ஈழத் தமிழர்களின் விவகாரத்தைக் கையாளும் வியூகம்

மிலிந்த மொறகொடவும் புதுடில்லியும்

இந்தியா தொடர்பான அமெரிக்காவின் அழுத்தங்கள் ரணிலுக்கும் தெரியாததல்ல
பதிப்பு: 2023 ஜன. 09 08:30
புதுப்பிப்பு: ஜன. 10 08:40
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தமிழ் நாட்டுக்கு ஊடாக இந்தியாவை ஈழத்தமிழர்கள் ஒருபோதும் அணுகக்கூடாது. புதுடில்லியுடன் நேரடியாகத் தமது அணுகுமுறையை ஈழத்தமிழர்கள் கட்டமைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் இந்திய மத்திய அரசின் நிலைப்பாடு. குறிப்பாகச் சோனியாவை மையப்படுத்திய காங்கிரஸ், மோடியை மையப்படுத்திய இந்துத்துவவாத பி.ஜே.பி ஆகிய பிரதான அரசியல் கட்சிகள் ஈழத்தமிழர் தரப்பினருக்குத் தொடர்ந்து வலியுறுத்துகின்ற விடயம் இதுதான். மோடியின் காலத்தில் தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்களில் ஒருபகுதியினர் இந்துத்துவவாத சக்திகளின் வலைக்குள் வீழ்த்தப்பட்டு வருகிறார்கள் என்பது தற்போது பகிரங்கமாகி வருகின்றது.
 
தமிழ் நாடு உள்ளிட்ட ஈழத்தமிழர் தொடர்பான வட இந்தியாவின் எதிர்மறை விருப்பங்கள் இந்திய வெளியுறவுக் கொள்கைக்குள் எழுதப்படாத மரபுவழிக் கொள்கையாக வலிந்து புகுத்தப்பட்டுள்ளமையே இதற்குக் காரணம். இதனாலேயே சிங்கள ஆட்சியாளர்களைக் கண்ணை மூடிக்கொண்டு நம்ப வேண்டிய நிலை இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கிறது என்றால் அதில் மாற்றுக் கருத்தில்லை

புலம்பெயர் சமூகத்திலும் தமிழகத்திலும் மட்டுமல்ல, நோர்வேயின் எரிக் சொல்ஹயிம் வரை இந்த வலை இந்த வலைப்பின்னல் இயக்கப்படுகின்றது.

ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சி இதற்குப் பிரதான களம் அமைத்துக் கொடுத்துள்ளது. இந்த இடத்தில் ஜனாதிபதி ரணில் இலங்கையில் இந்தியாவுக்குக் கொடுத்துள்ள முக்கியத்துவம் பற்றியும் அவதானிக்க வேண்டும்.

இந்த முக்கியத்துவத்தின் பின்னால் இரண்டு விடயங்கள் உண்டு. ஒன்று, வடக்கில் தமிழகத்தின் துறைமுகங்கள், விமான நிலையங்கள் ஊடாகத் தொடர்புகளைப் பேண அனுமதித்தல். மற்றும் திருகோணமலை உள்ளிட்ட வடக்குக் கிழக்கில் சில பிரதேசங்களில் இந்தியாவுக்குத் தேவையானதைப் பெற்றுக்கொள்ள அனுமதித்தல்.

இரண்டாவது, ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்தியாவுக்கு இருக்கும் கரிசனையை இலங்கையின் ஒற்றையாட்சிக்கு ஏற்றவாறு மேலும் உறுதிப்படுத்தல். அதாவது 13 ஆவது திருத்தச் சட்டம பற்றிய இந்தியத் தலையீட்டை அல்லது அழுத்தங்களை நீக்கம் செய்தல்.

இங்கே இரண்டாவது விடயத்தை ரணில் கன கச்சிதமாக மேற்கொள்ள எடுக்கும் முயற்சியில் இந்தியாவுக்கு மெதுவான உடன்பாடு இல்லை. ஏனெனில் 13 என்பது இலங்கையில் இந்தியாவை உருவகப்படுத்தும் ஆயுதம்.

