இந்தியத் தூதரகம் நிறுத்தியதா? அப்படியானால், உயர் நீதிமன்றத் தீர்ப்பின் படி

வடக்குக் கிழக்கு மாகாணங்களை இணைக்கப் பிரேரணை சமர்ப்பித்துப் பரீட்சிக்கலாமே!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியிடம் பகிரங்கக் கேள்வி
பதிப்பு: 2022 பெப். 12 13:28
புலம்: முல்லைத்தீவு
புதுப்பிப்பு: பெப். 14 21:17
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
நாடாளுமன்ற நடைமுறை விதிமுறைகள் (Practical Terms) மற்றும் அங்கு நடைபெறவுள்ள அல்லது நடைபெற்ற விவாதங்களின் முக்கியமற்ற தன்மை அல்லது பிரதானப்படுத்தக்கூடிய விவாதங்கள் (Highlighted Debates) எது என்பதை நாடாளுமன்றச் செய்தியாளர்களே தீர்மானிக்க வேண்டும். ஏனெனில் நாடாளுமன்ற விவாதங்களில் பேசும், அல்லது பிரேரணை, சபை ஒத்திவைப்புவேளைப் பிரேரணையைச் சமர்ப்பித்து விவாதங்களை நடத்தும் தமிழ்ப் பிரதிநிதிகள், இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றம் (Sri Lankan Unitary state parliament) என்பதை ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை மற்றும் போரினால் உருவான பக்க விளைவுகளுக்குரிய அத்தனை தீர்வுகளையும் பேசிப் பெற்றுவிடாலமென்ற தோற்றப்பாட்டைக் காண்பிக்கின்றனர்.
 
இலங்கை அரசாங்கம் கொழும்பில் உள்ள அப்பலோ மருத்துவ மனையின் கூடுதல் பங்குகளை சர்வதேச நியமங்களுக்கு மாறாகக் பெற்றுத் தனதாக்கியது. அப்போது நாடாளுமன்றத்தில் அமைச்சர்கள் சிலர் இந்தியாவுக்கு எதிராகப் பேசினர். அந்த விவாதங்களை நிறுத்த இந்தியத் தூதரகம் முற்படவில்லை

நகல் சட்ட மூலம், திருத்தச் சட்டமூல விவாதங்களில் தமிழ் உறுப்பினர்கள் முன்வைக்கும் கருத்துக்கள் அல்லது திருத்தங்கள் பெரியளவில் ஏற்கப்படுவதுமில்லை. அரசதரப்பில் இருந்து பொறுப்புக் கூறுவதுமில்லை. (No accountability)

ஆகவே நாடாளுமன்றச் செய்தியாளர்களுக்கு ஒற்றையாட்சி நாடாளுமன்ற விதிமுறைகள், மரபுகள், அனைத்தும் தெரிந்திருக்க வேண்டும். குறிப்பாகப் பிரேரணைகள் மீதான விவாதங்கள், நகல் சட்டமூலங்கள், திருத்தச் சட்டமூலங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் குறித்த விவாதங்களின் தன்மைகள், (Nature of Debates) விவாதங்களின் இயற்பியல்கள் (Physiognomies of Debates) பற்றி முழுமையாகத் தெரிந்திருக்க வேண்டும். (சபை நடவடிக்கைகள் பற்றிய அறிவு உட்பட- Parliamentary routine proceedings)

சபை ஒத்திவைப்புவேளைப் பிரேரணை என்பது சபையின் அன்றைய அமர்வு ஒத்திவைக்கப்பட்ட பின்னர் ஆகக் குறைந்தது அரை மணி நேரம் இடம்பெறும் விவாதமாகும். எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தனது பிரதேசத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து சபாநாயகருக்கு எழுத்துமூலம் சமர்ப்பித்துப் பின்னர் விவாதிக்க முடியும்.

