இலங்கை அரசியல் நெருக்கடியில் அதிகரித்து வரும் சர்வதேசத் தலையீடு

ஐ.நா ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான பணிப்பாளர் கொழும்பில் - சீனத் தூதுவர் மகிந்த தரப்புடன் சந்திப்பு

பூகோள அரசியலின் பின்னணியில் அவசரமான முயற்சிகளில் மேற்குலக நாடுகள்
பதிப்பு: 2018 நவ. 28 08:27
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 28 16:48
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
ஒக்ரோபர் மாதம் 26 ஆம் திகதி மகிந்த ராஜபக்ச பிரதமரான பின்னர் இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் இலங்கை அரசியல் நெருக்கடி குறித்து பிரதான அரசியல் கட்சிகளுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் பேசி வருகின்றன. ஜனநாயக மீறல் எனவும் இலங்கை அரசியல் யாப்புக்கு அமைவாக பிரதான அரசியல் கட்சிகள் செயற்பட வேண்டும் என்றும் கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் வலியுறுத்தி வருகின்றனா். அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தொலைபேசியில் உரையாடியுமுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் உள்ள வெளிநாட்டுச் செய்தியாளர்களைச் சந்தித்து மைத்திரி விளக்கமளித்துமுள்ளார்.
 
இந்த நிலையில் நீடித்துச் செல்லும் அரசியல் நெருக்கடி குறித்து ஆராய ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகார திணைக்களத்தின் ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான பணிப்பாளர் மரி யமஷிட்டா கொழும்பு வந்திருப்பதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

மைத்திரி, மகிந்த, ரணில் என்று காலத்துக்குக் காலம் ஆளை மாற்றிக் குதிரையோடும் அரசியலைக் கைவிட்டு இலங்கை அரசு என்ற கட்டமைப்பில் இருந்து ஈழத் தமிழர்களுக்கான அதிகாரங்களை அல்லது ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீ்கரிப்பதற்கான நிலையை சர்வதேச மட்டத்தில் உருவாக்க வேண்டியதே இன்றைய தேவை.

ஆனால் மரி யமஷிட்டா கொழும்பு வந்துள்ளமை குறித்து இலங்கை அரசாங்கம் அதிகாரபூர்வமாக எதுவுமே கூறவில்லை. இலங்கை அரச ஊடகங்களும் செய்தி வெளியிடவில்லை.

எனினும் ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான பணிப்பாளர் மரி யமஷிட்டா அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு வந்துள்ளமை குறித்து கொழும்பில் வெளிநாட்டுச் செய்தியாளர்கள் சிலர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி ஆகிய கட்சிகளின் தலைவர்களையும் கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து உரையாடுவார் என்றும் கூறப்படுகின்றது.

ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான பணிப்பாளர் மரி யமஷிட்டாவின் வருகையை கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளதாக கொழும்புச் செய்தியாளர் ஒருவரும் உறுதிப்படுத்தியுள்ளார்.

மரி யமஷிட்டா அரசியல் நெருக்கடிகள் குறித்த விடயங்களை கையாள்வதில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர். ஐக்கிய நாடுகள் சபையின் உயர் பதவிகளை வகித்துள்ளார்.

இதேவேளை, கனேடிய, பிரித்தானிய இராஜதந்திரிகளுடன் மகிந்த ராஜபக்ச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த சில நாட்ளாக தொடர்ச்சியாக சந்தித்து உரையாடி தமது அரசியல் நிலைப்பாடுகள் குறித்து விளக்கமளித்து வந்தனர்.

ரணில் விக்கிரமசிங்கவும் அவ்வாறு விளக்கமளித்து வந்துள்ளார். இந்த நிலையில் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவை கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவரும் இந்தியத் துணைத் தூதுவரும் கடந்த வாரம் சந்தித்து உரையாடியிருந்தார்.

இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் உள்ள ஜனநாயக மீறல்கள் குறித்தும் கடந்த 70 ஆண்டுகாலமாக இலங்கை அரசியல் யாப்புகளின் சட்டங்களினால் வடக்கு - கிழக்கு மக்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள், ஜனநாயகமற்ற சூழல் குறித்தும் தமிழ்த் தரப்பு எடுத்துக் கூறவில்லை என்று மக்கள் கவலையடைந்துள்ளதாக அவதானிகள் கூறுகின்றனர்.

2009 ஆம் ஆண்டு இறுதிப் போர் நடைபெற்றபோது இலட்சக்கனக்கான மக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் இடம்பெயர்ந்தும் பல அவலங்களைச் சந்தித்திருந்தனர்.

ஆனால் அப்போது பதவியில் இருந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கம் மீ்து மென் வலு அடிப்படையில் செயற்பட்ட அமெரிக்கா உள்ளிட்ட மேற்குல நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி விவகாரத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் அவசர அவசரமாகவும் செயற்பட்டு வருவதாக அவதானிகள் கூறியுள்ளனர்.

