இன அழிப்புப் போருக்கு உதவிய சீனாவுடன் இலங்கை அரசின் ஒப்பந்தங்கள்

பாரிய கொழும்புத் துறைமுகப் பட்டினத்துக்கு விசேட சட்டமூலம், தனியான பிரதேசமாக அங்கீகரிப்பு

சீன உதவியுடன் அம்பாந்தோட்டையில் பொருளாதார வலயம் என்கிறார் அமைச்சர் ராஜித
பதிப்பு: 2018 ஜூன் 07 12:06
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 07 22:42
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
சீன அரசின் நிதியுதவியுடன் கொழும்பு போட் சிற்றி (Colombo Port City) என அழைக்கப்படும் பாரிய பட்டின நிர்மாணிப்புக்கு ஏற்ப, இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பில் தனியான சட்டமூலம் ஒன்று இணைக்கப்படவுள்ளது. நகல் சட்டமூலம் ஒன்றை தயாரிப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை, சீன சட்ட வல்லுநர்கள் நகல் சட்ட வரைபை தயாரிக்கும் பணிகளில் ஈடுபடுவதாகவும் உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன. இந்தச் சட்டமூலத்தின் ஊடாகக் கடலில் மண்ணால் நிரப்பப்பட்ட 269 ஹெக்ரேயர் நிலம் விசேட பிரதேசமாக அங்கீகரிக்கப்பட்டு தனி நிர்வாகம் ஒன்று அங்கு இயங்கவுள்ளது. கொழும்பின் அதி பிரமாண்ட வர்த்தகப் பட்டினத்தைத் தீர்மானிக்கும் வெளிச்சக்தி எதுவோ அதுவே முழு இலங்கைத்தீவையும் கேந்திரரீதியாகக் கட்டுப்படுத்தும் என்று சீனா கருதுகிறது.
 
அதேவேளை ஈழத்தமிழர்களின் கிழக்குக் கடலை அமெரிக்க இராணுவ மற்றும் பொருளாதார திட்டங்களுக்கு இலங்கை ஒற்றையாட்சி அரசு தாரை வார்த்து வருகிறது.

மறுபுறம், காங்கேயன்துறை தொடக்கம் தலைமன்னார் வரையான வடமேற்குக் கரையை இந்தியாவுக்குக் காட்டிப் பேரம் பேசும் படலம் ஒன்றும் திரைமறைவில் அரங்கேறிவருகிறது என்று கேந்திர விவகாரங்களை உன்னிப்பாக அவதானித்துவரும் தமிழ் அவதானிகள் கூர்மை செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர்.

வெளிச்சக்திகள் எல்லாவற்றுடனும் சமாந்தரமாகத் தாரை வார்ப்புப் படலத்தைத் தொடருவதன் மூலம் சிங்களப் பேரினவாதக் கருவூலத்துடனான ஒற்றையாட்சியைத் தக்கவைத்துக்கொள்ளலாம் என்ற எண்ணமே தென்னிலங்கையின் பிரதான கட்சிகள் மத்தியில் புரையோடிப்போயுள்ளதாக இந்த அவதானிகள் மேலும் தெரிவித்தனர்.

வடக்கு கிழக்கில் சிங்களப் படையினரை அதீத பெரும்பான்மையாகக் கொண்ட சைன்னியங்களை ஒற்றையாட்சி அரசு நிலை நாட்டி வைத்திருப்பதன் சூட்சுமமும் இதுவே என்றும் அந்த அவதானிகள் கூர்மைக்கு எடுத்தியம்பினர்.

வெளிச்சக்திகள் யாருடன் பேரம்பேசவேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதே இராணுவ மயமாக்கலின் பின்னணி.

இந்தப் பேரம்பேசலுக்கு எதிராகச் சிங்கள மக்கள் திரும்பாதிருக்கவே தமிழர்களுக்கு எதிரான கட்டமைப்பு இன அழிப்பு வேலைத்திட்டங்கள் பற்றிய முனைப்பு பேரினவாதக் குழுக்கள் மத்தியில் கட்டவிழ்த்துவிடப்படுகிறது.

தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான சிங்கள பௌத்த மேலாதிக்கச் சிந்தனை தூண்டப்படுவதற்குப் பின்னால் இவ்வாறான ஒரு தேவையும் இருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

கொழும்பு பட்டணத்தின் வரைபடத்தையே மாற்றும் வகையில் அதனுடன் சேரவிருக்கும் இந்த பாரிய பட்டினத்துக்கு, 2014 செப்டம்பர் 16 ஆம் திகதி சீன ஜனாதிபதி சிங்பின் அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைத்தார். இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வைபவ ரீதியாகப் பணிகளைத் தொடக்கி வைத்திருந்தார்.