சபை நிகழ்ச்சி நிரலில் இல்லாவிட்டாலும் அவசியம் ஏற்படின் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை சமர்ப்பித்து விவாதிக்கலாம். அதாவது பிரதேசம் ஒன்றின் பிரச்சனைகளை அல்லது குறித்த விவகாரம் ஒன்றை பகிரங்கப்படுத்துவதே இந்த விவாதத்தின் பிரதான நோக்கமே தவிர வேறெதுவுமில்லை.

ஆனால் அரசியலோடு இணைந்த பிரச்சனைகள் தொடர்பாக முழுமையான பிரேரணை சமர்ப்பித்து விவாதம் நடத்த வேண்டுமானால் சபாநாயகா் தலைமையில் இடம்பெறும் நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் பெறப்பட வேண்டும். ஆனால் தமிழர், முஸ்லிம்கள் சார்ந்த அரசியல் பிரச்சனைகள் என்றால் அதற்கு அனுமதி பெறுவது கடினம். (முஸ்லிம்கள் கட்சிகள் அனுதாப அடிப்படையில் அனுமதி பெற்றுவிடுவார்கள்)

உதாரணமாக வடபகுதி மீனவர்கள் இந்திய மீனவர்களால் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக முழுமையான பிரேரணையைச் சமர்ப்பித்து விவாதிக்க சபாநாயகர் இணங்குவதற்கான வாய்ப்பு இல்லை.

அப்படியானால் சபைக்குள் தமிழ்த்தேசியக் கட்சிகள் கூட்டுப் போராட்டம் ஒன்றை நடத்த வேண்டும். சிங்கள எதிர்க்கட்சிகளின் அனுதாபத்தைப் பெற வேண்டும். ஆகவே அனுதாபம், பாவ புண்ணியங்களின் அடிப்படையில் 'சரி விடுங்கள் விவாதிக்கட்டும்' என்று சிங்கள உறுப்பினர்கள் சொன்னால் அந்தப் பிரரேரணைக்கு அனுமதி கிடைக்கும்.

அப்படி இல்லையேல் சபை ஒத்திவைப்புவேளைப் பிரேரணையாகச் சமர்ப்பித்துக் குறித்த விவகாரத்தை விவாதிக்கலாம்.

சபை நடவடிக்கைகள் தொடர்பாக சபாநாயகர் தலைமையில் இடம்பெறும் நாடாளுமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணங்கினால் சபை ஒத்திவைப்புவேளைப் பிரேரணை மீதான விவாதத்துக்குரிய நேரத்தை அதிகரிக்கலாம். வேண்டுமானால் ஒரு நாள் விவாதமாகவும் நடத்த முடியும்.

ஆனால் நாடாளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டத்தின் (The Standing Orders of Parliament) பிரகாரம் இந்த விவாதத்துக்குரிய நேர ஒதுக்கீடு அரை மணிநேரம் அல்லது ஒரு மணி நேரம் மாத்திரமே.

அத்துடன் இந்த விவாதத்தின் நிறைவில் விவாதிக்கப்பட்ட குறித்த விடயதானம் தொடர்பாக அமைச்சர் பதிலளிக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. பிரதியமைச்சர் அல்லது அரசதரப்பு உறுப்பினர் ஒருவர் பதிலளித்தாலே போதும்.

ஆனால் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணைக்குப் பதிலளிக்காமல் விட்ட சந்தர்ப்பங்களே அதிகமென நாடாளுமன்றச் செய்தி எழுதும் அனுபவமுள்ளோர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் விவாதம் நடைபெறும்போது ஆசனங்களில் உறுப்பினர்கள் இருப்பதுமில்லை. அதுவும் தமிழ் உறுப்பினர்களின் சபை ஒத்திவைப்புவேளை விவாதம் என்றால் சிங்கள உறுப்பினர்கள் மாத்திரமல்ல, சிங்களச் செய்தியாளர்கள்கூட செய்தியாளர் களரியில் இருக்கமாட்டார்கள் எனவும் அனுபவமுள்ள செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

இப்படிச் சிங்கள உறுப்பினர்கள் சபையில் இல்லாமல் இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளைப் பிரேரணை மீதான பல விவாதங்களை எனது நாடாளுமன்ற செய்தியிடல் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன்.

