காதர் மஸ்தானின் நியமனம், வடக்கில் முளை விடும் இந்துத்துவ பௌத்தவாதிகளின் இனவாதம்

தமிழ் முஸ்லிம் முரண் நிலையைத் தூண்டி, உரிமைப் பயணத்தைச் சிதைக்கச் சில்லறைச் சதி

ஒற்றையாட்சி அரசியலமைப்பை ஏற்கவைக்க எடுக்கப்படும் நகர்வு
பதிப்பு: 2018 ஜூன் 13 08:42
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: செப். 14 19:10
main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
ஒற்றையாட்சி அரசியல் யாப்பை ஈழத்தமிழர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற பிரயத்தனமும், அதற்கு ஏதுவாக தமிழ் முஸ்லிம் மக்களிடையே முரண்பாடுகளை ஊக்குவிப்பதும் இலங்கை அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என்று பிரபல கல்வியாளர்களும், தமிழ்ச் சட்டத்தரணிகளும் தெரிவித்துள்ளனர். இந்துசமய விவகாரப் பிரதியமைச்சராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த இஸ்லாமியரான காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டமை குறித்து யாழ் பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர்களான கலாநிதி கே.ரி கணேசலிங்கம், கலாநிதி எஸ்.ரகுராம், அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் மற்றும் சட்டத்தரணிகளான காண்டீபன், சத்தியகுமார் ஆகியோர் கூர்மை செய்தித் தளத்திற்குக் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். இதனிடையே இந்த நகர்வுகளின் பின்னணிகள் பற்றிய அறிவின் தேவை மேலும் அதிகரித்துள்ளது.
 
காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டமையானது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, இலங்கை ஒற்றை ஆட்சி அரசாஙகத்துடன் இணக்க அரசியல் நடத்தியன் விளைவுதான் என்று சட்டத்தரணி காண்டீபன் தெரிவித்தார்.

70 ஆண்டுகால அரசியல் போராட்டத்தை இந்துசமய பிரதியமைச்சருக்கான போராட்டமாக மாற்றிவிட முற்படும் இலங்கை ஜனாதிபதியின் சதித்திட்டத்தை கண்டனம் வெளியிடும் இந்து அமைப்புகள் புரிந்துகொள்ள வேண்டும் -சட்டத்தரணி காண்டீபன்
இந்த நியமனத்தைக் கண்டித்துப் பல இந்து அமைப்புகள் கணடனம் வெளியிட்டுள்ளன. ஆகவே தமிழர் ஒருவரை இந்துசமய பிரதியமைச்சராக நியமித்தால் போதும் என்ற நிலையும், அதன் மூலம் ஒற்றையாட்சியை ஈழத் தமிழர்கள் எற்றுக்கொண்டார்கள் என்றும் இலங்கை அரசாங்கத்தினால் உலகத்துக்கும் காண்பிக்க முடியும் எனவும் கூறிய அவர், அதற்காகவே இவ்வாறான செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுச் செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

70 ஆண்டுகால அரசியல் போராட்டத்தை இந்துசமயப் பிரதியமைச்சருக்கான போராட்டமாக மாற்றிவிட முற்படும் இலங்கை ஜனாதிபதியின் சதித்திட்டத்தை கண்டனம் வெளியிடும் இந்து அமைப்புகள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் காண்டீபன் குறிப்பிட்டார்.

இதேவேளை, நல்லிணக்கம் என்ற பெயரில் தமிழ் முஸ்லிம் மக்களிடையே முரண்பாடுகளை ஊக்குவித்து அதனைக் கூர்மைப்படுத்துவதுதான் இலங்கை அரசின் பிரதான உத்தி என்று யாழ் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறையின் தலைவர் கலாநிதி கே.ரி கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு முன்னர், சமாதானத்துக்கான போர் என்று கூறியது போன்று, தற்போது இன நல்லிணக்கம் என்ற பெயரில் முரண்பாடுகள் தூண்டிவிடப்படுவதாகவும் அவர் கூறினார்.

