இறுதிப் போரில் நடந்தது இலங்கை அரசின் தமிழ் இனப்படுகொலைதான் என்ற

வடமாகாண சபையின் தீர்மானத்தை விக்னேஸ்வரன் ஜெனீவா மனித உரிமைச் சபையிடம் கையளிப்பாரா?

அல்லது தமிழரசுக் கட்சி போன்று தமிழ் மக்களுக்கு ஒரு கதையும் ஜெனீவாவுக்கு வேறு கதையும் சொல்லப்படுமா?
பதிப்பு: 2019 மார்ச் 03 23:48
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 04 01:07
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Srilanka
#TamilGenocide
#Vickneswaran
#GenevaSession
ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைச் சபை இலங்கை அரசாங்கத்துக்கு மீண்டும் கால அவகாசம் கொடுப்பதால், எதுவும் நடந்துவிடாது என தமிழ் அரசியல் பிரதிநிதிகள் அல்லாத தமிழ்த்தரப்பு கூறுகின்றது. ஈழத் தமிழர்கள் சார்பில் இலங்கை நாடாளுமன்றத்தில் அதிகளவு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதித் தலைவர் மாவை சேனாதிராஜா, கால அவகாசம் வழங்கக்கூடாது என்கிறார். ஆனால் கால அவகாசம் வழங்குவதே நல்லது என கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன் கூறுகின்றார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் தான் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்படுவதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல பகிரமங்கமாகவே தெரிவித்துள்ளார்.
 
அதேவேளை, ரணில் அரசாங்கம் கால அவகாசத்தைக் கோருவது இலங்கையின் இறைமையைக் காட்டிக் கொடுக்கும் செயல் என மகிந்த ராஜபக்ச தரப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

ஆனால் கடந்த காலங்களிலும் 2009 ஆம் ஆண்டு மே மாத்திற்குப் பின்னரான சூழலிலும் தங்கள் சட்டப் புலமையையும் ஆங்கில அறிவையும் அடகு வைத்துத் தங்கள் மூளையை விற்பனை செய்த, செய்து வருகின்ற தமிழ் அரசியல் பிரதிநிதிகளையே தமிழ் மக்கள் வரலாற்று ரீதியாகக் கண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த மாதம் ஜெனீவா மனித உரிமைச் சபை கூடவுள்ளது.

பிரித்தானியா, கனடா, ஜேர்மனி, மசிடோனியா, மொன்ரனிக்கோ ஆகிய நாடுகள் இணைந்து எதிர்வரும் 20ஆம் திகதி ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பான புதிய தீர்மானம் ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளன.

இந்தத் தீர்மானம் தொடர்பான அதிகாரபூர்வமற்ற கலந்துரையாடல் ஒன்று நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது. இந்தக் கலந்துரையாடலின் பின்னர் மேற்படி நாடுகளின் பிரதிநிதிகள் அதிகாரபூர்வமாக இலங்கையுடன் தொடர்பு கொண்டு பேசவுள்ளதாக ஜெனீவாத் தகவல்கள் கூறுகின்றன.

பொறுப்புக் கூறல் தொடர்பான இந்த நாடுகளின் தீர்மானத்தை ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் ஏற்றுக்கொள்ளவுள்ளதாக மகிந்த ராஜபக்ச தரப்பு உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன கூறியுள்ளார்.

2015 ஆம் ஆண்டு மைத்திரி - ரணில் அரசாங்கம் நல்லாட்சி எனக் கூறிக் கொண்டு பதவியேற்ற நிலையில் இலங்கை தொடர்பான அமெரிக்காவின் தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியிருந்தது என்றும் குற்றம் சுமத்தியுள்ள தினேஸ் குணவர்த்தன, அதன் தொடர்ச்சிதான் இந்த ஆண்டு அமர்விலும் இடம்பெறுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மகிந்த ராஜபக்சவை மையப்படுத்தியுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் அதனுடைய ஆதரவுக் கட்சிகள் கால அவகாசம் வழங்குவதை ஏற்றுக்கொள்ளாது என்றும் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இலங்கை அரசையும் இலங்கைப் படைகளையும் காட்டிக்கொடுக்க அனுமதிக்க முடியாதென மகிந்த தரப்பு உறுப்பினர் விமல் வீரவன்சவும் கூறியுள்ளார்.

