இலங்கை அரசியல் நெருக்கடியின் பின்னரான நிலை

மாகாண சபைத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்படும் சாத்தியம் - நாடாளுமன்றத் தேர்தலை நடத்த மைத்திரி - ரணில் தரப்பு இணக்கம்

தமிழரசுக் கட்சி உள்ளிட்ட மலையகத் தமிழ் முஸ்லிம் கட்சிகளும் சம்மதம் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் குழப்பம்
பதிப்பு: 2019 ஜன. 02 23:38
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 03 09:10
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Srilanka
#ProvincialCouncil
#Election
#PoliticalCrisis
வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் உள்ளிட்ட ஒன்பது மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக, உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. நாடாளுமன்றத் தேர்தலை இந்த ஆண்டின் முற்பகுதியில் நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய பிரதான இரு அரசியல் கட்சிகளும் விரும்பியுள்ளதாகவும் அதற்கேற்ற முறையில் இலங்கை நாடாளுமன்றத்தில் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு நாடாளுமன்றத் தேர்தலை நடத்த ஏற்பாடுகள் இடம்பெறுவதாகவும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.
 
மாகாண சபைத் தேர்தல்களை மேலும் ஒத்திவைப்பதற்கு ஏற்றவாறு அமைச்சரவையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி நாடாளுமன்ற அங்கீகாரத்தைப் பெறவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் நாடாளுமன்றத் தேர்தல் 2020 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தின் பின்னரே நடத்த முடியும். அல்லது இந்த ஆண்டின் இறுதியில் நடத்தலாம்.

சிங்கள பௌத்தர்களின் புனித நூலான திரிபீடகம் தேசிய மரபுரிமையாக எதிர்வரும் ஐந்தாம் திகதி அறிவிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன கூறியுள்ளார். புதிய அரசியல் யாப்புக்கான யோசனையில் பௌத்த சமயத்துக்கே முன்னுரிமை என ரணில் மாகாநாயக்க தேரர்களிடம் உறுதிப்படுத்தியுள்ளார். ஆகவே தேர்தலை நோக்கியே பெருந்தேசியவாத சிங்கள அரசியல் கட்சிகள் தங்களைத் தயார்ப்படுத்துகின்றன. இதில் தமிழ்த்தரப்பின் வகிபாகம் என்ன?

ஆனால் அதற்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோர் இணங்கியுள்ளனர்.

இதனால் பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்க ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுத்து வருவதாகக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

ஆனாலும் ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர் நளின் பண்டார, ஜனாதிபதித் தேர்தல் முதலில் நடைபெறும் எனக் கூறியுள்ளார். எனினும் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விருப்பத்திற்கு அமைவாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, மலையகத் தமிழ் கட்சிகள் முஸ்லிம் கட்சிகளின் ஆதரவுடன் சாதாரண பெரும்பான்மையோடு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டுச் சேராமல் அரசாங்கத்தை அமைக்க முடியும் என ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி நம்புகின்றது.

அந்த நம்பிக்கைக்கு ஏற்றவாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் இணக்கம் தெரிவித்துள்ளதாக தமிழரசுக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

அதேபோன்று மகிந்த தரப்பு அணியும் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தினால் தமக்குச் சாதமாக அமையும் என நம்புகின்றது. ஆனால் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என மூன்றாவது அரசியல் சக்தியாக இருக்கும் ஜே.வி.பி. எதிர்பார்க்கின்றது.

எவ்வாறாயினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதை விரும்புவதால், பிரேரணை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் இடம்பெறும் என கொழும்பு அரசியல் வட்டாரங்கள் உறுதியாகக் கூறுகின்றன.

அதேவேளை, வடக்கு கிழக்கு மாகாண சபைகளின் தேர்தல்களை ஒத்திவைப்பதற்கு தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் விரும்பவில்லை.

மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்க வேண்டும் என்று சம்பந்தனிற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகின்றது.

