நிரல்
ஏப். 30 14:17

இலங்கைக்குப் பயணம் செய்ய வேண்டாம் - ஐரோப்பிய ஒன்றியம் தமது பிரஜைகளுக்கு அறிவுறுத்தல்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையில் தங்கியுள்ள தங்கள் பிரஜைகளை வெளியேறுமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களமும் கனேடிய அரசாங்கமும் கோரியுள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் 16 நாடுகளும் இலங்கைக்குச் செல்ல வேண்டாமென தங்கள் பிரஜைகளுக்கு அறிவுறுத்தியுள்ளன. குறிப்பாக, இலங்கைக்குச் சுற்றுலா செல்வதைத் தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவசியமான காரணங்களுக்காக மாத்திரம் இலங்கைக்குச் செல்லுமாறு, அவுஸ்திரேலியா, ரஸ்யா ஆகிய நாடுகள் அறிவுறுத்தியுள்ளன. அத்துடன் நோர்வே, டென்மார்க், பின்லாந்து, சுவீடன் மலேசியா, தாய்வான், கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளும் பயண எச்சரிக்கை விடுத்துள்ளன.
ஏப். 29 23:40

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் 42 வெளிநாட்டவர் கொல்லப்பட்டனர்- மேலும் பன்னிரென்டு பேரைக் காணவில்லை

(மன்னார், ஈழம்) இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று ஐஎஸ் இஸ்லாமியவாதிகளினால் தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட 42 வெளிநாட்டவர்களின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆனாலும் இந்தத் தாக்குதல்களினால் பன்னிரண்டு வெளிநாட்டவர்கள் காணாமல் போயுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாமெனவும் கொழும்புத் தேசிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ள அடையாளம் காணப்படாத சடலங்களுடன் இந்தப் பன்னிரண்டு பேரின் சடலங்கள் இருக்கலாமெனவும் வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. சடலங்களை அடையாளம் காண்பதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.
ஏப். 29 19:27

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக ஆராய கோட்டாபய ராஜபக்ச தலைமையில் விசேட குழு

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று ஐஎஸ் இஸ்லாமியவாதிகள் நடத்திய தற்கொலைத் குண்டுத் தாக்குதல், அதன் பின்னர் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்கள், துப்பாக்கிப் பிரயோகங்கள் தொடர்பாக ஆரய்வதற்கு இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தலைமையில் விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமயில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற சந்திப்பில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கூறியுள்ளது. இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நடவடிக்கைகள் பலவீனமாக உ்ள்ளன. மகிந்த ராஜபக்ச இது குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக ஜலங்கா பொதுஜன பேரமுன கட்சி தெரிவித்துள்ளது.
ஏப். 29 15:09

சஹ்ரான் ஹாசீமின் தந்தை உட்பட இரண்டு சகோதரர்களும் பலி - மனைவியும் ஐந்து வயது மகளும் காயம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையில் உள்ள உருவ வழிபாடு கொண்ட பள்ளிவாசல்களெனக் கூறப்படும் குப்பு பள்ளி மற்றும் அவுலியா மஸ்ஜித்துகள் மீது, இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் தாக்குதல்களை நடத்தலாமென எதிர்பார்க்கப்படுவதால், அந்தப் பள்ளிவாசல்கள் முன்பாக இலங்கைப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தமது கொள்கைக்கு மாறாகச் செயற்படும் உருவ வழிபாடுகளைக் கொண்ட பள்ளிவாசல்களைத் தாக்குவது தொடர்பாக இஸ்லாமிய அடிப்படைவாதக் குழு திட்டமிட்டுள்ளதாக இலங்கைக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரட்ன தெரிவித்துள்ளார். குப்பு மற்றும் அவிலியா பள்ளிவாசல்கள் இலக்காக உள்ளதாக நம்பிக்கையான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஏப். 28 22:17

மகிந்த ராஜபக்ச தனது முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகளோடு உரையாடல்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையில் ஐ.எஸ் இஸ்லாமியவாதிகள் சென்ற 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று நடத்திய தாக்குதலையடுத்து இலங்கைப் பொலிஸாரும், இலங்கை முப்படையினரும் தீவிரமாகத் தேடுதல் நடத்தி வரும் நிலையில், மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் பதவி வகித்த இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதிகளான வசந்த கரன்னாகொட, மொஹான் விஜேவிக்ரம, முன்னாள் இராணுவத் தளபதிகளான தயா தென்னக்கோன், ஜகத் ஜயசூரிய, முன்னாள் விமானப்படைத் தளபதியான ரொசான் குணதிலக, முன்னாள் பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரிய ஆகியோருடன் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கலந்துரையாடியுள்ளார்.
ஏப். 28 15:40

கிழக்கு மாகாண மோதல் தொடர்பாக ஆராய வெளிநாட்டுப் புனலாய்வுக்குழு சாய்ந்தமருது பிரதேசத்தில்

