பிரித்தாளும் தந்திரமும் புவிசார் அரசியலும் திம்புக் கோரிக்கைகளைப் புறந்தள்ளி

தமிழ்த் தேசியத்தை நீர்த்துப்போகச் செய்ய நீலன் திருச்செல்வம் வகுத்த வழியில் சுமந்திரன்

1985 மற்றும் 2001 மகிமையில் இருந்து ரெலோ, புளொட், ஈ.பி.ஆ.ர்.எல்.எவ் தாழ்வு
பதிப்பு: 2021 டிச. 19 13:47
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 21 09:05
main photo main photo main photo main photo main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுமந்திரன் அணி என வர்ணிக்கப்படும் அணியின் பிதாமகர் காலஞ்சென்ற ஜனாதிபதி சட்டத்தரணி நீலன் திருச்செல்வம். தமிழ்த் தேசிய அடிப்படைகளைப் புறந்தள்ளிவிட்டு, ஒற்றையாட்சிக்குள் 'அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு' என்ற பாதையூடாகத் தமிழ்த் தேசிய அபிலாசைகளைப் பூர்த்திசெய்துவிடலாம் என்ற ஏமாற்று வித்தையாக அவர் உருவாக்கிய ஆபத்தான இணக்க அரசியலின் பிடிக்குள்ளேயே சுமந்திரன் அணி இன்று ஆழமாகச் சிக்கிக்கொண்டுள்ளது. 1985 இல் தமிழர் விடுதலைக் கூட்டணியாக இருந்த தமிழரசுக்கட்சியினர் திம்புக் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டவர்கள். ஆனால், அவர்களை விடவும் மீளமுடியாத தாழ்ந்த நிலைக்கு கூட்டமைப்பின் மற்றைய கட்சிகள் போயுள்ளன.
 
திம்புத் தீர்மானத்தைக் கைவிடாதது போல நுட்பமாகக் கைவிட்டு, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் இருந்தும், நிராகரிக்கப்பட்ட ஒஸ்லோத் தீர்மானம் என்று சொல்லப்படுவதில் இருந்தும் சொற்பிரயோகங்களைக் கையாண்டு தாயகம், தேசியம், தன்னாட்சி என்ற அடிப்படைகளையே நீர்த்துபோக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நீலன் திருச்செல்வ மரபை சுமந்திரன் ஊடாகவே மேற்கொண்டிருக்கிறது என்பது கண்கூடு

முன்னாள் ஆயுதப்போராட்டப் பின்னணியில் திம்புக் கோட்பாட்டைத் தழுவிப், பின்னர் வெவ்வேறு வழிகளில் பயணித்து, மீண்டும் 2001 இல் தமிழ்த் தேசிய ஆகர்சிப்புக்கு உள்ளாகி, பொங்கு தமிழாகி ஒன்றித்த இதர கட்சிகளோடு 2009 இற்குப் பின்னர் சேர்ந்துகொண்ட புளொட்டும், தற்போது, மங்கு தமிழாகத் தம்மை கீழிறக்கியுள்ளன.

ரெலோவும், புளொட்டும் மட்டுமல்ல, விக்னேஸ்வரனின் கட்சியும், அவரின் அணியில் இருக்கும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையில் இயங்கும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்) எனும் கட்சியும் தமது தமிழ்த் தேசிய மகிமையைப் பதின்மூன்றுக்கு வக்காலத்து வாங்கியதோடு இழந்துவிட்டிருக்கிறன.

இந்தப் பின்னணியிலேயே சனிக்கிழமையன்று யாழ்ப்பாணத்தில் பேசிய ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனின் குரல் பலருக்குத் தமிழ்த் தேசியக் கர்ஜனை போலக் கேட்டிருக்கும் பரிதாபம் நிகழ்ந்துள்ளது.

தந்தை செல்வாவோடு பயணித்த நாட்டுப்பற்றாளர் வ. நவரத்தினம், செல்வாவின் பாதையில் இருந்த சிக்கலைச் சமகாலத்திலேயே, அதுவும் 1969 ஆம் ஆண்டிலேயே கண்டு தெளிவடைந்திருந்தார்.

