அடுத்ததாகச் செய்யவேண்டியது என்ன?

கிட்டு பூங்கா எழுச்சியும் பொத்துவில்-தொடக்கம்-பொலிகண்டி எழுச்சியின் பின்தளச் சிக்கலும்

இந்திய நிகழ்ச்சிநிரலா, இந்தியா நோக்கிய நிகழ்ச்சிநிரலா அல்லது அதற்கும் மேலா?
பதிப்பு: 2022 ஜன. 31 21:53
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: பெப். 06 23:18
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
இனப்பிரச்சனைக்கான தீர்வு நோக்கிய பாதையில் பதின்மூன்றாம் சட்டத்திருத்தத்தை ஆரம்பப் புள்ளியாகக் கோருவதற்கு எதிரான பேரணி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவில் பெரும் முயற்சியோடும் மக்கள் அணிதிரட்டலோடும் நடைபெற்றுள்ளது. தமிழ்த் தேசியம் என்ற பெயரில் தடம்புரண்டுபோயுள்ள அரசியல்வாதிகள் பலருக்கும் இந்தப் பெருந்திரள் வயிற்றுக்கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை, இது கஜேந்திரகுமார் அணியின் தேர்தற் போட்டிக்கான அரசியல் என்பது அவரின் பேச்சில் வெளிப்பட்ட மறுப்புக்கும் அப்பாற்பட்ட உண்மை. ஆனால், அதற்கும் அப்பால் கிட்டு பூங்கா மக்கள் எழுச்சியின் தாற்ப்பரியம் ஆழமானது. அது சரியாகப் புரிந்துகொள்ளப்படவேண்டியது.
 
பதின்மூன்றைக் கேட்பது ஒரு வகையில் இந்தியா இலங்கை மீது சமஸ்டிக்கான அழுத்தம் கொடுக்காது இலங்கை அரசுக்குத் தேவைப்படும் அதிகாரப் பரவலாக்கம் எனும் வீணடிப்பு நாடகத்துக்கான பிடில் ஆகவும் மாறியது

இந்த எழுச்சியின் தார்ப்பரியத்தை இதை முன்னின்று நடாத்திய முன்னணியோ, இதற்கு நிதியூட்டிய பின்னணியோ சரியாகத் தெரிந்திருந்து வைத்திருக்க வாய்ப்பு இல்லை என்பதை அவர்களின் வெளிப்படுத்தல்களே எடுத்துக்காட்டியுள்ளன.

கிட்டு பூங்கா மக்கள் எழுச்சியின் தார்ப்பரியத்தை முன்னணியும் பின்னணியும் மட்டுமல்ல, பரந்துபட்ட தமிழ்த் தேசியப் பரப்பில் இருக்கும் அனைவரும் புரிந்துகொள்வது காலத்தின் தேவை என்பதால் கூர்மையின் ஆசிரியபீடம் இக்கட்டுரை மூலம் அதைப் பேசுபொருளாக்க விழைகிறது.

முதலில், தமிழ்த் தேசியப் பரப்பில் இந்தியா தொடர்பாக இருக்கின்ற மூன்று மனநிலைகள் விளங்கிக்கொள்ளப்படல் வேண்டும்.

ஈழத்தமிழர் தேசியக் கேள்விக்கான அரசியற் தீர்வு விடயத்தில் இந்தியா இன்றி இங்கு ஓர் அணுவும் அசையாது என்ற மந்திரம் அடிக்கடி உச்சரிக்கப்பட்டுவருகிறது. இதிலே உண்மையும் இருக்கிறது.

ஆனால், இதுபற்றிய புரிதல் எந்த மனநிலையில் இருந்து ஊற்றெடுக்கிறது என்பது நாம் எவ்வாறு அதற்குச் செயல்வடிவம் கொடுக்க முனைகிறோம் என்பதையும், விளைவை நன்மையாகவா தீமையாகவா நாம் மாற்றப்போகிறோம் என்பதையும் தீர்மானிக்கிறது.