ஆனாலும் இந்தோ – பசுபிக் பிரந்திய நலன் சார்ந்து குறிப்பாக இந்தியப் பிராந்திய நலன் அடிப்படையில் இலங்கை இயங்குவது பற்றிச் சிங்கள ஆட்சியாளர்கள் நம்பிக்கையூட்டினால், 13 நீக்கம் செய்யப்படுவதில் அல்லது 13 இல் இருக்கின்ற அதிகாரங்களை மேலும் குறைத்து அதனை வேறு வடிவத்தில் மாற்றியமைப்பதில் இந்தியாவுக்குப் பிரச்சினையில்லை.

13 பற்றிய இந்தியாவின் இந்த நிலைப்பாடு தெரிந்த பின்னணியிலேதான், ரணில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் தொடந்து பேச்சு நடத்தவுள்ளார். முதற் கட்ட பேச்சு வியாழக்கிழமை முடிவடைந்துள்ளது.

ஆனால் சிங்கள ஆட்சியாளர்கள் இந்தியாவை எந்த நேரமும் தூக்கிப் பிடிப்பார்கள் என்று இந்தியா இன்றுவரை நம்புவது அல்லது நம்புவதுபோன்று காண்பிக்கும் இந்திய இராஜதந்திர அணுகுமுறைதான் வேடிக்கையானது.

யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரி காரைக்காலுக்குப் பயணிகள் கப்பல் சேவையை இந்த மாதம் ஆரம்பிக்க இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளமை ஒரு தற்காலிக ஏற்பாடுதான்.

இந்தியாவுக்கு ஈழத்தமிழர்களுடன் இருக்கும் ஒரேயொரு தொடர்பான 13 ஐ மாற்றியமைக்கப் புதுடில்லியின் ஒத்துழைப்பு இலங்கைக்கு நிச்சயமாகத் தேவை.

அதனைச் சமாளிக்கவே யாழ்ப்பாணத்துக்கும் தமிழகத்துக்கும் இடையிலான விமான மற்றும் கப்பல் சேவைகள் எல்லாம் ஆரம்பிக்க இலங்கை இணங்கியது என்பது புரியாத புதிர் அல்ல. அத்துடன் இதனைக் காண்பித்தே இந்திய மத்திய அரசும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிடம் இலங்கையில் தமது நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ற முறையிலான நம்பிக்கையைப் பெறமுடியும்.

ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரை கிழக்கில் திருகோணமலையில் எண்ணெய்க் குதங்களை இந்தியா தொடர்ந்து வைத்திருப்பதில் பிரச்சினை இருக்காது. அத்துடன் இந்தியப் பிராந்தியத்தில் இந்தியாவுக்குத் தொடர்ந்து ஒத்துழைப்பை வழங்குவதிலும் இலங்கைக்குப் பிரச்சினை இருக்காது

ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரை கிழக்கில் திருகோணமலையில் எண்ணெய்க் குதங்களை இந்தியா தொடர்ந்து வைத்திருப்பதில் பிரச்சினை இருக்காது. அத்துடன் இந்தியப் பிராந்தியத்தில் இந்தியாவுக்குத் தொடர்ந்து ஒத்துழைப்பை வழங்குவதிலும் இலங்கைக்குப் பிரச்சினை இருக்காது.

ரணில் உள்ளிட்ட சிங்கள ஆட்சியாளர்கள் அனைவருக்கும் தேவைப்படுவதெல்லாம், ஈழத்தமிழர்களின் விவகாரத்தில் இந்தியா விரும்பியோ விரும்பாமலே அழுத்தம் கொடுக்கக் கூடாது என்பதுதான். அல்லது ஈழத்தமிழர் விவகாரத்தில் புதுடில்லியைக் கேட்டுத்தான் எதையும் செய்ய வேண்டும் என்ற இந்திய நிலைப்பாடும் இருக்கவே கூடாது என்பதும் சிங்கள ஆட்சியாளர்களின் விருப்பம்.

