இலங்கைத்தீவில் மற்றுமொரு இன ஒடுக்குமுறை

மலையகத் தமிழர்களின் கூட்டிருப்புக்கு விடுக்கப்படும் சவால்

தமிழர் என்ற அடையாளத்தை விட்டுக் கொடுத்தல் அல்லது சமரசம் செய்யும் ஆபத்தான செயற்பாடு
பதிப்பு: 2023 ஜூன் 01 13:24
புதுப்பிப்பு: ஜூன் 01 14:16
main photo main photo main photo main photo
- - பிரியதர்ஷினி சிவராஜா
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இந்திய வம்சாவளி தமிழர்களா அல்லது மலையகத் தமிழர்களா எமது அடையாளம் என்ற சர்ச்சைகள் மலையக மக்கள் மத்தியில் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், தேசிய இன அரசியலுக்குள் தம்மை இணைத்துக் கொண்டு ஏனைய மக்களைப் போன்று அரசியல் உரிமைகளையும், அடிப்படை உரிமைகளையும் வென்றெடுப்பதற்கு தமக்கான ஓர் அடையாளம் இருக்க வேண்டியது மலையக மக்களுக்கு மிக மிக அத்தியவசியமான விடயமாக இருக்கின்றது.
 
மலையகத்திற்கு வெளியில் நாட்டின் பல்வேறு பாகங்களில் சிதறி வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் தோட்டத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை "தமிழர்" என்ற அடையாளத்தையே விட்டுக் கொடுத்து வாழும், அல்லது அதில் சமரசம் செய்து கொள்ளும் போக்கு பொதுவான விடயமாக மாறிக் கொண்டிருப்பதானது மலையகத் தமிழர்களின் மக்களின் கூட்டிருப்புக்கு விடுக்கப்படும் சவால்

ஆனால் மலையகத்திற்கு வெளியில் நாட்டின் பல்வேறு பாகங்களில் சிதறி வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் தோட்டத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை "தமிழர்" என்ற முக்கியமான அடையாளத்தையே விட்டுக்கொடுத்து வாழும், அல்லது அதில் சமரசம் செய்து கொள்ளும் போக்கு பொதுவான விடயமாக மாறிக்கொண்டிருப்பதானது மலையகத் தமிழர்களின் மக்களின் கூட்டிருப்புக்கு விடுக்கப்படும் சவாலாக அமையப்போகின்றது.

ஏனைய இனங்களுடன் ஒப்பிடும் போது மலையக மக்கள் சிறிய இனமாக இருப்பதனால் தமது இருப்பை நிலைப்படுத்திக்கொண்டு அடையாளங்களைப் பேணிக்கொண்டு வாழ்வதனூடாகவே அவர்கள் தமது அரசியல் அபிலாஷைகளையும், பேரம் பேசும் ஆற்றலையும் வலுப்படுத்திக்கொள்ள முடியும்.

ஆயினும் அடையாளங்களை இழப்பது என்பது இந்த பேரம் பேசும் ஆற்றலையும் அரசியல் அபிலாஷைகளையும் பலவீனப்படுத்தும் ஓர் ஆபத்தான விடயமாகும்.

தோட்டத்தொழிலாளர்கள் மத்திய மலைநாட்டுப் பகுதிகளிலும், நாட்டின் ஏனைய மாவட்டங்களிலும் சிதறியும் வாழ்ந்து வருகின்ற நிலையில், கண்டி, நுவரெலியா, பதுளை மாவட்டங்களைச் சேர்ந்த மலையக மக்கள் எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் பற்றியும் அவர்களின் கோரிக்கைகள் பற்றியும் பரவலான உரையாடல்கள் சமூகத்தில் நிகழ்ந்தாலும், நாட்டின் பல்வேறு பாகங்களில் சிதறியும் அடைப்பட்ட நிலையிலும் தோட்டப்பகுதிகளுக்குள் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் நிலை பற்றியும், அவர்கள் தமது அடையாளத்தை இழத்தலுடன் அவர்கள் எதிர்கொள்ளும் பொதுவான அடிப்படைப் பிரச்சினைகள் பற்றியும் பொதுக்கருத்தாடல்கள் போதுமானளவுக்கு இடம்பெற்றதாகத் தெரியவில்லை.

