தமிழர்களின் கருத்துச் சுதந்திரத்தை நசுக்கிக் கொண்டிருக்கும் இலங்கை ஒற்றையாட்சி அரசின்

இணையப் பாதுகாப்பு விதிகளும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைபும் இன ஒடுக்கலுக்கு மேலும் வழி வகுக்கும்

தம் மீதான விமர்சனங்களைத் தடுக்கும் நோக்கில் அமைதிகாக்கும் தமிழ்த்தேசியக் கட்சிகள்
பதிப்பு: 2023 ஒக். 02 05:24
புலம்: முல்லைத்தீவு
புதுப்பிப்பு: ஒக். 02 21:20
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
இணையங்கள் ஊடாக ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்ப்பதாகக் கூறிக் கொண்டு அரசாங்கம் வர்த்தமானியில் வெளியிட்டுள்ள இணையவழிப் பாதுகாப்பு எனப்படும் "நிகழ் நிலைக்காப்புச் சட்ட வரைபு" (Online Safety Bill ) அரசியல் - பொருளாதார நோக்கில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற கருத்துக்கள் வலுப் பெற்றுள்ளன. இந்த வரைபு நடைமுறைக்கு வந்தால் விசேடமாக ஊடகத்துறை உள்ளிட்ட பேச்சுச் சுதந்திரம் மற்றும் கருத்துடைய பலரையும் கடுமையாக ஒடுக்கும் என்றே பொருள்கொள்ள முடியும். குறிப்பாகத் தமிழ் இன ஒடுக்கலுக்கு இந்த வரைபுகள் புதிய வியூகங்களில் வழி வகுக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.
 
நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு மாற்றாக உருவாக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் பற்றிய நகல் வரைபும், நிகழ் நிலைக்காப்புச் சட்டம் பற்றிய வரைபும் ஒரே நேரத்தில் வாத்தமானியில் வெளியிடப்பட்டுள்ளமைதான் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது

ஆனால் இணையவழிப் பாதுகாப்பு என்ற பெயரில் அதன் உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்துவதையும், இணையப் பயனாளிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதையும் இலக்காகக் கொண்டு இச் சட்ட வரைபைத் தயாரித்துள்ளதாக இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கம் நியாயப்படுத்துகின்றது.

இருந்தாலும் கருத்துச் சுதந்திரத்தின் மீதான அதன் சாத்தியமான தாக்கம் மற்றும் அரசாங்கம் மற்றும் அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் பற்றிய தணிக்கையின் ஆபத்துகள் தொடர்பான விவாதத்தையும் இந்த நகல் சட்ட வரைபு தோற்றுவித்துள்ளமை பட்டவர்த்தனம்.

நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு (Prevention of Terrorism Act -PTA) மாற்றாக உருவாக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (Anti-Terrorism Act - ATA) பற்றிய நகல் வரைபும், நிகழ் நிலைக்காப்புச் சட்டம் பற்றிய வரைபும் ஒரே நேரத்தில் வாத்தமானியில் வெளியிடப்பட்டுள்ளமைதான் இங்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மாதம் 15, 18 ஆம் திகதிகளில் குறித்த இரண்டு வரைபுகளும் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதைக் கண்டித்துள்ள இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம், அரசாங்கம் உடனடியாக இதனை விலக்கிக்கொள்ள வேண்டும் என்றும் கடும் தொனியில் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழ் - முஸ்லிம் மக்கள் எவ்வாறான பாதிப்புகளை எதிர்கொள்வர் என்றும் கடந்த முப்பது வருடப் போரில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தினால் தமிழர்கள் எதிர்கொண்ட விளைவுகள் பற்றியும் இந்த இரண்டு வரைபுகளையும் எதிர்ப்போர் கவனத்தில் எடுத்துப் பரிசீலிக்க வேண்டும்.

தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மேற்படி இரண்டு நகல் சட்ட வரைபுகளுக்கும் இடையே பாரிய வேறுபாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை.

1981 இல் யாழ் பொதுநூலகம், ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம் ஆகியவை எரிக்கப்பட்ட நாளில் இருந்து கருத்துச் சுதந்திரம் இலங்கைத்தீவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியே வருகின்றது.