சீனா, தமிழ் இன அழிப்புப் போருக்கு உதவியது என்ற மன நிலையில், இலங்கைக்கு ஆபத்தான திட்டங்கள் என்று தெரிந்தும் சிங்கள இடதுசாரிகள் கூட அமைதியாக இருக்கின்றனர்.
இதற்காக ஒதுக்கப்பட்ட நிலம் கொழும்பு துறைமுகத்தின் தென்முனையிலுள்ள அலைதாங்கியுடன் கூடிய இடமாகும். புதிதாக உருவாக்கப்படும் பாரிய பட்டினம் கடலில் நிரப்பப்பட்ட 269 ஹெக்டயர் நிலத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

கொழும்புத் துறைமுகத்தை ஒரு புறமாகவும், கொழும்பு காலிமுகத்திடல் முற்றவெளியை மறு புறமாகவும், துறைமுக நகரத்தின் மற்றைய பகுதி கடலை ஒட்டியதாகவும் அமைந்துள்ளது.

சுமார் 1.4 பில்லியன் டொலர் நிதியுதவியில் வானளாவிய கோபுரங்கள், உல்லாச ஹோட்டல்கள், கடைத்தொகுதிகள், பூங்காக்கள் ஆகியவை இதில் உள்ளடக்கப்படவுள்ளன.

சீன அரசின் கீழ் இயங்கும் சீனத் தொலைத் தொடர்புகள் நிர்மாண நிறுவனம் (CCCC) இலங்கையின் துறைமுக நகர நிறுவனம் (CHEC) ஆகியவை இணைந்து நிர்மாண வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தப்போது 61 சதவீத வேலைகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு பெரும் பட்டினம் திறந்து வைக்கப்படவுள்ளது.

அதன் பின்னர் துறைமுக நகரத்தில் இருந்து 12 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள கல்கிஸை வரையான கடற்பகுதியையும் நிலமாக்கும் திட்டம் இருப்பதாக நிர்மாண பணியை முன்னெடுக்கும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

அதேவேளை, சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்ற பொறியியலாளர் ஒருவரை மேற்கோள்காட்டி துறைமுக நகரத்தின் நிர்மாண வேலைகள் காரணமாக, கொழும்பு நகரம் பூமியில் அமிழ்வதாக சிங்கள வார இதழ் ஒன்று சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.

ஆனாலும் அந்த செய்தி உண்மைக்கு மாறானது என மேல்மாகாண மற்றும் மாநகரங்கள் அபிவிருத்தி அமைச்சு அறிக்கை ஒன்றில் கூறியிருந்தது.

அதேவேளை கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தித் திட்டத்திற்கான ஒப்பந்தம் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் செய்யப்பட்டதால், புதிய உடன்படிக்கை ஒன்று மைத்திரி ரணில் அரசாங்கத்தில் 2016ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கொழும்பு பாரிய பட்டினத்துக்கான தனியான சட்டமூலம், சீனாவின் இலங்கை மீதான ஆதிக்கத்துக்கு வழி வகுக்கும் என்றும், கடலில் மூடப்பட்ட 269 ஹெக்ரேயர் நிலப்பரப்பு, சீனாவின் தனியொரு மாநிலமாக செயற்படக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவும் இடதுசாரி இயக்கங்கள் கூறிவருகின்றன.

தனியான சட்டமூலத்தை ஏற்க முடியாதென ஐக்கிய சோசலிச முன்னணி கூறியுள்ளது. இது தொடர்பாக ஜே.பி.வி.கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்து.

ஆனாலும் சீனா தமிழ் இன அழிப்பு போருக்கு உதவியது என்ற மனநிலையில், இலங்கைக்கு ஆபத்தான திட்டங்கள் என்று தெரிந்தும். பிரதான சிங்கள பேரினவாத கட்சிகள். சிங்கள பொது அமைப்புகள் கூட அமைதியாக இருப்பதாக கொழும்பு அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனியான சட்டமூலம் குறித்து மஹிந்த ராஜபக்சவை மையப்படுத்திய கூட்டு எதிர்க்கட்சி மௌனமாக இருப்பதாக மூத்த அரசியல் பத்தி எழுத்தாளர் ஒருவர் கூர்மை செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

அதேவேளை சீன அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் விசேட பொருளாதார வலயமொன்றை அம்பாந்தோட்டையில் அமைக்கவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனரட்ன கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் இலங்கை மற்றும் சீன வழங்கல் மற்றும் கைத்தொழில் வலயங்களை அமைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மூன்று கட்டங்களின் கீழ் மேற்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

சீன அரசாங்கத்தின் ஊடாக வைனா இன்ஜினியரிங் கோபரேஷன் நிறுவனம் இந்த திட்டத்தை மேற்கொள்ளவுள்ளது. இலங்கையின் வேலைத்திட்ட முகாமைத்துவம் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சு, இந்த திட்டம் குறித்து இலங்கை அமைச்சரவையில் பிரேரணை சமர்ப்பித்து அங்கீகாரம் பெற்றுள்ளதாக இலங்கை அமைச்சர் சாகல ரட்னாயக்கா கூறியுள்ளார்.