சாதாரண தொழிலாளி நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் உழைக்கும் நிலையில்

இலங்கைப் படையினரால் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு மாதம் ஆறாயிரம் ரூபாய் நஷ்டஈடு

சர்வதேச விதியின் படி குறைந்தது 4 மில்லியன் வழங்க வேண்டும் - ஆனாலும் நீதி மாத்திரமே அவசியம் - உறவினர்கள்
பதிப்பு: 2019 மார்ச் 12 10:06
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 12 22:32
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Srilanka
#OMP
#MissingPersons
#Mangalasamaraweera
#Saththivel
#Humanrights
போருக்கு முன்னரும் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தி்ற்குப் பின்னரான சூழலிலும் வடக்கு - கிழக்கு, கொழும்பு ஆகிய பிரதேசங்களில் இலங்கைப் படையினரால் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஆறாயிரம் ரூபாய் வழங்குவதற்கு ரணில் தலைமையிலான அரசாங்கத்தின் நடப்பு நிதியாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் மங்கள சமரவீர வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்து உரையாற்றியபோதும் இந்த உதவி தொடர்பாக கூறியுள்ளார். ஆனால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான இல்லாமைச் சான்றிதழ் (Certificate of absence) வைத்திருப்பவர்களுக்கு மாத்திரமே மாதம் ஆறாயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.
 
அமைச்சர் இவ்வாறு கூறியமை தொடர்பாக வடக்கு - கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் 750 நாட்களுக்கும் அதிகமாகப் போராட்டம் நடத்தி வரும் உறவினர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

சாதாரணமாக ஒரு கூலித் தொழிலாளி நாள் ஒன்றுக்குக் குறைந்தது ஆயிரம் ரூபாய் வரை உழைக்க முடியும். ஆகவே மாதம் 30 ஆயிரம் ரூபாயை சாதாரண தொழிலாளி ஒருவர் சம்பாதிப்பார். இந்த நிலையில் மாதம் ஆறாயிரம் ரூபாயை எந்த அடிப்படையில் இலங்கை அரசாங்கம் வழங்குகின்றது?

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் முன்னர் ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் அதனை உறவினர்கள் விரும்பவில்லை நிராகரித்தனர்.

தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது எனக் கூற வேண்டும் எனவும் நஷ்டஈட்டு அவசியம் இல்லை எனவும் நீதி கிடைக்க வேண்டும் என்றும் உறவினர்கள் பதிலுக்குக் கூறியிருந்தனர்.

இந்த நிலையில் மாதாந்தம் உதவித் தொகை வழங்கப்படும் என அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ளமை தொடர்பாக உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக மனித உரிமைச் செயற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் கூர்மைச் செய்தித் தளத்திற்குக் கூறியுள்ளார்.

இதன் பின்னணியில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு செயற்படுவதாகவும் அரசியல் நோக்கம் இருப்பதாகவும் சக்திவேல் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கீரிக்கப்பட்ட சட்டமூலம் ஒன்றின் பிரகாரம் காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டறிவதற்கான அலுவலகம் (OMP) ஒன்றை ரணில் அரசாங்கம் கொழும்பில் அமைத்திருந்தது.

அலுவலகத்தின் தலைவராக சட்டத்தரணி சாலிய பீரிஸ் கடமையாற்றுகின்றார். இந்த அலுவலகத்தின் அதிகாரிகள் வடக்கு - கிழக்கு பிரதேசங்களில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் வாக்கு மூலங்களைப் பதிவு செய்தும் வருகின்றனர்.

இலங்கை அரசாங்கம் ஏமாற்றுவதாகவும் ஆறாயிரம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டதன் மூலம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெறுமதியைக் கொச்சைப்படுத்துவதாகவும் மனித உரிமைச் சட்டத்தரணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஆனால் இந்த அலுவலகம் தமக்குத் தேவையில்லை எனவும் இலங்கை அரசாங்கத்தின் இந்த அலுவலகம் மீது தமக்கு நம்பிக்கை இல்லை என்றும் உறவினர்கள் கூறியுள்ளனர். எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டிருந்தனர்.