இருந்தாலும் 2023 செப்ரெம்பரில் முன்மொழியப்பட்டுள்ள நிகழ் நிலைக்காப்புச் சட்டம் பற்றிய வரைபு கருத்துச் சுதந்திரத்திற்கும் மாற்றுக் கருத்துக்களை முன்வைப்போரையும் சமகால அரசியல் நோ்ககில் நேரடியாகக் குறிவைத்துள்ளது.

இதன் விதிகள் பின்வருமாறு

1) இணையப் பாதுகாப்புக்கான நிகழ் நிலைக்காப்புச் சட்டத்தின் செயலாக்கத்தை மேற்பார்வையிடவும் அதன் தீங்குகள் பற்றிய முறைப்பாடுகளை விசாரணை செய்யவும் ஐந்துபேரைக் கொண்ட இணையப் பாதுகாப்பு ஆணைக்குழு (Online Safety Commission) ஒன்றை நியமித்தல்.

2) முறைப்பாடுகளின் அடிப்படையில் இணைய சேவை வழங்குநர்கள் (Internet Service Providers - ISPs) தங்கள் தளங்களில் இருந்து தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தை அகற்றுதல்.

3) இணையத்தளச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தவும் நிறுத்தவும் அதற்குரிய அறிவுறுத்தல்களை இணையச் சேவை வழங்குநர்களுக்கு (ISPs) உத்தரவிடவும் இணையப் பாதுகாப்பு ஆணைக் குழுவுக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.

4) குறித்த விதிகளுக்குக் கட்டுப்படாத இணைய சேவை வழங்குநர்கள் (ISPs) மற்றும் சமூக ஊடக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கும் அதிகாரம் இந்த ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆகவே இந்த நான்கு விதிகளும் கருத்துச் சுதந்திரத்துக்குக் குறிப்பாக ஊடகச் செயற்பாடுகளுக்கு ஆபத்து என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஆணைக்குழுவின் தீர்ப்புக்கு எதிராகவோ அல்லது அறிவுறுத்தல்களுக்கு (Instructions) எதிராகவோ இணைய சேவை வழங்குநகர்கள் மற்றும் பயனாளிகள் எவருமே நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க முடியாது.

தீங்கிழைக்கப்பட்டுள்ளதாகக் கிடைக்கபெறும் முறைப்பாடுகளை ஆராயும் சரியான வழிமுறைகள் பற்றிய விடயங்கள் நகல் வரைபின் உள்ளடக்கத்தில் தெளிவாக விபரிக்கப்படவில்லை.

ஆகவே இது முறையான மற்றும் தீங்கு விளைவிக்காத ஊடகச் செயற்பாடுகளுக்கும், தீங்கு விளைவிக்காத சமூகவலைத்தள கருத்துச் சுதந்திரத்தையும் இது தணிக்கை (Censorship) செய்யும் என்ற அச்சம் உண்டு.

இணையப் பாதுகாப்பு ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள கூடுதலான அதிகாரம் இந்த நகல் வரைபில் தெளிவாகக் காணப்படுகின்றது. இது சாத்தியமான தவறான பயன்பாடு மற்றும் எதிர்ப்பை அடக்குதல் பற்றிய கவலைகளை ஊடக மற்றும் சமூகவலைத்தளச் செயற்பாட்டாளர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மத்தியில் தோற்றுவித்துள்ளது.

1981 இல் யாழ் பொதுநூலகம், ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம் ஆகியவை எரிக்கப்பட்ட நாளில் இருந்து கருத்துச் சுதந்திரம் இலங்கைத்தீவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியே வருகின்றது. 2023 செப்ரெம்பரில் முன்மொழியப்பட்டுள்ள நிகழ் நிலைக்காப்புச் சட்டம் வரைபு கருத்துச் சுதந்திரத்திற்கும் மாற்றுக் கருத்துக்களை முன்வைப்போரையும் சமகால அரசியல் நோ்ககில் நேரடியாகக் குறிவைத்துள்ளது

ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்படவுள்ள ஐந்து உறுப்பினர்களும் நேரடியாக ஜனாதிபதியின் தெரிவாக இருப்பதால், நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களை இந்த வரைபு மேலும் விரிவுபடுத்தப்படுவதை ஆதரிக்கிறது என்றும் பொருள் கொள்ள முடியும்.

ஆகவே இணையச் செயற்பாடுகள் பற்றிய ஆணைக்குழுவின் இறுதி முடிவு ஜனாதிபதிக்கும் அவருடைய அரசாங்கத்துக்கும் அரசியல்வாதிகளுக்கும் பாதுகாப்பாக இருக்கும் என்பதில் ஐயமேயில்லை.