ஒருவகையில் புறக்கணிக்கப்பட்ட நிலையிலும் ஒதுங்கி வாழும் நிலையிலும் இம்மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

குறிப்பாக சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் தென்னிலங்கையில் காலி மாத்தறை மாவட்டங்களில் வாழும் தோட்டத்தொழிலாளர்களின் நிலை என்று பார்த்தால் தமிழர்கள் என்ற அடையாளத்தை எவ்வளவு தூரம் அவர்கள் மெல்ல மெல்ல இழந்து கொண்டிருக்கின்றனர் என்பதும், தமது மொழியையும், கலாசாரத்தையும் மதத்தையும் சுதந்திரமாக பின்பற்ற முடியாமல் அதற்கான உரிமையை இழந்துக்கொண்டிருக்கின்றனர் என்பதும் கரிசனைக் கொள்ள வேண்டிய விடயங்களாகும்.

மலையக தேசிய அரசியல் நீரோட்;டத்திற்குள் தங்களை இணைத்துக்கொள்ள முடியாமல், தனிமைப்பட்ட சூழலில், பெரும்பான்மையினர் மத்தியில் தமது அடையாளங்களை விரும்பியோ விரும்பாமலோ மெல்ல மெல்ல இழந்து வரும் துரதிருஷ்டவசமான நிலையை அவர்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

சிதறி வாழும் நிலையினால் இவர்களால் போதியளவு சமூக அரசியல் கவனத்தைப் பெற முடியாதுள்ளது. அத்துடன் அரசியல் ரீதியில் பிரதிநிதித்துவம் இல்லாமல் இருப்பதால் பேரம் பேசும் ஆற்றலை இழந்தவர்களாகவும், அதனால் ஏற்படுகின்ற நேரடி மறைமுக பாதிப்புகளை மிகவும் மோசமாக எதிர்கொண்டவர்களாகவும் இருக்கின்றனர்.

மூன்று தோட்டங்கள் மூன்று கதைகள்!

காலி எல்பிட்டிய பகுதியில் திவித்துரா தோட்டம் அமைந்துள்ளது. குலுகஹாகந்த தோட்டமும் (மனோண்மணிய தோட்டம்), லேல்வல தோட்டமும் காலி வந்துரம்ப பகுதியில் அமைந்துள்ளன. இப்பகுதிகளில் வாழும் தோட்டத்தொழிலாளர்கள் எவ்வளவு தூரம் தனிமைப்பட்டு எவ்வாறான ஓர் பின்தங்கிய வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் என்பதனை அங்கு நேரடியாக விஜயம் செய்து அம்மக்களுடன் உரையாடும் போது நன்கு அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

அவர்களின் சோகக் கதைகளுக்கும் முற்றுப்புள்ளி இல்லை. கதைகளை கேட்பவர்களுக்கோ எவ்விடத்தில் முற்றுப்புள்ளியை வைத்து உரையாடலை நிறைவு செய்வது என்றும் புரியாத நிலை.

இப்பகுதி மக்கள் எதிர்நோக்கும் அடிப்படை பிரச்சினைகளும், இதர சமூக பொருளாதாரப் பிரச்சினைகளும் நாட்டின் மத்திய மலைநாட்;டில் வாழும் மலையக மக்கள் எதிர்நோக்கி வருகின்ற பொதுவான பிரச்சினைகளாகவே அமைகின்ற போதிலும், வாழ்விடத்தின் அமைவிடம் காரணமாகவும் தனிமைப்பட்ட நிலை காரணமாகவும் பிரத்தியேகமான பல பிரச்சினைகளை எதிர்கொள்பவர்களாக இம் மக்கள் வாழ்ந்து வருகின்றமையை அறியக் கூடியதாக உள்ளது.

