நிரல்
டிச. 30 16:03

இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து சம்பந்தனை நீக்க மகிந்த தரப்பு கடும் முயற்சி

(யாழ்ப்பாணம், ஈழம் ) மகிந்த ராஜபக்சவின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி உறுதிப்படுத்தப்பட வேண்டும் என மகிந்த தரப்பு அணியினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்தி வருகின்றனர். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதால், சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகிக்க முடியாதென மூத்த உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன மைத்திரிபால சிறிசேனவிடம் கூறியுள்ளார். மகிந்த ராஜபக்சவே எதிர்க்கட்சித் தலைவர் என சபாநாயகர் கரு ஜயசூரிய கடந்த நாடாளுமன்ற அமர்வில் அறிவித்துள்ள நிலையில் அந்தப் பதவி தொடர்பாக தொடர்ந்தும் கேள்விக்குட்படுத்த வேண்டிய அவசியம் இல்லையெனவும் தினேஸ் குணவர்த்தன கூறியுள்ளார்.
டிச. 30 13:53

நள்ளிரவில் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவது மோசமான செயற்பாடு - இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்

(கிளிநொச்சி, ஈழம்) இலங்கையில் கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், பாடசாலை மாணவர்களது பரீட்சைப் பெறுபேறுகளை நள்ளிரவில் வெளியிடுவது மிகவும் மோசமான ஒரு செயற்பாடு எனத் தெரிவித்துள்ள இலங்கை ஆசிரியர் சங்கம், இந்த செயற்பாடு மாற்றியமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
டிச. 29 23:49

சுமந்திரன் இலங்கையின் ஒற்றையாட்சி அரசியல் யாப்பை நியாயப்படுத்துகிறார்- புதிய வரைபு வெளிவரும் என்கிறார்

(யாழ்ப்பாணம், ஈழம் ) நவம்பர் மாதம் ஏழாம் திகதி சமர்ப்பிக்கப்படவிருந்த புதிய அரசியல் யாப்பு வரைபைத் தடுக்கும் நோக்குடனேயே மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்து குழப்பத்தை ஏற்படுத்தியதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கையின் அரசியல் யாப்பு மீறப்படும் போது பாதிக்கப்படுவது தமிழ் மக்கள். ஆகவே யாப்பு மீறப்படும் சந்தர்ப்பங்களில் அதனை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு தமிழ் மக்களுக்குரியது என்றும் சுமந்திரன் கூறினார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனது வீட்டில் இன்று சனிக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் விளக்கமளித்த அவர், 19 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம், ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களில் பல விடயங்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
டிச. 29 09:54

புதிய அமைச்சுக்களின் பொறுப்புக்களை வரையறுத்து அரச வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது

(மன்னார், ஈழம்) இலங்கையில் தமிழ் மக்களது பெரும்பான்மை வாக்குகளால் ஆட்சிக்கு வந்த மைத்திரி - ரணில் தலைமையிலான அரசாங்கத்தைக் கலைத்து இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்த நாள் முதல் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி தற்போது வரை தொடர்கின்ற நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் மீண்டும் ஆட்சியைப் பெற்றுள்ளது.
டிச. 29 09:29

டிக்கோயா - போடைஸ் தோட்டக் குடியிருப்பில் தீ விபத்து - 24 வீடுகள் முற்றாக எரிந்து நாசம்

(வவுனியா, ஈழம்) அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ருபாவை வழங்குமாறு வலியுறுத்தி இலங்கையின் மலையகத்தில் உள்ள தோட்டத் தொழிலாளர்கள் போராடிவரும் நிலையில் ஹட்டன் - டிக்கோயா - போடைஸ் தோட்டக் குடியிருப்பில் ஏற்பட்ட விபத்தினால் 24 தோட்டத் தொழிலாளர்களது வீடுகள் முற்றாக எரிந்து சாம்பராகியுள்ளன. இன்று சனிக்கிழமை காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மலையக செய்தியாளர் ஒருவர் கூர்மை செய்தித் தளத்திற்கு சுட்டிக்காட்டினார்.
டிச. 28 20:51

ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் அவலப்படும்போது ரணில் கிளிநொச்சிக்குச் சென்றதன் நோக்கம்?