கண்ணப்பநாயனாரைத் தனது நாயன்மார்களில் ஒருவராகச் சேர்த்துக்கொண்ட சைவத் தமிழ்ப் பாரம்பரியத்துக்கோ அன்றேல் தமிழ்த் தேசிய மரபுக்கோ தமிழ் பேசும் முஸ்லிம்களின் மாட்டிறைச்சி வியாபாரம் அடிப்படையில் பிரச்சனையான ஒரு விடயம் அல்ல
கிழக்கு மாகாணத்தில் அவ்வாறான முரண்பாடுகளை ஊக்குவித்ததுபோன்று வடக்கு மாகாணத்திலும் தமிழ் முஸ்லிம் முரண்பாடுகளை ஏற்படுத்துவதே இலங்கை அரசாங்கத்தின் அடுத்த நோக்கம் என்றும் அவர் கூறினார்.

காதர் மஸ்தானுக்கு இந்து சமய விவகார பிரதியமைச்சர் பதவியுடன் வடமாகாண அபிவிருத்தி அமைச்சுப் பதவியும் வழங்கப்பட்டுள்ளமை தமிழ் முஸ்லிம் முரண்பாட்டை ஊக்குவிக்கும் சதியென சட்டத்தரணி சத்தியகுமார் தெரிவித்தார்.

அதேவேளை, ஈழத் தமிழர்களின் பிரதான அரசியல் கோரிக்கையில் இருந்து விலகிச் செல்லும் முறையில் முரண்பாடுகளைத் திட்டமிட்டு உருவாக்கும் இவ்வாறான செயற்பாடுகளை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்த பொறிமுறைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என யாழ் பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கை நெறியின் மூத்த விரிவுரையாளர் கலாநிதி எஸ். ரகுராம் தெரிவித்தார்.

வடமராட்சி கிழக்கில் கடலட்டை தொழிலில் தென்னிலங்கை வியாபாரிகள் ஈடுபடுகின்றமையும் அது தொடர்பான முரண்பாடுகளும் கூட ஈழத் தமிழர்களின் 70 ஆண்டுகால அரசியல் போராட்டத்தின் பிரதான இலக்கை திசை திருப்பும் செயற்பாடுகள்தான் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்துசமய விவகாரங்களுக்கான அமைச்சுப் பதவியை இஸ்லாமியர் ஒருவருக்கு வழங்குவது இன நல்லிணக்கம் என்றால் பௌத்த சமய விவகார அமைச்சுப் பதவியை ஒரு சைவத் தமிழருக்கு வழங்க இலங்கை அரசு தயாராக இருக்கிறதா என அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் கேள்வி எழுப்பினார்.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று செவ்வாய்க்கிழமை காதர் மஸ்தான் இந்து சமய விவகாரத்துடன் வடமாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

காவியுடை
தமிழர் தாயகத்தைச் சிங்கள பௌத்தமயமாக்க அயராதுழைக்கும் யாழ் நாகவிகாரை புத்தபிக்குவுடன் கூடியிருந்து தமிழ் பேசும் முஸ்லிம்களின் மாட்டிறைச்சி வியாபாரத்திற்கு எதிராகக் கருத்துவெளியிடும் காவியுடை தரித்த சைவர்களாகத் தம்மை வெளிப்படுத்தும் இவர்கள் தமிழ்த்தேசியத்தை உயர்த்துகிறார்களா, தாழ்த்துகிறார்களா என்ற விவாதம் எழுந்துள்ள நிலையில் காதர் மஸ்தானின் பிரதி அமைச்சர் நியமனம் வந்திருக்கிறது

காதர் மஸ்தான் வவுனியாவை மையமாகக் கொண்ட ஒரு பிரபல வர்த்தகர். தமிழக இஸ்லாமியப் பாரம்பரியத்தைத் தனது மூதாதையரின் அடியாகக் கொண்ட இவர் ஒரு பரோபகாரியாகவும் அறியப்பட்டவர்.