அத்துடன் அந்த விவாதம் அரசாங்கத்திற்குப் பெரும் தாக்கத்தையோ அல்லது எந்தவொரு நாட்டுக்குமான தாக்கத்தையோ ஏற்படுத்தக்கூடியதுமல்ல.

முழுமையான பிரேரணையாகச் சமர்ப்பிக்கப்பட்டு அரசதரப்பு எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் பலரும் விவாதத்தில் பங்குபற்றினால், அது குறிப்பிட்டளவு தாக்கத்தைச் செலுத்தும். ஆனாலும் எந்த விவாதங்களாக இருந்தாலும் வெறுமனே நாடாளுமன்ற கன்சாட் அறிக்கையில் பதியப்பட்டு வரலாற்று ஆவணமாக மாத்திரமே இருக்கும்.

விவாதத்தில் பேசப்பட்ட விடயங்கள் செயல்வடிவில் அல்லது நடைமுறைக்கு வருவதென்பது முயற்கொம்பு. அதுவும் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை குறித்த விவகாரங்கள், போரின் பக்க விளைவுகளான மீள் குடியேற்றம், காணிப் பறிப்பு, மீனவர் பிரச்சனை உள்ளிட்ட பல அடிப்படைப் பிரச்சனைகள் பற்றிய விவாதங்கள் எல்லாமே கன்சாட் அறிக்கையில் மாத்திரமே உண்டு.

விவாதத்தில் பேசப்பட்ட விடயங்கள் செயல்வடிவில் வருவதென்பது முயற்கொம்பு. அதுவும் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை குறித்த விவகாரங்கள், போரின் பக்க விளைவுகளான மீள் குடியேற்றம், காணிப் பறிப்பு, மீனவர் பிரச்சனை உள்ளிட்ட பல அடிப்படைப் பிரச்சனைகள் பற்றிய விவாதங்கள் எல்லாமே கன்சாட் அறிக்கையில் மாத்திரமே உண்டு

தமிழ் நாளேடுகள், வார இதழ்களிலும் செய்திகள் கட்டுரைகளாகவும் உள்ளன.

இலங்கை நாடாளுமன்றம் என்பது வெறுமனே ஒரு பேச்சு மேடைதான் என்று அனுபவமுள்ள நாடாளுமன்றச் செய்தியாளர்கள் கூறுகின்றனர். வாக்குப் பெறும் நோக்கில் மக்களைக் கவருவதற்காக மாத்திரமே பரபரப்பாக நாடாளுமன்றத்தில் பேசுகின்றனர் எனவும் அனுபவமுள்ள செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

கொழும்பில் இருக்கும் வெளிநாட்டுத் தூதரகங்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெறும் விவாதங்களில் தங்கள் நாடுகளைப் பற்றித் தரக் குறைவாகப் பேசினாலும் கண்டுகொள்வதுமில்லை. அதற்குப் பதிலளிப்பதுமில்லை.

விமல் வீரவன்ச எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்தபோது, கொழும்பில் உள்ள அமெரிக்க, இந்தியத் தூதுவர்களைப் புலிகளின் முகவர்கள் என்றுகூடப் பேசியிருக்கிறார். ஆனால் அது பற்றி எந்தவொரு விளக்கமும் தூதுவர்கள் அரசாங்கத்திடம் பகிரங்கமாகவோ அல்லது தொலைபேசியிலோ கேட்கவேயில்லை. (சிலவேளை அது பற்றி மூடிய அறைக்குள் இராஜதந்திரிகள் விளக்கமளித்திருப்பர்)

2006 ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள இந்திய அப்பலோ சர்வதேச மருத்துவ மனையின் கூடுதல் பங்குகளை சர்வதேச நியமங்களுக்கு மாறாகப் பெற்று இலங்கை தனதாக்கியது. இதனால் கொழும்பில் அப்போதிருந்த இந்தியத் தூதுவர் நிருபன் சென் இலங்கை அரசாங்கத்திடம் விளக்கம் கோரியிருந்தார்.

பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இந்தியாவுக்கு எதிரான இனவாத மனநிலையைக்கூடத் அமைச்சர்கள் மத்தியில் தோற்றுவித்திருந்தது.

அப்போது அமைச்சராக இருந்த அமரர் அனுரா பண்டாரநாயக்கா நாடாளுமன்றத்தில் கடுமையாக விவாதித்திருந்தார். இந்தியத் தூதுவரை மோசமாகத் தாக்கிப் பேசியியுமிருந்தார். ஆனால் அந்த விவாதத்தை நிறுத்துமாறு அல்லது இந்தியத் தூதுவரை அவதூறாகப் பேசியமை பற்றியோ இந்தியத் தூதரகம் பகிரங்க விளக்கம் கோரியதாக இல்லை.

அதுவும் சபை ஒத்துவைப்புவேளை பிரேரணை ஒன்றை நிறுத்துமளவுக்கு எந்தவொரு வெளிநாட்டுத் தூதரகமும் கீழிறங்கிய சந்தர்ப்பங்களை எனது நாடாளுமன்ற அனுபவத்தில் நான் கண்டதில்லை. ஏனெனில் நாடாளுமன்ற விவாதங்கள் என்பது உறுப்பினர்களின் சிறப்புரிமை (Special Privilege) என்பது வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு நன்கு தெரியும்.

ஆகவேதான் நாடாளுமன்றச் செய்தியாளர்கள் அல்லது நாடாளுமன்றச் செய்தி எழுதுவோர் முதலில் செய்தி நுட்பங்கள், விதிகள், மரபுகள் ஆகியவற்றைப் புரிதல் அவசியம்.

2020 ஆம் ஆண்டு மாவீரர் நாள் அன்று தமிழரசுக் கட்சி நாடாளுமன்றத்தில் தீபம் ஏற்றியதாகப் படத்துடன் நாளிதழ் ஒன்றில் செய்தி வந்தது. ஆனால் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் உள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்திலேயே தீபம் ஏற்றப்பட்டது.

கட்சி அலுவலகத்தில் தீபம் ஏற்றியதால், நாடாளுமன்ற விதிகளை மீறியதாகக் குற்றம் சுமத்திப் பொலிஸார் விசாரணை நடத்தவே முடியாது.

ஆகவே நாடாளுமன்றச் சபா மண்டபத்திற்கு முன்பாகத் தீபம் ஏற்றியிருந்தால் மாத்திரமே அது செய்தி. ஆனால் அங்கு தீபம் ஏற்றுவதற்குச் சபாநாயகர் அனுமதி வழங்கமாடடார். அப்படி அத்துமீறித் தீபம் ஏற்றியிருந்தால், உடனடியாகவே நாடாளுமன்றப் பொலிஸார் தடுத்திருப்பார்கள், தீபத்தைத் தட்டி விழுத்தியிருப்பார்கள்.

அதனாலேதான் அரசாங்கத்துக்கும் தங்களுக்கும் சிக்கலை ஏற்படுத்தாமல், தங்கள் கட்சி அலுவலகத்துக்குள் தீபம் ஏற்றி விட்டுப் படத்தை ஊடகங்களுக்கு அனுப்பி நாடாளுமன்றத்தில் தீபம் ஏற்றப்பட்டதாகத் தமிழரசுக் கட்சி கதைவிட்டிருந்தது.

ஆகவே தங்கள் அரசியல் புகழ்ச்சிக்காக அரசியல்வாதிகள், நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பாக வெளியிடும் படங்களையோ அறிக்கைகளையோ உடனடியாகச் செய்தியாக்கவே கூடாது.

மாறாக நாடாளுமன்றம் பற்றிச் சரியான புரிதலோடு மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.

