நிரல்
டிச. 19 15:01

மகிந்தவின் நெருங்கிய நண்பராக இருந்த சம்பிக்க ரணவக்க கைது

(வவுனியா, ஈழம்) ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பாட்டாளி சம்பிக்க ரணவக்க புதன்கிழமை மாலை இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று வியாழக்கிழமை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட சம்பிக்க ரணவக்கவை எதிர்வரும் 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். நேற்று இரவு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற நீதிபதியின் இல்லத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, இன்று வியாழக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் குற்றப் புலனாய்வுப் பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார். ஆனால் இன்றும் அவரது விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
டிச. 18 23:48

மன்னாரில் சட்டவிரோத மண் அகழ்வு- பொலிஸாருடன் மக்கள் வாய்த்தர்க்கம்

(மன்னார், ஈழம் ) வடமாகாணம் மன்னார் வேதசாட்சிகளின் ஆலயம் அமைந்துள்ள தோட்டவெளிப் பிரதேசத்தில், தென்பகுதியில் இருந்து வந்த நபர்கள் சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டமைக்கு எதிராகப் பொதுமக்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இலங்கைப் பொலிஸாருடன் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை பிற்பகல் மன்னார் தோட்டவெளிப் பகுதியில் தென்பகுதியில் இருந்து வந்த சிலர் மண் அகழ்வு செய்து அதனை வாகனத்தில் ஏற்றிச் சென்றபோது பிரதேச மக்கள் வழிமறித்தனர். இதனால் மண் ஏற்றிச் சென்ற நபர்களுக்கும் பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
டிச. 18 14:57

சுவிஸ் வெளியுறவு அமைச்சின் அறிக்கை, இலங்கைக்கு அவமானம்- ஐ.தே.க.குற்றச்சாட்டு

(வவுனியா, ஈழம்) கொழும்பில் உள்ள சுவிஸ்லாந்துத் தூதரகப் பெண் பணியாளர் கடத்தப்பட்டமை தொடர்பான விசாரணைகளில் திருப்தியில்லையெனக் கூறி சுவிஸ்லாந்து வெளிவிவகார திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை இலங்கை அரசாங்கத்துக்குப் பெரும் அவமானம் என்று ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அரசியல் பழிவாங்கும் செயற்பாடுகளினால் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இலங்கை அரசாங்கம் கடுமையான சூழலை எதிர்கொண்டுள்ளதாகவும் பாலிதரங்கே பண்டார தெரிவித்தார்.
டிச. 17 20:04

சட்டவிரோத மண் அகழ்வு பிரதான அரசியல் மையக் கருத்தில் இருந்து மக்களைத் திசை திருப்பும் மற்றுமொரு சதியா?

(கிளிநொச்சி, ஈழம்) வடக்கு மாகாணம் கிளிநொச்சிப் பிரதேசத்தில் உள்ள சோரன்பற்று கிளாலி, அரத்திநகர் அல்லிப்பளை பகுதிகளில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டவிரோத மணல் கொள்ளை நடவடிக்கைகளைக் கண்டித்து இன்று திங்கட்கிழமை மக்கள் போராட்டம் நடாத்தியுள்ளனர். பளைப் பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெரும்திரளான மக்கள் கலந்துகொண்டனர். சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கைகளுக்கு இலங்கை பொலிஸார் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குற்றம் சுமத்தினர். இலங்கை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் சிலரும் ஆதரவு வழங்குவதாகவும் மக்கள் தெரிவித்தனர்.
டிச. 16 22:59

சுவிஸ் தூதரகப் பெண் பணியாளருக்குக் கொழும்பு நீதிமன்றம் விளக்கமறியல் உத்தரவு

(வவுனியா, ஈழம்) கொழும்பில் உள்ள சுவிஸ்லாந்துத் தூதரகப் பெண் பணியாளர் கடத்தப்பட்டமை தொடர்பாகக் கடந்த எட்டு நாட்களாக வாக்குமூலங்களைப் பெற்ற இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பிரிவு இன்று திங்கட்கிழமை மாலை கொழும்புப் பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியது. இலங்கைச் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக தூதரகப் பணியாளர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று காலை 9.00 மணியளவில் குற்றப் புலனாய்வு பிரிவில் வாக்குமூலம் வழங்கிய சுவிஸ் தூதரகப் பெண் பணியாளா் பின்னர் கொழும்பின் புறநகர் பகுதியான அங்கொடைப் பிரதேசத்தில் உள்ள தேசிய மனநல சிகிச்சை நிறுவனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
டிச. 16 16:47

சுவிஸ் தூதரகப் பெண் பணியாளரைக் கைது செய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களம் அறிவுறுத்தல்

