ஈழத் தமிழர்களின் கடற்பிரசேத்தை மையப்படுத்திய

அமெரிக்காவின் படைத்தளம்- சிங்கள அரசியல் கட்சிகள் எதிர்ப்பு வெளியிட்டாலும் மறைமுக ஆதரவு

சீன ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துவதாகக் கூறிக் கொண்டு அமெரிக்கா, இந்தியா கூட்டினைவு
பதிப்பு: 2019 பெப். 08 10:47
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: பெப். 08 12:31
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#USA,
#India,
#Geopolitics
தமிழ்பேசும் மக்களின் கிழக்கு மாகாணம் திருகோணமலையில் அமெரிக்கா படைத் தளங்களை அமைத்து வருவதாக கொழும்பை மையப்படுத்திய இலங்கை எதிர்க்கட்சிகளினால் குற்றம் சுமத்தப்பட்டு வரும் நிலையில், அமெரிக்காவுடன் புதிய பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திடும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளதாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் கூறுகின்றன. இந்தப் பாதுகாப்பு உடன்படிக்கை தொடர்பாக ஜே.வி.பி.உறுப்பினர் பிமல் ரட்ணநாயக்கா கடந்த வாரம் இலங்கை நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்த அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல அமெரிக்காவுடன் பாதுகாப்பு உடன்படிக்கைகள் செய்யப்படுவது வழமை என்று கூறினார்.
 
இந்த நிலையில் அமெரிக்கப் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினென்ட் கர்னல் டக்ளஸ் சி. ஹீஸ் இலங்கைக் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வாவை நேற்று வியாழக்கிழமை கடற்படை தலைமையகத்தில் சந்திதித்துள்ளார்.

முல்லைத்தீவு. திருகோணமலை உள்ளிட்ட கடற் பிரதேசங்களில் இலங்கைக் கடற்படையுடன் இணைந்து செயற்படுவதை மேலும் வலுப்படுத்துவது குறித்து பேசப்பட்டதாக இலங்கைக் கடற்படைத் தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை, ஆசியக் கடல் மையத்தில் அமெரிக்கக் கடற்படை தளங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அமெரிக்காவுக்கு இலங்கை இலக்கல்ல என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த புதன்கிழமை இலங்கை நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.

இலங்கைத் துறைமுகங்களுக்கு அமெரிக்கக் கடற்படையின் கப்பல்கள் வந்து சொல்கின்றன. அதற்காக அமெரிக்காவுக்கு படைத் தளம் அமைப்பதற்கு இடமளிக்க வேண்டிய அவசியம் எதுவுமே இல்லையெனவும் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமருக்கான கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, இலங்கையில் அமெரிக்காவின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்துக் கேள்வி எழுப்பயபோது. ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு பதிலளித்திருந்தார்.

திருகோணமலையில் கடற்படை முகாம் அமைக்க அமெரிக்காவுக்கு அனுமதி வழங்கத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றும், அமைச்சரவையினதும் நாடாளுமன்றத்தினதும் அங்கீகாரம் இல்லாமல் தீர்மானம் எடுக்க முடியுமா எனவும் வாசுதேவ நாணயக்கார கேள்வி மேலும் தொடுத்தார்.

ஆனால் ரணில் விக்கிரமசிங்க, அந்தக் கேள்வியை நிராகரித்தார். எனினும் மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ஜே.வி.பி உறுப்பினர்களும் அமெரிக்கா, திருகோணமலையில் கடற்படைத் தளம் அமைத்து வருவதை உறுதிப்படுத்திக் கூறினர்.

அதேவேளை, இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில், தமது கவனத்தைக் கூடுதலாகச் செலுத்தி வரும் அமெரிக்கா, ஈழத் தமிழர்களின் வடக்கு - கிழக்கு தாயகத்தில் குறிப்பாக திருகோணமலைத் துறைமுகத்தை இலக்கு வைத்து செயற்படுவதாக எமது கூர்மை செய்தித் தளம் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் செய்திகளையும் செய்திக் கட்டுரைகளையும் வெளியிட்டு வருகிறது.