ஆனாலும் கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன் சொல்வதையே கேட்க வேண்டும் என்ற நிலைப்பாட்டோடு செயற்பட்டு வரும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுவதையே விரும்புவதாகவும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

புதிய அரசியல் யாப்புக்கான நகல் யோசனைகள் நாடாளுமன்றத்தில் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என சுமந்திரன் ஏலவே கூறியுள்ளார். ஆனாலும் ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் தற்போதைக்கு புதிய அரசியல் யாப்புக்கான யோசனைகள் முன்வைக்கப்படாது எனவும் கூறப்படுகின்றது.

இந்த விடம் தொடர்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் மாவை சேனாதிராஜாவுடன் விவாதித்துள்ளன.

எனினும் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாட்டுக்கு கட்டுப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகள் அவ்வப்போது முரண்பாட்டாலும் மௌனமாக இருப்பதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை, புதிய அரசியல் யாப்புக்கான நகல் யோசனைகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அனுமதிக்க முடியாதென மகிந்த தரப்பு திங்கட்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் உறுதியாகக் கூறியுள்ளது.

அதேவேளை, புதிய அரசியல் யாப்பு ஒற்றையாட்சித் தன்மை கொண்டது என்றும் பௌத்த சமயத்துக்கு மாத்திரமே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது என்றும் ரணில் விக்கிரமசிங்க கண்டி மகாநாயக்கத் தேரர்களிடம் கடந்த வெள்ளிக்கிழமை கூறியிருந்தார்.

இதேவேளை, சிங்கள பௌத்தர்களின் புனித நூலான திரிபீடகம் தேசிய மரபுரிமையாக எதிர்வரும் ஐந்தாம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

இதனால் அன்றைய தினம் இலங்கையில் உள்ள அனைத்து பௌத்த நிலையங்களிலும் இலங்கை அரச நிறுவனங்களிலும் பௌத்த சமயக் கொடி ஏற்றப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன இன்று புதன்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

2300 வருடங்களாக பௌத்த பிக்குகள் மற்றும் இலங்கை சிங்கள அரசியல் தலைவர்களினாலும் பௌத்த மக்களினாலும் போற்றிப் பாதுகாக்கப்படும் பௌத்தர்களின் புனித நூலான திரிபீடகத்தை, இலங்கையின் தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்த வேண்டும் என்பது மைத்திரிபால சிறிசேனவின் நீண்டகால எதிர்ப்பார்ப்பு என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆகவே நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக சிங்கள வாக்குகளைக் கருத்திற்கொண்டு, பௌத்த சமயத்துக்குரிய அனைத்துக் கௌவரங்களையும் மைத்திரிபால சிறிசேனவும் ரணில் விக்கிரமசிங்கவும் ஏட்டிக்குப் போட்டியாக வழங்கி வருகின்றனர் என்பது கண்கூடு.

இந்த நிலையில் புதிய அரசியல் யாப்பு ஒற்றையாட்சித் தன்மை கொண்டதல்ல என்றும் அது ஒருமித்த நாட்டைக் குறிக்கின்றது எனவும் சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் கூறிய விளக்கம் தொடர்பாக கேள்விகள் எழுந்துள்ளன.

ஒருமித்த நாடு என்று கூறப்படுவது கூட ஒற்றையாட்சியைத்தான் குறிக்கின்றது என ஏனைய தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சட்டத்தரணிகள் பலர் கூறுகின்றனர். ஆனாலும் அது ஒற்றையாட்சி அல்ல என்று சுமந்திரன் தொடந்து வலியுறுத்தி வருகின்றார்.

இந்த நிலையில் ஏனைய தமிழ் கட்சிகள், தமிழ் பிரமுகர்களின் வகிபாகம் என்ன? குறிப்பாக மாற்று அரசியல் அணி என்று கூறிக் கொள்ளும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, விக்னேஸ்வரன்- சுரேஸ் அணி ஆகிய கட்சிகள் எடுக்கப்போகும் மாற்று நடவடிக்கைகள் தொடர்பாகவும் கேள்விகள் எழாமல் இல்லை.