மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டாற்போல

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் இருந்து இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அணுகலாமா?

வட்டுக்கோட்டை-2 என்ற நகர்வின் நோக்கம் தான் என்ன?
பதிப்பு: 2021 ஓகஸ்ட் 01 13:21
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 09 09:17
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
தமிழகத்தில் வதியும் ஈழத்து உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன் அவர்களை முன்னிறுத்தி புதிய ஒரு மெட்டில் ஓர் அரசியல் நகர்வு ஒன்று இன்று இணையவழிச் சந்திப்பில் உருவாகிறது. இதை வரவேற்கலாமா இல்லையா என்ற திண்டாட்டத்தில் ஈழத்துத் தமிழ்த் தேசிய அரசியற்கட்சிகளின் தலைவர்கள் சிலர் மூழ்கியிருக்கிறார்கள். இந்த ''இரண்டாம் வட்டுக்கோட்டைத் தீர்மான மாநாட்டின்'' உள்ளடக்கம் என்ன வடிவம் எடுக்கக்கூடிய ஆபத்து உள்ளது என்பதை முற்கூட்டியே ஈழத்தமிழர் சமூகம் ஆராய வேண்டும். ''வட்டுக்கோட்டை நமஹ, இந்தோ-லங்கா ஒப்பந்த நமஹ, பதின்மூன்று நமஹ'' என்று பயணிக்கவும் ''சுயநிர்ணயம்'' பேசலாம் என்ற மூடுமந்திரமாக அது இருக்கும் வாய்ப்பு உள்ளதா என்பதே ஆய்வுக்குரிய கேள்வியாகிறது.
 
இரண்டாவது வட்டுக்கோட்டை முதலாவது வட்டுக்கோட்டையின் சுய நிர்ணய உரிமை விடயத்தை மட்டும் வலியுறுத்தப்போவதாக சில ஆவணங்கள் கோடி காட்டுகின்றன.

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களின் கவிதைகள் மற்றும் கடந்த காலப் போராட்டப் பங்களிப்பின் வரலாறு ஈழத் தமிழர்களால் மட்டுமல்ல உலகளாவிய தமிழர்களால் போற்றப்படும் ஒன்றாகும். ஆயினும், அவர் தனது முதிய வயதில் தற்போது வட இந்தியா நோக்கிய சில உச்சாடனங்களைப் பதிய ஆரம்பித்திருப்பதையிட்டு உள்ளகமாக பலர் அண்மைய வருடங்களில் கவலை வெளியிட்டிருந்தனர். இந்த மரபில் நின்றும் வேறுபட்டு, வேறு நோக்குச் சார்ந்த சிலர் அவர் மீது காழ்ப்புணர்ச்சியோடு கட்டுரைகள் வரைந்து தூற்றியும் இருந்தனர்.

காய்தல் உவத்தல் அன்றி அவரின் தற்போதைய அரசியல் நகர்வுகள் ஆராயப்பட்டு அணுகப்படல் வேண்டும்.

நிகழ்வில் பங்குபெறும் ஈழ விடுதலை சார்பான தமிழகப் பேச்சாளர்களின் பட்டியல் நீண்டதாக இருக்கிறது. ஆனால், அவர்கள் பலமானது போல எழுதிவைத்திருக்கும் தீர்மானம் சில அடிப்படைக் கேள்விகளை எழுப்புகிறது

வட்டுக்கோட்டை-2 என்று இணையக் கூட்டமொன்றை ஈழத்தமிழர் அரசியற் கட்சிப் பிரமுகர்களையும் இணைத்து இன்றைய நாளான ஞாயிறன்று, 2021 ஓகஸ்ட் முதலாம் திகதி, நடத்தவேண்டும் என்று காசி ஆனந்தன் அவர்கள் பல ஈழத்தமிழர் கட்சிகளின் தலைவர்களை அண்மையில் அணுகியிருந்தார். வயது முதுமை காரணமாக வேறொருவர் அவரது தொடர்பாடல்களை ஒழுங்கு செய்து கொண்டிருப்பதாகவும் மின்னஞ்சல்களைக் கையாண்டு கொண்டிருப்பதாகவும் அறியமுடிகிறது. அந்த உதவியாளர் தமிழக மொழியில் அளவளாவுகிறார் என்பதையும் அறிய முடிகிறது.

ஈழத்தமிழர் நட்புறவு மையம் என்ற அமைப்பின் தலைவராக கவிஞர் காசி ஆனந்தன் விளங்குகிறார். நிகழ்வை ஒருங்கிணைப்பது சென்னைப் பல்கலைக்கழக அரசியல்துறை பேராசிரியர் ராமு மணிவண்ணன். இவர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற புலம்பெயர் செயற்பாட்டுத்தளத்தோடு தொடர்புபட்டவர் என்று தமிழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வட்டுக்கோட்டைத் தீர்மானம் இரண்டுக்குப் பின்னால் இருப்பதான தரவுகள் எதையும் இலங்கைத் தீவில் இருந்தவாறு உறுதிப்படுத்த முடியவில்லை.

