ஜெனீவா மனித உரிமைச் சபைத் தீர்மானத்தில்

போர்க்குற்றவாளிகள் வெளிநாடுகளுக்குச் சென்றால் அந்தந்த நாடுகளில் விசாரணை நடத்தும் புதிய பொறிமுறை

சர்வதேச விசாரணை தவிர்ப்பு- 2015 போன்று இலங்கைக்குச் சாதகமான புதிய தீர்மானத்துக்கு அமெரிக்கா ஏற்பாடு
பதிப்பு: 2022 செப். 08 09:10
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: செப். 22 15:15
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
ஈழத்தமிழர்களின் இன அழிப்பு விசாரணைக் கேரிக்கைகள் மாத்திரமல்ல, போர்க்குற்றங்களுக்கான சர்வதேச விசாரணைப் பொறிமுறையைக்கூட நீத்துப் போகச் செய்யும் நோக்கிலேயே ஜெனீவா மனித உரிமைச் சபையும் அமெரிக்கா போன்ற மேற்குலகமும் ஐரோப்பிய நாடுகளும் மற்றும் இந்தியாவும் செயற்படுகின்றன என்பது தற்போது பகிரங்கமாகவே வெளிப்பட்டுள்ளன. யுனிவேர்சல் யூறிஸ்டிக்சன் (Universal Jurisdiction) எனப்படும் முழு நிறை நியாயாதிக்க விசாரணை என்பதன் ஊடாகப் போர்க் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் விசாரணை செய்யப்பட வேண்டுமென ஜெனீவா மனித உரிமைச் சபை ஆணையாளர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் பரிந்துரைத்துள்ளார். இப் பரிந்துரை சர்வதேச விசாரணை என்பதில் இருந்து கீழ் இறங்கிவரும் ஏற்பாடாகவே காணப்படுகின்றது.
 
உண்மையான சர்வதேச விசாரணை என்பது ஒரு சர்வதேச நீதிமன்றத்தால் நடத்தப்படுவது அல்லது சர்வதேச சிறப்பு நீதிமன்ற முறை ஒன்றை உருவாக்கி நடத்துவது. இலங்கைக்கு வருகை தந்துகூட சர்வதேச நீதிபதிகள் விசாரணை நடத்தவதற்கான நியாயாதிக்கம் அங்கே உண்டு

சர்வதேச விசாரணை என்பதற்கும், யுனிவேர்சல் யூறிஸ்டிக்சன் எனப்படும் முழுநிறை நியாயாதிக்கம் எனப்படுகின்ற விசாரணை முறைக்குமிடையே வேறுபாடுகள் உண்டு.

உண்மையான சர்வதேச விசாரணை என்பது ஒரு சர்வதேச நீதிமன்றத்தால் நடத்தப்படுவது அல்லது சர்வதேச சிறப்பு நீதிமன்ற முறை ஒன்றை உருவாக்கி நடத்துவது. இலங்கைக்கு வருகை தந்துகூட சர்வதேச நீதிபதிகள் விசாரணை நடத்தவதற்கான நியாயாதிக்கம் அங்கே உண்டு.

ஆனால், முழுநிறை நியாயாதிக்க விசாரணை முறை என்பது, போர்க்குற்றவாளிகள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, அந்தந்த நாடுகளில் கைது செய்யப்பட்டு அந்தந்த நாட்டுச் சட்டங்களின் கீழ் விசாரணை செய்யப்படுவதைக் குறிக்கும். அதாவது ஒரு நாட்டின் எல்லைக்குள் சொன்றால் மாத்திரமே கைது செய்து விசாரணை நடத்தலாம்.

ஆனால் இலங்கையில் போர்க்குற்றம் புரிந்ததாகக் குறிப்பிட்ட சில இராணுவத் தளபதிகளுக்கு அமெரிக்கா உள்ளிட்ட சில மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் பயணத் தடை விதித்திருக்கின்றன.

வேண்டுமானால் இப் பயணத்தடையை ஏனைய நாடுகளும் பிறப்பிக்கலாம்.

ஆகவே பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்குச் சென்றால் விசாரணை நடத்தப்படும் என்று தெரிந்த நிலையில், போர்க்குற்றம் புரிந்தவர்களென அடையாளமிடப்பட்டுள்ள இலங்கை இராணுவ அதிகாரிகளோ, அல்லது இலங்கைப் பாதுகாப்பு உயர் அதிகாரிகளோ எவருமே அந்தந்த நாடுகளுக்குப் பயணம் செய்வதை தாமாகவே தவிர்த்துக் கொள்வர்.

UN
பன்னிரெண்டாம் திகதி ஒக்ரோபர் மாதம் 1950 அன்று இலங்கை அரசு (சிலோன்) ஐ.நா.உறுப்புரிமை பெறுவதற்கு முன்னராகவே இன அழிப்பு என்ற குற்றத்தைத் தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான, ஏற்றுக் கொண்ட சா்வதேச சாசனம் இது.

வெளிநாடுகளுக்குச் சென்றால் மாத்திரமே விசாரணையை நடத்த முடியும் என்பதால், இலங்கைக்குச் சென்று அல்லது வேறு நாடுகளுக்குச் சென்று போர்க்குற்றம் புரிந்த எந்த ஒரு படை அதிகாரிகளையும் எந்த ஒரு நாட்டுச் சட்டத்தின் கீழும் கைது செய்ய முடியாது.

இதனால் அமெரிக்கா போன்ற சில நாடுகள் இலங்கை இராணுவ மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் மீது விதிக்கின்ற பயணத்தடைகூட இலங்கை ஒற்றை ஆட்சி அரச கட்டமைப்பைப் பாதுகாக்கும் ஒரு உத்திதான் என்பது கண்கூடு.

இந்த நிலையில் யுனிவேர்சல் யூறிஸ்டிக்சன் எனப்படும் முழுநிறை நியாயாதிக்க விசாரணை முறை என்பது வெறுமனே காலம் கடத்தும் ஓர் செயல்பாடு மாத்திரமே. அத்துடன் தமிழர்களைத் திருப்திப்படுத்த முடியுமெனவும் நம்புகின்றனர்.

இருந்தாலும் இந்த விசாரணை முறையைக்கூட இந்தியா விரும்பவில்லை என்றே தெரிகின்றது. ஏற்கனவே கூறப்பட்ட சர்வதேச விசாரணைப் பொறிமுறைகளையும் இந்தியா விரும்பியிருக்கவில்லை.

ஏனெனில் சர்வதேச விசாரணை என்பதற்குள் சாட்சியப் பொறிமுறை உள்ளது. இதனால் சாட்சியங்கள் திரட்டப்பட்டு அதனடிப்படையில் விசாரணை நடத்தப்படும் முறையை இந்தியா விரும்பவில்லை என்பது ஏற்கனவே தெரிந்த ஒன்று.

ஏனெனில் இந்தியாவில் காஸ்மீர் பிரச்சினை உண்டு. அத்துடன் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் இந்தியப் படைகள், இந்தியப் பொலிஸார் மீதும் உண்டு.

இப் பின்னணியிலேயே இலங்கை விவகாரத்திலும் மேற்படி விசாரணை முறைகள் எதற்கும் இந்தியா விரும்பவில்லை என்பது பட்டவர்த்தனம்.

ஆனால் 2015 இல் மைத்திரி - ரணில் அரசாங்கத்தில் கொண்டுவரப்பட்டதுபோன்ற ஒரு புதிய தீர்மானம் ஜெனீவாவில் நிறைவேற்றப்படும்வரை, யுனிவேர்சல் யூறிசிடிகேசன் எனப்படும் முழுநிறை நியாயாதிக்க விசாரணை முறையைக் காண்பித்து இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க மேற்கு நாடுகள் முற்படுகின்றன.

அமெரிக்கா சர்வதேச மனித உரிமைச் சபையில் அங்கம் வகிக்காத டொனால்ட் ட்ரம் நிர்வாகத்தின் காலத்தில் ஏனைய மேற்கு நாடுகள் முழுநிறை நியாயதிக்க முறையை முன்வைத்தன. அதற்கான சாட்சியப் பொறிமுறை ஒன்றும் உருவாக்கப்பட்டது.

ஆகவே அமெரிக்காவின் இது தொடர்பான நிலைப்பாடு இனிமேல்தான் தெரிய வரும்.

2015 இல் இலங்கை ஒற்றையாட்சி அரசுக்குச் சாதகமான முறையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோதும் கூட, அதற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கவில்லை. ஏனெனில் அத் தீர்மானத்தில் கலப்புமுறை விசாரணைப் பொறிமுறை இருந்தது.

அதேபோன்று இந்த ஆண்டும் புதிய பிரேரணை ஒன்றைச் சமர்ப்பித்து அதனைத் தீர்மானமாக அமெரிக்கா நிறைவேற்றினாலும், அத் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவாக வாக்களிக்கக்கூடிய வாய்ப்பில்லை.

இலங்கை விவகாரத்தில் அமெரிக்காவோடு இந்தியா இணைந்து ஒரே புள்ளியில் செயற்பட்டாலும், போர்க்குற்றங்களுக்கான எந்த ஒரு விசாரணைப் பொறிமுறைக்கும் இந்தியா ஒத்துழைக்காது என்பதற்காகவே ஜெனீவாத் தீர்மானத்துக்கு ஆதரவாகப் பல சந்தர்ப்பங்களில் வாக்களிக்காமல் இந்தியா நழுவிச் சென்றிருக்கின்றது

இலங்கை விவகாரத்தில் அமெரிக்காவோடு இந்தியா இணைந்து ஒரே புள்ளியில் செயற்பட்டாலும், போர்க்குற்றங்களுக்கான எந்த ஒரு விசாரணைப் பொறிமுறைக்கும் இந்தியா ஒத்துழைக்காது என்பதற்காகவே ஜெனீவாத் தீர்மானத்துக்கு ஆதரவாகப் பல சந்தர்ப்பங்களில் வாக்களிக்காமல் இந்தியா நழுவிச் சென்றிருக்கின்றது.

அத்துடன் இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் தன்னை ஒரு முதலாளியாக நிலை நிறுத்தவே இந்தியாவும் விரும்புகின்றது.

இதனால் அமெரிக்காவும் இலங்கை விவகாரத்தில் தற்போதைக்கு முழுநிறை நியாயாதிக்க விசாரணை முறையைக் காண்பித்து அழுத்தம் கொடுத்துவிட்டுப் பின்னர் அந்த விசாரணை முறையையும் இல்லாமல் செய்து இந்தியாவோடுதான் இணைந்து நிற்கும்.

இந்தியாவுடன் சேரந்து இயங்கும் அமெரிக்காவின் இந்த அணுகுமுறை என்பது ஈழத்தமிழர்களுக்குக் கடந்தகாலப் படிப்பினை.

இந்த நிலையில், இன அழிப்புத் தொடர்பாக முழுமையான சர்வதேச விசாரணையைக் கோர வேண்டிய தமிழ்த்தரப்பு, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திடம் (International Criminal Court-ICC) இலங்கையைப் பாரப்படுத்த வேண்டுமெனக் கோருகின்றது.

ஆனால் இது தவறு. ஏனெனில் 2002 ஆம் ஆண்டுதான் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கப்பட்டது. ஆகவே அங்கு பாரப்படுத்தப்பட்டால், 2002 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சம்பவங்கள் மாத்திரமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

அதாவது 2002 இல் நடைபெற்ற சமாதானப் பேச்சுக்குப் பின்னர், மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் 2006 ஆம் ஆண்டு மீண்டும் போர் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே அனைத்து விசாரணைகளும் நடத்தப்படும்.

அப்படியானால் இன அழிப்பு விசாரணையாக அதனை நடத்த முடியாது.

வெறுமனே இருதரப்பு போர்க்குற்ற விசாரணையாகவும் குறிப்பிட்ட சில இராணுவத் தளபதிகள் மாத்திரமே தண்டிக்கப்படுகின்ற, அல்லது தண்டனை வழங்கப்பட்ட பின்னர் பொது மன்னிப்பு வழங்கவும் முடியும். தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளும் பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்படுவர்.

இந்தப் பொதுமன்னிப்புக்களின் பின்னர் இன அழிப்புக் குறித்த விசாரணையைத் தமிழ்த்தரப்புக் கோரவே முடியாது.

ஆகவேதான் 1951 ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரையான காலம் வரை இன அழிப்பு விசாரணை கோரப்பட வேண்டுமானால், சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திடம் இலங்கையைப் பாரப்படுத்த வேண்டுமெனக் கோருவதில் அர்த்தம் இல்லை.

எனவே இன அழிப்பு, மனித குலத்துக்கு எதிரான படுகொலைகள், போர்க்குற்றங்கள் பற்றிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமானால், சர்வதேசச் சிறப்புக் குற்றவியல் விசாரணைப் பொறிமுறை ஒன்றையே தமிழ்த்தரப்பு அழுத்தம் திருத்தமாகக் கோர வேண்டும்.

பன்னிரெண்டாம் திகதி ஒக்ரோபர் மாதம் 1950 அன்று இலங்கை அரசு (சிலோன்) ஐ.நா.உறுப்புரிமை பெறுவதற்கு முன்னராகவே இன அழிப்பு என்ற குற்றத்தைத் தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சா்வதேச சாசனத்தை ஏற்றுக் கொண்டது.

இன அழிப்பைத் தடுப்பதற்கும் தண்டிபதற்குமான சர்வதேச சாசனத்தின் நியாயதிக்கம் இலங்கைத்தீவை மட்டுமல்ல ஏனைய நாடுகளையும் உள்ளடக்கி 1951 ஆம் ஆண்டு ஜனவரி பன்னிரெண்டாம் நாளில் இருந்து ஏற்பட்டு விட்டது.

ஆகவே இலங்கையைப் பொறுத்தவரை இங்கு நடைபெற்ற இன அழிப்புக் குற்றம் சர்வதேச விசாரணையின் நியாயாதிக்கத்துக்குக் குறித்த நாளில் இருந்து உட்படுத்தக்கூடியது.

ருவாண்டா, முன்னாள் யுகோஸ்லாவியா ஆகிய நாடுகளுக்கு எதிரான இன அழிப்பு விசாரணை சர்வதேச சிறப்புக் குற்றவியல் விசாரணைப் பொறிமுறையின் மூலமே இடம்பெற்றன. இதற்கான உத்தரவை ஐக்கிய நாடுகள் சபைதான் வழங்கியிருந்தது.

தனிநாடு அல்ல, தமிழர்கள் கேட்பது இன அழிப்பு விசாரணைதான் என்றும், 1950களிலேயே இன அழிப்பு ஆரம்பித்துவிட்டது எனக்கூறியும், 2009 இற்குப் பின்னரான சூழலில் தமிழ் வரலாற்றுப் பாடநூல்களில் பௌத்த சமய மற்றும் சிங்கள மன்னர்களின் வரலாறுகள் - சிங்களச் சொற்கள் திணிக்கப்பட்டுள்ளதாகவும் ஆதாரங்களோடு எடுத்துச் சொல்லவும் முடியும்

ஆகவே சர்வதேச உதாரணங்கள் இருந்தும் ஏன் தமிழ்த்தரப்பு இந்த விவகாரத்தில் ஒருமித்த குரலில் செயற்படவில்லை என்ற கேள்வி எழுவது நியாயமானது.

புவிசார் அரசியல் போட்டிகளினால் பாலஸ்தீனம் இதுவரை ஐக்கிய நாடுகள் சபையில் அங்கீகரிக்கப்படவில்லை. அமெரிக்க, இஸ்ரேல், ரசியா, சீனா என்ற போட்டிகளினால், ஐ.நா.வில் பாலஸ்தீனம் என்ற நாட்டுக்கான அங்கீகாரத்தை வழங்க முடியாத நிலைமை உருவாகியுள்ளது.

ஆனாலும் பாலஸ்தீனியர்கள், அமெரிக்காவின் விருப்பத்துக்கோ அல்லது தமக்குச் சார்பான நாடுகளின் புவிசார் அரசியல் தேவைக்கு ஏற்றவாறோ, இணங்கிப் பாலஸ்தீனம் தனிநாடுதான் என்ற தமது கோரிக்கையை ஒருபோதும் விட்டுக் கொடுக்கவேயில்லை.

ஆகவே இதேபோன்று இன அழிப்பு விசாரணைதான் தேவை என்பதில் தமிழ்த்தரப்பு ஏன் பிடிவாதமாகவும் ஒரே குரலிலும் நிற்கவில்லை என்ற கேள்வி எழுவது இயல்பானது.

தனியத் தமிழர்களை மாத்திரம் உள்ளடக்கும் ஓரின தனிநாட்டையே ஈழத்தமிழர்கள் கோரி வந்திருக்கிறார்கள் என அன்றில் இருந்து 2009 இற்குப் பின்னரான அரசியல் சூழலிலும் இலங்கை அரசாங்கம் சர்வதேச நாடுகளிடம் பரப்புரை செய்து வருகின்றது.

இப் பரப்புரையில் ஒரு பாரிய பொய்மை புதைந்து கிடக்கிறது. தமிழ் நாடு, தமிழ் ஈழம் என்று தமிழர்கள் தமது தாயகத்தை அடையாளம் செய்த போதும். அதனை ஒருபோதும் ஓரினத்துக்கு மட்டுமே உரிய மற்றைய இனங்களை முழுமையாகப் புறக்கணித்த தாயகக் கோட்பாடாக தமிழ் நாகரீகம், தாயகக் கோட்பாட்டை ஒருபோதும் முன்வைத்ததில்லை.

இலங்கை அரசாங்கத்தின் இப் பரப்புரையைக்கூட முறியடிக்கத் தமிழ்த்தரப்பு முயற்சி எடுக்கவில்லை. ஆனால் சமகாலப் புவிசார் அரசியல் போட்டிகளைக் கன கச்சிதமாகப் பயன்படுத்தித் தமக்குச் சாதகமான முறையில் சிங்கள ஆட்சியாளர்கள் செயற்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக 2009 இற்குப் பின்னரும் ஈழத்தமிழர் விவகாரத்தில் அமெரிக்கா - இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளைச் சிங்கள ஆட்சியாளர்கள் மிக நுட்பமாகக் கையாண்டு வருகின்றனர்.

ஆனால் ஓரினத்துக்கும் மட்டுமான தனிநாடு அல்ல, தமிழர்கள் கேட்பது, பாரம்பரியத் தாயகம் அங்கீகரிக்கப்பட்ட சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்வையும், இலங்கை ஒற்றையாட்சி அரசின் இன அழிப்புக்கான சர்வதேச விசாரணையும்தான். 1950களிலேயே இன அழிப்பு ஆரம்பித்துவிட்டது எனக்கூறிப் பரப்புரை செய்யப்பட வேண்டும்.

2009 இற்குப் பின்னரான சூழலில் தமிழ் வரலாற்றுப் பாடநூல்களில் பௌத்த சமய மற்றும் சிங்கள மன்னர்களின் வரலாறுகள் - சிங்களச் சொற்கள் திணிக்கப்பட்டுள்ளதாகவும் ஆதாரங்களோடு எடுத்துச் சொல்லவும் முடியும்.

ஆகவே தமிழர்கள் இன்னமும் தனிநாட்டைத்தான் கேட்கிறார்கள் என்ற இலங்கை அரசாங்கத்தின் பொய்யான பரப்புரைகளுக்கு எதிராகவும், தமிழர்கள் கடந்த எழுபது வருடங்களுக்கும் மேலாக எதிர்நோக்கி வரும் இன அழிப்புச் செயற்பாடுகளையும் சர்வதேச அரங்கில் ஆவணமாகப் பதிவு செய்திருக்க வேண்டும்.

சர்வதேச நீதியைத் தொடர்ச்சியாயக் கோரியிருக்கவும் வேண்டும்.

தற்போது முழுநிறை நியாயாதிக்க விசாரணை முறையைக் காண்பித்துச் சர்வதேச நீதி என்பது தமிழர்களுக்கு எட்டாக் கனி என்ற அவ நம்பிக்கையை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகம் தோற்றுவித்து வருகின்றது. அதற்கு இந்தியாவும் ஒத்தூதுகின்றது.

குறிப்பாகக் குறைந்தபட்சம் இப்படியான விசாரணை முறைகளோடு ஒத்துப்போனால்தான் நல்லது என்ற எண்ண ஓட்டத்தைத் தமிழ்த்தரப்பிடம் அமெரிக்கா போன்ற நாடுகள் விதைத்து வருகின்றன.

பொருளாதார நெருக்கடியால் இலங்கைத்தீவு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழர்கள் இலங்கை அரசாங்கத்துடன் சமாளித்துச் செல்ல வேண்டும் என்ற கருத்துக்களும் மிக நுட்பமாக ஊட்டப்பட்டு வருகின்றன.

அத்துடன் இலங்கை சீனாவின் பக்கம் சென்றுவிடும் இதனால் அமெரிக்காவுக்குப் பிடிக்காது என்ற கதைகளும் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. ஆனால் சிங்கள ஆட்சியாளர்களின் முழுமையான நிலைப்பாடு சீனாவின் பக்கம் செல்வதல்ல.

ஆகவே இவ்வாறான கதைகள் மற்றும் அமெரிக்க - இந்திய அரசுகளின் புவிசார் அரசியல் - பொருளாதாரத் தேவைகள் போன்றவற்றுக்காகத் தமிழ்த்தரப்புத் தமது கோரிக்கைகளை விட்டுக் கொடுத்து அல்லது சமாளித்துச் செல்கின்ற அணுகுமுறைகளைக் கைவிட வேண்டும்.

ஒரு பகுதி தமிழ்த்தரப்பு ரணில் விக்கிரமசிங்கவுடனும், மற்றைய தரப்பு சஜித் பிரேமதாசாவுடனும் சில புலம்பெயர் அமைப்புகள் அமெரிக்காவுடனும் வேறொருதரப்பு இந்தியாவின் பக்கமும் பிரிந்து நின்று வெவ்வேறாகச் செயற்படுகின்றன. அதாவது தமிழ்த்தரப்பு வெவ்வேறாகக் கையாளப்படுகின்றது

அந்த அணுகுமுறையிலும்கூட ஒரு பகுதி தமிழ்த்தரப்பு ரணில் விக்கிரமசிங்கவுடனும், மற்றைய தரப்பு சஜித் பிரேமதாசாவுடனும் சில புலம்பெயர் அமைப்புகள் அமெரிக்காவுடனும் வேறொருதரப்பு இந்தியாவின் பக்கமும் பிரிந்து நின்று வெவ்வேறாகச் செயற்படுகின்றன.

அதாவது தமிழ்த்தரப்பு வெவ்வேறாகக் கையாளப்படுகின்றது.

ஆனால் வடக்குக் கிழக்கில் பாதிக்கப்பட்ட அதுவும் ஏதோ தமக்குச் சார்பாகவே எல்லாம் நடக்கின்றது என்ற பொய்யான பிம்பத்துக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற அப்பாவித் தமிழ்த்தரப்பு அரசியல் - பொருளாதாரப் பாதுகாப்புகளின்றித் தவிக்கின்றது.

தமிழ்த்தேசியக் கட்சிகள் அனைத்தும் தேர்தல் கட்சிகளாகவும் தேர்தல் காலங்களில் மாத்திரம் தமிழ்த்தேசியத்தைப் பேசுகின்ற கட்சிகளாகவும் மாறிவிட்டன.

இப் பின்புலத்திலேதான் ஜெனீவா மனித உரிமைச் சபையின் மூலம் தமது புவிசார் அரசியல் - பொருளாதார நலன்களுக்குச் சாதகமான முறையில் அமெரிக்க - இந்தியா போன்ற நாடுகள் தமிழ்த்தரப்பிடம் மிக இலகுவாகத் திணிக்க முற்படுகின்றன.

அதாவது சிங்கள ஆட்சியாளர்களுக்குத் தொல்லை கொடுக்காமல், இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்குள் இருக்கும் தீர்வுக்கு இணங்கிச் செல்லுங்கள் என்ற போதனை வழங்கப்படுகின்றது. அதற்காகவே 13 ஆவது திருத்தச் சட்டமும் ஜெனீவா தீா்மானத்தில் பதிவு செய்யப்படுகின்றது.

ஆகவே இனிமேலும் காலம் தாழ்த்தாமல் செயற்பாட்டில் இறங்க வேண்டிய பொறுப்பும் கடமையும் நேர்மையாகச் சிந்திக்கும், குறிப்பாக அமெரிக்க - இந்திய மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல்களுக்குள் சிக்குப்படாமல் சுயாதீனமாக இயங்கும் பொது அமைப்புகளுக்கே பொறுப்பு அதிகமாகியுள்ளது.