தமிழக மக்களின் அமைதிவழி எழுச்சியை அடக்கும் நோக்கில்

இந்திய ஒன்றிய அரசு தமிழ் நாட்டில் காவல்துறை வன்முறைக் கலாச்சாரத்தை தூண்டிவிடுகிறதா?

தமிழக காவல்துறை - சமூக, சட்ட ரீதியிலான பார்வை
பதிப்பு: 2018 மே 24 02:08
புலம்: சென்னை, தமிழ் நாடு
புதுப்பிப்பு: மே 24 16:43
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#தூத்துக்குடி
#தூத்துக்குடிவன்முறை
#Tuticorin
#Sterlite
#VedantaLimited
#TuticorinKillings
#SterliteKillings
#VedantaPolitics
#TuticorinMassacre
#SterliteMassacre
#TuticorinShootout
#SaveTuticorin
#TuticorinUnrest
தூத்துக்குடியில் அறவழியில் திரண்டு 100 நாட்களுக்கும் மேலாக போராடிக்கொண்டிருந்த பெருந்திரள் மக்கள், அறவழிப்போராட்டத்தின் நூறாவது நாளை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்ற, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி செல்ல முயன்ற வேளையிலேயே, கல்வீச்சு சம்பவங்களும் காவல்துறையினரின் கட்டுபாடற்ற வன்முறையினாலும், காவல்துறையினரின் தொடர் துப்பாக்கி பயன்பாட்டாலும் 12 ற்கும் மேற்பட்டோர் படுகொலையாகினர். 65 ற்கும் மேற்பட்டோர், மீள முடியா உடல்பாதிப்பில் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர். மே 22 ஆம் நாள் இரவு தூத்துக்குடியில் இருக்கும் சில மீனவ கிராமங்களில் காவல்துறை தொடர் தேடுதல் வேட்டைகளை நடத்தி அப்பாவி மக்களை அச்சுறத்திய சம்பவமும் நடந்தேறியுள்ளது.
 
இச்சம்பவங்களை நேரில் கண்டு தமிழக ஊடகங்களில் பதிவு செய்த ஊடகவியலாளர் கூர்மைக்கு வழங்கிய ஒலிப்பதிவில், “இச்சம்பவத்தின் தொடக்கம், காவல்துறை இத்தகைய பெருந்திரளை கணிக்கவில்லை, 30000 மக்களும் 3000 காவல்துறையினரும் இருந்த நிலையில் காவல்துறையினரும் பதற்றம் கொண்டிருந்தனர். ஆதாலால், மக்கள் பேரணி செல்லும் பாதைகளில் மக்களை ஆங்காங்கே பிரித்தார்கள். கல்வீச்சு எங்கிருந்து தொடங்கியது என தெரியவில்லை. ஆனால், அதன் பிறகு காவல்துறை தொடர் தாக்குதலில் ஈடுபட்டது. அதேவேளை, யாரையும் சுட வேண்டிய அவசியம் இல்லாத பொழுதும் போராட்டங்களை முன்னெடுத்தவர்கள் சரியாக சுடப்பட்டுள்ளது கேள்வியாக உள்ளது.

இறந்தவர்களின் உறவினர்கள் கடத்தப்பட்டு, இரவோடு இரவாக அவர்களின் வீட்டுப்பெண்களை மிரட்டி இறந்தவர்களின் உடலை வாங்க நிரந்திக்கப்பட்டுள்ளனர். இன்னும் பல பேரை காவல்துறையினர் கடத்தி சென்றுள்ளனர். அவர்களை என்ன செய்யவிருக்கிறார்கள் என்றும் தெரியாது.

அதேபோல, யார் யார் போராட்டங்களில் முன்னின்று குரல் கொடுத்தார்களோ அவர்களை படம் எடுத்து, அவர்களை குறி வைத்து அடித்தார்கள். இப்படி ஒரு வன்முறைக்கு பிறகு, என் கவலை எல்லாம், இனி காவல் துறையினருக்கும் தூத்துக்குடி மக்களுக்குமான உளவியல் உறவு எப்படி இருக்கும்” என்று தெரிவித்தார்.