இந்த விருப்பம் நிரந்தரமாக உறுதிப்படுத்தப்பட்டால் யாழ்ப்பாணத்துக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையிலான விமான சேவை மற்றும் ஆரம்பிக்கப்படவுள்ள கப்பல் சேவைகளை இலங்கை உடனடியாகவே நிறுத்தும் என்று இந்தியாவுக்கும் நன்கு புரியும். அத்துடன் இச் சேவைகளைத் தொடர்ந்து நீடிக்க இலங்கை விரும்பாது.

ஆனால் தமக்குத் தேவையான புவிசார் அரசியல் நலன்களில் இலங்கை தொடர்ந்து ஆதரவு வழங்கும் என்ற நம்பிக்கையை இந்தியா தொடர்ந்து பேணக்கூடிய வாய்ப்புகள் அதிகமாகவே உண்டு.

பல சந்தர்ப்பங்களில் இலங்கை இந்தியாவுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறியிருக்கிறது. வர்த்தக ரீதியிலும் அரசியல் செயற்பாடுகளிலும் இந்தியா இலங்கையிடம் ஏமாந்த சந்தர்ப்பங்கள் என்பது வரலாறு.

தமிழ் நாடு உள்ளிட்ட ஈழத்தமிழர் தொடர்பான வட இந்தியாவின் எதிர்மறை விருப்பங்கள் இந்திய வெளியுறவுக் கொள்கைக்குள் எழுதப்படாத மரபுவழிக் கொள்கையாக வலிந்து புகுத்தப்பட்டுள்ளமையே இதற்குக் காரணம். இதனாலேயே சிங்கள ஆட்சியாளர்களைக் கண்ணை மூடிக்கொண்டு நம்ப வேண்டிய நிலை இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கிறது என்றால் அதில் மாற்றுக் கருத்தில்லை.

இந்த நிலைமையை சிங்கள ஆட்சியாளர்கள் நன்கு தெரிந்து வைத்திருந்ததினால் பல சந்தர்ப்பங்களில் மிக இலகுவாக இந்தியாவை இலங்கை இராஜதந்திர முறையில் கையாண்டிருக்கிறது.

ரசிய – உக்ரெயன் போர்ச் சூழலில் இந்தியா இரட்டைத் தன்மை கொண்ட கௌ்கையுடன் செயற்படுகின்றமையினால், புவிசார் அரசியல் போட்டி நிலைமைகளில் கூட இந்தியாவை இலங்கை இலகுவாகக் கையாளுகின்றது.

ஏப்ரல் மாதம் பாக்கிஸ்தானிலும் யூலை மாதம் இலங்கையிலும் ஆட்சிமாற்றங்கள் ஏற்பட்டன. வெவ்வேறு காரணங்கள் ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னணியில் இருந்தாலும், பாக்கிஸ்தானில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்கு அமெரிக்காவே சூத்திரதாரி என்பது வெளிப்படை.

அதாவது இம்ரான்கானின் ஆட்சியை கடந்த ஏப்ரல் மாதம் கவிழ்த்துவிட்டுத் தனக்குச் சார்பான ஆட்சி ஒன்றை அமெரிக்கா பாக்கிஸ்தானில் உருவாக்கியுள்ளது. கடந்த ஆறு மாதங்களில் பாக்கிஸ்தான் இராணுவத்தையும் கடற்படையையும் அமெரிக்கா பலப்படுத்தியுமுள்ளது. அமெரிக்காவின் இந்த நகர்வுகூட இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் செயற்பாடுதான்.

புதுடில்லியின் எதிர்ப்பையும் மீறி பாக்கிஸ்தான் கடற்படைக்குத் தேவையான போர் விமானங்களை அமெரிக்கா வழங்கியதுடன் அது முக்கியமான விவகாரம் என அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் அன்டனி பிளிங்ரன் வோஷிங்கடனில் பகிரங்கமாகக் கூறியுமிருந்தார்.

