இந்த உத்தியில் இந்தியாவைத் தனது இயல்பான கூட்டாளியாகக் கனடா கருதுகிறது. ஆனால் காலிஸ்தான் தீவிரவாதத் தலைவரின் கொலைச் சர்ச்சைக்குப் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் தூரம் கனடாவின் இந்த வியூகத்தைப் பலவீனப்படுத்தும்.
சீனாவை எதிர்கொள்வதற்காகக் கட்டமைக்கப்பட்ட ஒற்றுமைக்கு அது ஆபத்தையும் ஏற்படுத்தலாம்.
இப் பின்னணியில் கனடா - இந்திய மோதல் விவகாரத்தில் ஈழத்தமிழர்கள் ஒரு விடயத்தை கவனத்தில் எடுப்பது நல்லது.
அதாவது காலிஸ்தான் தீவிரவாதிகளுக்காகக் கனடா குரல் கொடுப்பதாக நம்பக்கூடாது. தனது நாட்டுக்குள் இந்திய உளவுத்துறை ஊடுவியுள்ளது என்பதே கனடாவுக்குள்ள பிரச்சினை
தமது புவிசார் அரசியல் பொருளாதார நோக்கில் இந்தியா போன்ற நாடுகளின் உள்ளக ஜனநாயக மீறல்களைக் கண்டுகொள்ளாமல் இருந்த அமொிக்கா கனடா போன்ற மேற்கு நாடுகள், வேறு நாடுகளுக்குள் அத்துமீறி தமது நாடுகளுக்கு எதிரான தீவிரவாதிகளைச் சுட்டுக் கொண்டனர் என்பதற்கு ஆதாரங்கள் இல்லாமலில்லை.
ஆகவே ஒன்றை ஒன்று உதாரணமாக வைத்துக் கொண்டு தமது நலனுக்காக மாத்திரம் இந்த வல்லாதிக்க நாடுகள் ஒன்றில் ஒன்றாகத் தங்கி வாழும் அரசியல் பொருளாதார செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதையே ஈழத்தமிழர்கள் நன்கு கருத்தில் எடுக்க வேண்டும்.
கனடாவுக்குள் புகுந்து காலிஸ்தான் தலைவரை இந்தியா கொலை செய்தமைபோன்று, புலம்பெயா் நாடுகளில் ஜனநாயக வழியில் தற்போது செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஈழத்தமிழ்ப் பிரதிநிதிகள் மீது இலங்கை குறிவைத்தால் கனடா போன்ற நாடுகள் குரல் கொடுக்குமா என்பது கேள்வியே.
ஏனெனில் இலங்கைதான் நேரடியாக ஈடுபட்டது என்று தொிந்தாலும் அதன் பின்னால் நிச்சயம் இந்தியா இருந்திருக்கும். அல்லது இந்தியாவுக்கு அப்படியொரு சம்பவம் நடந்தமை தெரிந்திருக்கும்.
இதன் காரணமாக ஈழத்தமிழர்களுக்காக இந்தியாவுடன் முரண்பட கனடா உள்ளிட்ட மேற்கு ஐரோப்பிய நாடுகள் முன்வரக்கூடிய வாய்ப்புகள் இல்லை என்பதே பட்டவர்த்தனம். 2009 இற்கு முன்னரும் அதற்குப் பின்னரான சூழலிலும் இதுதான் நடக்கிறது. நடந்து கொண்டுமிருக்கிறது.
மோடியின் ஜனநாயக மீறல் இந்துத்துவாச் செயற்பாடுகளைக் கண்டிக்காமல் இந்தியாவுடன் அமெரிக்கா சமரசம் செய்வதுபோன்று, வடக்குக் கிழக்கில் பௌத்தமயமாக்கல் உள்ளிட்ட தமிழர்களுக்கு எதிரான சிங்கள ஆட்சியாளர்களின் அத்தனை அநீதிகளையும் அமெரிக்கா போன்ற உலக நாடுகள் கண்டுகொள்ளாமல் இலங்கையுடன் தொடர்ந்தும் உறவை பேணுகின்றன.
ஆகவே ஒவ்வொரு தமிழ்த்தேசியக் கட்சிகளும் தத்தமது தேர்தல் அரசியல் செயற்பாடுகளுக்கு அப்பால் ஒரு தேசமாகச் சிந்தித்து ஒருமித்த குரலில் அரசியல் விடுதலைக் கோரிக்கையை முன் நிறுத்தினாலேதவிர, எந்த ஒரு வல்லாதிக்க நாடும் "இலங்கை அரசு" என்ற கட்டமைப்பை மாத்திரமே பலப்படுத்தும்.
இதற்குப் பல உதரணங்கள் உண்டு என்பதைத் தமிழ்த் தேசியக் கட்சிப் பிரதிநிதிகள் அறியாதவர்கள் அல்ல.