ஆனாலும் அழுத்தங்களினால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சிலர், இந்த அலுவலகத்தில் தமது உறவினர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான விபரங்களைப் பதிவு செய்துள்ளனர். ஆனால் இலங்கைப் பொலிஸ் நிலையங்களில் அவர்கள் எந்தவொரு பதிவுகளையும் செய்யவில்லை.

எனினும் சிலர் வேறு அரசசார்பற்ற நிறுவனங்களிலும் இலங்கைப் படையினரால் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளின் விபரங்களை பதிவு செய்திருந்தனர்.

இவ்வாறு பதிவு செய்தவர்களுக்கு மாத்திரமே மாதாந்த உதவித் தொகை வழங்கப்படவுள்ளதாகக் கூறப்படுகின்றது. ஆனாலும் இல்லாமைச் சான்றிதழ் (Certificate of absence) அதிகாரபூர்வமாக எங்கு பெறப்பட வேண்டும் என்பதை அமைச்சர் மங்கள சமரவீர விபரமாகக் கூறவில்லை.

அத்துடன், உறவினர்களின் பதிவுகளின் பிரகாரம் இல்லாமைச் சான்றிதழ் வழங்கப்படுவது தொடர்பாக அரசாங்கம், காணாமல் போவோரைக் கண்டறியும் அலுவலகத்திற்கு (OMP) அறிவித்ததா என்பது குறித்து அதன் தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸ் இதுவரை எதுவுமே தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் அமைச்சர் மங்கள சமரவீரவின் வரவு செலவுத் திட்ட விதப்புரையின் பிரகாரம் எவ்வாறு மாதாந்த உதவித் தொகை வழங்கப்படும் என உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அதேவேளை, வடக்கு கிழக்கு பகுதிகளில் இலங்கை அரசாங்கத்தின் காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டறிவதற்கான அலுவலகம் திறக்கப்படுவதையும் உறவினர்கள் விரும்பவில்லை எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அமைச்சர் மங்கள சமரவீர மாதாந்த உதவித் தொகை குறித்து அறிவித்துள்ளார். ஆகவே நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜெனீவா மனித உரிமைச் சபையின் அமர்வுகளைச் சமாளிக்கும் நோக்கில் இலங்கை அரசாங்கம் இவ்வாறான அறிவிப்புக்களைச் செய்வதாக அருட் தந்தை சக்திவேல் குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கை அரசாங்கம் ஏமாற்றுவதாகவும் ஆறாயிரம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டதன் மூலம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெறுமதியைக் கொச்சைப்படுத்துவதாகவும் மனித உரிமைச் சட்டத்தரணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகுதி தராதரம் தொழில் அடிப்படையில் குறைந்தது நான்கு மில்லியன் நஷ்டஈடாக வழங்கப்பட வேண்டும் என்பது ஜெனீவா மனித உரிமைச் சபையின் அடிப்படை விதிகளில் ஒன்று எனக் கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், ஆறாயிரம் ருபாய் என்பது இலங்கை அரசாங்கத்தின் கொச்சைப்படுத்தும் நடவடிக்கை எனக் கூறியுள்ளார்.

சாதாரணமாக ஒரு கூலித் தொழிலாளி நாள் ஒன்றுக்குக் குறைந்தது ஆயிரம் ரூபாய் வரை உழைக்க முடியும். ஆகவே மாதம் 30 ஆயிரம் ரூபாயை சாதாரண தொழிலாளி ஒருவரால் சம்பாதிக்கலாம்.

இந்த நிலையில் மாதம் ஆறாயிரம் ரூபாய் எந்த அடிப்படையில் இலங்கை அரசாங்கம் வழங்குகின்றது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் இந்தச் செயற்பாட்டை ஜெனீவா மனித உரிமைச் சபை வெளிப்படையாகக் கண்டிக்க வேண்டும் என சட்டத்தரணி காண்டீபன் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்துள்ளார்.