இந்த நேரத்தில் மேலும் சிலரது கருத்துக்களை கூர்மையின் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கும் முன், உலகத் தமிழர்களுக்கு சில வேண்டுகோளை முன் வைத்துவிட்டு, கீழே செல்வோம்.

உலகளவில் ஜனநாயகத்திற்கென தனி முத்திரை பதிந்து வைத்துள்ள இந்திய ஒன்றிய அரசு அறவழிப்போராடம் ஒன்றில் இத்தகைய வன்முறையைக் கையாண்டு கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதை தூத்துக்குடி என்ற சிறு மாவட்டத்தின் பிரச்சனையாக கருதாமல், ஸ்டெர்லைட் என்ற தனியார் ஆலைக்கு எதிரான போராட்டங்களும் அதன் பின்னான அரச வன்முறை என கருதாமல், உலகளவில் வீற்றிருக்கும் தமிழர் அமைப்புகள் அந்தந்த நாடுகளில் இதனை கவன ஈர்ப்பு நிகழ்வாக செய்தால் மட்டுமே அடுத்தடுத்த நாட்களில் தூத்துக்குடியில் தமிழ்நாட்டு மக்களைக் காக்க முடியும், இனி வரும் காலங்களிலும் இது போன்ற வன்முறைகளில் அரச நிறுவனங்கள் களம் இறங்க தயக்க கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் நடப்பதற்கும் ஈழத்தின் புல்மோட்டையில் நடப்பதற்கும் வித்தியாசம் இல்லை. ஈழத்தின் அம்பாறை மாவட்டத்தில் எஞ்சியிருக்கும் தமிழர் தாயகப் புலத்தின் கரையோரமான திருக்கோயில் மிக அண்மைக்காலமாக டம்சிலா எக்ஸ்போர்ட்ஸ் (Damsila Exports) என்ற கம்பனியால் குறிவைக்கப்படுகிறது. இந்த கார்பரேட் குறிவைப்பில் இருந்து தமிழர் தாயகப் புலங்களைக் காக்க உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் முனைப்பாகச் செயற்படவேண்டும்.

உலகத்தமிழர்கள், 2017 இல் நடந்த ஜல்லிக்கட்டிற்கான மிக்கபெரிய அறவழிப்போராட்டத்தை மறந்திருக்க முடியாது. தமிழகமெங்கும், குடும்பம் குடும்பமாக, மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள், ஆண், பெண் பேதமின்றி, வீதிகளில் ஒன்றாக அமர்ந்து, தொடச்சியாக 7 நாட்கள், இரவு பகலென பாராமல் ஒரே இடத்தில், ஒரே குரலில், தங்கள் கோரிக்கைகளை முன் வைத்தனர்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்ட ஏழு நாட்கள் நடந்த அறவழிப்போராட்டம் வெற்றியாக பார்க்கப்பட்டால், தமிழகம் புதிய அறவழி அரசியல் கலாச்சாரத்தை விதைத்துவிடும் என்ற நோக்கோடு, வன்முறையில் முடிக்க வேண்டும் என்ற திட்டத்தோடு அரசு இயந்திரங்கள் முழுவீச்சில் களம் இறங்கியது நினைவிருக்கலாம்.

இத்தகையக ஆபத்தான போக்கை முறியடிக்க உலகத் தமிழர்களின் ஒன்று சேர்ந்த குரல்களாலும் கவன ஈர்ப்பு நிகழ்வுகளாலுமே முடியும்.