பெருவாரியாக சிங்கள மக்கள் வாழ்ந்து வருகின்ற இந்த மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிறிய பரப்பினைக் கொண்ட தேயிலைத்தோட்டங்களிலும், இறப்பர் தோட்டங்களிலும் இம்மக்கள் வாழ்கின்றனர். காலி மாவட்டத்தை மொத்தமாக எடுத்துக்கொண்டால் 25 முதல் 30 வரை தோட்டங்கள் உள்ளதாகவும்.

இதில் சுமார் 75 ஆயிரம் தமிழ் தோட்டத்தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர் என்றும், இவர்களில் வாக்குரிமை உள்ளவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரம் வரை உள்ளது என்றும் ஐ.தே.க காலி மாவட்ட அமைப்பாளர் துரைக்கண்ணு ராசேந்திரன் தெரிவித்தார்.

2009ம் ஆண்டு மாகாண சபைத்தேர்தலில் போட்டியிட்ட இவர் தொடர்ந்து கருத்துக் கூறும் போது, "கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் காலி மாவட்டத்தில் உள்ள தோட்டத்தொழிலாளர்களுக்கு சுமார் 450 வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டதாகவும், அவர்களுக்கு காணி உரிமை இல்லாத பிரச்சினையினாலும், சரியான பதிவுகள் இல்லாத காரணத்தினாலும் எதிர்கொண்ட பிறப்புச் சான்றிதழ் கிடைக்காத பிரச்சினை மற்றும் பெற்றோர் விவாகம் செய்யாமல் இருந்த பிரச்சினை, அடையாள அட்டை இல்லாத பிரச்சினை போன்ற பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டதாக" அவர் கூறினார்.

தமது துயரங்களுக்கும் ஓர் முடிவு வேண்டும் என்ற மனப்பாங்குடன் இன்றைய தலைமுறை அங்கு இருப்பதனைக் காண முடிகின்றது. செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில் அமைப்புகளுடன் இணைந்து குரல் கொடுக்கும் அவர்கள் முன்னைய சந்ததி போன்றல்லாமல் தமது பிரச்சினைகள் பகிரங்கமாகப் பேசப்பட வேண்டும் என்ற உத்வேகத்தைக் கொண்டிருக்கின்றனர்

இன்றோ அவர்கள் கவனிப்பாரன்றி உள்ளனர். இந்நிலையில் மிகவும் முக்கியமான விடயமாக, நெலுவ, தவளம, ஹனிதும ஆகிய பகுதிகளில் 5 ஏக்கர் 10 ஏக்கர் நிலங்களில் அமைந்திருக்கும் தனியார் தேயிலை இறப்பர் தோட்டங்களில் வேலை செய்யவெனவும் பராமரிப்பு பணிகளை முன்னெக்கவும் தோட்டத்தொழிலாளர்கள் குடும்பம் சகிதம் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர்.

ஆனால் அவ்வாறான தோட்டத் தொழிலாளர்களின் நலன்கள் மிகவும் கேள்விக்குறியாக உள்ளது. குறிப்பாக அவ்வாறான குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு கல்வி உரிமை கூட கிடைக்காத நிலை காணப்படுகின்றது” என்று ராசேந்திரன் மேலும் தெரிவித்தார்.

அடையாளங்களை இழத்தல்!

"எங்களைப் பற்றி தேடிப்பார்க்கவோ, எங்களைப் பற்றி கரிசனை கொள்ளவோ எவரும் இல்லை" என்று லேல்வல தோட்டத்தில் வசிக்கும் எம். செல்வராஜா கூறினார். எங்களுக்கு இதர மலையக மக்களுடன் எந்தவிதமான தொடர்பும் இல்லை.