இந்த நகர்வில் பங்குபெறும் ஈழ விடுதலை சார்பான தமிழகப் பேச்சாளர்களின் பட்டியல் நீண்டதாக இருக்கிறது. ஆனால், அவர்கள் பலமானது போல எழுதிவைத்திருக்கும் தீர்மானம் சில அடிப்படைக் கேள்விகளை எழுப்புகிறது.

ஆங்கிலத்தில் கூட்டத்திற்கான இணைய அழைப்பு Lanka Vaddukoddai என்று விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் மாதிரித் தீர்மான நகலில் ஈழத் தமிழர் (Eelam Tamils) என்று எழுதப்பட்டிருக்கிறது.

1976 வட்டுக்கோட்டைத் தீர்மானம் சுயநிர்ணய உரிமையைக் கோரிய ஒன்றாக அந்த புதிய தீர்மானத்துக்குரிய ஆங்கில நகல் சுட்ட விழைகின்றது.

அதாவது, வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் இருந்து தமிழீழத்தையும், சோஷலிஸத்தையும் கத்தரித்துவிட்டு, அதற்கு வட்டுக்கோட்டை-2 என்றும், அது சார்ந்த நகர்வு இந்தியாவை நோக்கியதாகவும் வடிவமைக்கப்படுகிறது.

ஆக, ''வட்டுக்கோட்டை நமஹ'' என்ற உச்சாடனம் வெளிப்படுகிறது. இது ''இந்தோ-லங்கா ஒப்பந்த நமஹ'' என்று திரிபடைவதற்கு எத்தனை நாழிகையாகும் என்பதைப் பார்க்கலாம்.

வட்டுக்கோட்டை-2 நகல் பின்வருமாறு 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை இணைத்துக்கொள்ள முயல்கிறது:

Even Indo - Sri Lanka Accord signed over thirty years ago was not implemented by the Government and one of the aspects of the Accord of United Tamil areas of North East of the island was invalidated by the Judiciary.

In this situation, we strongly believe that only way to end the decades long conflict is to find a solution based on the Vaddukodai Resolution adopted in 1976 by the joint Tamil leadership - Tamil United Liberation Front (TULF) - consisting of the Tamil political parties in the North - East and in the upcountry.

This Vaddukodai Resolution called for a political solution based on Self- Determination.

கூட்டத்திற்கான விளம்பரம் ''ஈழத்தமிழர் புவிசார் அரசியலில் இந்திய அரசின் உடனடித் தலையீடு காலத்தின் கட்டாயம்'' என்று முழங்குகிறது.

உணர்ச்சிகளுக்கும் முழக்கங்களுக்கும் அப்பால் நிகழ்வின் அரசியற் தார்ப்பரியம் எங்கே செல்கிறது என்பதே கேள்வி.

''நிகழ்வின் இறுதியில் தாயக அரசியல் கட்சித் தலைவர்கள் ஒப்பமிடும் தீர்மானம் மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களுக்கு அனுப்பிவைக்கப்படும்'' என்று அந்த அறிவித்தல் மேலும் விளம்புகிறது.

வட்டுக்கோட்டைத் தீர்மானம் தந்தை செல்வாவினால் நிறைவேற்றப்பட்டு அதற்கு மக்களாணை 1977 தேர்தலில் பரந்துபட்ட தமிழ் மற்றும் தமிழ் பேசும் மக்களால் மலையகத் தமிழர்களின் கட்சி உள்ளடங்கலாக இணைந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியால் தேர்தல் விஞ்ஞாபனம் ஊடாக அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையில் பெறப்பட்டது.

அமிர்தலிங்கம் கூட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை இன்னொரு இரண்டாவது தீர்மானம் மூலம் நுட்பமாக மறுதலிக்கும் ஒரு எதிர்காலம் தமிழர் அரசியலில் ஏற்படலாம் என்று கற்பனையில் கூட நினைத்திருக்கமாட்டார்

அதன்பின்னர் இலங்கை ஒற்றையாட்சி அரசு அவசரகாலச் சட்டம் மூலமும் ஆறாம் சட்டம் மூலமும் ஏற்படுத்திய தடைகளினால், அமிர்தலிங்கம் உள்ளிட்ட ஈழத்தமிழர்களின் அரசியற் தலைவர்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மறுதலிக்கும் சத்தியப்பிரமாணம் ஒன்றை மேற்கொண்டாலே பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடியும் என்ற நிலையை இலங்கை ஒற்றையாட்சி அரசு 1983 ஆகஸ்ட்டில் ஏற்படுத்தியது.

அந்தச் சத்தியப் பிரமாணத்தை மக்களாணையை மீறி மேற்கொள்ள முடியாத சூழலில் பாராளுமன்றப் பதவிகளைத் தெரிந்தே துறக்கவேண்டிய நிலை அமிர்தலிங்கம் தலைமையிலான பாராளுமன்ற அரசியலாருக்கு 1983 அக்டோபர் மாதத்தில் ஏற்பட்டது.

