இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தல்-

ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பேன்- நவசமாஜக் கட்சி வேட்பாளர் நந்திமித்திர

பிரதான சிங்கள அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் பொய்யுரைப்பதாகவும் கூறுகிறார்
பதிப்பு: 2019 ஒக். 12 15:35
புதுப்பிப்பு: ஒக். 13 20:38
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
வடக்குக் கிழக்குப் பிரதேசங்கள் இணைக்கப்பட்ட சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அரசியல் அதிகாரம் ஈழத் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். அந்த உரிமையை தான் அங்கீகரிப்பேன் என்று நவசமாஜக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பெத்தேகம நந்திமித்திர தெரிவித்துள்ளார். தென்னிலங்கையில் இனவாதக் கருத்துக்கள் திட்டமிடப்பட்டு பரப்பப்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். எவ்வாறாயினும் தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும் எனவும் காணி- பொலிஸ் அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்பட வேண்டுமென்றும் பெத்தேகம நந்திமித்திர கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
 
பெத்தேகம நந்திமித்திர
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள இடதுசாரி முன்னோடியான நவசமாஜக் கட்சி வேட்பாளர் பெத்தேகம நந்திமித்திர
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சிங்கள வேட்பாளர்கள் சிங்கள பௌத்த தேசியவாதத்தை முன்வைக்கும் நிலையில் உங்கள் நிலைப்பாடு என்ன என்று கூர்மைச் செய்தித் தளம் கேட்டபோதே பெத்தேகம நந்திமித்திர இவ்வாறு கூறினார்.

பிரதான அரசியல் கட்சிகளின் சில தலைவர்கள் பொய்யான பிரச்சாரங்களைச் செய்வதாகவும் அவர் கூறினார். கலாநிதி விக்கிரபாகு கருணாரட்ன தலைமையிலான நவசமாஜக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடும் பெத்தேகம நந்திமித்திர, இடதுசாரி இயக்கச் செயற்பாடுகளில் முன்னோடியாகத் திகழ்கிறார்.

வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு ஈழத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாகச் செயற்பட்டு வரும நவசமாஜக் கட்சி இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இரண்டு பிரதான சிங்கள அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும் நம்பிக்கையற்றவர்கள் என்று ஏலவே கூறியுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாச, மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரை நிராகரிக்க வேண்டுமானால் பெத்தேகம நந்திமித்திரவுக்கு தமிழ் மக்கள் வாக்களித்து வடக்குக் கிழக்கு ஒரு தேசம் என்பதை வெளிப்படுத்த முடியுமென அவதானிகள் கூறுகின்றனர்

இந்த நிலையில் அந்தக் கட்சியின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பெத்தேகம நந்திமித்திர, ஈழத் தமிழ் மக்களின் அரசியல் விடுதலை குறித்த நிலைப்பாட்டை தேர்தல் பிரச்சாரங்களில் வெளிப்படுத்துவாரென எதிர்பார்க்கப்படுகின்றது.

கூர்மைச் செய்தித்தளத்திற்குக் கருத்து வெளியிட்ட பெத்தேகம நந்திமித்திர ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை உறுதியாகவே வலியுறுத்தினார். அங்கீகரிக்கப்போவதாகவும் சொன்னார்.

இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டாலும் ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலை குறித்து தெளிவான நிலைப்பாட்டோடு தனது கருத்துக்களை இவர் முன் வைத்து வருகின்றார்.

ஆகவே ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாச, மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரை நிராகரிக்க வேண்டுமானால் பெத்தேகம நந்திமித்திரவுக்கு தமிழ் மக்கள் வாக்களித்து, வடக்குக் கிழக்கு ஒரு தேசம் என்பதை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்த முடியுமென அவதானிகள் கூறுகின்றனர்.

பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த முடியாத சூழலில், சிவாஜலிங்கம் தானாகவே முன்சென்று சுயேற்சையாகப் போட்டியிடுகின்றார். ஆகவே அவரை ஒரு குறியீடாகக் கருதித் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டுமென அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.ஆ. ஜோதிலிங்கம் கூர்மைச் செய்தித் தளத்திற்கு ஏலவே தெரிவித்திருந்தார்.

ஆகவே இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தல் முறையின் பிரகாரம் முதலாவது விருப்பு வாக்கை சிவாஜிலிங்கத்துக்கும், இரண்டாவது விருப்பு வாக்கை பெத்தேகம நந்திமித்திரவுக்கும் செலுத்த முடியுமெனவும் இது தொடர்பாகத் தமிழர் பிரதேசங்களில் வெளிப்படைத் தன்மையோடு உரையாடல்கள் நடத்தப்பட வேண்டுமெனவும் அவதானிகள் கூறுகின்றனர்.

குறிப்பாகத் தமிழ் அரசியல் கட்சிகளோடும் வடக்குக் கிழக்குத் தாயக மக்களோடும் சிவில் சமூக அமைப்புகள் கலந்துரையாடல்களை நடத்த வேண்டுமெனவும் அவதானிகள் கூறுகின்றனர்.

விமர்சனங்களுக்கு அப்பால் சிவாஜிலிங்கத்தை ஏன் ஆதரிக்க வேண்டும் என்ற தொனியில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் விளக்கமளித்திருந்தார்.