ஆகவேதான், மனநிலைகளைப் புரிந்துகொள்வது முதலில் அவசியமாகிறது.

'இந்தியாவே துணை, அதையே நம்பு, அது எதைச் சொன்னாலும் கேள், அதன்படி நட!' என்று இந்தியாவே சரணம் என எடுத்ததற்கெல்லாம் நினைப்பது முதலாவது மனநிலை.

தோல்விநிலையில் இருக்கும் ஈழத்தமிழர்களிடமும், இந்துத்துவ வாதிகளிடமும், தமிழ் வலதுசாரிகளிடமும் மட்டுமல்ல கணிசமான இந்திய வெளியுறவு மற்றும் புலனாய்வுத் தரப்பினரிடையேயும் இந்த மனநிலையைக் காணலாம்.

அதைப்போலவே, 'இந்தியா எதையுமே செய்யாது, ஏமாற்றிவிடும். இந்தியா தவிர்ந்த சர்வதேச சமூகத்தை மட்டுமே நம்பலாம்,' என்ற மனநிலை இன்னொரு புறம் இருக்கிறது. ஈழத் தமிழர் தொடர்பாக இந்தியா வேறு அணுகுமுறையிலும் அமெரிக்கா வேறு அணுகுமுறையிலும் இயங்குகிறது என்ற ஒரு பொய்யான மாயை இன்னும் சில வட்டாரங்களில் இருப்பதைக் காணலாம்.

'மோடியை நம்பினால் மோசடி' என்று கருதும் இந்துத்துவ எதிர்ப்புவாதிகளும், இடதுசாரிகளும், தமிழ்நாட்டின் திராவிட இயக்கப் பின்னணியுடையோரிற் பலரும், தென்னிலங்கையில் நல்லாட்சியின் உதவியுடன் மட்டுமே ஈழத்தமிழர் தப்பிப் பிழைக்கலாம் என்று சிந்திப்போரும், பகிரங்கமாக இந்தியாவை – அதுவும் மோடியின் இந்தியாவை – அணுகுவது ஆபத்தானது, இறுதியில் ஏமாறும் நிலை உருவாகும் எனும் இரண்டாவது மனநிலைக்குள்ளே போய் விழுவர்.

இவை இரண்டு மனநிலைகளுமே ஈழத்தமிழர்களுக்குத் தேவையற்றவை, அறிவுபூர்வமற்றவை, ஆபத்தானவை.

மூன்றாவது மனநிலை, உரிமையும் (rights-oriented) இயல்பு அரசியலும் (realpolitik) கலந்த ஈழத் தமிழ் வெளியுறவுக்கொள்கை எவ்வாறு இருக்கவேண்டும் என்று சிந்திக்கும் மனநிலை.

இந்தியாவின் எடுபிடிகளாகவும் அல்ல, கையாளப்படுவோராகவும் அல்ல, இந்தியாவை ஒரு பொருத்தமான வெளியுறவுக்கொள்கையூடாக அணுகுவோராக ஈழத்தமிழர் விளங்கவேண்டும் என்ற சிந்தனையே இந்த மனநிலையைக் கொண்டுவருகிறது.

இந்த மனநிலை உளவியல் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் பொருத்தமானது.

ஆனால், இதுவும் தெளிவற்று, மிகவும் பூடகமாக முன்வைக்கப்படும் ஒரு குழப்பமான நிலையிலேயே தற்போது இருக்கிறது.

இங்கே, பூடகத் தன்மை ஏன் ஆபத்தானது என்ற கேள்வி மிகவும் அவசியமானது.

ஏனென்றால், இந்தியாவே சரணம் எனும் தோல்வி மனநிலையும், இந்தியாவைத் துணைக்கழைத்தால் ஏமாறவேண்டியே வரும் என்பதான விரக்தி மன நிலையுமாக, மேற் கூறிய இரண்டு மனநிலைகளும் இந்த மூன்றாவது வகையின் பூடகத் தன்மைக்குள்ளேயே ஒளிந்துகொள்ள எத்தனிக்கின்றன.

