இலங்கை அரசியல் நெருக்கடியில் இரட்டை வேடம் போடும் அமெரிக்கா, இந்தியா

இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை புதுப்பிப்பது குறித்து அமெரிக்கத் தூதுவர் மகிந்தவின் அதிகாரியுடன் சந்திப்பு

இந்தியத் தூதுவரும் இலங்கைப் பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தார்
பதிப்பு: 2018 நவ. 22 21:16
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 23 09:05
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையின் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதுவர்கள் மைத்திரி மகிந்த தரப்பையும் ரணில் தரப்பையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களையும் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளும் அமெரிக்கா இந்தியா ஆகிய நாடுகளின் தூதுவர்களும் இரகசியமாகவும் வெளிப்படையாகவும் சந்தித்து வருகின்றனர். இலங்கை முப்படையினருடன் கூட்டுப் பயிற்சி பாதுகாப்பு, தொழில்நுட்ப உதவி மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் உள்ளிட்ட தங்களுக்குரிய பூகோள அரசியல் தேவைகளுக்கு ஏற்ப இந்தச் சந்திப்புக்கள் இடம்பெற்று வருவதாக கொழும்பு உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன. 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் உள்ளிட்ட தூதுவர்கள் சந்தித்திருந்தனர்.
 
அதேவேளை, இந்து மா சமுத்திரத்தை மையப்படுத்தி தமக்குரிய பாதுகாப்பு விடயங்கள் குறித்தே அமெரிக்கா அக்கறை செலுத்துவதாகவும் எட்கா வர்த்தக உடன்படிக்கை உள்ளிட்ட பிராந்திய பாதுகாப்புக் குறித்து இந்தியா அவதானமாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

ரணில் பிரதமராக இருக்கும் போது செய்துகொள்ளப்பட்ட அமெரிக்க, இலங்கைப் பாதுகாப்பு உறவுகள் குறித்த உடன்படிக்கை கடந்த மாதத்துடன் காலாவதியாகியுள்ளது என்றும் அதனைப் புதுப்பிப்பது குறித்து கொழும்பில் உள்ள புதிய அமெரிக்கத் தூதுவர், மகிந்த நியமித்த இலங்கைப் பாதுகாப்பு உயர்மட்ட அதிகாரிகளோடு பேசி வருவதாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

கடந்த திங்கட்கிழமை இலங்கைப் பாதுகாப்பு அமைச்சில் வெவ்வேறு பிரிவுகளாக சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தியத் துணைத் தூதுவர் கலாநிதி ஷில்பக் அம்புலே, மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோவுடன் நடத்திய பேச்சுக்களின் போது, இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதேவேளை, கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் அலய்னா ரெப்லிட்சும், கடந்த திங்கட்கிழமை, இலங்கைப் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோவை தனியாகச் சந்தித்தும் உரையாடியுள்ளார்.

இந்தச் சந்திப்பில் இலங்கையின் அரசியல் நெருக்கடிகளுக்கான தீர்வு பற்றிப் பேசியதை விட பூகோள அரசியலுக்கான தத்தமது நலன்சார்ந்த விடயங்கள் தொடர்பாகவே சந்திப்பு இடம்பெற்றதாக கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன.

அமெரி்க்கா
கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் அலய்னா ரெப்லிட்சும், கடந்த திங்கட்கிழமை, இலங்கைப் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோவை தனியாகச் சந்தித்தும் உரையாடியுள்ளார். தூதரக உயர் அதிகாரிகளும் சந்திப்பில் கலந்துகொண்டனர். ஆனால் இந்தச் சந்திப்புக் குறித்து அமெரிக்கத் தூjரமோ மகிந்த தரப்பு பாதுகாப்பு உயர் அதிகாரிகளோ எதுவுமே அதிகாரபூர்வமாகக் கூறவில்லை.

அரசியல் நெருக்கடியின் பின்னரான நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் சில அரசியல் பிரதிநிதிகளை ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள், அமெரிக்க - இந்தியத் தூதுவர்கள் சந்தித்துப் பேசும் கோணம் வேறு.

அது ஜனநாயகம், இலங்கை அரசியல் அமைப்பு என்ற போர்வைக்குள் நின்று கொண்டு, தமிழ்த்தரப்பின் மனநிலையை நாடிபிடித்துப் பார்க்கும் சந்திப்பு.

ஆனால், மகிந்த ராஜபக்ச பிரதமராகப் பதவியேற்ற பின்னர் அமெரிக்கா. இந்தியா ஆகிய இரு நாடுகளும் மகிந்தவுடன் உறவுகளைப் பேணும் விடயத்தில் தமது தேவைகளின் அடிப்படையில் மறைமுகமாகவும் நேரடியாகவும் சந்திப்புக்களில் ஈடுபட்டு வருகின்றன.

தேவைப்படும்போது தத்தமது முகவர்கள் ஊடாகவும் மறைமுகமான சந்திப்புக்கள் இடம்பெறுவதாக கொழும்பு உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை, இலங்கையுடனான தமது பாதுகாப்பு உறவுகளைப் புதுப்பிப்பது குறித்து அமெரிக்கத் தூதுவர் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறியோடு பேசியதாகவும் இது குறித்து இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஹேமசிறி பேசியுள்ளதாகவும் உயர்மட்டத் தகவல்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்துள்ளன.