வரைபின் சில உட்பிரிவில் இன - மத வெறுப்புப் பேச்சைத் தவிர்த்தல் என்ற போர்வையில் பௌத்த குருமாரின் அத்துமீறல் செயற்பாடுகளுக்கு மறைமுகமாக இடமளிக்கப்பட்டுள்ளது.

வடக்குக் கிழக்கு உள்ளிட்ட இருபத்து இரண்டு மில்லியன் இலங்கைத்தீவு மக்களுக்கு எது உண்மை எது பொய் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரங்களை ஆணைக்குழு தன்னிச்சையாகக் கொண்டிருக்கிறது. இந்த ஆணைக்குழுவில் தமிழ்ப் பிரதிநிதிகள் அங்கம் வகிப்பரா இல்லையா என்பதும் சந்தேகமே.

அதேவேளை வரைபில் பதினான்கு குற்றங்களின் பட்டியலில் சிறுவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்களை இணையத்தின் மூலம் துஸ்பிரயோகம் செய்யும் தீங்கான செயற்பாடுகளில் இருந்து பாதுகாக்கும் ஏற்பாடுகளும் உண்டு.

குறிப்பாக இணையவழி மோசடிகள் மூலம் ஏமாற்றுதல் மற்றும் பழிவாங்கும் ஆபாசப் படங்களையும் வீடியோ காட்சிகளையும் வெளியிட முடியாது.

ஆனால் சிறுவர்கள், பெண்கள் பற்றிய இணையப் பாதுகாப்பு விதிகள் ஏற்கனவே உள்ள சட்டங்களில் உண்டு. நிகழ் நிலைக்காப்புச் சட்டத்தின் மூலம் அவற்றை மீளவும் கொண்டுவர வேண்டிய அவசியம் இல்லை என்று இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் தெளிவாகக் சுட்டிக்காட்டியிருக்கிறது.

சுதந்திர ஊடக இயக்கமும் இது பற்றிக் கூறியுள்ளதுடன் சிறுவர்கள், பெண்களைப் பாதுகாப்பது என்ற சமூக உணர்வுகளை மக்களிடம் ஊட்டி அதன் மூலம் கருத்துச் சுதந்திரங்களையும் ஊடகச் செயற்பாடுகளையும் தமது விருப்பங்களுக்கு ஏற்ப மாற்றுவதே அரசாங்கத்தின் பிரதான இலக்கு என்று குற்றம் சுமத்தியுள்ளது.

மக்களைப் பாதுகாப்பதாகக் கூறிக் கொண்டு பொய்களை எதிர்க்கும் பெயரில் இருபத்து மூன்று முறை ”பொய்கள்” என்ற வார்த்தை நகல் வரைபில் காணப்படுகிறது.

ஆனால் ”பொய்கள்“ அதனைத் தவிர்த்தல் என்ற பகுதி தெளிவில்லை. அதாவது அரசியல் விவகாரம் சார்ந்து ஒருவர் உண்மையை அல்லது நேர்மையாக விமர்சனம் செய்தால், முறைப்பாடுகளின் அடிப்படையில் அந்த விமர்சனத்தைப்'பொய்' என்று வரைவிலக்கணம் கொடுத்து அதனை எழுதிய நபருக்கு ஆணைக்குழு தண்டனை வழங்க முடியும்.

இது நியாயமான அரசியல் விமர்சனம் உள்ளிட்ட மாற்றுக் கருத்துகளைத் திட்டமிட்டு அடக்குவதற்கு, சட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயன்பாட்டின் அபாயத்தைப் பகிரங்கமாக வெளிப்படுத்துகிறது.

இது சட்டமாக நிறைவேற்றப்பட்டால், கொடுக்கப்பட்ட தகவல் உண்மையா அல்லது பொய்யா என்பதைத் தீர்மானிப்பது ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஐந்து நபர்களைக் கொண்ட இணையப் பாதுகாப்பு ஆணைக்குழுவுக்குரிய அதிகாரமாகிறது.

சில சமயங்களில் மஜிஸ்ரேட் நீதிமன்றத்துக்கும் அதாவது நீதவான் நீதிமன்றத்துக்கும் பாரப்படுத்தக்கூடிய சில ஏற்பாடுகள் வரைபில் உண்டு.