தம்மை அறிவுசார்ந்தவையாக வெளிப்படுத்த இந்த இரண்டு மனநிலைகளுக்கும் மூன்றாவது மனநிலையின் பூடகத்தன்மை தஞ்சமளிக்கிறது.

இதுவே, பொத்துவிலில்-இருந்து-பொலிகண்டி என்ற எழுச்சியின் பின்னணியில் இருந்து குழப்பத்தை ஏற்படுத்தியது. ஆகவே, இதை முதலில் மீளாய்வு செய்யவேண்டும். கிட்டு பூங்கா எழுச்சியோடு அதை ஒப்பிட்டு ஆராயவேண்டும்.

இதன்மூலம் பூடகத்தைத் தோலுரித்துவிட்டு பச்சையாக, அறிவுபூர்வமாக, உரிமையும் இயல்பரசியலும் இணைந்ததாக அடுத்தகட்ட அணுகுமுறையைச் செதுக்கவேண்டியது தற்போதைய அவசியத் தேவை.

முதலில் பூடகத் தன்மையை நீக்கவேண்டும், வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவரவேண்டும்.

இதற்குக் கணிசமாக கிட்டு பூங்கா எழுச்சி துணை புரிந்திருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். அதைப் புரிந்துகொள்ள, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை எழுச்சி ஒழுங்குபடுத்தப்பட்ட விதத்தை நினைவுமீட்டல் தேவைப்படுகிறது.

சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர், பெப்ரவரி 2021 இல் பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரை என்ற மக்கள் எழுச்சிப் போராட்டத்தை தமிழ் பேசும் மக்களுக்கான குடிசார் சமூகமாக ஒன்றை உருவாக்கும் திட்டத்தோடு இலண்டன், இந்தியா என்று திரைமறைவில் இருந்து சிலர் இயக்க ஆரம்பித்ததை மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணக் குடிசார் செயற்பாட்டாளர்கள் ஆதாரபூர்வமாகத் தெரிவிக்கிறார்கள்.

திம்புக்கோட்பாட்டை மட்டுமல்ல அரசியற் தன்னம்பிக்கையும் அற்றுத் தமது அரசியல் இருப்புக்காக இந்தியாவிடமிருந்து புதிதாகத் தயவு ஏதும் கிடைக்காதா என ஏங்கிக் கிடப்பவர்கள் இவர்கள் என்ற விமர்சனமும் இந்த முன்னாள் ஆயுத - பின்னாள் தேர்தல் அரசியல்வாதிகள் மீது உண்டு

இவ்வாறான ஒரு போராட்டத்தைத் தாம் நடாத்த இருப்பதாகவும் அதற்கு வேண்டிய ஒழுங்குகள் செய்து தரப்படும் என்றும், போராட்டம் பயணிக்கும் அந்த அந்த இடங்களில் அதைச் சந்தித்து ஒழுங்குகள் செய்வதில் பங்கேற்க முடியுமா என்றும், வடக்கிலும் கிழக்கிலும் இருந்து இயங்கும் தமிழ் சிவில் சமூக அமைப்புகளின் செயற்பாட்டாளர்களிடம் இலண்டனில் இருந்து தொலைபேசிகள் ஊடாக உரையாடப்பட்டபோது, இந்த மக்கள் எழுச்சிப் போராட்டத்தின் பின்னால் இந்தியாவே சரணம் எனும் அணியைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்பதையும் இதற்கான நிதியூட்டல் இலண்டன் ஊடாக வரவுள்ளது என்பதையும் அறிந்துகொண்ட வவுனியா மற்றும் முல்லைத்தீவு குடிசார் நடவடிக்கைகளில் ஈடுபடும் செயற்பாட்டாளர்களிற் சிலர், வீண் வில்லங்கம் வேண்டாம் என்று ஒதுங்கிக்கொண்டனர்.