இம்மாவட்டத்தில் வாழ்கின்ற தோட்டத் தொழிலாளர்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் கஷ்டப்படுகின்றனர் என்று அவர் மேலும் குறிப்பிட்டார். செல்லா என்று அழைக்கப்படும் செல்வராஜா இப்பகுதி மக்களின் உரிமைகளுக்காக போராடி வரும் ஒருவர். அவரின் கருத்துப்படி இத்தோட்டமும் சுமார் 180 ஆண்டுகளுக்கு முன்னைய வரலாற்றைக் கொண்டுள்ளது.

இத்தோட்டத்தில் தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள் என்பதற்கான எந்தவிதமான அடையாளங்களும் இல்லை. செல்லா வயதைச் சேர்ந்தவர்கள் தமிழ் மொழியில் உரையாடிய போதிலும் அங்கு சந்திக்கக் கிட்டிய பாடசாலை மாணவர்களும் இளம் தலைமுறையினரும் முற்றாக சிங்கள மொழியில் உரையாடுவதனையும், தமிழில் உரையாற்றினால் சிங்களத்தில் பதில் சொல்கின்றவர்களாகவும் இருக்கின்றனர்.

அவர்களின் பெயர்களும் முற்று முழுதாக சிங்களவர்களின் பெயர்களாகவே உள்ளது. சிங்கள பெயர்களில் தங்களை அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ அடையாளப்படுத்தும் அளவுக்கு அவர்களில் மாற்றத்தைக் காண முடிகின்றது.

இதே நிலையை குலுகஹாகந்த (மனோன்மணிய) தோட்டத்திலும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. காலி வந்துரம்ப பிரதான வீதிக்கு அண்மித்தாகவே இத்தோட்டம் அமைந்திருந்தாலும் அம்மக்கள் வறுமையில் வாடுவதனையே நிலைமைகள் எடுத்துக்காட்டுகின்றன.

சம்பளம் போதாத நிலையில் அப்பகுதி பெண்கள் வாழ்வாதாரத்திற்காக கூலி வேலைகளில் ஈடுபடுகின்றனர். “காலையில் வீட்டு வேலைகளை முடித்து விட்டு ஏழு மணிபோல வீதியில் இறங்கினால் வான் வண்டியில் வந்து எங்களை ஏற்றிக்கொண்டு போவார்கள்.

அவர்கள் இப்படி நிறைய பெண்களை சேர்த்துக்கொண்டு ஒவ்வொரு இடமாக வேலைக்கு விடுவார்கள். முழு நாளும் வேலை அவர்கள் சொல்லும் வேலையை செய்தால் 1000 ரூபா கிடைக்கும்” என்று அப்பகுதி பெண்களின் பொதுக்கருத்தாக உள்ளது.

தமது துயரங்களுக்கும் ஓர் முடிவு வேண்டும் என்ற மனப்பாங்குடன் இன்றைய தலைமுறை அங்கு இருப்பதனைக் காண முடிகின்றது. செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில் அமைப்புகளுடன் இணைந்து குரல் கொடுக்கும் அவர்கள் முன்னைய சந்ததி போன்றல்லாமல் தமது பிரச்சினைகள் பகிரங்கமாகப் பேசப்பட வேண்டும் என்ற உத்வேகத்தைக் கொண்டிருக்கின்றனர்.

தமிழ் மொழியில் கற்க வாய்ப்பில்லை!

காலி மாவட்டத்தின் தமிழ் மொழி பாடசாலைகளாக தல்கஸ்வல தமிழ் கனிஷ்ட வித்தியாலயம், திவித்துரா விவேகானந்த தமிழ் வித்தியாலம் (அத்கந்துர), ரேகல்கந்த தமிழ் வித்தியாலயம் (எல்பிட்டிய), சரஸ்வதி தமிழ் வித்தியாலயம் (நாக்கியாதெனிய) ஆகிய நான்கு பாடசாலைகள் உள்ளன.

