முப்பது வருட அகிம்சைப் போராட்டம், மேலும் முப்பது வருட ஆயுதப் போராட்டம்

இன அழிப்பு விசாரணை, சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டிய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

தாயகம், புலம்பெயர் மற்றும் தமிழ்நாட்டு அமைப்புகள் கூட்டுக்கோரிக்கையாக முன்வைக்க வேண்டிய நிபந்தனை
பதிப்பு: 2022 மே 16 13:45
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 01 11:55
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது வெறுமனே போரில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூருவது மாத்திரமல்ல. முப்பது ஆண்டுகால அகிம்சைப் போராட்டத்திலும் அதற்கு அடுத்த முப்பது வருடகால போரிலும் கொல்லப்பட்ட அத்தனை உயிர்களின் தியாகத்திலும், ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதற்கான சர்வதேச ஏற்பாடாகவே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அமைதல் வேண்டும். சுனாமி பேரலையில் கொல்லப்பட்ட மக்களை நினைவு கூருதல் என்பது பொது நிகழ்வு. ஆனால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு என்பது ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்கானது. தமிழ் இன அழிப்புப் பற்றிய சர்வதேச விசாரணைக்கான கோரிக்கையை ஒருமித்த குரலாக முன்வைக்க வேண்டிய கூட்டு நினைவேந்தலாகும்.
 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடை செய்ய வேண்டாமென இலங்கை ஒற்றையாட்சி அரசின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இலங்கைப் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஆனால் இன அழிப்பு என்பதையோ. ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை பற்றியோ ரணில் விக்கிரமசிங்க வெளிப்படையாகக் கூறியது கிடையாது. அவரால் கூறவும் முடியாது. குறிப்பாகச் சிங்கள அரசியல் தலைவர்கள் எவருமே போர்க்குற்றம் என்பதைக்கூட ஏற்றுக்கொண்டதும் இல்லை.

சர்வதேச விசாரணையை உள்ளகப் பொறிமுறையாக மாற்றவே மைத்திரி - ரணில் அரசாங்கம் 2015 இல் முற்பட்டது.

ஆகவே சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுக்கு ஒப்பானதாகவே ரணில் விக்கிரமசிங்கவின் தடை செய்ய வேண்டாம் என்ற அறிவிப்பை நோக்க வேண்டும். தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் சி.வீ.கே. சிவஞானமும் அவ்வாறானதொரு கோணத்திலேயே அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். சிவஞானத்தின் அந்தக் கோரிக்கை அடிப்படையில் தவறு.

எந்தவொரு இடத்திலும் இன அழிப்பு என்றோ, அல்லது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான கூட்டுக் கோரிக்கை எழுச்சி என்றோ சிவஞானம், அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கையில் சுட்டிக்காட்டத் தவறியுள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவது தொடர்பாக யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்தில் பல்வேறு கூட்டங்கள் நடைபெற்றன. சிவில் சமூக அமைப்புகள், தமிழ்த்தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள், பல்கலைக்கழகச் சமூகம் எனப் பல்வேறுபட்ட தரப்பினரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டங்களில் பங்குபற்றியிருந்தனர்.

ஆனால், வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதிகள் இணைக்கப்பட்ட சுயநிர்ணய உரிமையைக் கூட்டாக வலியுறுத்தும் வகையிலான கூட்டுக் கோரிக்கைக்கு, அந்தக் கூட்டங்களில் முக்கியத்துவம் கொடுக்கப்படடதாகத் தெரியவில்லை.

சரி, பிழைக்கு அப்பால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்த ஏற்கனவே அமைக்கப்பட்ட பொதுக்குழு செயற்பட்டுக் கொண்டிருந்த நிலையில், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தமது கட்சியை மாத்திரம் முன்னிலைப்படுத்திப் புதிய பொதுக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்கி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்தத் தீர்மானித்தபோது குழப்பங்கள் ஏற்பட்டிருந்தன.

கடந்த மாதம் முன்னணியால் அந்தக் கூட்டம் நடத்தப்பட்டுக் குழப்பமடைந்தது.

இந்தவொரு நிலையில் யாழ்ப்பாணத்தில் வேறு சிவில் சமூக அமைப்புகள் நடத்திய கூட்டங்களிலும் சரியான ஒருமித்த இணக்கப்பாடு ஏற்பட்டதாகக் கூறமுடியாது. இன அழிப்பு என்பதை பல்கலைக்கழக மாணவாகள் வெளிப்படையாகக் கூறினாலும், பல்கலைக்கழகக் கல்விச் சமூகம் வேறுபல காரணங்களினால், இன அழிப்பு என்பதை வெளிப்படையாகச் சொல்லத் தயங்குகின்றது.