தற்போது இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக எரிக் கார்செட்டி. ஜனாதிபதி ஜோ பைடனால் நியமிக்கப்பட்டிருக்கிறார். இது வழமையான இடமாற்றம். இருந்தாலும் எரிக் கார்செட்டி, பன்னிரெண்டு ஆண்டுகள் அமெரிக்கக் கடற்படையின் உளவுத்துறை அதிகாரியாகக் கடமை புரிந்தவர். அரசியல் பொருளாதார நிபுணரும் கூட.

ஆகவே புதுடில்லிக்கு அழுத்தம் கொடுப்பதை மையமாகக் கொண்டு இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா நகர்த்தும் அரசியல் - பொருளாதாரப் பின்னணிகள் எல்லாமே ரணிலுக்குத் தெரியாததல்ல.

இந்தியா தற்போது எப்படிச் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கின்றது, விசேடமாக உக்ரெயன் போரினால் ரசிய ஆதரவுக்கு எதிரான அமெரிக்கா அழுத்தம் ஒருபுறம், சீனாவுடன் எல்லை மோதல் மறுபுறும் மற்றும் பாக்கிஸ்தானில் மேலோங்கி வரும் அமெரிக்கச் செல்வாக்கு இன்னுமொரு புறம் என்று, இந்தியா பல சோதனைகளைச் சந்தித்து வருகின்றது.

இப் பின்புலத்தில் இலங்கையில் ரணில் ஈழத்தமிழர்கள் தொடர்பாக எடுத்து வரும் நிலைப்பாட்டில் இந்தியத் தலையீட்டை நீக்க வேண்டும் என்ற கருத்தியல் பெரும் அவமானமாகவும் தொல்லையாக இருந்தாலும், தமக்குரிய இந்தியப் பிரந்திய நலனில் இலங்கை தொடர்ந்து ஆதரவாக இருக்க வேண்டும் என்று இந்தியா தொடந்து எதிர்பார்க்கிறது நம்புகின்றது.

13 ஐ நீக்க வேண்டுமென முதன் முதலில் கருத்திட்ட முன்னாள் அமைச்சர் மிலிந்த மொறொகொடவை இந்தியாவுக்க்கான இலங்கைத் தூதுவராக நியமிக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய முற்பட்டபோது ஆரம்பத்தில் இந்தியா எதிர்ப்பு வெளியிட்டிருந்தது.

ஆனால் சில மாதங்களின் பின்னர் மிலிந்த மொறொகொடவைத் தூதுவராக இந்தியா ஏற்றுக் கொண்டது. அமைச்சரவை அந்தஸ்துள்ள தூதுவராகப் புதுடில்லியில் மிலிந்த மொறொகொட மிகவும் உயர்ந்த அந்தஸ்த்துடன் பதவியேற்ற நாள் முதல் இன்றுவரை இந்திய மாநிலங்களை நோக்கிய செயற்பாடுகளிலேயே ஈடுபடுகின்றார்.

குறிப்பாக ஈழத்தமிழர் விவகாரத்தில் தமிழ் நாட்டை, இலங்கை மற்றும் இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டுடன் அதாவது தமிழ் நாட்டு ஒத்துழைப்புடன் புதுடில்லியை ஈழத்தமிழர்கள் அணுகிவிடக் கூடாது என்ற மத்திய அரசின் கொள்கையைத் தமிழ் நாடு ஏற்க வேண்டும் என்ற தொனியில் தனது செயற்பாட்டை மிலிந்த மொறொகொட மேற்கொண்டு வருகின்றார்.