எல்பிட்டிய திவித்துரா பகுதியில் தமிழ் மகா வித்தியாலயம் ஒன்று அமைந்துள்ள போதிலும் இதர இரு தோட்டங்களையும் அண்டிய பகுதிகளில் தமிழ் மொழியில் கல்வி கற்பதற்கென்று தமிழ் பாடசாலைகள் இல்லாதது இங்கு பெரும் குறையாகும்.

குலுகஹாகந்த தோட்டத்தைச் சேர்ந்த சுகந்தி கூறும்போது, தமிழ் பாடசாலை இல்லாத காரணத்தினால் அப்பகுதியில் உள்ள மாணவர்கள் சிங்களப் பாடசாலைகளுக்கு சென்று கல்வி பயில்கின்றனர் என்றார். தமிழ் மொழியில் பரீட்சயம் இல்லாதவர்களாகவும் அவர்கள் உள்ளனர் என்று கூறிய சுகந்தி, பிள்ளைகளின் வறுமை நிலை காரணமாக மேலதிகமாக தனியார் வகுப்புகளுக்கு சென்று தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அப்பகுதியைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுத்து கல்வியின் மகத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயற்பாட்டில் சுகந்தி ஈடுபட்டு வருகின்றார். “சிங்கள மொழியில் கல்வி கற்பதால் பல நன்மைகளை இலகுவில் பெறலாம் என்ற சிந்தனை பரவலாக இருந்தாலும் எமது பிள்ளைகளில் பலர் சிங்கள மொழியை கற்றும் சரியான வேலைவாய்ப்புகள் இன்றி இருக்கின்றனர்.

அதனால் சிங்கள மொழியைக் கற்றுக்கொள்வதால் நன்மை என்று சொல்லப்படும் கருத்துடன் நான் உடன்பட மாட்டேன்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பொதுவாக தனிமைப்பட்டுள்ள இந்த மக்கள் அடுத்த சந்ததியாவது கல்வியில் முன்னேறிய சமூகமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் சிங்கள மொழியிலாவது கல்வியைத் தொடர பெற்றோர்கள் தம் பிள்ளைகளை அனுமதிக்கின்றனர்.

அதேவேளை துயரமான இந்த வாழ்நிலையிலிருந்து அவர்கள் மீட்டெடுக்கும் நோக்கமும் அதில் இருந்தாலும் தோட்டத்தொழிலாளர்கள் என்ற பாரபட்சமான சமூக மனநிலை அவர்களின் நோக்கத்திற்கும் எண்ணத்திற்கும் குறுக்காக நிற்கின்றது. இதனையே சுகந்தியின் கருத்தும் பிரதிபலிக்கின்றது. தமிழ் மொழியில் கல்வி கற்பதற்கான வசதிகள் இல்லாமை ஒரு பக்கம், பாடசாலை இருந்தாலும் கல்வியை தொடர முடியாமல் தடுக்கும் குடும்பச்சூழல், சமூகக் காரணிகள் போன்ற பல்வேறு காரணங்களினால் இப்பகுதிகளில் கல்வி நிலை முன்னேற்றம் என்பது மிகவும் மந்தகதியாகவே உள்ளது.

விவாகப் பதிவில்லாத பெற்றோர்கள் பிள்ளைகள் முன்னிலையில் பதிவு திருமணம் செய்த நிகழ்வுகளும் நிகழ்ந்திருக்கின்றன. சில அரச சார்பற்ற நிறுவனங்கள் இவ்விடயத்தில் இம்மக்களுக்கு உதவிகளை செய்துள்ள போதிலும் இன்னும் பிரச்சினைகள் சில தோட்டங்களில் தொடர்ந்துகொண்டேயிருக்கின்றன

திவித்துரா தமிழ் மகா வித்தியாலயத்தில் முதலாம் ஆண்டில் கல்வி கற்க விண்ணப்பித்து அனுமதி பெற்றுக்கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை விட மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதேவேளை தமிழ் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையும் பெரும் பிரச்சினையாக உள்ளது. அடிக்கடி ஆசிரியர்கள் இடமாற்றம் பெறுவது, இவ்வாறான இடங்களில் கடமையாற்ற ஆசிரியர்கள் விரும்பாமையும் சுட்டிக்காட்டப்படும் இதர பிரச்சினைகளாகும்.