மீனவர் பிரச்சனையைத் தீர்ப்பதாக உறுதியளித்து, அது குறித்த சபை ஒத்திவைப்புவேளைப் பிரேரணையை கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் தடுத்து நிறுத்தியிருந்தால், வடக்குக் கிழக்கு இணைப்புத் தொடர்பான பிரேரணையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சமர்ப்பிக்கக்கூடிய சந்தர்ப்பம் உருவாகியுள்ளதென்ற முடிவுக்கு வரலாம்

ஏனெனில் சாதாரண மக்கள் நாடாளுமன்ற விதிமுறைகளை அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் ஊடகங்கள் மாத்திரமே பொறுப்புடன் செயற்பட்டு மக்களுக்கு நாடாளுமன்றப் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் புரியும் அரசியல் திருகுதாளங்களை அம்பலப்படுத்த வேண்டும்.

மீனவர் பிரச்சனையைத் தீர்ப்பதாக உறுதியளித்து, அது குறித்த சபை ஒத்திவைப்புவேளைப் பிரேரணையை கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் தடுத்து நிறுத்தியதாக இருந்தால், வடக்குக் கிழக்கு இணைப்புத் தொடர்பான பிரேரணை ஒன்றை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சமர்ப்பிக்கக்கூடிய சந்தர்ப்பம் ஒன்று உருவாகியுள்ளதென்ற முடிவுக்கு வரலாம்.

ஏனெனில் 2006 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தினால் வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது. பிரேரணை ஒன்றின் மூலம் மீண்டும் இணைக்க முடியுமென பிரதம நீதியரசராக இருந்த சரத் என் சில்வா தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருந்தார்.

ஆனால் இன்றுவரை தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரேரணை எதனையும் சமர்ப்பித்து வடக்குக் கிழக்கு மாகாணத்தை மீண்டும் இணைக்க ஏற்பாடு செய்யவில்லை. ஆகவே 2020 தேர்தலில் இரண்டு ஆசனங்களைப் பெற்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விசேட பிரேரணை ஒன்றைச் சமா்ப்பித்து வடக்குக் கிழக்கை மீண்டும் இணைக்க முற்படலாம்.

அது இலங்கை நாடாளுமன்றத்தில் சாத்தியப்படாதெனத் தெரிந்தாலும்கூட, அவ்வாறு பிரேரணை ஒன்றைச் சமர்ப்பித்து உலகத்துக்கு இலங்கை ஒற்றையாட்சி அரசின் முகத்தைப் பகிரங்கப்படுத்தலாம்.

அத்துடன் பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளதைக் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் அறிந்து 'பிரேரணையைச் சமர்ப்பிக்க வேண்டாம் நிறுத்துங்கள் இந்திய அரசு இரு மாகாணங்களையும் மீண்டும் இணைத்துத் தரும்' என்று தொலைபேசியில் உறுதியளிக்கின்றதா இல்லையா என்பதைப் பரீட்சித்தும் பார்க்கலாமல்லவா?

இந்தியாவின் இரட்டை நிலைப்பபட்டையும் அம்பலப்படுத்தலாம் அல்லவா? டில்லி மாத்திரமல்ல, அமெரிக்க, பிரித்தானிய அரசுகளும் 13 இற்குப் பின்னால் நிற்கின்றதென்பதை அம்பலப்படுத்தவும் வசதியாக இருக்குமல்லவா?

ஆகவே இந்தியத் தூதரகம் தொலைபேசியில் உறுதியளித்ததால், மீனவர் குறித்த சபை ஒத்திவைப்புவேளைப் பிரேரணையை நிறுத்தியதாக அறிக்கை வெளியிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு இக் கட்டுரை சமர்ப்பணம்.

விடுதலை அரசியலும், போரின் பக்க விளைவுகளுக்குரிய தீர்வுகளையும் மற்றும் அபிவிருத்தி அரசியலையும் சமாந்தரமாக முன்னெடுத்துத் தேச அரசியலைக் கட்டியெழுப்ப வேண்டுமே தவிர, சாதாரண கட்சி அரசியலுடன் கூடிய சலசலப்புப் பேச்சுக்கள், பரபரப்புப் பிரகடனங்கள், வெற்று அறிக்கைகள் முன்னணியிடம் இருந்து எதிர்ப்பார்க்கப்பட்ட ஒன்றல்ல.