பதின்மூன்றை அவ்வாறு கொண்டு வருவதில் தமிழர் விடுதலைக் கூட்டணி, குறிப்பாக அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தவறிழைத்தார். எல்லாம் முடிந்தபின் கடிதம் எழுவதை மட்டுமே கூட்டணியால் செய்யமுடிந்தது. இந்தக் கடிதத்தை மேற்கொள் காட்டியே விமர்சனங்களில் இருந்து கூட்டணியும், 2009 இற்குப் பின்னான கூட்டமைப்பும் தப்பித்துக்கொள்கின்றன

இக் கருத்தியலின் பின்னணியிலேயே முதலமைச்சர் ஸ்ராலின். கனிமொழி ஆகியோரை மிலிந்த மொறொகொட சந்தித்ததுடன் தொடர்ச்சியாக அவர்களுடன் உரையாடுகிறார். தமிழகத்தில் உள்ள ஏனைய கட்சிகள் மற்றும் பிரமுகர்களைக் கூட மிலிந்த தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.

முப்பத்தி ஐந்து வருடங்களின் பின்னர் முதன் முதலாகப் புதுடில்லியில் உள்ள இலங்கைத் தூதுவர் ஒருவர் தமிழ் நாட்டு முதலமைச்சரைச் சந்தித்திருக்கிறார் என்றால் அது மிலிந்த மொறொகொடதான். ஏனைய சில மாநிலங்களின் முதலமைச்சர்களுடனும் மிலிந்த தொடர்பு கொண்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் கசிந்துள்ளன.

மிலிந்த மொறொகொட அமெரிக்காவோடும் சீனாவுடனும் சமாந்தரமான இராஜதந்திர உறவைப் பேணுவதில் வல்லவர். இந்த நிலைப்பாட்டையே ரணில் 2015 இல் பிரதமாராகப் பதவியேற்றபோது இலங்கை நாடாளுமன்றத்தில் பகிரங்கமாகவும் இராஜதந்திர வார்த்தைகளிலும் கூறியிருந்தார்.

இதை ஒத்த கருத்தையே சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனும் 2015 இல் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தியிருந்தார். அதாவது இந்தியா இன்றி ஈழத்தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்று சுமந்திரன் சொல்லியிருந்தார்.

ஆனால் சுமந்திரன் தற்போது ரணிலுடன் முரண்படுவது போன்று காண்பித்தாலும், சம்பந்தனின் தலைமை மாற்றமடையும் சூழலில் ஈழத்தமிழர் விவகாத்தில் ரணில் மற்றும் இந்தியாவுக்கு எதிரான ஏனைய சிங்கள ஆட்சியாளர்களின் கருத்தியலோடு இணைந்து பயணிக்கக்கூடிய இயல்பைக் கொண்டிருக்கிறார் என்பதும் வெளிப்படை.

எனவே சுமந்திரனின் கொழும்பு மைய அரசியல் ஈடுபாட்டை ஈழத்தமிழர்களுடைய கருத்தாக அவதானிக்க முடியாது. ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை இன்றுவரை இந்தியத் தலையீட்டை விரும்புகின்றனர். ஆனால் அரசியல் தீர்வு 13 அல்ல. மாறாக வடக்குக் கிழக்கில் சுய ஆட்சி கொண்ட நிரந்தர அரசியல் தீர்வையே எதிர்பார்க்கின்றனர்.

இப் பின்புலத்தில் 13 ஐ ஈழத்தமிழர்கள் பலரும் விரும்பவில்லை என்பதைக் காரணம்கூறி 13 ஐ அகற்றும் நகர்வுகளில் ரணில் ஈடுபடுகிறார் என்று இந்தியா தெளிவுடன் நம்புமானால், அதற்கான மாற்றுத் திட்டங்களை உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டியது புதுடில்லியின் கடமை.

ஏனெனில் இலங்கையிடம் இந்திய இராஜதந்திரம் தோல்விடையக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பவர்கள் ஈழத்தமிழர்கள். ஆகவே அதற்குரிய ஒழங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கடமையும், ஒருமித்த குரலில் இந்தியாவுக்கு நம்பிக்கையை உறுதிப்படுத்த வேண்டிய அவசியமும் தமிழ்த்தேசியக் கட்சிகளுக்குரிய பிரதான பொறுப்பு.