ஆறாம் சட்டத்திருத்தத்தை எதிர்த்த வீரனாக இந்தியாவில் அஞ்ஞாதவாசம் புரிந்த அமிர், 1987 இந்திய இலங்கை ஒப்பந்தம், அதைத் தொடர்ந்த இந்திய-புலிகள் போர் ஆகியவற்றுக்கு அடுத்ததாக இலங்கை திரும்பி, தான் பிறந்த வட்டுக்கோட்டைத் தொகுதியிலோ, அல்லது தான் முன்னர் போட்டியிட்ட காங்கேசன்துறைத் தொகுதியிலோ போட்டியிட முடியாத நிலையில் மட்டக்களப்பில் போட்டியிட்டுக் கட்டுக்காசும் இழந்து தோல்வியுற்றார். எனினும் தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றத்துக்குள் நுழைந்த அவர், எந்த சத்தியப்பிரமாணத்தை 1983 இல் எதிர்த்தாரோ அதற்கு உட்பட்டு வட்டுக்கோட்டை மக்களாணைக்கு எதிராளியாக மாறினார். இது இந்தியாவின் நிர்ப்பந்தத்தினால் அவருக்கு ஏற்பட்ட நிலை.

ஆனால், அவர்கூட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை இன்னொரு இரண்டாவது தீர்மானம் மூலம் நுட்பமாக மறுதலிக்கும் ஓர் எதிர்காலம் தமிழர் அரசியலில் ஏற்படலாம் என்று கற்பனையில் கூட நினைத்திருக்கமாட்டார்.

தற்போது அந்தச் சூழல் சீனா எனும் பூச்சாண்டியைக் காட்டி இந்தியாவிடம் ஈழத்தமிழருக்கான சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவு பெற்றுவிடலாம் என்று கருதும் சில விற்பன்னர்களால் உருவாகியிருப்பது ''காலக்கொடுமை''.

இவர்களுக்கெல்லாம் ஒன்று ஏனோ புரிவதில்லை. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மறுதலித்து இன்னொரு வட்டுக்கோட்டை இரண்டல்ல, இருபதல்ல, இருநூறும் வரமுடியாது. அதுவே சுயநிர்ணய உரிமை என்பதன் தார்ப்பரியம்.

இலங்கைத் தீவில் புவிசார் அரசியலில் அரசுரிமை கொண்ட சிங்கள பௌத்த அரசு தனது ஒற்றையாட்சிச் சட்டத்தை மட்டுமல்ல, தமிழர் தாயகத்தையே கபளீகரம் செய்து, எல்லா வெளிச்சக்திகளுக்கும் பங்குபோட்டு ஏலவிற்பனை செய்துவிடலாம் என்ற புவிசார் அரசியற் பாடத்தின் அடுத்த பக்கங்களை புரட்டிக்கொண்டிருந்தது.

இனியென்ன, ''முள்ளிவாய்க்காலும் நமஹ, நந்திக்கடலும் நமஹ'' என்று சொல்ல இன்னும் ஓர் அணி வரலாம். ஏன், இதே அணியும் அதைச் செய்யலாம்.

இனியென்ன, ''முள்ளிவாய்க்காலும் நமஹ, நந்திக்கடலும் நமஹ'' என்று சொல்ல இன்னும் ஓர் அணி வரலாம். ஏன், இதே அணியும் அதைச் செய்யலாம்

ஏற்கனவே, வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மேற்கு நாடுகளில் மீளுறுதி செய்யும் 2009 நகர்வில் முன்னோடிப் பங்கேற்று, 2009 இன் பின்னர் அதைக் கேலிக்கூத்தாகச் சித்தரித்து கொட்டைப்பாக்கு என்று சொன்னவர்களையும் வென்று வலம்வந்த தார்ப்பரியமும், தமிழகத்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களே அந்தத் தீர்மானத்தை தமிழக நாடாளுமன்றத்தில் முன்னெடுக்கவேண்டியிருந்த வரலாறு ஏற்பட்டதையும் இவர்கள் ஏனோ மறந்துவிட்டு, வட்டுக்கோட்டை-2 என்று நாமம் நல்கியிருக்கிறார்கள்.

ஜெயலலிதா அம்மையார் நிறைவேற்றிய தமிழகத் தீர்மானத்தை தமிழகத்தில் எடுத்துச்செல்ல முடியாதவர்களுக்கு, ஆறாம் சட்டத்திருத்தத்தின் குற்றவாளிக் கூண்டிற்குள் இருக்கும் ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் தேவைப்படுகிறது, அதுவும் மீண்டும் ''சுயநிர்ணயம்'' என்று சொல்வதற்கு!

சீனா கெடுத்த கண்களால் சூரிய நமஸ்காரம் செய்தால் இப்படித்தான் காலக்கொடுமைக் காட்சிகள் விரியும்.