இலண்டனில் இருந்து பத்திரிகை அறிக்கைகளை வெளியிட்டு, நிதியையும் அனுப்பி, மக்கள் எழுச்சி ஒன்றை நடாத்த முனைந்தவர்கள், பத்துக் கோரிக்கைகளைத் தயாரித்திருந்தார்கள். இந்தப் பத்துக் கோரிக்கைகளும் தமிழ்த் தேசியக் கண்ணோட்டத்தில் அன்றி, சிறுபான்மைக் கண்ணோட்டத்தில், மிகவும் குறைந்தபட்சக் கோரிக்கைகளாகத் தயாரிக்கப்பட்டிருந்தன.

எனினும், பெருமளவு திரட்சியோடு நடைபெற்ற இந்த மக்கள் எழுச்சி யாழ்ப்பாணத்தில் நிறைவுபெறும் தருணத்தில் குறைந்தபட்சக் கோரிக்கைகள் கைவிடச் செய்யப்பட்டு உச்சபட்சத் தமிழ்த் தேசியக் கோரிக்கைகள் பங்குபெற்ற மக்களாலும், தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்களாலும், ஊடகவியலாளர்களாலும், முன்னிலையில் நின்றவர்களிடம் திணிக்கப்படவும், வேலன் சுவாமிகள் அந்தக் கோரிக்கைகளையே வாசித்து எழுச்சியை நிறைவுசெய்யும் நிலை ஏற்பட்டது.

பல அரசியற் கட்சிகளைச் சார்ந்தவர்களும் இந்த எழுச்சியிற் பலவேறு கட்டங்களிற் பங்குபற்றியிருந்தார்கள்.

நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்கையில், சுமந்திரன் போராட்டத்தின் ஆரம்பத்தில் தயாரிக்கப்பட்டிருந்த குறைந்தபட்சமான பத்துக் கோரிக்கைகளை வாசித்தார். கஜேந்திரகுமார் உடனடியாகவே அதை மறுதலித்து முடிவின் போது வாசிக்கப்பட்ட உச்சபட்சக் கோரிக்கைகளை எடுத்துரைத்தார்.

இது பூடகத்தன்மையினால் ஏற்பட்ட ஒரு குழப்பம். வெளிப்படைத்தன்மையற்ற மர்மமான முறையில் எழுச்சி ஆரம்பிக்கப்பட்டிருந்ததால் வந்த விளைவு.

தொலையியக்கிக் குடிசார் சமூகம் தெளிவற்ற குழப்பங்களைத் தரக்கூடியது என்பதற்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி போராட்டம் ஒழுங்குபடுத்தப்பட்ட விதமும் அதன் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட விதமும் முக்கிய உதாரணங்களாகின்றன.

இதைத் தொடர்ந்து, தமிழ்க் கட்சிகளை ஒற்றுமைப்படுத்தும் செயற்பாட்டில் அடுத்ததாக வேலன் சுவாமிகள் இறங்குவார் என்று யாழ் பல்கலைக்கழக வட்டாரங்களில் பேச்சு அடிபட ஆரம்பமானது. வேலன் சுவாமிகள் அடுத்த மாகாணசபை முதல்வராகக் கூட வரலாம் என்று பத்திரிகைகள் செய்திவெளியிடும் வரை நிலைமை கவலைக்கிடமானது!

தான் என்ன சொல்கிறேன் என்று கணிப்பிடாது, வரக்கூடிய ஆபத்தைப் பற்றிச் சற்றும் சிந்திக்காது, மாவை பொருத்தமற்றவர் என்ற சிந்தனையால் மட்டும் உந்தப்பட்டிருந்த முன்னாள் வடமாகாணசபை முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் வேலன் சுவாமிகளை முதலைமைச்சர் வேட்பாளர் ஆக்கலாமோ என்று திடுதிப்பெனச் சிந்திக்க ஆரம்பித்த நகைச்சுவையும் நடைபெற்று முடிந்தது! இந்த நகைச்சுவைக்குக் கொழும்பு ஆங்கில ஊடகங்களும் செய்தி முக்கியத்துவம் கொடுத்திருந்தன.