மு. திருச்செல்வம் தொடங்கிவைத்த ஆபத்தான இணக்க அரசியலே தமிழர் தாயகத்தின் நிலப் பறிப்புக்கு அடிகோலி, திருகோணமலையில் பெரிய பின்னடைவைக் கொண்டுவந்தது என்று இடித்துக் கூறிவந்தார் நவரத்தினம்.

நீலன் திருச்செல்வம்
நீலன் திருச்செல்வம்
அந்தத் திருச்செல்வத்தின் மகனாகிய நீலகண்டன் எனும் ஹார்வார்ட் கல்வியாளரான நீலன் திருச்செல்வம் வகுத்த வழியில் தமது இணக்க அரசியலைப் புடம் போட்டுக்கொணடவர்களில் லக்ஷ்மன் கதிர்காமர் குறிப்பிடத்தக்கவர். அவர் இலங்கை ஒற்றையாட்சி ஆளும் தரப்புகளின் பாசறையிலேயே தன்னை இணைத்துக்கொண்டு இணக்க அரசியலுக்குச் 'சர்வதேசப் பணி' ஆற்றினார். நீலன் திருச்செல்வத்தையும் லக்ஷ்மன் கதிர்காமரையும் ஒருசேர இணைத்துப் பார்த்த நவரத்தினம் (நூற்றிப்பத்து வயதைத் தாண்டி) இன்று இருந்திருந்தால் சுமந்திரனையும் அதே அரசியலின் வாரிசாக அடையாளம் கண்டிருப்பார்.

சந்திரிகா அம்மையார் மற்றும் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் போன்றோருடன் இவர்கள் ஆரம்பித்துவைத்த அரசியலே தமிழ்த் தேசியத்துக்கு ஆப்பு வைக்கும் நவீன காலத்து இணக்க அரசியல்.

இந்த இணக்க அரசியலே தற்போது மீண்டும் எம்முன்னால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளிருந்து விரிகிறது. அது ஈழத்தமிழர்களுக்காகப் பணி புரிவதை விட மேற்கில் இருந்து இந்தியாவை குவாட் ஊடாக இணைத்து ஊற்றெடுக்கும் புவிசார் அரசியலோடு பின்னிப் பிணைந்து சிங்கள ஆளும் வர்க்கத்தோடு இணக்கம் காண்பதற்காகப் பணிபுரியும். இதனால், நீலன் திருச்செல்வத்தின் அரசியலைத் தொடர்வோர் பற்றிய தமிழ்த் தேசிய விழிப்புணர்வு மிகவும் அவசியமானது.

ஓட்டப் பந்தயத்திற்காக ஆரம்பக் கோடொன்றைக் கீறி அதற்குப் பதின்மூன்றாம் சட்டத்திருத்தம் என்று குறிப்பிட்டால் அந்தக் கோட்டுக்கு முன்னே ஒரு அடி வைத்தபடியும் பின் காலைக் கோட்டில் வைத்தவாறும் அதிகாரப் பரவல் நோக்கி ஓடலாம் என்கிறார் சுமந்திரன். அந்தக் கோட்டுக்குப் பின்னால் இரண்டு கால்களையும் வைத்திருந்தாலே போதுமானது, ஓடுவது ஓடாததெல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்கின்றனர் செல்வமும், சுரேசும், சித்தர்த்தனும். விக்கினேஸ்வரனோ, அந்தக் கோட்டிலேயே இரண்டு காலையும் வைத்திருந்து முன்னோக்கி ஓடலாம் என்கிறார்.

கோடு எது என்பதில் அனைவரும் உடன்பாடாக உள்ளார்கள். அதிகாரப் பரவலாக்கம் என்பதிலும் உடன்பாடாகவே இருக்கிறார்கள். சமஷ்டி என்பதைப் பெயரளவிலும் தேர்தலுக்குமாக உச்சரித்துக்கொள்வார்கள். 'பொதுவெளியில் அப்படித்தான் சொல்லவேண்டும்' என்று தமக்குள் பேசிக்கொள்வார்கள். விக்னேஸ்வரன் சமஷ்டி என்று கூறும்போது அதிலே ஒரு நேர்மையைக் காணமுடியும். ஆனால், அதுவும் அவர் தழுவியுள்ள பதின்மூன்றுக் கொள்கையால் தனது நம்பகத்தன்மையை இழந்துவிடுகிறது.