முஸ்லிம் காங்கிரசில் இவருக்கான அரசியல் கதவுகள் திறக்கப்படாத நிலையில், இலங்கை ஆளும் தரப்பின் சுதந்திரக் கட்சி அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

கே.காதர் மஸ்தான்
கே.காதர் மஸ்தான்
ஒப்பீட்டளவில், ரிஷாத் பதியுதீனைப் போல இன முரண்பாடுகளையும், கட்சி முரண்பாடுகளையும் தூண்டிவிடுபவர் என்ற விமர்சனம் இவர் மீது இல்லை என்பது வவுனியாவில் வதியும் ஈழத்தமிழர் பலரின் கருத்தாகும்.

அதேவேளை, மஸ்தானின் வியாபரங்களில் ஒன்று கொத்து-ரொட்டி என்று தமிழ் இளையோர் விரும்பி உண்ணும் உணவுக்கான மாட்டிறைச்சி தயார்ப்படுத்துவது என்பதும் இங்கு தெரிந்திருக்கவேண்டிய ஒரு பின்னணி. சிங்கள இளையோரும் இதை விரும்பி உண்பது வழக்கம்.

ஆனால் தென்னிலங்கையில், பௌத்த தீவிரவாதப் போக்கினால் மாட்டிறைச்சி பதனிடல் வேலைகளுக்குக் கடும் எதிர்ப்பு நிலவுகிறது.

இந்தச் சூழலில், பரம்பரை பரம்பரையாகக் குறித்த வியாபரத்தை மேற்கொள்வோர், தமிழ் பேசும் மக்கள் பாரம்பரியமாக வாழும் கிழக்கிலும் வடக்கிலும் தமது பதனிடல் தொழிலை மையப்படுத்தி வருவதும் ஒரு வழக்கமாக இருந்துவருகிறது.

கண்ணப்பநாயனாரைத் தனது நாயன்மார்களில் ஒருவராகச் சேர்த்துக்கொண்ட சைவத் தமிழ்ப் பாரம்பரியத்துக்கோ அன்றேல் தமிழ்த் தேசிய மரபுக்கோ இது அடிப்படையில் ஒன்றும் பிரச்சனையான விடயம் அல்ல.

மாட்டிறைச்சித் தொழிலை அதைச் செய்யவேண்டிய முறையில் நேர்த்தியாகவும் தூய்மையாகவும் திருட்டின்றியும் செய்வதற்கு ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் எதிர்ப்பு ஏதும் இருப்பதில்லை.

ஆனால், அண்மையில் இதை மிருகவதை என்று பரப்புரை செய்து, வட இந்திய இந்துத்துவவாத அமைப்புகளை அடியொற்றி, சிங்களப் பேரினவாதிகளாகப் பகிரங்கமாக அறியப்பட்ட தரப்புகள் சிலவற்றோடு கைகோர்த்து, இலங்கைத் தீவு பௌத்தர்களுக்கும் இந்துக்களுக்குமே பாரம்பரியத்தாயகம் என்ற போர்வையிலான கருத்தை யாழ்ப்பாணத்து நாவலர் பாரம்பரியத்துச் சைவர்கள் என்று காவியுடுத்துத் தம்மை அடையாளப்படுத்தும் சிலர் மும்முரமாக ஆரம்பித்திருக்கின்றனர்.

இவர்களுக்கான தகுந்த பதிலை மரணப்படுக்கையில் இருந்தவாறு மக்கள் காதர் என்ற மூத்த ஊடகவியளார் கூறிச் சென்றுவிட்டார்.

தமிழ் முஸ்லிம் முரண்பாடுகளை உருவாக்கித் தம் நலனை அடையும் போக்கு அமெரிக்காவில் இருந்து இந்தியாவரை பரவலாகக் கையாளப்பட்டுவரும் ஓர் உத்தியே. தற்போதைய நகர்வுகளுக்கும் எந்த வெளிச்சக்திகள் பின்னணியில் இருப்பன என்பது அறிவுரீதியாகச் சிந்திப்பவர்களுக்கு இலகுவாகப் புரிந்துவிடும்.

