ஒக்டோபர் அரசியல் நெருக்கடியின் பின்னரான நிலையில்

இலங்கையில் நெருக்கடிக்குள்ளாகி வரும் சிங்கள அரசியல் கட்சிகள் - சந்திரிக்கா புதிய கட்சியை ஆரம்பிக்கின்றார்?

பௌத்த சிங்கள மக்களின் வாக்குகளை நம்பி ராஜபக்ச குடும்பம்
பதிப்பு: 2019 ஜன. 22 21:34
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 22 23:22
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Srilanka
#Political
#ChandrikaKumaratunga
#MaithripalaSrisena
#MahindaRajapaksha
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளார். தனது தந்தையான எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்காவினால் ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரான சந்திரிக்கா அந்தக் கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியை ஆரம்பிப்பார் என்றும் அது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தன்னுடன் ஒத்துழைக்கக் கூடிய மூத்த உறுப்பினர்களுடன் பேச்சு நடத்தியுள்ளதாகவும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. மகிந்த ராஜபக்சவுடன் ஏலவே முரண்பாடுகள் இருந்தன. ஆனாலும் மைத்திரிபால சிறிசேனவுடன் சமீபகாலமாக ஏற்பட்ட முரண்பாடுகள் குழப்பங்களினால் சந்திரிக்கா அதிருப்தியடைந்துள்ளதாக கட்சியின் உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.
 
மகிந்த ராஜபக்சவின் ஒன்பது ஆண்டுகால ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலருடன் கூட்டுச் சேர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் ஒத்துழைப்புடன் கட்சியின் பொதுச் செயலாளாராக அப்போது பதவி வகித்திருந்த மைத்திரிபால சிறிசேனவை எதிர்க்கட்சியின் பொதுவேட்பாளராக நியமித்திருந்தார்.

ஈழத் தமிழர்களின் அரசியல் பிரச்சினைகளைத் தீர்க்காமல் ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்குள் நின்று கொண்டு வெறுமனே அதிகாரமே இல்லாத அதிகாரப்பரவலாக்கலை மாத்திரம், ஆனால் அதனையும் கொடுக்க விரும்பமில்லாமல் பிக்குமாரைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் பிரதான சிங்கள அரசியல் கட்சிகள், தற்போது தங்களுக்குள் பிளவுபட்டுச் சிதறுண்டு வருகின்றன.

2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமரர் சோபித தேரரின் ஆலோசனையுடன் மேற்கொண்ட முயற்சியின் பயனாக 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றிருந்தார். ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவி ஏற்றிருந்தார்.

அதன் பின்னரான அரசியல் சூழலில் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் இணைந்து தேசிய நல்லிணக்க செயலணி ஒன்றை அமைத்து சந்திரிக்கா செயற்பட்டு வந்திருந்தார்.

மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குழுவினரை நீக்கம் செய்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைத் தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டங்களிலும் ஈடுபட்டு வந்தார். அதற்காகவே மைத்திரிபால சிறிசேனவுக்கு கட்சியின் தலைமைப் பதவியும் வழங்கப்பட்டிருந்தது.

ஆனால், மைத்திரிபால சிறிசேனவுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் குறிப்பாக கடந்த ஒக்ரோபர் மாதம் 26 ஆம் திகதி மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்கி உருவாக்கப்பட்ட அரசியல் நெருக்கடிகளின் பின்னர் சந்திரிக்கா அதிருப்தியடைந்திருந்தார்.

அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மேலும் உடைக்கும் நோக்கத்தோடு ஸ்ரீலங்கா பொஜன பெரமுன என்ற கட்சியை மகிந்த ராஜபக்சவின் சகோதரரான பசில் ராஜபக்ச 2016 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் இரண்டாம் திகதி ஆரம்பித்திருந்தார்.

தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பலர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்து மகிந்த ராஜபக்சவையும் அவரது குழுவினரையும் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய தலைவர் மைத்திரிபால சிறிசேனவும் சந்திரிக்காவை கட்சியின் மத்திய குழுக் கூட்டங்களுக்கு அழைப்பதில்லை.