கிறிஸ்தவ குருமார், சைவக்குருமார் உள்ளிட்ட வேறுபலர் இன அழிப்பு என்பதை வெளிப்படையாகக் கூறினாலும், இன அழிப்பு விசாரணைகள் சர்வதேச மட்டத்தில் நடத்தப்பட்டு, ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டுமென்ற கூட்டுக் கோரிக்கைகளை இன்னமும் வெளிப்படையாகவும், தொடர்ச்சியாகவும் முன்வைக்கவில்லை.

அவ்வப்போது அவ்வாறான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டாலும், கட்சி அரசியல் மற்றும் வேறுபல நிழச்சி நிரலோடு இணைந்ததாகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகவுமே அந்தக் கூட்டுக் கோரிக்கைகள் அமைகின்றன.

தமிழ்த்தேசியக் கட்சிகளிடையே கட்சி வேறுபாடுகள் இருந்தாலும், தமிழ்த்தேசியம் என்பதை நிறுவுதற்கான இன அழிப்பு விசாரணைகள் பற்றிய அழுத்தம் திருத்தமான கோரிக்கைகள், மற்றும் சுயநிர்ணய உரிமைக்கான கூட்டுக் கோரிக்கைகள் சர்வதேச மட்டத்தில் ஒருமித்த குரலாக முன்வைக்கப்படவேயில்லை.

அதுவும் வடக்குக் கிழக்குத் தாயக மக்களும் புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தமிழகத்தில் உள்ள அமைப்புகள், கட்சிகள் ஒன்றிணைந்த கூட்டுக் கோரிக்கையாக அவை அமையவில்லை.

ஆகவே இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பதை அவ்வாறான கூட்டுக் கோரிக்கையாக மாற்ற வேண்டும். இதற்கான ஏற்பாட்டுக்குப் போதிய கால அவகாசம் தேவைப்படாது. ஏலவே அதற்கான கருத்தியல் மக்கள் மத்தியில் இயல்பாகவே உண்டு.

1956 மற்றும் 58 ஆம் ஆண்டுகளில் தென் இலங்கையில் ஈழத்தமிழர்கள் மற்றும் மலையகத் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட கொலை, கொள்ளைச் சம்பவங்களில் இருந்து 2009 இறுதிப் போரும், அதன் பின்னரான பதின்மூன்று வருடங்களில் வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள், பாரம்பரியக் காணி அபகிரப்புகள், மரபுரிமை அடையாளங்கள் மாற்றப்பட்டு பௌத்த சின்னங்கள் பொறிக்கப்பட்டு வருகின்றமை வரையும், இன அழிப்புப் பற்றிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்ற பலமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட வேண்டும்.

தமிழ் மொழி வரலாற்றுப் பாட நூல்களிலும் பௌத்த சமய வரலாறுகள் திணிக்கப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ கல்வித் திட்ட விதிமுறைகளுக்கு மாறாகவே தமிழ் இனத்தின் மீது சிங்கள பௌத்த சமய வரலாறு திணிக்கப்பட்டுள்ளது. இது இன அழிப்பின் மற்றுமொரு வகை.

இதற்கு எதிராக யுனெஸ்கோவில் முறைப்பாடு தாக்கல் செய்ய முடியுமென சமீபத்தில் இயற்கையடைந்த கல்வித்துறைப் பேராசிரியர் சோ. சந்திரசேகரம் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பாக யாழ் பல்கலைக்கழக ஊடகத்துறைத் தலைவர் கலாநிதி எஸ்.ரகுராம், சிவில் சமூகச் செயற்பாட்டாளரும் வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றக் குழுவின் தலைவருமான எஸ். சஜீவன், சிவில் சமூகச் செயற்பாட்டாளர் அருட்தந்தை லியோ, ஆகியோர் கூர்மை செய்தித் தளத்திற்கு வழங்கிய நேர்காணல்கள் இக் கட்டுரையில் ஒலி வடிவில் தரப்பட்டுள்ளன.

இன அழிப்பு முப்பது ஆண்டுகால போருக்கு முன்னரே ஆரம்பித்ததால், இன அழிப்புப் பற்றி விசாரணைகள் அங்கிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும் என்கிறார் சஜீவன். 2009 ஆம் ஆண்டு இறுதிப்போின் போது இடம்பெற்ற இன அழிப்பு விசாரணைகளை முக்கித்துவப்படுத்துகிறார் அருட் தந்தை லியோ.

ஈழத் தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், மனிதப் படுகொலைகள் பற்றிய விசாரணைகள் முழுமைப்படுத்தப்பட வேண்டுமென்கிறார் கலாநிதி ரகுராம்.