இத்தோட்டங்களில் அதிகமான பெண்கள் வறுமையின் காரணமாக மத்தியகிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக தொழில் வாய்ப்பு பெற்று சென்றுள்ள நிலையில் பாதுகாவலர்களாக இருப்பவர்கள் பிள்ளைகளின் கல்வி பற்றி அக்கறைக் காட்டாத நிலையும், இரும்பு சேகரிக்க செல்லுதல், கூலி வேலைகளுக்கு செல்லுதல் போன்ற பணம் ஈட்டும் செயற்பாடுகளில் பாடசாலை செல்லும் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றமையையும் அறியக் கூடியதாக உள்ளது.

ஆவணங்கள் இல்லாத அவல நிலை!

"இங்கு உள்ள தோட்டத்தொழிலாளர்கள் எந்தவிதமான அடிப்படை வசதியும் இன்றி இருக்கின்றனர். அவர்கள் மலையக அரசியலில் உள்வாங்கப்படாத நிலையில் இருப்பதனால் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி வெளியில் தெரிவதில்லை" என்று கருணாசேன குருகே (74) தெரிவித்தார்.

நீண்ட காலமாக இப்பகுதிகளில் வாழும் தமிழ் தோட்டத் தொழிலாளர்களுக்காகவும், அவர்களின் உரிமைகளுக்காகவும் போராடி வரும் இவர், அவர்களின் தமிழ் அடையாளம் இழக்கப்படுவது குறித்தான கவலையைப் பகிர்;ந்துகொண்டார்.

பிறப்புச் சான்றிதழ் இல்லாத பிரச்சினை, தபால்கள் கிடைக்காமை, காணிப்பிரச்சினை, சமுர்த்தி கிடைக்காமை ஆகிய ஒவ்வொரு பிரச்சினைக்கும் அவர்களுக்காக அரச அதிகாரிகளுடன் வாதாடுபவராகவும், அவர்களுக்கு உதவிகள் பல செய்பவராகவும், அப்பகுதியில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஒருவராகவும் தமிழ்த் தோட்டத்தொழிலாளர்களின் அபிமானத்திற்குரியவராகவும் இருக்கின்றார்.

1983ம் ஆண்டு இனக்கலவரத்தின் போது இப்பகுதி மக்களை சிங்கள இனத்தவர்களின் இனவாத அட்டூழியங்களிலிருந்து காப்பாற்றிய ஒருவராகவும் தோட்டத்தொழிலாளர்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றிருக்கின்றார்.

காலி மாவட்டத்தில் வாழும் தமிழ் தோட்டத்தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடினால் ஒரு பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பெற முடியும். தமிழ்ப் பிரதிநிதித்துவம் இருந்தால் இம்மக்களின் பிரச்சினைகள் களத்திற்கு வரும் என்று அவர் கூறுகின்றார். நுவரேலியா, பதுளை, கண்டி ஆகிய மாவட்டங்களில் மலையக மக்களின் செறிந்து வாழும் தன்மை அவர்களுக்கு பல பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக்கொடுத்துள்ளன.

ஆனால் மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, மாத்தறை, காலி மாவட்டங்களில் தோட்டத்தொழிலாளர்கள் சிதறி வாழும் நிலையானது அவ்வாறானதல்ல. ஆனாலும் இந்த பகுதிகளில் வாழும் மக்கள் ஒன்றுப்பட்டு செயற்பட்டால் மாகாண சபை உறுப்பினர் பதவிகளையாவது பெற முடியும் என்ற கருத்தும் அவரால் முன்வைக்கப்பட்டது.