இந்த நிலையில் அதிருப்தியடைந்திருக்கும் சந்திரிக்கா புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்து தேர்தல் அரசியலில் ஈடுபடவுள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உடைத்து இரண்டாவது தேசியக் கட்சியாக வரக்கூடிய முறையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை பசில் ராஜபக்ச உருவாக்கியதாகவே சிங்கள விமர்சகர்கள் கூறியிருந்தனர்.

பண்டாரநாயக்கா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை 1951 ஆண்டு செப்ரெம்பர் மாதம் இரண்டாம் திகதி உருவாக்கியிருந்தார். பொதுஜன பெரமுன கட்சியை மகிந்த ராஜபக்சவின் சகோதரரான பசில் ராஜபக்ச 2016 ஆம் ஆண்டு அதே மாதம் அதே திகதியில் ஆரம்பித்திருந்தார்.

எனவே பண்டாரநாயக்காவின் பரம்பரைக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராக ராஜபக்ச குடும்பம் மாற்று அரசியல் கட்சி ஒன்றை உருவாக்கி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஓரம்கட்ட முற்பட்டு வருகின்றது என்பது கண்கூடு.

இந்த நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்ப மைத்திரிபால சிறிசேனவும் ஒத்துழைக்கவில்லை. இதனால் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கும் முடிவுக்கு சந்திரிக்கா வந்துள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினராக சந்திரிக்கா நியமிக்கப்படலாம் எனவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்து செயற்படுத்தும் வரை ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்க சந்திரிக்கா விரும்பியுள்ளார் என்றும் கூறப்படுகின்றது.

ஆனாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினா் பதவியை ஏற்க வேண்டாம் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்ப ஒத்துழைப்பு வழங்குவதாகவும் மூத்த உறுப்பினர்கள் பலர் சந்திரிக்காவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் மற்றுமொரு தகவல் கூறுகின்றது.

எவ்வாறாயினும் ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் நகர்வுகள், இலங்கை அரசியலில் சிங்களப் பெரும்பான்மைக் கட்சிகளின் தனித்துவத்தை இழக்கச் செய்துள்ளது.

பௌத்த சிங்கள மக்களின் வாக்குகளை மாத்திரம் நம்பி அரசியலில் ஈடுபட்டு வரும் ராஜபக்ச குடும்பம், ஒப்பாசாரத்துக்காக குறைந்த பட்சமேனும் குறிப்பாக மலையகத் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஆதரவைப் பெற முற்படுகின்றது.

ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி பௌத்த சிங்கள மக்களின் வாக்குகளுடன் தமிழ் முஸ்லிம் மக்களின் ஆதரவைக் கூடுதலாகப் பெற்றுள்ளது.

அவ்வாறானதொரு நிலையில் சந்திரிக்கா புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்தால், தமிழ் முஸ்லிம் மக்களின் ஆதரவைப் பெறக் கூடிய ஏது நிலை இருக்கும் எனக் கூற முடியாது.

ஏனெனில், சந்திரிக்காவின் கடந்தகால அரசியல் செயற்பாடுகளும் தமிழர்களுக்கு கசப்பாணது.

எவ்வாறாயினும் ஈழத் தமிழர்களின் அரசியல் பிரச்சினைகளைத் தீர்க்காமல் ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்குள் நின்று கொண்டு வெறுமனே அதிகாரமே இல்லாத அதிகாரப்பரவலாக்கலை மாத்திரம், ஆனால் அதனையும் கொடுக்க விரும்பமில்லாமல் பிக்குமாரைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் பிரதான சிங்கள அரசியல் கட்சிகள், தற்போது தங்களுக்குள் பிளவுபட்டுச் சிதறுண்டு வருகின்றன.

இலங்கையில் தமிழ் சிங்களம் என்ற இரண்டு மொழிகளைப் பேசும் மக்கள் வாழ்கின்றனர் என்ற சிந்தனையோடு அதிகாரப் பங்கீட்டைச் செய்தால் மாத்திரமே சிங்கள அரசியல் கட்சிகள் நிம்மதியான அரசியலில் ஈடுபட முடியும் என அவதானிகள் கூறுகின்றனர்.

வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சியையே ஈழத் தமிழர்கள் கோரி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.