ஆகவே இது இலங்கை அரசியல் யாப்பில் அடிப்படை உரிமையாக உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ள கருத்துச் சுதந்திரத்தைக் கடுமையாகக் குறை மதிப்பிற்கு உட்படுத்தும் என்பதில் சந்தேகமேயில்லை.

அதேவேளை இணையவழிப் பொருளாதார செயல்முறைகள் பாதிக்கப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா தமோனிங்.எல்கே (themorning.lk) என்ற ஆங்கில செய்திச் சேவையிடம் சுட்டிக்காட்டுகிறார்.

உண்மை எது, பொய் எது என்பதை இணையப் பாதுகாப்பு ஆணைக்குழு மாத்திரமே தீர்மானிக்கும் உரிiமையைக் கொண்டுள்ளது என்றால், இலங்கையில் இயங்கும் கூகுள் வரைபட (Google Maps) நிறுவன செயற்பாட்டாளர்கள் வெளியேறும் ஆபத்துக்கள் நேரிடும் என்று அவர் எச்சரிக்கிறார்.

இலங்கைத்தீவு கூகுள் பயன்பாட்டு விடயத்தில் ஒரு சிறிய சந்தைதான். ஆனாலும் அனைத்துப் புதிய சேவைகளும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டவை.

ஊடகம், சமூகவலைத்தளம் போன்றவற்றை இணையவழிப் பாதுகாப்பு என்ற போர்வையில் இச் சட்டம் எவ்வாறு கட்டுப்படுத்தும் என்பது தொடர்பாகப் பிரதான எதிர்க்கட்சிகள் மற்றும் ஜே.வி.பி போன்ற சிறிய சிங்களக் கட்சிகள் உருப்படியாகக் கருத்து தெரிவிக்கவில்லை. பகிரங்க எதிர்ப்பும் வெளியிடவில்லை

இதனால் கூகுள் செயற்பாட்டு வரைபடங்கள் இல்லாமல் பொருளாதாரம் எப்படி முன்னேற முடியும் என்று கேள்வி எழுப்பிய ஹர்ஷா டி சில்வா, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஐந்து நபர்களைக் கொண்ட ஆணைக் குழுவினால் கூகுள் ரீதியான பொருளாதார மைய இயங்கு தளங்களை கட்டுப்படுத்த முற்படுவது முட்டாள்தனம் என்றும் கூறியுள்ளார்.

இருந்தாலும் ஊடகம், சமூகவலைத்தளம் போன்றவற்றை இணையவழிப் பாதுகாப்பு என்ற போர்வையில் இச் சட்டம் எவ்வாறு கட்டுப்படுத்தும் என்பது தொடர்பாகப் பிரதான எதிர்க்கட்சிகள் மற்றும் ஜே.வி.பி போன்ற சிறிய சிங்களக் கட்சிகள் உருப்படியாகக் கருத்து தெரிவிக்கவில்லை. பகிரங்க எதிர்ப்பும் வெளியிடவில்லை என்பதுதான் கவலைக்குரியது.

இந்த நகல் வரைபுக்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்புத் தெரிவிப்பது போன்று காண்பித்துவிட்டுப் பின்னர் வாக்கெடுப்பின்போது வெளியேறக்கூடிய நிலைப்பாடு பிரதான எதிர்க்கட்சிகளிடம் இருப்பதை அவதானிக்க முடிகிறது.

ஏனெனில் நாளை ஆளும் கட்சியாக வந்தால் அல்லது ஆளும் கட்சிக்கு ஒத்துழைத்தால் இச் சட்டமூலம் தங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்ற கருத்து அவர்களிடம் உண்டு.

ஜே.வி.பி போன்ற சிறிய சிங்களக் கட்சிகள் மற்றும் தமிழ்த்தேசியக் கட்சிகள் மீதும் சமூகவலைத் தளங்களில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதால், அவர்களும் இச் சட்டமூல நகல் வரைபு தங்களுக்குப் பாதுகாப்பு என்று நம்பி அமைதியாக இருக்கின்றனர் போல் தெரிகின்றது.

ஆக ஊடகவியலாளர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் சமூகவலைத்தளச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் இருந்தே எதிர்ப்புகள் அதிகரித்துள்ளன.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைபில் நிகழ் நிலைக்காப்புச் சட்ட வரைபை இணைக்கும் நோக்கம் ரணில் விக்கிரமசிங்கவிடம் இல்லாமலில்லை.