ஆனால், கால அவகாசம் வழங்கப்படுதன் மூலம் இலங்கையில் மேலும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பலாம் என அமைச்சர் ராஜித சேனாரட்ன கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

காலத்துக்கு காலம் இலங்கை அரசாங்கம், சர்வதேச நாடுகள் ஆகியவற்றின் போக்குகளுக்கு ஏற்ப வளைந்து கொடுக்கின்ற அரசியல் செயற்பாடுகளில்தான் விக்னேஸ்வரனும் ஈடுபடுவாரா அல்லது உறுதியான மாற்றுத் தலைமைக்குரிய பண்புகளுடன் இயங்குவாரா என்பதும் இங்கு கேள்வி.

அதேவேளை, ஜெனீவா மனித உரிமைச் சபையின் விதப்புரைகளின் பிரகாரம் பேர்க்குற்ற விசாரணைகளை ஆரம்பித்தல், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரத்தில் நேர்மையுடன் பொறுக்கூறல் என்ற அடிப்படையில்தான் இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்படவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபைத் தகவல்கள் கூறுன்றன.

ஆனால் வெறுமனே நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புதல் என்ற கோசத்துடன் மாத்திரம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான கால அவகாசத்தை ரணில் அரசாங்கம் பயன்படுத்தி ஈழத் தமிழரின் அரசியல் பிரச்சினையின் உண்மையான தோற்றத்தை திசை திருப்பி விடும் என விக்கிரமபாகு கருணாரட்ன தலைமையிலான இடதுசாரி முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவின் ஏமாற்று நடவடிக்கைகளை ஜெனீவா புரிந்துகொண்டுள்ளது. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரட்டை வேடத்தை ஜெனீவா அறியவில்லை. இதுதான் மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டமைக்கான காரணம்.

இந்த நிலையிலேதான் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஜெனீவாவுக்குப் பயணம் செய்யவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில் நடந்தவை இன அழிப்பு என்று வடமாகாண சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியவர் விக்னேஸ்வரன். ஆனால் ஜெனீவாவுக்குச் சென்று விளக்கமளிக்கும்போது வடமாகாண சபையின் தீர்மானத்தை மனித உரிமைச் சபையின் உயர் அதிகாரிகளிடம் கையளிப்பாரா? அல்லது தமிழ் இனப்படுகொலைதான் நடந்தது என்று அடித்துக் கூறுவாரா?

ஆகவே போர்க்குற்ற விசாரணை என்பதை விட இனப்படுகொலை பற்றிய விசாரணைகள் வேண்டும் என்றும் அதற்கு நேரடியான சர்வதேச விசாரணை அவசியம் எனவும் விக்னேஸ்வரன் ஜெனீவாவில் கோருவாரா?

அல்லது நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் வாக்குகளைப் பெறும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் போன்று தமிழ் மக்களுக்கு ஒரு கதையும் ஜெனீவா மனித உரிமைச் சபை அதிகாரிகளுக்கு வேறு ஒரு கதையும் கூறி இரட்டை வேடம் போடுவாரா என்று விக்னேஸ்வரன் தொடர்பான கேள்விகளும் தற்போது எழுகின்றன.

அதுவும் விக்னேஸ்வரன் ஜெனீவாவுக்குச் செல்லவுள்ளார் என்று செய்திகள் வெளியான பின்னரே இவ்வாறான கேள்விகள் எழ ஆரம்பித்துள்ளன.

வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சி அதிகாரமே ஈழத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு என விக்னேஸ்வரன் உருவாக்கிய தமிழ் மக்கள் பேரவை வரைபு ஒன்றை தயாரித்து ரணில் அரசாங்கத்திடம் கையளித்திருந்தது.

ஆனால், தமிழ் மக்கள் பேரவையில் இருந்து வெளியேறி சில மாதங்களுக்கு தமிழ் மக்கள் கூட்டணி என்ற புதிய கட்சி ஒன்றை விக்னேஸ்வரன் உருவாக்கியபோது, தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட அந்த வரைபு பற்றி எதுவுமே அவர் பேசவில்லை.

ஆகவே காலத்துக்கு காலம் இலங்கை அரசாங்கம், சர்வதேச நாடுகள் ஆகியவற்றின் போக்குகளுக்கு ஏற்ப வளைந்து கொடுக்கின்ற அரசியல் செயற்பாடுகளில்தான் விக்னேஸ்வரனும் ஈடுபடுவாரா அல்லது தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற உறுதியான மாற்றுத் தலைமைக்குரிய பண்புகளுடன் இயங்குவாரா என்பதும் இங்கு கேள்வி.

பூகோள அரசியல் நிலைமைக்கு ஏற்ப தமிழ்த்தரப்பின் நியாயப்பாடுகளை புரியவைத்து இனப்படுகொலைதான் நடந்தது என்பதை சர்வதேச சட்டங்கள் ஊடாக நியாயப்படுத்தும் தளமாக ஜெனீவா மனித உரிமைச் சபையை விக்னேஸ்வரன் பயன்படுத்தக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.

இனப் படுகொலைதான் நடந்தது என்ற வடமாகாண சபையின் தீர்மானத்துக்கும் சட்ட அந்தஸ்த்து உள்ளது. ஏனெனில் அது மக்களால் ஜனநாயக ரீதியான தேர்தல் ஒன்றின் மூலம் தெரிவு செய்யப்பட்ட சபை. ஆகவே அந்த சபையின் தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிரகரிக்கவும் முடியாது.

அப்படி நிராகரித்தால். 13 ஆவது திருத்தச்சட்டத்தின் மூலமான மாகாண சபைகளின் அதிகாரமற்ற தன்மையைக் கூட விபரிக்கலாம்.

குறிப்பாக ஜெனீவா உப குழுக் கூட்டங்களில் விக்னேஸ்வரன் இந்த நியாயங்களை முன்னாள் முதலமைச்சர் என்ற முறையில் எடுத்துக் கூற முடியும். அதற்கான ஆற்றல், சட்ட அறிவு சர்வதேசத் தொடர்பாடல் அவரிடம் உண்டு.

ஆனால், கடந்த காலங்களிலும் 2009 ஆம் ஆண்டு மே மாத்திற்குப் பின்னரான சூழலிலும் தங்கள் சட்டப் புலமையையும் ஆங்கில அறிவையும் அடகுவைத்துத் தங்கள் மூளையை விற்பனை செய்த, செய்து வருகின்ற தமிழ் அரசியல் பிரதிநிதிகளையே தமிழ் மக்கள் வரலாற்று ரீதியாகக் கண்டு வருகின்றனர்.

எனவே விக்னேஸ்வரன், அந்த மூளையை விற்பனை செய்கின்ற வரலாற்றுத் தவறுகளையும் வரலாற்றுத் துரோகங்களையும் மாற்றுவாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

இந்த இடத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எவ்வாறு செயற்படுகின்றது, அல்லது எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை இந்தச் செய்திக் கட்டுரை அவர்களுக்குப் புரிய வைத்திருக்கும்.

நிரந்தர அரசியல் தீர்வு ஒன்று கிட்டும் வரை, சாதாரண கட்சி அரசியல் செயற்பாடுகளுக்கு அப்பால் தேசிய இயக்கம் ஒன்றைக் கட்டியெழுப்ப வேண்டிய அவசியத்தை தமிழ்ப் பிரதிநிதிகள் நம்புவதாக இல்லையே.