மேலும், காதர் மஸ்தானின் நியமனத்துக்கு இதற்கு அப்பாற்பட்ட சில பின்னணிகளும் இருக்கின்றன.

யூ என் பி கட்சியின் டி எம் சுவாமிநாதனுக்குக் கீழேயிருக்கும் இந்து கலாசார அமைச்சும் புனர்வாழ்வு அமைச்சும் நல்லாட்சி என்று தன்னைத்தானே சொல்லிக்கொள்ளும் ரணில்-மைத்திரி கூட்டின் இதர கட்சிகளைச் சேர்ந்த பிரதி அமைச்சர்களாலும் கையாளப்படுபவை. இந்து சமய விவகாரங்களை இந்தப் பிரதி அமைச்சர்கள் தான் முடிவெடுப்பார்கள் என்பதற்குமில்லை.

ஆனால், அப்பாவி என்று விமர்சிக்கப்படும் சுவாமிநாதனுக்கு அப்பால், வடக்கின் புனர்வாழ்வுத் துறை சார்ந்த விவகாரங்களை ரிஷாத் பதியுதீன் என்ற அமைச்சரே இலங்கை ஜனாதிபதியின் மீள் கட்டுமானத்துக்கான செயலணி ஊடாகத் தீர்மானித்து வந்திருக்கிறார் என்றும், இதன் மூலம் தனது கட்சியையும் வாக்காளர் வங்கியையும் தனக்குச் சார்பாக அவர் திருப்பி, வடக்கில் இன நல்லிணக்கத்துக்குக் குந்தகமாகவே அவர் செயற்பட்டுவந்திருப்பதாகவும் பரவலான கருத்து நிலவுகிறது.

தனது கட்சி அரசியலை ரிஷாத் எப்படி புனர்வாழ்வு நிதிக்கூடாக முன்னெடுக்கிறார் என்ற சூட்சுமத்தைப் புரிந்துகொண்ட இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சில நாட்களுக்கு முன்னர் தன்னையும் அந்தச் செயலணியில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று மைத்திரிபாலவுக்கு கடும் அழுத்தம் கொடுத்திருக்கிறார்.

இந்த நிலையில், அங்கஜன் போன்றவர்களை நியமித்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கும் நிலையும் இருப்பதால், பதியுதீனையும், ஹக்கீமையும் சமாளிக்கும் ஒரு உத்தியாகவும், அதேவேளை இலங்கை முப்படைகளின் தளபதியாக இருக்கும் மைத்திரிபாலா உளவியல் புலனாய்வை மையப்படுத்திச் செயலாற்றும் படைத்தரப்பின் கலந்தாலோசனையுடனும் இந்த நியமனத்துக்கான முடிவை எடுத்திருப்பதாகவும் தகவல் அறிந்த கொழும்பு வட்டாரங்கள் கருதுகின்றன.

சிங்கள பௌத்த கடும்போக்குவாதிகள் அண்மையில் முன்னெடுத்த முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை ஏற்படுத்தியிருக்கும் அவப்பெயரில் இருந்து தம்மைச் சுதாகரித்துக்கொள்ள ஈழத்தமிழர்களையும் தமிழ் பேசும் முஸ்லிம்களோடு முரண்படும் நிலையை நோக்கி நகர்த்தும் ஓர் உபாயத்தையும் சில சக்திகள் வகுத்திருப்பதாகவும் தெரிகிறது.

ஆக, கனகச்சிதமாக சிக்கல்களைத் தூண்டிவிடும் நல்லிணக்கம் என்ற பொல்லாட்சியின் சில்லறைச் சதிகளை அறிவுரீதியாக விளங்கிய நிலையில் தமிழர் தரப்புகள் தமது அணுகுமுறையை வகுத்துக்கொள்ள வேண்டியது இன்றைய அரசியற் பாடமாகிறது.

காதர் மஸ்தானும் தான் சிக்கியிருக்கின்ற சதியை விளங்கியவராகத் தனது நகர்வுகளை முன்னெடுப்பது காலத்தின் தேவையாகின்றது.