(அம்பாறை, ஈழம்) கிழக்கு மாகாணம் சாய்ந்தமருது பிரதேசத்தில் ஐஎஸ்.இஸ்லாமியவாதிகள் தங்கியிருந்த வீடு முற்றுகையிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் அங்கு அமெரிக்க. அவுஸ்த்திரேலிய புலனாய்வாளர்கள் சென்றுள்ளதாக இலங்கைப் படைத் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன. சென்ற 21ஆம் திகதி உயித்த ஞாயிற்றுக்கிழமை, இடம்பெற்ற குண்டு தாக்குதலில், பிரதான தற்கொலைதாரிகளின் குடியிருப்பான கொழும்பு, தெமட்டகொடை வீட்டிலிருந்து, முக்கிய சில பொருட்களும் புத்தளம் வணாத்தவில்லு பிரதேசத்தில் இருந்து வேறு சிலபொருட்களும் இலங்கைப் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. தெமட்டக்கொட வீட்டில் இருந்து 30 மில்லியன் ரூபாவும், 15 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று இரத்தினக் கற்கலும் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கைப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
ஏப். 27 22:29

சாய்ந்தமருது துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி முஸ்லிம் குடும்பப் பெண் பலி

(அம்பாறை, ஈழம்) கிழக்கு மாகாணம் சாய்ந்தமருது பிரதேசத்தில் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட பொலிவேரியன் வீட்டுத் திட்டத்திலேயே இலங்கைப் படையினருக்கும் ஜஎஸ் இஸ்லாமியவாத குழுவுக்குமிடையில் மோதல் ஏற்பட்டதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர். துப்பாக்கிப் பிரயோகம், தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் 15 பேர் உயிரிழந்ததாக இலங்கைப் பொலிஸார் கூறியுள்ளனர். ஆனால் இலங்கைப் படையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் வீதியால் சென்று கொண்டிருந்த, இஸ்லாமிய அமைப்புகளோடு தொடர்பில்லாத இளம் குடும்பப் பெண் ஒருவர் கொல்லப்பட்டமை தொடர்பாக இலங்கைப் பொலிஸார் எதுவுமே கூறவில்லையென பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஏப். 27 15:36

வவுணதீவு பொலிஸ் காவலரனில் இரு பொலிஸார் கொலைக்கு ஐஎஸ் இஸ்லாமியவாதிகளே காரணம்- படைத்தரப்பு

(யாழ்ப்பாணம், ஈழம் ) கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் காவலரணில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் திகதி கடமையில் இருந்த இலங்கைப் பொலிஸார் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவமே ஐ.எஸ். இஸ்லாமியவாதிகளே முதலாவது தாக்குதல் என்று விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக இலங்கைப் படைத்தரப்பு கூறியுள்ளது. இது தொடர்பான செய்தியை கொழும்பில் இருந்து வெளிவரும் திவயின என்ற சிங்கள நாளிதழ் வெளியிட்டுள்ளது. ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஏற்பாட்டில், தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பு கடந்த வருடம் நவம்பர் மாதம் 30ஆம் திகதி இலங்கையில் முதலாவது தாக்குதலை நடத்தியுள்ளதாகப் இலங்கைப் படைத்தரப்பு கூறியுள்ளது. உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலையடுத்து தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்புத் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறுகின்றன.
ஏப். 27 11:24

கிழக்கு மாகாணம் சாய்ந்தமருது பிரதேசத்தில் ஐ.எஸ் இஸ்லாமியவாதிகளோடு மோதல் சிறுவர்கள் உட்பட 15 பேர் பலி

(மட்டக்களப்பு, ஈழம்) கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் கல்முனை- சவளக்கடை, சாய்ந்தமருது பிரதேசங்களில் இலங்கைப் படையினருக்கும் ஐ.எஸ் சர்வதேச இஸ்லாமியவாதக் குழுவுடன் தொடர்புடைய உள்ளூர்க் குழுவுக்கும் இடையே இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம், மற்றும் குண்டுத் தாக்குதலில் பதினைந்து முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆறுபேர் தற்கொலைக் குண்டுதாரிகள் என இலங்கைப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். ஆறு ஆண்களும் மூன்று பெண்களும் ஆறு சிறுவர்களும் சடலங்களாக இன்று சனிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாகவும் குணசேகர கூறியுள்ளார். இலங்கைப் படையினர் குறித்த வீட்டைச் சோதனையிடச் சென்றபோது படையினர் மீது இவர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்து குண்டுகளையும் வெடிக்கவைத்து உயிரிழந்ததாக குணசேகர தெரிவித்தார்.
ஏப். 26 23:22

கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் தாஜுதீன் கைது-மௌலவி தடுத்துவைப்பு

(யாழ்ப்பாணம், ஈழம் ) உயிர்த்த ஞாயிறன்று இலங்கையின் தலைநகர் கொழும்பு, நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களிலும் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் மட்டக்களப்பு பிரதேசத்திலும் குண்டுத்தாக்குதலில் ஈடுபட்ட தற்கொலைக் குண்டுதாரிகள் இஸ்லாம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இல்லையெனத் தெரிவித்துள்ள அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபைத் தலைவர் ஆஷிக் ரிஸ்வி, தற்கொலைதாரிகள் ஆறு பேரின் சடலங்களை ஒரு போதும் பொறுப்பேற்க முடியாதென்றும் தெரிவித்தார். அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா தலைமையகத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலைக் கண்டித்த ஆஷிக் ரிஸ்வி, இலங்கைப் படையினரின் சோதனை நடவடிக்கைகளுக்கு முஸ்லிம்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.