இணக்க அரசியலின் காரணத்தினாலேயே இன அழிப்புக்கான சர்வதேச விசாரணையைக் கோருவதிலும் சுமந்திரன் அணிக்கு ஆழமான தயக்கம். இதை ஆரம்பத்தில் இருந்து காணமுடியும்.

நல்லிணக்க ஆட்சியை உருவாக்குவதற்கு வெளிச்சக்திகளுடனும் சிங்களத்தரப்புகளுடனும் 2013 இல் எழுத்துமூலப் புரிதலை எட்டும்போது கூட வடக்கு கிழக்கு உள்ளிட்ட முழுத்தீவிலும் பௌத்தத்துக்கு முன்னுரிமை என்பதில் இணக்கம் கண்டவரே சுமந்திரன். இதை மாற்றுவதற்கோ, சமஷ்டி என்பதைக் கூடப் பெயரிட்டு அழைக்கவோ அவரது இணக்க அரசியல் பேச்சுவார்த்தை மேசையில் அனுமதிக்காது.

நல்லிணக்க ஆட்சியை உருவாக்குவதற்கு வெளிச்சக்திகளுடனும் சிங்களத்தரப்புகளுடனும் 2013 இல் எழுத்துமூலப் புரிதலை எட்டும்போது கூட வடக்கு கிழக்கு உள்ளிட்ட முழுத்தீவிலும் பௌத்தத்துக்கு முன்னுரிமை என்பதில் இணக்கம் கண்டவரே சுமந்திரன். இதை மாற்றுவதற்கோ, சமஷ்டி என்பதைக் கூடப் பெயரிட்டு அழைக்கவோ அவரது இணக்க அரசியல் பேச்சுவார்த்தை மேசையில் அனுமதிக்காது

அதேபோல, ஐ.நா. மனித உரிமைப் பேரவை தொடர்பான தீர்மானங்கள் குறித்த விடயங்களில் மிகவும் குறைந்த அழுத்தத்தை மட்டும் இலங்கை மீது அளந்து பயன்படுத்துவதற்குத் தகுந்த அடியொற்றும் வேலைகளை மும்முரமாகச் செய்துகொடுக்கும் தன்மை சுமந்திரனின் அரசியலுக்கு இருக்கிறது.

இந்தியாவிடம் பதின்மூன்றை நாமாகக் கேட்கவேண்டியதில்லை, அர்த்தமுள்ள அதிகாரப்பரவலாக்கத்தை மட்டும் கேட்போம் என்கிறார் சுமந்திரன்.

அதேவேளை, இந்திய-இலங்கை ஒப்பந்தம் கொண்டு வந்த வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் வாழிடம் என்பதையும், தமிழர்கள் சுயநிர்ணய உரிமையைக் கைவிடும் பிரிக்கமுடியாத, பிளவுபடாத ஒன்றிணைந்த இலங்கை என்று சமஷ்டி என்ற சொல்லைக்கூட அந்தச் சொறதொடரில் சேர்க்காது சம்பந்தனும் சுமந்திரனும் சொல்லிவருகிறார்கள்.

இவர்களின் ஏய்க்கிய ராஜ்ஜிய ஒற்றையாட்சியை மைத்திரி- ரணில் அரசில் பார்த்தது மட்டுமல்ல, ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் எவ்வாறு அமெரிக்கத் தீர்மானம் சர்வதேச விசாரணையை முடக்கிவைத்திருந்தது என்பதையும் தமிழ் கூறு நல்லுலகம் தெளிவாகவே பார்த்து வைத்திருக்கிறது.

இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனங்களையும் பாருங்கள் என்று சுமந்திரன் அவர்களே கூறியிருப்பது தான் வேடிக்கையானது.