முல்லைத்தீவு - திருகோணமலை உள்ளிட்ட கிழக்கு கடற்பகுதியில் எண்ணெய்வள ஆய்வு ஒன்றை அமெரிக்கா செய்து வருகின்றது. கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி எண்ணெய்வள ஆய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கு இந்தியாவின் நரேந்திரமோடி அரசு முழுமையான ஒத்துழைப்பு வழங்கி வருகின்றது. சீனாவின் இலங்கை மீதான ஆதிக்கமே திருகோணமலைத் துறைமுகத்தில் அமெரிக்கா கூடுதல் கவனம் செலுத்துவதற்குக் காரணமாகும்.

ஏனெனில் தென்சீனக் கடற் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்த சீனா முழு ஏற்பாட்டையும் செய்துள்ளது. ஆனால் இதற்குத் தடையாக இந்தியா இருப்பதை சீனா விரும்பவில்லை.

இதற்காக இந்தியாவின் கொல்லைப் புறமாகக் கருதப்படும் மியன்மார், நேபாளம், இலங்கை, வங்காளதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் வர்த்தகம், மூலப்பொருள் உட்பட ஏனைய விடயங்களிலும் இருதரப்பு உறவுகளைச் சீனா உருவாக்கி இந்தியாவை அச்சுறுத்தி வருகின்றது.

இதன் காரணமாகவே தென்சீன கடற்பரப்பில் இந்தியாவின் பிரசன்னத்தை ஜப்பான் வரவேற்று வருகின்றது.

அத்துடன் அமெரிக்காவின் டொனால்ட் ட்ரம்ப் அரசாங்கத்துடன் இந்தியாவின் நரேந்திரமோடி அரசு தற்போது உருவாகியுள்ள அரசியல் இராணுவ உறவுகளின் பின்னணியில் இந்தியா பெற்றிருக்கும் கடல் சுதந்திரத்தினால் சீனா அச்சமடைந்துள்ளது.

இந்த நிலையில் நாற்பத்து நான்கு நாடுகளின் கடற்படையினர் பங்குபற்றும் அமான் 2019 என்ற பெயரிலான மிகப்பெரிய கூட்டுப் பயிற்சி எதிர்வரும் எட்டாம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டுப் பயிற்சியில், இலங்கைக் கடற்படையும் பங்குகொள்ளவுள்ளது. ஆனால் அமெரிக்க இந்தியக் கடற்படை பங்குகொள்ளவில்லை.

அவுஸ்திரேலியா, கனடா, நைஜீரியா, பிலிப்பைன்ஸ், கட்டார், ரஷ்யா, சீனா, ஜேர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மலேசியா, மாலைதீவு உள்ளிட்ட 44 நாடுகளின் கடற்படை இந்தக் கூட்டுப் பயிற்சியில் இணையவுள்ளது.

ஆகவே, 2009 ஆம் ஆண்டு மே மாதத்தி்ற்குப் பின்னரான அரசியல் சூழலே அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளுக்கு இலங்கை கடற்பரப்பு உள்ளிட்ட இந்தோ பசுபிக் சமூத்திரத்தில் தமது நோக்கத்தை நிறைவேற்ற வசதியாக அமைந்து விட்டது எனலாம்.

இதற்கு மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய எதிர்க்கட்சியும் ஜே.வி.பியும் எதிர்ப்பு வெளியிட்டாலும், ஈழத் தமிழர்களின் தாயகம் சுயநிர்ணயம் என்ற அரசியல் நியாயப்பாடுகளை அழிக்க இந்த நாடுகளின் நகர்வுகள் உதவலாம் என்ற மன நிலை அனைத்து சிங்கள அரசியல் கட்சிகளுக்கும் உண்டு.

ஏனெனில் இந்த நாடுகளின் உதவிகளைப் பெற்றே 2009 ஆம் ஆண்டு மே மாதம் ஈழத் தமிழர்களின் போராட்டம் அழிக்கப்பட்டமை உலகமறிந்த உண்மை.