வெறுமனே கையாளப்படும் சக்திகளாக இதுவரை காலமும் செயற்பட்டு வந்ததன் வலியை ரணிலின் நாசூக்கான காய்நகர்த்தல்களில் இருந்தாவது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உணர்ந்துகொள்ள வேண்டும். பிரதானமாக ரெலோ, ஈபிஆா்எல்ப் போன்ற முன்னாள் ஆயுத இயங்கங்களுக்கு இராஜதந்திர ரீதியில் இந்தியாவை தற்துணிவோடும் சுய மரியாதையுடனும் அணுக வேண்டிய கடமையும் பெறுப்பும் அதிகமாகவே உண்டு.

அதற்காக தற்காலிகத் தீர்வு என்பதற்கு, அரசியல் மொழியில் வேறு அர்த்தம் உண்டு. அது என்னவெனில் மீளப்பெற்றுக்கொள்ளப்படகூடியது அல்லது தலைகீழாக பிற்காலத்தில் மாற்றப்படக்கூடியது என்பதாகும்.

இதை ஆங்கிலத்தில் reversible என்ற சொல்லால் அடையாளப்படுத்துவது வழமை. இதிலே ஈழத்தமிழர் தரப்பு எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இதற்கு நேர் எதிர்மாறான பொருள்கோடலுடன் மீளப்பெற ஒண்ணாத தன்மை என்பதை வலியுறுத்தவேண்டும்.

இதற்குரிய ஆங்கில அரசியற்சொல்லாக (irreversible) என்பது அடையாளப்படும். எந்த ஒழுங்குகளை இந்திய - இலங்கை அரசுகள் முன்வைத்தாலும், அவற்றை தமிழர் தரப்பு பொருத்தமாக அனுமானித்து ஆதரவு நல்கவேண்டுமானால் அவற்றுக்கு மீளைப்பெற ஒண்ணாத தன்மை இருக்கிறதா என்பது முக்கியமானது.

அறிவையும் மனப்பாங்கையும் வரலாற்றுத் தவறுகள் மீண்டும் நடவாது உறுதிப்படுத்துவதையும் சம்பந்தனால் தனது வாழ்வின் இறுதிக்கட்டத்திலாவது சரியாகச் செய்யமுடிந்தால் அமிர்தலிங்கத்தை விஞ்சியவராக அவர் வரலாற்றில் எழ முடியும். அல்லாவிடில் அமிர்தலிங்கத்தை விடவும் கொடிய பழியே அவருக்கு வரலாற்றில் வந்து சேரும்

பதின்மூன்றாம் சட்டத்திருத்தம் பல நோய் வாய்ப்பட்டது. இந்த நோய்கள் பலவற்றில் ஒன்று அதன் மீளப்பெறப்படும் தன்மை. இதை வைத்தே இன்று தென்னிலங்கை தமிழர் அரசியலைக் கட்டுப்படுத்துகிறது.

ஆகவே, ஏற்கனவே அமைந்து, பல நோய் வாய்ப்பட்டு, பழுதடைந்து அழுகி உளுத்துப்போயிருக்கும் மீளப்பெறப்படக்கூடிய ஒன்றை மீளப்பெறுவதற்கு வேறு பல மீளப்பெறப்படக்கூடிய புதிய ஒழுங்குகளை இந்திய அரசுக்கு வழங்கி, மீளப்பெறத் தான் விழையும் பதின்மூன்றை மீளப்பெறுவது இலங்கையின் உத்தி.

இரண்டு மீளப்பெறப்படக்கூடிய ஒழுங்குகளைத் ஈழத்தமிழர் தரப்புக்குக் காட்டி, இவை இரண்டுக்கும் இடையில் தான் எமது தேர்வு இருக்கவேண்டும் என்ற நியதிப் பொறிக்குள் அரசியல் கட்சிகளும் அவற்றின் பிளவுகளும் கொண்டுசெல்லப்பட்டுள்ளன.