(வவுனியா, ஈழம்) கொழும்பில் உள்ள சுவிஸ்லாந்துத் தூதரகப் பெண் பணியாளர் கடத்தப்பட்டமை பொய்யான சம்பவம் என்று இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளார். அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் செய்தி ஆசிரியர்களைச் சந்தித்த கோட்டாபய ராஜபக்ச, கொழும்பில் உள்ள சுவிஸ்லாந்துத் தூதரகம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக விசாரணைகள் நடத்தப்பட்டது என்றும் தனது பணியாளர் கடத்தப்பட்டமை தொடர்பாக முறைப்பாடு செய்யும் உரிமை தூதரகத்துக்கு உண்டு எனவும் தெரிவித்தார். சிசிரி கமரா பதிவுகள், தொலைபேசித் தகவல்கள் பற்றிய தரவுகளின் அடிப்படையில் அவ்வாறான கடத்தல் சம்பவம் எதுவுமே இடம்பெறவில்லை எனவும் அவர் கூறுகிறார்.
டிச. 15 22:59

யாழ்ப்பாணத்தில் புதிய கட்சி உதயம்- சிறிகாந்தா தலைவர், சிவாஜிலிங்கம் செயலாளர்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்திருந்த ரெலோ இயக்கம் இரண்டாகப் பிளவுபட்டுள்ள நிலையில், ரெலோவில் இருந்து வெளியேறிய சட்டத்தரணி சிறிகாந்தா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டவருமான சிவாஜிலிங்கம் ஆகியோர் உள்ளிட்ட உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தமிழ்த் தேசியக் கட்சி என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை உருவாக்கியுள்ளனர். இன்று ஞாயிற்றுகிழமை யாழ்ப்பாணத்தில் புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவராக சட்டத்தரணி சிறிகாந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
டிச. 14 19:28

சட்டவிரோத மண் அகழ்வை நிறுத்து- தமிழர் வளங்களைப் பாதுகாக்குமாறு கோரி வீதியில் மக்கள்

(கிளிநொச்சி, ஈழம்) வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் இடம்பெறும் சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கைகளுக்கு எதிராக பொதுமக்கள் தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனாலும் தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்று மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர். இலங்கைப் படையினரும் அதிகாரிகள் சிலரும் சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபடும் குழுக்களுக்கு ஆதரவாகச் செயற்படுவதாகவும் பொதுமக்கள் குறை கூறுகின்றனர். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் தொடர்ச்சியாகப் போராட்டங்களும் இடம்பெறுகின்றன. இந்த நிலையில் சட்டவிரோத மண் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சி இயக்கச்சிச் சந்தியில் இன்று சனிக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
டிச. 14 15:53

யாழ் சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கு முந்நூறு மில்லியன்கள்- இந்தியா நன்கொடை

வடமாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தை மேலும் அபிவிருத்தி செய்வதற்கு முந்நூறு மில்லியன் ரூபாய்களை நன்கொடையாக வழங்க இந்திய மத்திய அரசு இணக்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்தியாவுக்குச் சென்றிருந்தபோது நானூற்றி ஐம்பது மில்லியன் டொலர்கள் வழங்க பிரதமர் நரேந்திரமோடி இணக்கம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பலாலி சர்வதேச விமான நிலையத்தை மேலும் அபிவிருத்தி செய்ய முந்நூறு மில்லியன் ரூபாய்கள் வழங்கப்படவுள்ளன. இலங்கையின் கைத்தொழில் ஏற்றுமதி முதலீட்டு ஊக்குவிப்பு, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவர் தரன்சிங்க சந்து உள்ளிட்ட தூதரக அதிகாரிகளைச் சந்தித்து உரையாடியிருந்தார்.
டிச. 13 22:37

மட்டக்களப்பு ஊடகவியலாளர் பொலிஸாரால் விசாரணைக்கு அழைப்பு

(மட்டக்களப்பு, ஈழம் ) இலங்கையில் ஊடகத்துறைக்கு மீண்டும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக கொழும்பில் இயங்கும் சுதந்திர ஊடக இயக்கம். உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் உள்ளிட்ட ஊடக அமைப்புகள் கண்டன அறிக்கை வெளியிட்டு சில நாட்களில் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில் உள்ள மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் செ.நிலாந்தன் ஏறாவூர் பொலிஸாரினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். செங்கலடிப் பிரதேச செயலாளர் வில்வரெட்ணத்திற்கு எதிராக மட்டக்களப்பு கச்சேரிக்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாக நாளேடுகள், செய்தி இணையத்தளங்களில் வெளியான செய்திகள் குறித்துப் பிரதேசச் செயலாளர் வில்வரெட்ணம் முறைப்பாடு செய்திருந்தார்.