"வாக்களித்தால் தான் எங்களால் தோட்டத்தில் வசிக்க முடியும். அதனால் தான் நாங்கள் வாக்குரிமையை பயன்படுத்துகின்றோம். அதனால் எந்த பயனும் இல்லை. எங்கள் வாழ்க்கை இப்படியே தான் நகர்ந்துகொண்டிருக்கின்றது" என்று செல்வராஜா கூறினார்.

பிறப்புச் சான்றிதழ், அடையாள அட்டைகள் போன்ற ஆவணங்களைப் பெறுவதற்கான சரியான வழிகாட்டல்கள் இன்மையாலும் அவர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

விவாகப் பதிவில்லாத பெற்றோர்கள் பிள்ளைகள் முன்னிலையில் பதிவு திருமணம் செய்த நிகழ்வுகளும் இங்கு நிகழ்ந்திருக்கின்றன. சில அரச சார்பற்ற நிறுவனங்கள் இவ்விடயத்தில் இம்மக்களுக்கு உதவிகளை செய்துள்ள போதிலும் இன்னும் பிரச்சினைகள் சில தோட்டங்களில் தொடர்ந்துகொண்டேயிருக்கின்றன.

எங்கே மத சுதந்திரம்?

குலுகஹாகந்த தோட்டத்தில் 150 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்து கோயில் உள்ள போதிலும் அங்கு சமய அனுட்டானங்களை முன்னெடுக்க முடியாதுள்ளதாகவும், இதனால் கோயில் பாழடைந்த நிலையில் உள்ளதாகவும் அப்பகுதியைச் சேர்ந்த நிஷாந்த குறிப்பிட்டார். இந்து மத அடையாளங்களைப் பேண முழு முயற்சியில் ஈடுபட்டு வரும் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுள் ஒருவராக நிஷாந்த செயற்படுகின்றார்.

அப்பகுதியைச் சேர்ந்த இந்து மதத்தவர்கள் பிற மதங்களின் ஆதிக்கத்திலிருந்து அப்பகுதியை மீட்டெடுக்கவும், தாம் அனுட்டிக்க விரும்பும் மதத்தையும் பாதுகாக்கவும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருவதையும் அப்பகுதியில் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இம்மக்களின் வறுமையைப் பயன்படுத்திக்கொண்டு சில மத அமைப்புகள் அவர்களுக்கு உதவும் போர்வையில் சூட்சுமமாக தனது நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதாக மக்கள் குறைப்பட்டனர்.

சிலர் வறுமையை எதிர்கொள்ளவும், பிள்ளைகளின் நலன்களுக்காகவும் விரும்பியோ விரும்பாமலோ பிற மதங்களில் நாட்டம் காட்டி வரும் நிலையும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேவை தமிழ் தலைமைத்துவம்

காலி மாவட்டத்தைச் சேர்ந்த தோட்டங்களில் வசிக்கும் தமிழ் தொழிலாளர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கமோ தோட்ட நிறுவனங்களோ கரிசனை காட்டுவதில்லை என்பதே பொதுவான அபிப்பிராயமாகும். எஜமானர்களுக்குக் கட்டுப்பட்ட வாழ்க்கை முறையை இந்த நவீன காலத்திலும் அனுபவிக்கும் இவர்களின் வாழ்க்கை 200 ஆண்டுகள் கடந்த பின்னும் இன்னும் மாறியதாக தெரியவில்லை.

இவர்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்கு தோட்டங்களைச் சார்ந்து வசிக்கும் தோட்டத்தொழிலாளர்களுக்கு சக்தியில்லை என்று அம்மக்களுக்காகக் குரல் எழுப்பும் சமன் சி. லியனகே தெரிவித்தார். இம்மக்கள் எதிர்கொள்ளும் அநீதிகளுக்காக குரல் கொடுத்த வரும் இவர் மேலும் தெரிவிக்கையில், மத்திய மலைநாட்டு தொழிலாளர்களைப் போன்று பேரம் பேசும் சக்தியும் இவர்களுக்கு இல்லை.