தொடர்ந்து, கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் பொத்துவில்-முதல்-பொலிகண்டி புகழ் வேலன் சுவாமிகள் இறங்கவிருப்பதாக யாழ் பல்கலைக்கழக வட்டாரங்கள் கூட ஐரோப்பாவில் இருந்து தொலைபேசிகளால் அழைப்புக்குள்ளாயின.

ஆனால், வேலன்-சுவாமி அல்ல, இன்னொரு புறத்தில் ரெலோவின் சுரேந்திரன் குரு-சுவாமி, அந்தக் கைங்கரியத்தில் ஈடுபட ஆரம்பித்தார்! இதுவும் பூடகமாகவே இயங்க ஆரம்பித்தது. ஊடகங்கள் ஊடாகப் பாய்ந்தது.

குறைந்தபட்சப் பதின்மூன்றாம் சட்டத்திருத்தத்தைக் கோரவேண்டும் என்ற பேச்சு ஆரம்பித்தது. வேலன் சுவாமியை முன்னிறுத்திய புலம்பெயர் வட்டாரங்கள் அமைதியாக, தமது மறைமுக ஆதரவைப் பதின்மூன்றைப் புதுப்பிக்கும் கோரிக்கைக்கு வழங்க எத்தனித்தன.

சுயமான, வெளிப்படைத்தன்மையுள்ள ஓர் அரங்கம் உருவாகாமல், இந்தியாவே சரணம் என்ற வழிக்குத் திசை திருப்பப்படவேண்டும் என்ற உத்திகளே – ஒரே ஒரு சுய முயற்சியைத் தவிர – அனைத்துத் திசைகளில் இருந்தும் முடுக்கிவிடப்பட்டன.

பல்கலைக்கழகத் தமிழ்த் தேசிய வட்டாரங்களாற் கூட இதனைச் சரிவரக் கிரகிக்க முடியவில்லை.

குறைந்த பட்சக் கோரிக்கைகளும் வரம்புகளும் குருசாமி அணியால் முன்வைக்கப்படுகின்றன.

அதை எதிர்த்துக் களமிறங்கும் சூழல் சம்பந்தனுக்கும் சுமந்திரனுக்கும் ஏற்படுகிறது.

பதின்மூன்று, இந்திய-இலங்கை ஒப்பந்தம் என்றவற்றுக்குள் நின்றவாறு, இந்தியாவே சரணம் என அழைத்திடவேண்டும் என்ற கூக்குரல் பல திசைகளில் இருந்து ஒலிக்க ஆரம்பித்தது.

ஆனால், இந்திய இலங்கை ஒப்பந்தப் பாதையில் 1980களின் நடுப்பகுதியில் பயணித்து, எதையும் சாதிக்கமுடியாது இறுதியில் இந்தியாவாலும் இலங்கையாலும் இராணுவரீதியாகவும் பயன்படுத்தப்பட்டு, தமிழ்த் தேசியத்தில் இருந்து அன்னியப்படுத்தப்பட்டு, மீண்டும் அவ்வாறான ஒரு சூழல் உருவாகாதா என்ற ஏக்கத்தில் இருக்கும், திம்புப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுப் பின்னர் தடம் புரண்டு இலங்கைத் தேர்தல் அரசியலுக்குள் நுழைந்த முன்னாள்-போராளி மற்றும் துணை-இராணுவக் குழுக்கள், குருசாமியின் ஒருங்கிணைப்பில் திரண்டன.

இந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இயங்கும் செல்வம்-ரெலோ, புளொட் ஆகியவையும் நீதியரசர் விக்னேஸ்வரன் தலைமையின் கீழுள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் சிவாஜிலிங்கம்-சிறீகாந்தா-ரெலோ ஆகியவையும் சங்கமித்தன.

திம்புக்கோட்பாட்டை மட்டுமல்ல அரசியற் தன்னம்பிக்கையும் அற்றுத் தமது அரசியல் இருப்புக்காக இந்தியாவிடமிருந்து புதிதாகத் தயவு ஏதும் கிடைக்காதா என ஏங்கிக் கிடப்பவர்கள் இவர்கள் என்ற விமர்சனமும் இந்த முன்னாள்-ஆயுத, பின்னாள்-தேர்தல் அரசியல்வாதிகள் மீது உண்டு.