ரணில் பிரதமராக இருக்கும் போது செய்துகொள்ளப்பட்ட அமெரிக்க, இலங்கைப் பாதுகாப்பு உறவுகள் குறித்த உடன்படிக்கை கடந்த மாதத்துடன் காலாவதியாகியுள்ளது என்றும் அதனைப் புதுப்பிப்பது குறித்து கொழும்பில் உள்ள புதிய அமெரிக்கத் தூதுவர், மகிந்த நியமித்த இலங்கைப் பாதுகாப்பு உயர்மட்ட அதிகாகளோடு பேசி வருவதாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

திருகோணமலையின் கடல் பகுதியை மையப்படுத்திய எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் பற்றிய ஆய்வு நடவடிக்கைகள் கடந்த செப்டெம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்த ஆய்வை ஐந்து ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக செய்ய வேண்டியுள்ளதால் அது குறித்தும் அமெரிக்கத் தூதுவர் பேசியுள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆகவே வெளிப்படையாக மகிந்த அரசாங்கத்துடனும் மைத்திரிபால சிறிசேனவுடனும் அமெரிக்கா இராதந்திர உறவுகளைப் பேணுவதாகக் காண்பிக்கவில்லை.

மாறாக இலங்கை அரசியல் யாப்புக்கு மதிப்பளித்து ஜனநாயக முறைப்படி செயற்படுமாறு அமெரிக்கா இரண்டு தடவைகள் அறிக்கையும் வெளியிட்டிருந்தது.

தொடர்ச்சியாகக் கண்டனங்களும் வெளியிடப்படுகின்றன. அமெரிக்கச் சார்பு நாடுகளும் மைத்திரி - மகிந்தவின் செயற்பாடுகளை ஜனநாயகத்துக்கு மாறானது என விமர்சித்தும் வருகின்றன.

ஆனால் உள்ளக ரீதியாக மகிந்த தரப்பு நியமித்த உயர் அதிகாரிகளுடனும் குறிப்பாக இலங்கைப் பாதுகாப்புத் தரப்புடனும் அமெரிக்கவும் இந்தியாவும் தொடர்பு கொண்டு வருவதாக மகிந்த தரப்பு உறுப்பினர்கள் கொழும்பில் தமக்கு நெருக்கமான செய்தியாளர்களிடம் கூறியுள்ளனர்.

அதேவேளை, மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் ஜனநாயக முறைப்படி செயற்பட வேண்டும் என வலியுறுத்தி வந்த கொழும்பில் உள்ள கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினன் நாமல் ராஜபக்சவுடன் ருவிற்றர் பதிவில் உரையாடியுள்ளார்.

அமெரிக்கா, கனடா இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை வெளிப்படையாகப் பேணுவதற்கான முயற்சிகளில் மகிந்த ராஜபக்ச அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் அமைச்சர் பேரசிரியர் பீரிஸ் தீ்விரமாக முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார்

அவ்வாறானதொரு நிலையில் மகிந்தவின் மகன் நாமல் ராஜபக்சவுடன் கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினன் ருவிற்றர் பதிவில் உரையாடியுள்ளார்.

மூன்று இந்தியக் கடற்படைப் போர்க் கலங்கள் இலங்கைக் கடற்படையுடன் திருகோணமலையில் கடந்த செப்டெம்பர் மாதம் ஆறாம் திகதியில் இருந்து 13 ஆம் திகதி வியாழன் வரை SLINEX-2018 என்ற இணைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தன.

அமெரிக்காவும், ஜப்பானும் கடந்த ஓகஸ்ட் மாத இறுதிப் பகுதியில் இதேபோன்ற இணைப் பயிற்சிகளை இலங்கைக் கடற்படையுடன் இதே திருமலையில் மேற்கொண்டிருந்ததன.

இலங்கைத் தீவின் பலமான மனிதன் (ஸ்ரோங் மான்) என்று வெளியுலக ஆங்கில ஊடகங்களால் மகிந்த ராஜபக்ச வர்ணிக்கப்பட்டு வருகின்றார்.

இதன் பின்னணியிலேதான் கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை இலங்கையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி குறித்து தமிழ்த் தரப்பு சிந்திப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளினால் இந்தியாவின் ஆசீர்வாதத்தோடு உருவாக்கப்பட்ட மைத்திரி - ரணில் அரசாங்கம் எதிர்பார்த்த விளைச்சலைக் கொடுக்கவில்லை என்பது குறித்து கடந்த ஒரு வருடத்திற்கு முன்னரே இந்த நாடுகளுக்கு மன உழைச்சல் ஏற்பட்டிருந்ததை சர்வதேசத்தின் சில ஆங்கில ஊடகங்கள் கோடிட்டுக் காட்டியிருந்தன.

எனவே இலங்கைத் தீவில் மாற்றம் என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய பொறுப்பு ஈழத் தமிழர்களுக்கும் சிங்கள முற்போக்குச் சக்திகளுக்குமே உரியது. அந்தப் பொறுப்பு மேற்குலகத்துக்கானதல்ல.

எனினும் இங்கே ஓர் பிரச்சினை உண்டு. 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில், ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை சிங்கள முற்போக்குச் சக்திகளும் ஏற்றுக்கொள்வதாக இல்லை.

குறைந்த பட்சம் வடக்கு - கிழக்கு இணைப்பைக் கூட அவர்கள் விரும்புவதாக இல்லை.

சர்வதேசம் இலங்கைத் தீவில் நினைத்தபடி ஆடுவதற்கும் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான அரசியல் சூழல்தான் காரணமாக அமைந்துவிட்டது.