சில இடங்களில் பிரதேச சபைகளுக்கு பிரதிநிதிகளை நியமிக்கும் அளவுக்கு வாக்குகள் இந்த மக்களிடம் உண்டு. மாகாண சபைகளுக்கு பிரதிநிதிகளை இவர்களால் அனுப்பவும் முடியும் என்றார்.

நிலைமை இவ்வாறிருக்கையில் இந்த மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கும் அதன் மறைமுக பாதிப்பாக அடையாளங்களை இழந்து தவிக்கும் நிலைமைக்கும் தீர்வு தான் என்ன என்பது நம்முன் நிற்கும் பெரும் கேள்வியாகும். ராசேந்திரன் குறிப்பிடுவது போன்று, "காலி மாவட்டத்திற்கு ஒரு தமிழ் தலைமைத்துவம் தேவை. அவ்வாறான ஓர் செயற்பாட்டினூடாகவே அவர்களின் பிரச்சினைகள் சரியான முறையில் வெளிவரும். அரசியல் வேறுபாடுகள் பாராமல் அதற்காக நாம் அனைவரும் பாடுபட வேண்டியுள்ளது".

அநீதிக்கு துணை போகாமல் சிதறி வாழும் தோட்டத் தொழிலாளர்களையும் மலையக அரசியல் நீரோட்டத்தில் இணைத்துக் கொண்டு அவர்களை முழுமையாக உள்வாங்க நடவடிக்கை எடுக்க முன்வருவது அவசியமாகும்

மலையக மக்கள் கட்சி அரசியலுக்குள்ளும். தொழிற்சங்க அரசியலுக்குள்ளும் மாட்டிக்கொண்டு தவிக்கின்றனர். சுமார் 200 ஆண்டுகள் கடந்து சென்றுள்ள நிலையில் இதுவரை அவர்கள் வாழ்வில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான மாற்றங்கள் எதுவும் ஏற்பட்டதாக தெரியவில்லை.

ஆனால் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வருவதிலும் சமூகத்தில் உரையாடல்களை ஏற்படுத்துவதிலும் மலையக மக்கள் வெற்றியடைந்துள்ளனர். சமூகத்தில் அந்த மக்களின் துயரங்கள் தொடர்பாகவும், அடிமை வாழ்வு குறித்தும் சமூகத்தில் பரவலான பேச்சுக்கள் உள்ளன.

ஆனால் தென்னிலங்கை உட்பட நாட்டின் பல பாகங்களில் ஆங்காங்கே அமைந்துள்ள தோட்டங்களில் வசிக்கும் இம்மக்கள் தமது பிரச்சினைகளை முன்வைக்கக் கூட ஆற்றலின்றியும் குரல் இன்றியும் இருக்கின்றனர் என்பது வேதனை தரும் விடயமாகும்.

தமது அடையாளத்தைப் பாதுகாப்பதனூடாகாவே உரிமைகளை அடைய முடியும். அந்த அடையாளங்களைக் கைவிடுவதனூடாக தமக்கான உரிமைகளை வென்றெடுப்பது என்பது சாத்தியமற்றது.

மலையக அரசியலில் இம்மக்களின் அடையாள இழப்பு என்பது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் பிரதான காரணியாக அமையப்போகின்ற அதேவேளை தம்மைச் சேர்ந்தவர்கள் பிறிதொரு வாழ்விடத்தில் அனுபவிக்கும் பிரச்சினைகளைக் கண்டு காணாதது போல் இருப்பது என்பது அம்மக்களுக்கு இழைக்கும் பெரும் அநீதியாகவே அமையும் எனலாம்.

அந்த அநீதிக்கு துணை போகாமல் சிதறி வாழும் தோட்டத் தொழிலாளர்களையும் மலையக அரசியல் நீரோட்டத்தில் இணைத்துக் கொண்டு அவர்களை முழுமையாக உள்வாங்க நடவடிக்கை எடுக்க முன்வருவது அவசியமாகும். இதுவே அம்மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாகவும் அமைந்துள்ளது.