சமீபகாலமாக தமிழகத்தில், அரசியல் இயக்கங்களே சாராத, சமூக அமைப்புகளின் ஒன்றிணைப்பில் ஆங்காங்கே போராட்டங்களும் கிளர்ச்சிகளும் உருவாகி வருகிறது. இத்தகைய சூழலில் தான், போராட்டங்களை பல்வேறு வழிமுறைகளில் நசுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறதா? தேர்தல் அரசியல் இயக்கங்கள் இல்லாத சமூக இயக்கங்களின் ஒன்றுசேர்ந்த குரல் எத்தகைய வீரியமுடையது? அரசு இதனால் அச்சம் கொள்கிறதா? என்ற கேள்வியை, 2013 ஆம் ஆண்டு தமிழகமெங்கும் மாணவர் போராட்டங்களை, ஈழத்திற்காக முன்னெடுத்தவர்களில் ஒருவரான பொறியாளர் பிரபாகரன் அவர்களை கூர்மை தொடர்புகொண்டபொழுது அவர் பின்வரும் கருத்துக்களைத் தெரிவித்தார்:

“அரசுகள் பொதுவாகவே போராட்டங்களை ஒடுக்கவே செய்யும். ஆனால், தூத்துக்குடியில் நடந்ததை வெறும் போராட்டங்களை நசுக்கும் விதமாக மட்டுமே நாம் பார்த்துவிட முடியாது. இது ஒரு உளவியல் போர். மிகப்பெரிய இனப்படுகொலையை 2009 ஆம் ஆண்டு கண்ணெதிரே பார்த்த இனம், முதலில் கதறி அழுவதும், பிறகு திமிறி எழுவதும் இயல்பான அரசியல் வழிமுறைகளில் ஒன்று.

“ஈழத்தில் நடந்தவையை பார்த்த பிறகு, இங்கு இருந்த அரசியல்வாதிகளால் எதுவுமே செய்துவிட முடியவில்லை என்பதனை உணர்ந்த பிறகு, தன்னெழுச்சியாக தமிழகத்தில் சமூக இயக்கங்களின் போராட்டங்களும் அரசியல் முன்னெடுப்புகளும் நிகழத்தொடங்கின. மக்கள் தாங்களாகவே அரசியல் மையப்படுத்தப்பட்ட விளைவினால், தேர்தல் அரசியல் தலைவர்களோ, பலம் வாய்ந்த கட்சிகளோ முன்னெடுக்காத பல போராட்டங்கள் இங்கே அரசுகளை நடுங்கச் செய்தது.

“2011 இல் கூடங்குளம், எழுவர் விடுதலை, 2013இல் பாலகன் பாலச்சந்திரன் படுகொலைக் காட்சிகளைப் பார்த்த பிறகு நிகழ்ந்த அரசியல் போராட்டங்கள், 2015இல் நியூட்ரினோ, 2017இல் ஜல்லிக்கட்டு, மீத்தேன் எதிர்ப்பு, நீட் எதிர்ப்பு, தற்பொழுது தூத்துக்குடி போராட்டங்கள் இவையாவுமே ஒரு புதிய போராட்டக் கலாச்சாரத்தைத் தமிழகத்தில் விதைத்து வருவதை நாம் காண்கிறோம். அதனை, 2009ற்கு முன்பு தமிழகத்தில் நடந்த போராட்டங்களின் எண்ணிக்கைகளையும் அதன் பிறகு நடந்த மக்கள் போராட்டங்களின் எண்ணிக்கைகளையும் அறியும்பொழுது உணரலாம்.

“குறிப்பாக 2014 ஆம் ஆண்டு, 20450 போராட்டங்களும் 2015 இல் 21000ற்கும் மேற்பட்ட போராட்டங்களும் என பெருகி வருகிறது. மிகக் குறிப்பாக, இதில் 8000 அளவிலான போராட்டங்கள் மட்டுமே அரசியல் இயக்கங்கள் நடத்திய போராட்டங்கள், ஏனையவைகளில், சமூக இயக்கங்களின் பங்களிப்பே பெரிது.

“2013 ற்கு பிறகான போராட்டங்களைக் குறித்து, Political and Economy Weekly சஞ்சிகையில், ‘Soon there will be spring in Tamil Nadu’ என்று தமிழகத்தில் விதைக்கப்படும் அறப்புரட்சி கலாச்சாரம் குறித்த அரசியல் ஆய்வுக்கட்டுரை எழுதப்பட்டது.