அடுத்ததாக, முள்ளிவாய்க்காலுக்குப் பின் வன்னியில் இருந்து இன அழிப்புப் போரில் உயிர்தப்பிப் புலம்பெயர்ந்து, இந்தியாவிலும் பிரித்தானியாவிலும் கனடாவிலும் இருந்து, முன்னாள் புலிகள் என்ற பெயரில் அல்லது முன்னாள் புலிகளின் அரசியல் சார்ந்தவர்களாக பிரித்தானிய-இந்திய தரப்புகளுடன் இயங்கும் முன்னாள் வட்டங்கள்.

இவர்களிற் சிலரே, வேலன் சுவாமிகளுக்கும், சந்திரகாசனின் மகன் இளங்கோவனுக்கும், மட்டக்களப்பு குடிசார் செயற்பாட்டாளர் சீலனுக்கும் பின்னால் இருந்து பொத்துவில்-தொடக்கம்-பொலிகண்டி போராட்டத்தை ஆரம்பித்திருந்தவர்கள்.

செயற்பாட்டுத்தளம் இவ்வாறிருக்க, கருத்துத் தளம் எவ்வாறு இயங்குகிறது என்பதையும் நாம் பார்க்கவேண்டும்.

வன்னியில் 2009 போரின் இறுதிவரை இருந்து பின்னர் இந்தியாவின் தமிழ்நாட்டில் தற்போது வதியும் மு. திருநாவுக்கரசில் இருந்து, இலண்டனில் வதியும் குணா கவியழகன் வரை, உடனடியாக 13 ஆம் திருத்தத்தை இலங்கை அரசு அமுல்படுத்துமாறு இந்தியாவை அழுத்தம் கொடுக்குமாறு தமிழர் தரப்பு வேண்டுவது சிறந்த உத்தியே என்ற கருத்தை முன்வைத்தனர்.

இந்திய-இலங்கை ஒப்பந்தம் என்ற ஒரு 'பந்தம்' இன்னும் ஈழத்தமிழருக்கு வேண்டியதாக இருப்பதாகவும் அது தொடர்பான 'கடப்பாடு' இலங்கை அரசுக்கு இருப்பதாகவும், அதனால் ஈழத்தமிழ்த் தேசத்தின் அரசியல் அபிலாசையை அதை மீண்டும் ஒட்டச்செய்து தீர்க்கலாம் என்பதாகவும் அவர்களின் 'உத்தி' வெளிப்பட்டது. சட்டத்தில் உள்ளதைத் தானே கேட்கின்றோம். அது தீர்வல்லவே, என்று தமக்கெதிரான விமர்சனங்களுக்குச் சமாதானம் தேடினார்கள்.

ஆனால், இலங்கை அரசின் உத்தியாளர்கள், பசில் ராஜபக்சா, ஜி.எல். பீரிஸ், மிலிந்தா மொராகொடா போன்றோர் இவர்களை விடப் பல மைல்கல் தொலைவு பயணித்திருந்தார்கள்.

தமிழ்த் தரப்பு கடிதம் தயாரித்துக் கையளிக்கமுன்னரே, ஒன்று தசம் ஒன்பது பில்லியன் அமெரிக்க டொலர் நிதித்திட்டமும் திருமலை எண்ணெய்க்குத உடன்பாடும் இணை-இராணுவப் பயிற்சியும் கூட இந்தியாவுடன் ஆரம்பித்துவிட்டது.

இதனால், பதின்மூன்றைக் கேட்பது ஒரு வகையில் இந்தியா இலங்கை மீது சமஸ்டிக்கான அழுத்தம் கொடுக்காது இலங்கை அரசுக்குத் தேவைப்படும் அதிகாரப் பரவலாக்கம் எனும் வீணடிப்பு நாடகத்துக்கான பிடில் ஆகவும் மாறியது.