இந்து பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பு உள்ளிட்ட தமக்குரிய பூகோள அரசியல் தேவைகளின் பின்னணியில் இலங்கை அரசியல் நெருக்கடி விவகாரத்தில் ஈடுபடுவதாகவும் அவதானிகள் கூறுகின்றனர்.

இந்திய மத்திய அரசின் ஆசீர்வாதத்துடன் இந்த நகர்வை ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுத்துள்ளது என்றும் மைத்திரி - மகிந்த அல்லது ரணில் தரப்புக்களில் ஏதாவது ஒரு தரப்பை தமக்குரிய பூகோள அரசியல் நகர்வுகளுக்கு அமைவாக பதவியில் இருந்தும் முயற்சிதான் இந்த நகர்வு.

மாறாக இலங்கையில் ஜனநாயகம் மீறப்படுகின்றது என்றோ அல்லது இலங்கை அரசியல் யாப்பு மீறப்படுகின்றது என்ற அக்கறையுடனோ இந்த நகர்வு அமையவில்லை.

20015 ஆம் ஆண்டு ரணில் அரசாங்கத்துடன் செய்யப்பட்ட அமெரிக்க - இலங்கை பாதுகாப்பு உறவகள் காலவதியாகியுள்ள நிலையில் அந்த பாதுகாப்பு உறவுகள் மற்றும் தேவைகளின் பின்னணியிலும் இந்த சர்வதேச நாகர்வுகளைக் காண முடியும் என்றும் அவதானிகள் கூறுகின்றனர்.

இதேவேளை, இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளின் தலையீடுகளை ஜே.வி.பி மற்றும் இடதுசாரி கட்சிகள் கண்டித்து வருகின்றன.

அதேவேளை கொழும்பில் உள்ள சீனத் தூதுவர் சென் ஷியுவான் நேற்றுச் செவ்வாய்க்கிழமை மகிந்த தரப்பு வெளிவிவகார அமைச்சர் சரத் அமுனுகமவைச் சந்தித்து உரையாடியுள்ளார்.

மகிந்த பிரதமராகப் பதவியேற்ற பின்னர் இடம்பெற்ற இரண்டாவது சந்திப்பு என்பதுடன் அரசியல் நெருக்கடியினால் சீன அபிவிருத்தித் திட்டங்களுக்கு எற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் பேசப்பட்டதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

பூகோள அரசியலின் பின்னணியில் செயற்பட்டு வரும் சீனா மற்றும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் இறுதிப் போருக்கு இராணுவ ஒத்துழைப்புகளை மகிந்த அரசுக்கு வழங்கியிருந்தன.

ஆனால் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான ஒன்பது ஆண்டுகளில் நிரந்தர அரசியல் தீர்வுகள் எதுவுமே இல்லாத நிலையில் சிங்கள அரசியல் தலைமைகளிடையே ஏற்பட்டுள்ள மோதல்களுக்கு தீர்வு காணும் முயற்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது.

ஆகவே சம்பந்தன் சுமந்திரன் ஆகியோரின் இவ்வாறான செயற்பாடுகளினால் ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டத்தை இலங்கைத் தேசிய அரசியலுடன் சர்வதேசம் ஒப்பிட்டுப் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கான தீர்வுடன் தமிழர்களின் பிரச்சினைக்கும் தீர்வு வந்துவிடும் என்று அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் கருதுகின்றன.

இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் உள்ள ஜனநாயக மீறல்கள் குறித்தும் கடந்த 70 ஆண்டுகாலமாக இலங்கை அரசியல் யாப்புகளின் சட்டங்களினால் வடக்கு - கிழக்கு மக்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் ஜனநாயகமற்ற சூழல் குறித்தும் தமிழ்த் தரப்பு சர்தேசதிற்கு எடுத்துக் கூறவில்லை.

இங்கே மைத்திரி. ரணில் மகிந்த, சந்திரிக்கா அல்ல பிரச்சினை, பொதுவாக சிங்கள அரசியல் தலைவர்கள் அனைவருமே இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பின் படிதான் செயற்படுகின்றனர். அதையே நியாயப்படுத்துகின்றனர்.

ஆகவே மைத்திரி, மகிந்த ரணில் என்று காலத்துக்குக் காலம் ஆளை மாற்றிக் குதிரையோடும் அரசியலைக் கைவிட்டு இலங்கை அரசு என்ற கட்டமைப்பில் இருந்து ஈழத் தமிழர்களுக்கான அதிகாரங்களை அல்லது ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதற்கான சூழலை சர்வதேச மட்டத்தில் உருவாக்க வேண்டியதே இன்றைய தேவை.

சர்வதேச சமூகத்திற்கு அதைத்தான் சொல்ல வேண்டும். 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான அரசியல் நிலை இதுதான். 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை கூட அந்தக் கொதி நிலை இருந்தது.

ஆனால், 2015 ஆம் ஆண்டு மைத்திரி - ரணில் அரசாங்கம் பதவியேற்ற பின்னரும் ஒக்ரோபர் மாதம் 26 ஆம் திகதிக்குப் பின்னரான சூழலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கைத் தேசியம், இலங்கையர் என்ற அடையாளங்களையே முன்லைப்படுத்துகின்றது.