இந்த நியதிப் பொறி காட்டுகின்ற போலித் தேர்வுகளுக்குள் கொள்கை ரீதியாக விழுந்துவிடாது, இலங்கை இந்திய அரசுகளிடையே தத்தம் நலன் சார்ந்து ஏற்படக்கூடிய ஒழுங்குகளை, குறைந்தபட்சம் மீளப்பெற ஒண்ணாதவையாக உறுதிப்படுத்துமாறு இறுக்கமாக வலியுறுத்துவத்துவதற்கு, தமிழர் தரப்புக்குச் சாணக்கியமும் சாமர்த்தியமும் இருக்கவேண்டும்.

பதின்மூன்றை அவ்வாறு கொண்டு வருவதில் தமிழர் விடுதலைக் கூட்டணி, குறிப்பாக அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தவறிழைத்தார். எல்லாம் முடிந்தபின் கடிதம் எழுவதை மட்டுமே கூட்டணியால் செய்யமுடிந்தது. இந்தக் கடிதத்தை மேற்கொள் காட்டியே விமர்சனங்களில் இருந்து கூட்டணியும், 2009 இற்குப் பின்னான கூட்டமைப்பும் தப்பித்துக்கொள்கின்றன.

அரசியல் தீர்வு பற்றிய மீளப்பெறும் தன்மையை உறுதி செய்துகொள்வதில் தென்னிலங்கை அரசியல் தலைவர்களும் இராஜதந்திரிகளும் எப்போதும் குறியாக இருப்பர். இதிலே ரணில், மிலிந்த மொராகொட மற்றும் எரிக் சொல்ஹைம் ஆகியோர் ஏற்கனவவே முன் அனுபவம் கொண்டவர்கள் என்பதை தமிழர் தரப்பு நன்கு அறிந்திருக்கவேண்டும்.

வரலாற்றில் கற்ற பாடத்தோடு, பொறிக்குள் விழாது அதேவேளை குறைந்தபட்ச ஒழுங்குளையும் மீளப்பெறப்படமுடியாதவையாக உறுதிப்படுத்துவதையும் தவறவிடாது பயணிப்பது எப்படி என்பதிலாவது ஈழத்தமிழர் தரப்புகளிடையே உடன்பாடு எட்டப்படவேண்டும்.

சக்திகள் முன்வைக்கும் யதார்த்தவாத அரசியலை எதிர்கொள்வதற்கு தமிழர் தரப்பிடம் இருக்கவேண்டிய கொள்கை வழுவாத யதார்த்தவாத அரசியல் எது என்பதை அறிந்து செயற்படுவது அறிவின் பாற்பட்டது.

நேர்மையோடு இந்த அறிவைப் பயன்படுத்த ஒன்றாய் அமர்ந்திருந்து விவாதிப்பது மனப்பாங்கின் பாற்பட்டது. அறிவும் மனப்பாங்கும் கைகூடினால் ஈழத்தமிழர் தரப்பு முன் நோக்கிப் பயணிக்க முடியும். இந்த உடன்பாடு எட்டப்படுவதற்கு அரசியற்கட்சிகளின் அல்லது அவற்றின் பிளவுகளின் தன்னல அரசியல் முட்டுக்கட்டையாக உள்ளது.

அறிவையும் மனப்பாங்கையும் வரலாற்றுத் தவறுகள் மீண்டும் நடவாது உறுதிப்படுத்துவதையும் சம்பந்தனால் தனது வாழ்வின் இறுதிக்கட்டத்திலாவது சரியாகச் செய்யமுடிந்தால் அமிர்தலிங்கத்தை விஞ்சியவராக அவர் வரலாற்றில் எழ முடியும். அல்லாவிடில் அமிர்தலிங்கத்தை விடவும் கொடிய பழியே அவருக்கு வரலாற்றில் வந்து சேரும்.