“2013 போலத்தான் ஜல்லிக்கட்டிற்கான அறவழிப்போராட்டமும் அதிமுக்கியத்துவம் வாய்ந்தது. இத்தனைக்கும் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்தும், அதே சஞ்சிகையில் வெளியான கட்டுரையிலும், “மக்கள் ஜல்லிக்கட்டு என்ற ஒரு அளவுகோலில் மட்டும் இதனை அணுகவில்லை, தொடர்ச்சியாக, அடக்குமுறைக்குள்ளாகும் பொழுது, ஒரு புள்ளியிலோ, ஒரு கோரிக்கைகளிலோ இணைவார்கள், ஆனால், வெகு நாள் கோபமும் வெகு நாள் அடக்குமுறை வலிகளும் அதில் உள்ளடக்கப்பட்டிருக்கும். அதுதான் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கிடைக்கும் அரசியல் செய்தி, என எழுதப்பட்டது.

“இத்தகைய அரசியல் கலாச்சாரம் வளர்ந்துவிடக்கூடாது என்ற அரசின் பயமே தூத்துக்குடி சம்பவம். ஆனால், நாம் இதனைப் பார்த்து சோர்ந்துவிடாது, இதுவரை வீதிகளில் வெளி வந்து போராடிய மாணவர்களும் இளைஞர்களும் இந்த உள்ளார்ந்த அரசியல் பகுத்துணர்ந்து, நம்மை இன்னும் வலிமையாக அரசியல்மையப்படுத்தி கிளர்ந்து எழும்பொழுதே நாம் வரும் காலத்தில் இத்தகைய அடக்குமுறைகளை எதிர்கொள்ளலாம்” என தெரிவித்தார்.

காவல்துறையினர் துப்பாக்கி சூட்டை சட்ட ரீதியில் நியாயப்படுத்த முடியுமா? என வழக்குரைஞர் வெற்றிச்செல்வன் அவர்களை தொடர்புகொண்டு கேட்டபொழுது:

“அரசின் உடமைகளுக்கோ, பொதுச்சொத்துக்கோ கேடு விளைக்கும் நிலையில் மட்டுமே காவல்துறையினர் அதனை கட்டுப்படுத்த களம் இறங்க வேண்டும். அதற்கு சட்ட ரீதியில் சில விதிவிலக்குகள் இருக்கின்றன. முதலில், எச்சரிக்கை கொடுக்க வேண்டும், பிறகு கண்ணீர் புகை வீசி கூட்டத்தைக் களைக்க முற்பட வேண்டும், பிறகு, வானத்தை நோக்கி சுட வேண்டும், பிறகு காலில் சுட வேண்டும். உயிருக்கு ஆபத்து விளைவிக்கா வண்ணம், அந் நபரை செயலிழக்கச் செய்ய வேண்டும். இதுவே நடைமுறை.

“தூத்துக்குடியில் நடந்தவைகள் அப்பட்டமான சட்ட விதிமுறை மீறல்கள் தான். அதிலும் குறிப்பாக, அமைதியான வழிமுறைகளில் பேரணி சென்ற பொதுமக்கள் மீது கல்வீசி, கலவரைத்தை தூண்டி, அதனால்தான் சுட்டோம் என நியாயப்படுத்த காவல்துறையே மிகத் தெளிவாக திட்டமிட்டே இதனை நடத்தியுள்ளனர். இது, நாம் இச்சமபவத்தோடு தொடர்புடைய காணொளிப் பதிவுகள் ஊடாக உறுதிப்படுத்தலாம்.

“இதேபோன்றே, தாமிரபரணி படுகொலை, பரமக்குடி துப்பாக்கிச் சூடு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்குரைஞர்கள், காவல்துறையினர் மோதல், மெரினாவில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போதான கலவரம் என எல்லாமே திட்டமிடப்பட்ட கலவரத்திற்கான சாட்சிகள்.

“ஆனால், இதுவரை, இவைகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஆணையங்கள் எதுவுமே முறையான தீர்வை சொன்னதில்லை. இனி வரும் காலத்தில் சாமானிய மக்களை இத்தகைய தாக்குதல்களில் இருந்து காக்க முறையான வலுவான சமூக அமைப்பை உருவாக்குவத்து காலத்தின் தேவை” என்றார்.

அறவழிப்போராட்டங்களில் வன்முறையை கையாள்வது இதற்கு முன்பு நடந்துள்ளதா? இந்தியா ஒன்றியத்தின் சட்டத்திட்டங்களில் உள்ள விதிமுறைகள் என்ன? இதனை சட்டரீதியில் மக்கள் இயக்கங்களால் எதிர்கொள்ள முடியுமா? என கேட்டபொழுது, வழக்குரைஞர் சுந்தர் ராஜன் கூர்மைக்கு அளித்த பதிலில்,

“முதலில், இந்திய ஒன்றிய அரசின் அணுகுமுறைகளில் இத்தகைய சம்பவங்கள் தொடர்ச்சியாகவே நடைபெற்று வந்துள்ளது. குறிப்பாக, இந்திய பெருநிலத்தின் வடக்கிழக்கு மாகாணாங்களில் பழங்குடியினர் வன்முறைகளாலும் கொலைகளாலுமே நசுக்கப்பட்டுள்ளனர். தென்பகுதியில், இது புதிதான், இது வருத்தமளிக்கிறது. அதேபோல, இதனை சட்ட ரீதியில் எதிர்கொள்வது கடினம். முக்கியமாக, இதற்கு உத்தரவிடும் உயர் காவல்துறை அதிகாரிகள் களத்திற்கே வருவதில்லை, அவர்கள்தான் உத்தவிட்டு இது செயல்படுத்தப்படுகிறது என்பதை நிரூபிக்கும் போதிய ஆதாரங்களை பெரும்பாலும் அவர்கள் விட்டுவைப்பதில்லை. கடைநிலை காவல்துறை அதிகாரிகளை நாம் நேரடியாக குற்றம் சாட்ட முடிவதில்லை” என்றார்.

காணொளிப்பதிவுகளிலும் தொலைக்காட்சி செய்திகளிலும் காவல்துறையினர் துப்பாக்கியில் குறிப்பார்க்கும் காட்சி பதிவாகி உள்ளதே என்ற கேள்விக்கு, “சட்டரீதியாக, அத்துப்பாக்கியில் இருந்து வந்த குண்டுதான், இறந்தவர்கள் மீதி பாய்ந்ததா என்பதனை நிரூபிப்பது கடினம்” என்றார்.

“இதற்கும் அப்பால், காவல்துறையினர் காவல் நிலையங்களின் உள்ளேயே நடத்தும் கொலை சம்பவங்களுக்கோ, குற்றவாளியாக கருதப்படுபவரை ஓடவிட்டு, பொய்யாக நடத்தப்படும் துப்பாக்கிச் சூடுகளுக்கோ, இதுவரை நீதி கிடைத்ததில்லை” என்றும் தெரிவித்தார்.

“இதற்கெல்லாம் அடிப்படை காரணம், இந்தியா ஒன்றிய அரசின் குற்றவியல் நடைமுறை சட்டங்கள் யாவுமே, பிரித்தானிய காலனியாதிக்கத்தில் அடிமைகளை அடக்கி ஆள உருவாக்கப்பட்டவைகள்தான். சுதந்திர இந்திய ஒன்றியத்திற்கான குற்றவியல் சட்டங்களாக அவைகளை கருத முடியாது. குறிப்பாக, குற்றவியல் சட்டங்களில் மனித உரிமை மீறல்கள், மனித உரிமைகள் காக்கப்படுதல் தொடர்பான எவ்வித முறையாக விதிமுறைகளும் இந்திய ஒன்றிய குற்றவியல் சட்டங்களில் உள்ளடக்கப்படவில்லை” என்றும் தெரிவித்தார்.

கட்டுபாடற்ற காவல்துறையினர் உள்ள நாட்டை ஜனநாயக நாடென உலகம் ஏற்றுக்கொண்டிருப்பதை நவீன உலகின் வேடிக்கையாத்தான் கருத வேண்டியுள்ளது.