(கிளிநொச்சி, ஈழம்) வடக்கு மாகாணத்தில் பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ள நிலை தற்போது சீரடைந்து வரும் நிலையில் சுமார் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொடர்ந்தும் அகதிமுகாம்களில் தங்கியுள்ளனர். மக்கள் கடும் நெருக்கடிக்கு ஆளான நிலையில் தொண்டு நிறுவனங்கள் உட்பட பொது அமைப்புக்களின் உதவியுடன் இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிப்பொருட்கள் தொடர்ந்தும் வழங்கப்பட்டு வருகின்றன. வெள்ளம் ஏற்பட்டு ஒரு கிழமையை எட்டியுள்ள நிலையில் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று கிளிநொச்சிக்கு சென்று வெள்ள அனர்த்தம் இடம்பெற்ற இடங்களைப் பார்வையிட்டதுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.
டிச. 28 08:22

மரண தண்டனையை தற்காலிகமாக இடைநிறுத்தும் கோரிக்கைக்கு இலங்கை ஆதரவு

(கிளிநொச்சி, ஈழம்) மரண தண்டனையை தற்காலிகமாக இடைநிறுத்துவது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையால் கடந்த வாரம் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு ஆதரவாக இலங்கை வாக்களித்துள்ளது. கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையில் இது தொடர்பான வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது. இதன்போது 83 நாடுகளின் ஆதரவுடன் பிரேஸிலால் குறித்த யோசனை ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
டிச. 28 00:32

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மழை, வெள்ளத்தினால் பத்தாயிரம் மாணவர்கள் பாதிப்பு- தமிழர் ஆசிரியர் சங்கம்

(கிளிநொச்சி, ஈழம்) வடமாகாணம் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தொடர்ச்சியாகப் பெய்த மழையினால் வெள்ளம் ஏற்பட்டதால், சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமான பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. கிளிநொச்சியில் முப்பத்தியிரன்டு பாடசாலைகளில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஆயிரத்து 585 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் எண்ணாயிரத்து 415 மாணவர்கள் இருப்பதாகவும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
டிச. 27 23:14

மட்டக்களப்பில் இலங்கை இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டிருந்த காணிகள் பொது மக்களிடம் ஒப்படைப்பு

(மட்டக்களப்பு, ஈழம்) அழுத்தங்கள் காரணமாக கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டிருந்த எட்டுத் தசம் ஐந்து ஏக்கர் காணிகள் இன்று வியாழக்கிழமை பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. காணிகள் தொடர்பான அனைத்து ஆவணங்களும் இலங்கை இராணுவத்தின் கிழக்கு மாகாணக் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் கபில அநுரஜெயசேகர, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவிடம் அதிகாரபூர்வமாகக் கையளித்துள்ளார். இந்த நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கபில அநுரஜெயசேகரவிடம் இருந்து பெற்றுக்கொண்ட காணிகள் தொடர்பான ஆவணங்களை மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறீகாந்திடம் ஆளுநர் ரோஹித போகொல்லாகம உயர் அதிகாரிகள் முன்னிலையில் ஒப்படைத்தார்.
டிச. 27 21:39

டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு- தொற்று நோய்களும் பரவுகின்றன. சுகாதாரத்துறையினர் மீது குற்றச்சாட்டு

(கிளிநொச்சி, ஈழம்) வடக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழையினால் மக்கள் தமது சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து அகதிமுகாம்களில் தஞ்சமடைந்துள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக கடும் மழை பெய்வருகின்றது. கடந்த வாரம் ஆரம்பித்த மழை இன்றும் தொடர்கின்றது. இதனால் மக்களது வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் இதுவரை இரண்டு பேர் வெள்ள அனர்த்தத்தினால் பலியாகியுள்ளனர். வெள்ள அனர்த்தத்தை அடுத்து கிளிநொச்சியில் டெங்கு நோய் மற்றும் தொற்று நோய்களின் தாக்கங்கள் அதிகரித்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது.