தமிழ்த்தேசியக் கட்சிகள் மத்தியில்

ஒற்றுமையில்லை என்பதன் பின்னால் உள்ள அரசியல்

சம்பந்தன் மாத்திரமல்ல கஜேந்திரகுமாரும் ஒருமித்த குரலில் செயற்படுத்த வேண்டிய பொறுப்பில் இருந்து தவறியுள்ளார்
பதிப்பு: 2022 நவ. 20 22:14
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 21 09:46
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
#tamil
#nadu
ஈழத்தமிழர்களை முடிந்தவரை இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்குள் இணைந்து வாழக்கூடிய அளவுக்குச் சில அரச சார்பற்ற நிறுவனங்கள், சர்வதேசப் பிரதிநிதிகள், இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் தூதுவர் எரிக்சொல்கேய்ம் போன்றவர்கள் மற்றும் சில புலம்பெயர் தமிழ் அமைப்புகள் ஊடாக திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. இத் திட்டங்களுக்கு பின்னால் இலங்கை அரசாங்கம் மிக நுட்பமாகச் செயற்பட்டு வருகின்றது. 2009 போருக்கு முன்னர் கையாளப்பட்ட அதே அணுகுமுறைகள் தற்போது மீண்டும் வெவ்வேறு அமைப்புகள் மற்றும் சர்வதேசப் பிரதிநிதிகள் ஊடாகக் கன கச்சிதமாக முன்னெடுக்கப்படுகின்றன.
 
2009 இற்குப் பின்னரான அரசியல் சூழலில் தமிழ்த்தேசியக் கட்சிகளின் முரண்பாடுகளைச் சிங்கள ஆட்சியாளர்கள் பயன்படுத்தி இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்பை ஏற்க வைக்கும் செயற்பாடுகளை முறியடித்து, ஒருமித்த குரலில் தமிழ்த்தேசிய அரசியலைக் கொண்டுவர வேண்டிய பொறுப்பைச் சம்பந்தன் மாத்திரமல்ல கஜேந்திரகுமாரும் தட்டிக் கழித்துவிடடார் என்றே பொருள்கொள்ள வேண்டும்

குறிப்பாக ராஜபக்ச குடும்பம் கையாண்ட அதே உத்தியை ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னரான சூழலில். தனது சர்வதேச இராஜதந்திரத் தொடர்புகள் ஊடாக இந்த நடவடிக்கைகளை அரசியல் ரீதியாக மேற்கொள்கிறார் என்பது பட்டவர்த்தனம்.

சமகால புவிசார் அரசியல் - புவிசார் பொருளாதார சூழல் ஆகியவற்றையும் ரணில் மிக நுட்பமாகப் பயன்படுத்துகிறார்.

இந்த மாதம் இரண்டாம் திகதி யாழ்ப்பாணத்துக்குப் பயணம் செய்த தென்ஆபிரிக்க உயர்ஸ்தானிகர் ஷலாக் (Schalk) தலைமையிலான தூதுக்குழு, வலிவடக்கு மீள் குடியேற்றக் குழுவின் தூதுக்குழுவின் தலைவர் சஜீவன் உள்ளிட்ட பலரைச் சந்தித்து மீள் குடியேற்றங்கள் குறித்துக் கலந்துரையாடியிருந்தது.

அதன்போது தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கிடையே ஒற்றுமை இல்லை என்றும் இதனால் அரசியல் தீர்வு கிடைத்தாலும், அதனை எப்படிக் கையாளுவீர்கள் எனவும் உயர்ஸ்தானிகர் ஷலாக் சஜீவனிடம் கேட்டிருக்கிறார்.

இவ்வாறு கேட்டுச் சில நாட்களில் அமைச்சர் நிமல்சிறிபால டி சில்வா, தமிழ்த்தேசியக் கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை எனவும் இதனாலேயே அரசியல் தீர்வு குறித்துப் பேச முடியாதுள்ளதாகவும் கூறியிருக்கிறார்.

அதற்கு அடுத்த சில நாட்களில் ரணில் விக்கிரமசிங்க, தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்துப் பேச வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கூறியதுடன் வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரம் அழைப்பும் விடுத்தார்.

ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்புத் தொடர்பாக உரையாடுவதற்குத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்குத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு விடுத்தார். ஆனால் பங்காளிக் கட்சிகள் அதற்கு மறுப்பு வெளியிட்டுள்ளன.

சுமந்திரனின் அழைப்பும் பங்காளிக் கட்சிகளின் மறுப்பும் மேற்படி ஒற்றுமை இல்லை என்று கூறியவர்களின் கருத்துக்கு மேலும் வலுச் சேர்த்திருக்கின்றன. ஆனால் தென் ஆபிரிக்க உயர்ஸ்தானிகர் ஷலாக், ஈழத்தமிழர்கள் சார்ந்த உண்மையான நோக்கத்துடனேயே ஒற்றுமை பற்றிய தனது கவலையை வெளிப்படுத்தியிருக்கலாம்.

ஆனால் ஓற்றுமை இல்லை என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறியதன் பின்னணியில் நச்சுத்தனமான அரசியல் உண்டு. தமிழ்க் கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை என்று இந்தியத் தூதுவர் உள்ளிட்ட இந்தியப் பிரதிநிதிகள் பலரும் அவ்வப்போது கூறுவது வழமை.

ஆனால் தென் ஆபிரிக்கா மாத்திரமே எப்போதும் ஈழத்தமிழர் பக்கம் நின்றுதான் கருத்துக்களைக் கூறியிருக்கிறது. இருந்தாலும் தமிழ்த்தேசியக் கட்சிகள் 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் தென் ஆபிரிக்காவை ஒழுங்கான முறையில் கையாளவில்லை.

அவ்வாறு கையாண்டிருந்தால், குறைந்தபட்சம் ஈழத் தமிழர்களுக்காகச் சர்வதேச அரங்கில் குரல் கொடுக்கும் ஒரேயொரு நாடாகத் தென் ஆபிரிக்காவை மாற்றியிருக்கலாம். மாறாகத் தென் ஆபிரிக்காவைச் சிங்கள ஆட்சியாளர்கள் 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் இராஜதந்திர முறையில் அணுகி, அரசுக்கு அரசு என்ற உறவை வளர்க்க ஆரம்பித்துவிட்டனர்.

ஆகவே 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் கையாளும் சக்திகளாகவே தமிழ்த்தேசியக் கட்சிகள் செயற்படுகின்ற என்ற கருத்து தென் ஆபிரிக்கா உள்ளிட்ட அரசுகளிடம் உண்டு என்பதையே தென் ஆபிரிக்க உயர்ஸ்தானிகர் ஷாலாக் சஜீவனிடம் வெளிப்படுத்தியிருக்கிறார்.

முரண்பாடுகளைப் பயன்படுத்தி ஒருமித்த குரலில் தமிழ்த் தேசியக் கட்சிகள் செயற்பட்டு விடக்கூடாதென்ற சிங்கள ஆட்சியாளர்களின் விருப்பங்களுக்கு கொழும்பை மையமாகக் கொண்ட சில தூதுவர்கள், சா்வதேசப் பிரதிநிதிகள் ஒத்துழைப்பு வழங்குகிறார்களோ என்ற சந்தேகமே எழுகின்றது

கடந்த இரண்டு மாதங்களுக்குள் கொழும்பை மையமாகக் கொண்ட சில வெளிநாட்டுத் தூதுவர்கள், சர்வதேச அரச சார்பற்ற நாடுகளின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்தில் தமிழ்த்தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளை நான்கு தடவைகள் தனித்தனியாகவும் வெவ்வேறாகவும் சந்தித்து உரையாடியிருக்கின்றனர்.

அனேகமான சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் ஊடகங்களில் வெளிவரவில்லை. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல ஹோட்டேல் ஒன்றில் ஒரேநாளில் இரண்டு சந்திப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால் இந்த இரண்டு சந்திப்புகளிலும் பங்குபற்றிய தமிழ்ப் பிரதிநிதிகளுக்கு ஒரே நாளில் ஒரே ஹோட்டலில் சந்திப்புகள் இடம்பெறுவதை அறிந்திருக்க வாய்ப்பில்லை என்று நம்பகமாகத் தெரிகின்றது.

கொழும்பில் உள்ள சுவிஸ்லாந்துத் தூதரகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிநிதிகளைச் சந்தித்த அதே நாளில்தான் ஏனைய இரண்டு சந்திப்புகளும் குறித்த ஹோட்டேலில் இடம்பெற்றிருக்கிறது.

வடக்குக் கிழக்குப் பிரதேசங்களின் தற்போதைய நிலைமை மற்றும் அரசியல் தீர்வுகள் பற்றியே இந்தச் சந்திப்பில் பேசப்பட்டதாக யாழ் உயர்மட்டத் தகவல்கள் கூர்மை செய்தித் தளத்திற்குக் கூறியிருந்தன.

சென்ற சனிக்கிழமை பத்தொன்பதாம் திகதி ரணில் விக்கிரமசிங்க வவுனியாவுக்குச் சென்றபோது, கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் யூலி சங் (Julie Chung) கிழக்கு மாகாணத்துக்குச் சென்று தமிழ் முஸ்லிம் பிரதிநிதிகளைச் சந்தித்திருக்கிறார்.

அதுவும் பேச்சுக்கு வருமாறு ரணில் விக்கிரமசிங்க வடக்கு மாகாண உறுப்பினர்களுக்கு மாத்திரம் அழைப்பு விடுத்துள்ளமை பிரித்தாளும் தந்திரமா என்ற பலமான கேள்விகள் எழுந்துள்ள நிலையில், அமெரிக்கத் தூதுவர், ரணில் வவுனியாவுக்குச் சென்ற அதேநாளில் கிழக்கு மாகாணத்துக்குச் சென்றிருக்கிறார் என்பதன் பின்னணியியைத் தமிழ்த்தேசியக் கட்சிகள் நோக்க வேண்டும்.

ஆகவே முரண்பாடுகளைப் பயன்படுத்தி ஒருமித்த குரலில் தமிழ்த் தேசியக் கட்சிகள் செயற்பட்டு விடக்கூடாதென்ற சிங்கள ஆட்சியாளர்களின் விருப்பங்களுக்கு கொழும்பை மையமாகக் கொண்ட சில வெளிநாட்டுத் தூதுவர்கள், சா்வதேசப் பிரதிநிதிகள் ஒத்துழைப்பு வழங்குகிறார்களோ என்ற சந்தேகமே எழுகின்றது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் குறிப்பாக யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி வெவ்வேறாக இடம்பெற்ற மேற்படி சில சந்திப்புகள் இச் சந்தேகங்களுக்கு வலுச் சேர்க்கின்றன.

கொழும்பை மையமாகக் கொண்ட வெளிநாட்டுத் தூதுவர்கள் சிலர் ஏன் அவ்வாறு செயற்படுகின்றனர் என்றால், இலங்கை அரசு என்பது அவர்களுக்குத் தேவை. சமகால புவிசார் அரசியல் - புவிசார் பொருளாதாரச் சூழலில் இந்தோ - பசுபிக் பிராந்தியத்தை மையமாகக் கொண்டு இலங்கை அவசியமாகின்றது.

அதுவும் ரசிய - உக்ரெய்ன் போர்ச் சூழலில்.

இதனால் அமெரிக்கா போன்ற மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்தியா போன்ற ஆசியப் பிராந்திய நாடுகளிடம், 2009 இற்குப் பின்னரான சூழலில் ஈழத்தமிழர் விவகாரம் என்பது உள்ளகப் பிரச்சினை என்றுதான் சிங்கள ஆட்சியாளர்கள் விளக்கமளித்து வருகின்றனர்.

அத்துடன் இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்குள் ஈழத்தமிழர்கள் வாழ முடியும் என்ற செய்தியையும், தமிழ்த்தேசியக் கட்சிகள் மற்றும் சிங்களக் கட்சிகளுடன் இணைந்திருக்கும் தமிழ் உறுப்பினர்கள் எல்லோருமே இணக்க அரசியலுக்குத் தயார் என்றும், சிங்கள ஆட்சியாளர்கள் விளக்கமளித்திருக்கிறார்கள்.

ஆனால் இதுவரையும் தமிழ்த்தேசியக் கட்சிகளின் தலைவர்கள் எவரும் அவ்வாறான பொறிமுறை ஒன்றை அல்லது கட்சி அரசியலுக்கு அப்பால் சர்வதேச நாடுகளைக் கையாளக்கூடிய ஆற்றல் உள்ள பிரதிநிதிகள் எவரையும் நியமிக்கவுமில்லை. மாறாக அமெரிக்கா இந்தியா சொல்வதை மாத்திரமே கேட்கின்றனர்.

இதன் காரணமாகச் சிங்கள ஆட்சியாளர்களுடன் பேரம்பேசி இலங்கைத்தீவில் தமக்குத் தேவையானதை வல்லாதிக்க நாடுகள் பெற்றுச் செல்கின்றன.

இலங்கை தொடர்பான வல்லாதிக்க நாடுகளின் போட்டிகளுக்குள் சிங்கள ஆட்சியாளர்கள் புகுந்து விளையாடித் தமது இலங்கை ஒற்றையாட்சி என்ற கோட்பாட்டை நிறுவி வருகின்றனர். 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் அதற்குரிய பொறிமுறை ஒன்றை அமைத்து வடக்குக் கிழக்கிலும் சிங்கள ஆட்சியாளர்கள் செயற்படுத்தி வருகின்றனர்.

அந்தப் பொறிமுறைக்குள் அரச உயர் அதிகாரிகள், உயர் இராணுவ அதிகாரிகள் மற்றும் ஒத்துழைக்கக்கூடிய தமிழ் அதிகாரிகள் ஆகியோர் உள்ளடங்கியிருக்கின்றனர்.

இந்த அதிகாரிகள் குழு கொழும்பை மையமாகக் கொண்ட வன இலாகா திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், காணி அபிவிருத்தித் திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து சட்டரீதியாகவும் செயற்பட்டு வருகின்றன.

முன்னணி தனக்குரிய பொறுப்புக்களில் இருந்து விலகியதோடு, சாதாரண கட்சி அரசியல் செயற்பாடுகளுடன் தங்களை மட்டுப்படுத்திக் கொண்டுள்ளது என்பதையே கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கருத்து வெளிப்பாடுகள் அர்த்தப்படுத்துகின்றன

ஆகவே சிங்கள உயர் அதிகாரிகளை உள்ளடக்கிய இந்தப் பொறிமுறைக் கட்டமைப்போடுதான் கொழும்பை மையமாகக் கொண்ட வெளிநாட்டுத் தூதுவர்கள் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் தொடர்பாடலை வைத்திருக்கின்றனர்.

இத் தொடர்பாடலுக்குள் தமிழ்த்தேசியக் கட்சிகளின் தலைவர்களும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அறிந்தோ அறியாமலோ சிக்கிக் கொண்டுள்ளனர். இச் செயற்பாடுகளை அவ்வப்போது நாடாளுமன்றத்தில் காரசாரமாகக் கண்டித்துப் பேசினாலும், மேற்படி பொறிமுறைக் கட்டமைப்பின் செயற்பாடுகளைத் தமிழ்த்தேசியக் கட்சிகளினால் தடுத்து நிறுத்த முடியவில்லை. அல்லது அம்பலப்படுத்த முடியாத இயலாமை என்றும் கூறலாம்.

2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலையை அறவழியில் தொடர்ந்து முன்நகர்த்த வேண்டிய பொறுப்பு விரும்பியோ விரும்பாமலோ தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் கைக்குச் சென்றிருந்தது.

ஆனால் அதனை ஒழுங்குமுறையில் கொண்டு செல்ல முடியாமல், சிதறவைத்துக் கையாளப்படும் சக்திகளாக மாற்றப்பட்டுள்ள நிலையில், வடக்குக் கிழக்கை மையப்படுத்திய சிங்கள ஆட்சியாளர்களின் மேற்படி பொறிமுறைக் கட்டமைப்பின் செயற்பாடுகளை இனிமேல் தடுக்கவே முடியாத அளவுக்கு அது நீட்சியடைந்து வருகின்றது.

இவ்வாறு சிக்கலான சூழல் உருவாக இடமளித்த ஒரு நிலையில், இனப்பிரச்சினைத் தீர்வு விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை பங்களிப்பு வழங்க வேண்டுமெனச் சம்பந்தன் தற்போது கேட்டிருப்பதுதான் வேடிக்கை.

கொழும்பில் திங்கட்கிழமை ஐ.நாவின் அரசியல் பிரிவுத் தலைவர் சந்தித்து உரையாடியபோது இந்த வேண்டுகோளை சம்பந்தன் விடுத்திருக்கிறார்.

2009 இற்கு முன்னர் எவ்வாறான குழப்பமான அரசியல் கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகளில் சிங்கள ஆட்சியாளர்கள் ஈடுபட்டார்கள் என்ற பட்டறிவு சம்பந்தனிடம் தாராளமாகவே இருந்தது. கஜேந்திரகுமாா் பொன்னம்பலத்துக்கும் அது தெரியாத விவகாரமல்ல.

ஆகவே 2009 இற்குப் பின்னரான அரசியல் சூழலில் தமிழ்த்தேசிய அரசியலைச் சம்பந்தன் சரியாகக் கையாளவில்லை என்பதை மன்னித்தாலும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை மன்னிக்கவே முடியாது.

ஏனெனில் 2009 இற்கு முன்னரான தமிழ்த்தேசிய அரசியலைத் தற்போது ஜனநாயக வழியில் முன்னெடுப்பவர்களாகத் தங்களைக் காண்பித்துக் கொண்டும், நினைவேந்தல்கள் மற்றும் போராட்டக்கால அடையாளங்கள் அனைத்தையும் தமதாக்கிக் கொண்டும் இயங்கிவரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, தற்போதை அரசியல் சூழலில் ஏனைய தமிழ்த்தேசியக் கட்சிகளை ஒருமித்த குரலில் கொண்டுவருவதற்கான ஏற்பாட்டை செய்திருக்க வேண்டும்.

ஆனால் முன்னணி அவ்வாறான எந்த ஒரு அணுகுமுறைகளையும் கையாளவில்லை.

இப் பின்னணியிலேதான் கொழும்பை மையமாக் கொண்ட வெளிநாடுகளின் தூதுவர்களும் அமெரிக்க - இந்திய அரசுகளும் சிங்கள ஆட்சியாளர்களுடன் இணைந்து இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்பைப் பலப்படுத்த முற்படுகின்றனர் என்பது பகிரங்கமாகிறது

குறிப்பாகத் தற்போதைய புவிசார் அரசியல் - புவிசார் பொருளாதாரச் சூழலுக்கு ஏற்பக் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால், திட்டமிடப்பட்ட பொறிமுறை ஒன்றை அமைத்திருக்க வேண்டும். அந்தப் பொறிமுறைக்குள் அனைவரையும் உள்வாங்கியிருக்க வேண்டும்.

வடக்குக் கிழக்கு இணைப்பு - சுயநிர்ணய உரிமை என்ற இரண்டு அடிப்படை விடயங்களோடும் இன அழிப்புக்கான சா்வதேச நீதி விசாரணை பற்றிய கூற்றை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழுத்தம் திருத்தமாக வெளிப்படுத்தியிருக்கவும் வேண்டும்.

மாறாக ஏனைய தமிழ்த்தேசியக் கட்சிகள் சா்வசாதாரணமாகக் கூறுவது போன்று சமஸ்டி முறையை ஏற்றுக் கொண்டால் பேச்சுவார்த்தைக்குத் தயார் என கஜேந்திரகுமார் தற்போது அறிவித்திருக்கிறார்.

2009 இற்குப் பின்னரான சூழலில் ஒரு நாடு இரு தேசம் என்ற கருத்தை முன்வைத்தே தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆரம்பிக்கப்பட்டது. அந்தக் கருத்தை மையமாகக் கொண்டே இலங்கை ஒற்றையாட்சி அரசு நடத்தும் அத்தனை தேர்தல்களிலும் முன்னணி பங்குபற்றியிருக்கின்றது.

ஆகவே முன்னணி தனக்குரிய பொறுப்புக்களில் இருந்து விலகியதோடு, சாதாரண கட்சி அரசியல் செயற்பாடுகளுடன் தங்களை மட்டுப்படுத்திக் கொண்டுள்ளது என்பதையே கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கருத்து வெளிப்பாடுகள் அர்த்தப்படுத்துகின்றன.

ஒன்றில் தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய தமிழ்த்தேசியக் கூட்டமைப்புப் போன்று மிதவாத அரசியல் என்று கூறிக் கொண்டு இலங்கை ஒற்றையாட்சி முறைக்குள் வரக்கூடிய அரசியல் தீர்வை ஏற்க வேண்டும். அல்லது ஒரு நாடு இரு தேசம் என்ற கோட்பாட்டை மையமாகக் கொண்டு அதற்குரிய புறச் சூழல் மற்றும் சர்வதேசத்தை அணுகிச் செல்லக்கூடிய பொறிமுறைகளை வகுத்திருக்க வேண்டும்.

ஆனால் இந்த இரண்டுமே இல்லாத, ஆனால் இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட மதில்மேல் பூனை போன்ற அரசியலைக் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கையாண்டு வருகின்றார். சாதாரண கட்சி அரசியலோடு நின்று கொண்டு அபிவிருத்தி அரசியலும் தேவை என்ற புதுக் கதை ஒன்றையும் கஜேந்திரகுமார் வெளிப்படுத்தி வருகின்றார்.

ஆகவே 2009 இற்குப் பின்னரான அரசியல் சூழலில் தமிழ்த்தேசியக் கட்சிகளின் முரண்பாடுகளைச் சிங்கள ஆட்சியாளர்கள் பயன்படுத்தி இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்பை ஏற்க வைக்கும் செயற்பாடுகளை முறியடித்து, ஒருமித்த குரலில் தமிழ்த்தேசிய அரசியலைக் கொண்டுவர வேண்டிய பொறுப்பைச் சம்பந்தன் மாத்திரமல்ல கஜேந்திரகுமாரும் தட்டிக் கழித்துவிடடார் என்றே பொருள்கொள்ள வேண்டும்.

இப் பின்னணியிலேதான் கொழும்பை மையமாக் கொண்ட வெளிநாடுகளின் தூதுவர்களும் அமெரிக்க - இந்திய அரசுகளும் சிங்கள ஆட்சியாளர்களுடன் இணைந்து இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்பைப் பலப்படுத்த முற்படுகின்றனர் என்பது பகிரங்கமாகிறது.