அதேவேளை, இதற்கு எதிரான எதிர்ப்பு, ஒரு நாடு ஒரு சட்டம் நிகழ்ச்சி நிரலுக்கு உந்துகொடுப்பது போலவும் சித்தரிக்கப்பட்டது.

அதாவது, இந்திய நிகழ்ச்சிநிரலா, கொழும்பின் இந்தியா நோக்கிய நிகழ்ச்சிநிரலா, ஈழத்தமிழரின் இந்தியா நோக்கிய நிகழ்ச்சிநிரலா இது. அல்லது, எல்லாம் கலந்த கலவையா என்ற குழப்பம் எழுந்தது.

ஈழத் தமிழர்களின் இந்தியா நோக்கிய நிகழ்ச்சி நிரல் இரண்டாக உடைத்துக் காட்டப்பட்டது. ஒருபுறம் கடிதத்தில் கையெழுத்திட்ட ஏழுபேர். அவர்களில் மூவர் மக்களால் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படாதவர்கள். நால்வர் நாடாளுமன்ற உறுப்பினர்.

மறுபுறம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மட்டுமே எஞ்சியிருந்தது.

திலீபன் முன்றலில் இருந்து கிட்டு பூங்கா வரை சென்றது இந்த எழுச்சி. இரண்டு தியாகப் பெயர்களின் அர்த்தங்களுக்கும் பின்னால் ஈழப் போராட்டத்தின் மீதான இந்திய வடு குறியீடாக இருப்பதையும் இங்கு நோக்கவேண்டும்

இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்தாலும் இவர்களே மாற்று எதிர்ப்பைக் கிளப்பவேண்டிய கடப்பாட்டில் இருந்தார்கள். கடும் விமர்சனம் வேறு இவர்களைச் சூழ்ந்துகொண்டிருந்தது. கூட்டங்களில் கலந்துகொள்ளவில்லை, மாற்றுக் கோரிக்கைகளைத் தயாரிக்கவில்லை.

கருத்துருவாக்கம் இன்றி, வெளிநாட்டில் இருந்து வெறுமனே நிதியூட்டம் செய்து மக்கள் எழுச்சிகளை உருவாக்குவது என்பது, கிட்டு பூங்கா எழுச்சிக்கும் உள்ள ஒரு குறைபாடு. ஆனால், குறைந்தபட்சம் தெளிவாக அடையாளம் காணப்பட்ட ஒரு கட்சியின் மூலமும், பலத்த விமர்சங்கள் இருப்பினும், சொந்தமாகத் தமது கருத்தை முன்வைப்பவர்களாகவும், கருத்தையும் புலம்பெயர் தரப்புகளிடம் இருந்து கடன்வாங்காது இயங்கக்கூடியவர்களாகவும் முன்னணியினர் இருக்கின்றார்கள்.

பொத்துவில்-தொட்டு-பொலிகண்டி வரை எனும் எழுச்சியில் இருந்து கிட்டு பூங்கா எழுச்சி இந்த வகையில் வித்தியாசமானது.

குறைந்தபட்சம் ஒரு மக்கள் எழுச்சிப் போராட்டத்தைக் காலம் தாமதித்தென்றாலும், கடிதம் கையளிக்கப்பட்ட பின்னர் என்றாலும் நடாத்தியிருக்கிறார்கள்.

வடக்கு கிழக்கு மாகாணங்களின் ஏழு மாவட்டங்களில் முதலாவதாக யாழ்ப்பாண மாவட்டத்தில், திலீபன் முன்றலில் இருந்து கிட்டு பூங்கா வரை சென்றது இந்த எழுச்சி.

இரண்டு தியாகப் பெயர்களின் அர்த்தங்களுக்கும் பின்னால் ஈழப் போராட்டத்தின் மீதான இந்திய வடு குறியீடாக இருப்பதையும் இங்கு நோக்கவேண்டும்.

எப்பொழுதோ இறந்துபோன பதின்மூன்றுக்கு இன்றும் பாடை கட்டும் நிலையில் தொடர்ந்தும் நாம் இருப்பது பொருத்தமற்றது. அறிவுபூர்வமானது அல்ல.