ஏனென்றால், இதுவரை காலமும் வெளியான பொதுத்தேர்தல்களுக்கான ஐந்து விஞ்ஞாபனங்களையும், அவற்றுக்கும் அப்பால் 2020 டிசம்பர் மாதம் கோட்டாபய ராஜபக்ச அரசுக்கு சம்பந்தன் கையெழுத்திட்டுச் சமர்ப்பித்த அரசியலமைப்புக்கான திட்ட வரைபையும் உற்று நோக்கினாலே எவ்வளவுதூரம் திரிபுபடுத்தல் நடைபெற்றிருக்கிறது என்பது தெளிவாகிவிடும்.

அதாவது, தாயகம், தேசியம், தன்னாட்சி (சுயநிர்ணய உரிமை) என்ற மூன்றையும் உன்னிப்பாக இந்த ஆவணங்களில் அணுகவேண்டும்.

2001 ஆம் ஆண்டும், 2004 ஆம் ஆண்டும் மரபுவழித் தாயகம் (traditional homeland) என்று தெளிவாகக் குறிப்பிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விஞ்ஞாபனங்கள் 2010 இல் இருந்து இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழுவலான வரலாற்று வாழிடமாக (historical habitation) அதை மாற்றிவிட்டுள்ளன. பின்னர் மேலும் அது பன்மையாகி வரலாற்று வாழிடப் பகுதிகள் (areas of historical habitation ) ஆகவும் நலிவடைந்துவிடுவதையும் ஆங்காங்கே காணமுடிகிறது.

இரண்டாவதாக, தமிழர் தேசம் (Tamil Nation) என்பது 2004 இல் தெளிவாகப் பல இடங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் 2009 இன் பின்னான விஞ்ஞாபனங்களில் மக்கள் (People) என்ற சொற்பிரயோகமே கூடுதலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது ஒரு தேசம் பல மக்கள் என்ற கோட்பாட்டுக்கு இணங்கும் வகையில் எழுதப்பட்டுவருகிறது.

மூன்றாவதாக, சுயநிர்ணய உரிமை என்பதை சர்வதேச அரசியல் மற்றும் கல்வித்துறைச் சொல்லாகப் பயன்படுத்தப்படும் 'உள்ளக' சுயநிர்ணயம் என்று மாத்திரம் குறுக்கும் செயற்பாட்டை 2009 இற்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்துவந்துள்ளது.

சுயநிர்ணய உரிமையை உள்ளகம் என்று குறுக்குவதற்கான சர்வதேசச் சட்ட நியாயாதிக்கம் எதுவும் வரையறுக்கப்படாத ஒரு நிலையில் இதைக் குறுக்குவது தவறு என்ற அரசியற் தெளிவு சமாதான காலத்தில் ஏற்படுத்தப்பட்டது.

அதற்கும் அப்பால் ஒஸ்லோவில் அவ்வாறு விடுதலைப் புலிகள் உடன்பட்டதாக மீண்டும் மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது விஞ்ஞாபனங்களில் தெரிவித்துவந்துள்ளது. சமாதான காலத்தில் ஏற்படுத்தப்பட்ட புரிதலுடன் விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் ஒஸ்லோ தீர்மானம் என்று ஒன்று இல்லை என்று தெளிவாக மறுத்து எழுதியிருந்ததை மறைத்து அவ்வாறு ஒரு தீர்மானம் இருப்பது போல கூட்டமைப்பு விஞ்ஞாபனம் சித்தரித்து வந்திருக்கிறது.

அதுமட்டுமல்ல, பின்வரும் நிலைப்பாடு அடையாளத்தையும் சுய நிர்ணய உரிமையையும் கைவிட்ட ஒன்று என்பதை மேலும் சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளது: "As the representatives of the Tamil People of Sri Lanka, we wish to assure the country of our commitment to a united, undivided, indivisible country, in which all peoples are treated as equals and the multi-ethnic, multi-lingual and multi-religious plural nature of the country is affirmed, preserved, and celebrated."

அதுமட்டுமன்றி, சமஷ்டி என்பதை விஞ்ஞாபனங்கள் ஆங்காங்கே குறிப்பிடுகிறபோதும், இலங்கையை ஒரு சமஷ்டிக் குடியரசு என்று குறிப்பிடாமல் ஒன்றிணைந்த இலங்கைக் குடியரசு என்று சமஷ்டி என்று தெளிவாகக் குறிப்பிடாத சமஷ்டி முறை ஒன்றையே தாம் நாடுவது போன்ற வெளிப்படுத்தல்களே மேற்கொள்ளப்படுகின்றன.

அதற்கும் மேலாக, டிசம்பர் 2020 இல் சம்பந்தனின் கையெழுத்தோடு சமர்ப்பிக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் யாப்புக்கான ஆலோசனையிலும் அண்மைக்கால விஞ்ஞாபனங்களிலும் இலங்கைத் தீவில் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை நான்கு விதமான கோரிக்கைக் காலங்களாகச் சித்தரித்து, அவற்றில் தற்போதைய காலத்தில் சமஷ்டியை பிரிவினைக் காலத்துக்கும் முற்பட்ட கோரிக்கையாகவும், தற்போதைய காலகட்டத்தை அதிகாரப் பகிர்வுக்கான காலமாக மட்டுமே எடுத்தியம்புகிறது.

இதுவரை காலமும் வெளியான பொதுத்தேர்தல்களுக்கான ஐந்து விஞ்ஞாபனங்களையும், அவற்றுக்கும் அப்பால் 2020 டிசம்பர் மாதம் கோட்டாபய ராஜபக்ச அரசுக்கு சம்பந்தன் கையெழுத்திட்டுச் சமர்ப்பித்த அரசியலமைப்புக்கான திட்ட வரைபையும் உற்று நோக்கினாலே எவ்வளவுதூரம் திரிபுபடுத்தல் நடைபெற்றிருக்கிறது என்பது தெளிவாகிவிடும்

அவை முறையாக, சம அந்தஸ்து (parity of status), சமஷ்டி (federalism), பிரிவினைவாதம் (separatism), அதிகாரப்பகிர்வு (sharing powers of governance through devolution) என்று குறிப்பிடப்பட்டுள்ளன.

அதேவேளை, பதின்மூன்றாம் சட்டத்திருத்தத்தை தமிழர் விடுதலைக் கூட்டணி 1989 ஆம் ஆண்டோடு மறைந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் தலைமையில் ஏற்றுக்கொண்டதாகவும் அக்காலத்தில் இருந்து அதிகாரப் பகிர்வுக்கான காலம் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாகவும் சித்தரிக்க முயன்று நீலன் திருச்செல்வத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலை அது நியாயப்படுத்துகிறது. அந்தப் பந்தி வாசகர்களின் கவனத்திற்காக ஆங்கிலத்தில் கீழே தரப்படுகிறது:

"The decision not to pursue the demand for a separate state was therefore based on the fact that a structural change had been introduced through the provincial councils system and the assurances given to improve on the Thirteenth Amendment, even though meaningful sharing of powers of governance was yet to take place. It is in this background that every effort made thereafter was in the direction of improving on the Thirteenth Amendment towards a federal structure."

1993 இல் முதலாவதாக மங்கள முனசிங்கா ஆணைக்குழுவின் பிரேரணையையும், இரண்டாவதாக சந்திரிக்காவின் காலத்தில் முன்மைக்கப்பட்ட வரைபுகளையும், மூன்றாவதாக ஒஸ்லோத் தீர்மானம் என்பதும் குறிப்பிடப்பட்டு, இவையெல்லாம் பதின்மூன்றுக்கு மேலே சென்று அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை நோக்கி இலங்கை அரசின் ஒப்புதலோடு எடுக்கப்பட்ட முனைப்புகளாக அது மேலும் சித்தரிக்கிறது.

திம்புத் தீர்மானத்தைக் கைவிடாதது போல நுட்பமாகக் கைவிட்டு, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் இருந்தும், நிராகரிக்கப்பட்ட ஒஸ்லோத் தீர்மானம் என்று சொல்லப்படுவதில் இருந்தும் சொற்பிரயோகங்களைக் கடன்பெற்றுக் கையாண்டு, 'தாயகம், தேசியம், தன்னாட்சி' என்ற அடிப்படைகளையே நீர்த்துப்போகவைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊடாக நீலன் திருச்செல்வ மரபு, சுமந்திரன் ஊடாக இயங்கிக்கொண்டிருக்கிறது என்பது கண்கூடு.