வடக்கு கிழக்கில்

மூன்று தசாப்த போரின் பிடிக்குகள் சிக்கிய பெண்கள் நுண்கடன் திட்டத்திலிருந்து மீள்வது எப்போது?

தொடரும் கவனயீர்ப்பு போராட்டங்களுக்கு கிடைக்கும் பலன் என்ன?
பதிப்பு: 2019 மார்ச் 10 15:52
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 10 15:57
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Srilanka
#Vavunita
#NorthandEast
#MicroCredit
#Suicide
#Protest
மூன்று தசாப்த போரின் பிடிக்குகள் சிக்கி, பல சவால்களுக்கு மத்தியில் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களில் மீண்டும் மீள்குடியேறியுள்ள மக்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் சுரண்டல் செயற்பாடுகள் கேட்பாரற்று தொடர்கின்றன. இந்நிலையில் நுண்கடன் நிதி நிறுவனங்களிடம் சித்திரவதைப்படும் பெண்களின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி வவுனியா பிரதேச செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் ஒன்றியம், வவுனியா நகர சிறுவியாபாரிகள் சங்கம், பசுமை தொழிலாளர் நலன்புரிச் சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குறிப்பாக வடக்கு மாகாண மக்களை இலக்குவைத்து அனுமதியற்ற தென் பகுதி நிதி நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் முறையற்ற கடன் வழங்கல் நடவடிக்கையால் பலர் தற்கொலை செய்யும் நிலைமையும் ஏற்பட்டிருக்கின்றது.

அனுமதியற்ற நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள், மீள்குடியேறிய மக்களின் வறுமை மற்றும் வாழ்வில் முன்னேறத் துடிக்கும் முயற்சிகளை தமக்கு சாதகமாக பயன்படுத்திவருகின்றமை கவலைக்குரிய ஒன்றாக தற்போது மாறியுள்ளது.

இந்த சந்தர்ப்பங்களை தமக்கு சாதமாக பயன்படுத்தும் அனுமதியற்ற நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் நிர்ணயிக்கப்பட்ட வட்டிவீதங்களை விட அதிக வட்டிக்கு மக்களுக்கு கடன்களை வழங்கி, அவர்களை மீளமுடியாத துயருக்குள் தள்ளிவிடுகின்றனர்.

இந்த நுண்கடன்களால் மக்கள் மத்தியில் ஏற்பட்ட சமூக பிரச்சினைகள் கடந்த காலங்களில் வலுவடைந்த நிலையில், அது குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

எனினும் இந்த கடன் வழங்கல் நடவடிக்கையால் குடும்பங்களிடையே பல பிரச்சினைகள் உருவாகியிருந்த நிலையில், இது குறித்து ஆய்வுகளை மேற்கொள்வதற்காக கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி வட மாகாணத்திற்கு விஜயம் செய்திருந்தார்.

இந்த விஜயத்தின் போது மத்திய வங்கியின் கிளிநொச்சி பிரதேச அலுவலகத்தில் வைத்து வடமாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் இயங்கும் கிராம மட்ட அமைப்புக்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட ஏனையவர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். அனுமதியற்ற நுண்கடன் வழங்கும் நடவடிக்கையால் வறுமைப்பட்ட மக்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாகவும் குடும்பங்களிடையே பிளவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் மாதர் சங்க பிரதிநிதிகள் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை பெயரே அறியாத சிங்களப் பெயர் கொண்ட நிதி நிறுவனங்கள் முறையற்ற விதத்தில் கடன்களை வழங்கிவருகின்றமை ஆய்வொன்றில் கண்டறியப்பட்டமை தொடர்பில் இந்த கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

தற்போது கட்டுப்பாடுகள் இன்றி இயங்கும் நிதி நிறுவனங்கள் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கான வழிமுறையா என மக்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

புலிகளின் நிர்வாகத்தின் கீழ் கடன் பெறுவதிலும் ஓர் கட்டமைப்பு பேணப்பட்ட போதிலும் தற்போது அனைத்து வளங்களையும் சட்டங்களையும் வைத்துள்ள அரசினால் ஏன் அவ்வாறு செய்ய முடியாதுள்ளது எனவும் அவர்கள் வினவினர்.

மக்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்த மத்திய வங்கியின் ஆளுநர், கடன் வழங்கலை நிறுத்த முடியாது என்ற போதிலும் எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு மக்களிடம் இருந்து யோசனைகளை கோரியிருந்தார்.

எனினும் இதுவரை இதனைத் தடுப்பதற்போ அல்லது அதிலிருந்து மக்களை விடுவிப்பதற்கோ உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு அது செயற்படுத்தப்படவில்லை.

மீள்குடியேறியுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மாத்திரமல்லாமல், ஒட்டுமொத்த குடும்ப சூழலையே சின்னாபின்னமாக்கும் இந்த நுண்கடன் வழங்கல் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்த வேண்டிய கடப்பாடு இலங்கை மத்திய வங்கிக்கு உரியது.

எவ்வாறாயினும் போரினால் அனைத்தையும் இழந்து அடிப்படையிலிருந்து தமது வாழ்வை மீளக்கட்டியெழுப்பிவரும் மக்களை நுண்கடன் பிரச்சனையிலிருந்தும் தற்கொலை போன்ற செயற்பாடுகளிலிருந்தும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கு காணப்படுகின்றது.