ஆனால், பாடை கட்டவேண்டிய நிலை தோற்றப்பட்டதும் தவிர்க்கமுடியாதது.

இந்தியா நோக்கிய ஈழத்தமிழர் உரிமை சார், இயல்பு அரசியல் சார் கோரிக்கைகள் அறிவுபூர்வமாக முன்வைக்கப்படவேண்டும்.

இந்தியா தனித்து நின்று ஈழத்தமிழர் விடயத்தையோ, இலங்கை ஒற்றையாட்சி விடயத்தையோ கையாளவில்லை. அது அமெரிக்காவோடும் பிரித்தானியாவோடும் நெருக்கமாகக் கூடி நின்று கூட்டாகவே ஈழத்தமிழர்களைக் கையாளுகிறது.

இலங்கை பற்றிய வெளியுறவுக்கொள்கை இந்தியாவால் மட்டும் தனித்துத் தீர்மானிக்கப்படவில்லை.

ஆகவே, ஈழத்தமிழர்கள் இத்தருணத்தில் இந்தியாவிடம் முதன்மையாகவும், அமெரிக்க, பிரித்தானிய தரப்புகளிடம் தவறாமலும் ஆணித்தரமாக முன்வைக்கவேண்டிய கோரிக்கைகள் தெளிவாக, பூடகமின்றி, நெளிவு சுழிவு இன்றிக் காலந் தாழ்த்தாமல் சொல்லப்படவேண்டும்.

இந்தியா ஈழத்தமிழர் தொடர்பான தனது தவறான வெளியுறவுக்கொள்கையில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும், ஏன் அந்த மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும், அதனால் இந்தியாவுக்கு கைமாற்றாக என்ன பலன்கள் கிடைக்கும், ஈழத்தமிழர்களின் எந்த நலன்கள் பேணப்படும் என்ற சமன்பாட்டுக்கான திட்பமான கோரிக்கைகள் செதுக்கப்பட்டு முன்வைக்கப்படவேண்டும்.

அதுவே, உரிமை மற்றும் இயல்பு அரசியல் சார் ஈழத்தமிழர் தேசியத்தின் வெளியுறவுக் கொள்கை.

பூடகமாக, ஒளிந்து மறைந்திருக்கும் வெளிப்படையற்ற தன்மைகளோடு அவ்வாறான வெளியுறவுக்கொள்கை வடிவமைக்கப்பட முடியாதது.

குரு-சாமியும் சரி, வேலன்-சுவாமியும் சரி, எந்த நிதிப் பின்புலத்தில் இருந்து இயங்குகிறார்கள் என்ற கேள்வி இங்கு எழுகிறது. மக்கள் முன்னணியின் நிதிப் பின்புலம் ஆதல், எது என்பது கட்சிக்கும் மக்களுக்கும் தெரிந்திருக்கிறது.

ஈழத் தமிழர்களின் வெளியுறவுக் கொள்கையை நிதியூட்டத்தினால் மேற்கொள்ளப்படும் சொந்த அரங்கமற்ற நகர்வுகள் தீர்மானிக்கக் கூடாது.

அதற்கான கருத்துருவாக்கம் அறிவியல் ரீதியாகத் தொடரப்படவேண்டும். அதற்கான எழுச்சி மற்றும் உணர்வு அரசியல், அறிவுரீதியான தெரிவுக்காகவே கட்டப்படவேண்டும்.

உணர்வு உயிருக்குப் பின் செல்லவேண்டும். உயிர் என்பது அறிவு.

உயிரற்ற உணர்வு, உசார் மடையர்களை மட்டுமே உருவாக்கும். உசார் மடையர்கள் தேர்தல் அரசியலுக்கு உதவலாம், தமிழ்த் தேசிய அரசியலுக்கு உதவ மாட்டார்கள்.

ஈழத்தமிழ்த் தேசியத்திற்கு உசார் மடையர்களும் தேவையில்லை, வெளிச்சக்திகளின் அடிவருடிகளும் தேவையில்லை.