அமெரிக்க பாதுகாப்பு வட்டாரங்களுக்கு ஆலோசனை வழங்கிய கோட்டபாயவின் சிங்களப் பேராசிரிய நண்பர்:

இலங்கை அரசு விடுதலைப் புலிகளை ஐ.நா. பயங்கரவாத பட்டியலில் சேர்க்கவேண்டும் என்கிறார் குணரட்ணா

தீவுக்குள் புலிகளைப் போற்றுவோருக்கு புனர்வாழ்வு கொடு, புலம்பெயர் தமிழர்களைப் பட்டியலிடு என்றும் மதியுரை!
பதிப்பு: 2020 டிச. 02 14:46
புதுப்பிப்பு: டிச. 24 01:30
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
ஜே.வி.பியின் முடக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தைப் போல் அல்லாமல் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மீளுருவாக்கப்படுவதற்கு வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும், குறிப்பாக அவ்வியக்கத்தின் தலைவர் வே பிரபாகரன் அவர்களைப் போற்றுகின்ற மரபு புலம்பெயர் தமிழர்களாலும் அமைப்புகளாலும் முன்னெடுக்கப்படுவதால், இலங்கைத் தீவுக்குள்ளும் அடுத்த தலைமுறையினர் தீவிரமயமாக்கப்படும் வாய்ப்பு அதிகமாகியிருப்பதாகவும், அதனால் ஐ.நா. பாதுகாப்புச் சபையின் 1373 ஆம் தீர்மானத்துக்குள் அவ்வியக்கத்தை உட்படுத்தி உலகளாவியரீதியில் பயங்கரவாத பட்டியலில் சேர்த்துவிடுவதற்கு இலங்கை அரசு உடனடியாக ஆவன செய்தாக வேண்டும் என்று சிங்களவரும் பிரபல பயங்கரவாத பேராசிரியருமான றொஹான் குணரட்ணா தெரிவித்துள்ளார்.
 
மாவீரர்நாளுக்கு முன்னதாக கடந்த 22ம் திகதி கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகையான சண்டே ஒப்சேவருக்கு கருத்து வெளியிட்ட றொஹான் குணரட்ணா, மாவீரர்நாளை நினைவுகூரும் நகர்வு அரசியல் நோக்குடையது என்று தெரிவித்தது மட்டுமல்ல, புலிகளைப் போற்ற முயல்வோரை அரசாங்கம் புனர்வாழ்வுக்கு உட்படுத்தவேண்டும் என்றும் கருத்துவெளியிட்டுள்ளார்.

புலிகளைப் போற்றும் புலம்பெயர் செயற்பாட்டாளர்களும் அமைப்புகளும் தடைப்பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்படுவதற்கு ஏதுவாக ஐ.நா ஊடான தடைமுயற்சியை மேற்கொள்ளவேண்டும் என்று குணரட்ணா கருத்து வெளியிட்டுள்ளார்

இதேவேளை, மட்டக்களப்பிலும், திருகோணமலையிலும் ஓர் ஊடகவியலாளர் உட்பட ஆறு தமிழ் இளைஞர்கள் சமூகவலைத்தளங்களில் நவம்பர் 26 பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை ஒட்டியும் மறுநாளான மாவீரர் நாளன்றும் இடுகையிட்டதற்காகக் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் நீண்டநாள் அரசியற் தலைவராகவும் இருந்த ம.க. சிவாஜிலிங்கம் பிரபாகரன் அவர்களைப் போற்றும் நடவடிக்கையிலும் மாவீரர் நாளை நடாத்தும் திட்டத்திலும் தொடர்ந்து இயங்கிவருவதாகவும் குணரட்ணா கூறியிருக்கிறார்.

புலிகளைப் போற்றும் புலம்பெயர் செயற்பாட்டாளர்களும் அமைப்புகளும் தடைப்பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்படுவதற்கு ஏதுவாக ஐ.நா ஊடான தடைமுயற்சியை மேற்கொள்ளவேண்டும் என்று குணரட்ணா கருத்துவெளியிட்டுள்ளார்.

சிவப்பு மஞ்சட் கொடிகளைப் பயன்படுத்துவதையோ, புலிச் சின்னங்களையோ மற்றும் அந்த அமைப்புடன் தொடர்புபட்ட குறியீடுகளைப் பயன்படுத்தவோ அனுமதிக்கலாகாதென்றும் அவர் சண்டே ஒப்சேவருக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.

அதேவேளை குடும்பங்கள் தமது இழப்புகளை வீட்டுக்குள்ளோ வழிபாட்டுத்தலங்களிலோ நினைவுகூருவதை சகித்துக்கொள்ளலாம் என்கிறார் குணரட்ணா.

அமெரிக்க அரசின் நீதித்துறைக்கு ஆலோசகராக இருந்த குணரட்ணா, சேர் ஜோன் கொத்தலாவலை இராணுவக் கல்லூரியின் கௌரவ பேராசிரியராவார்.

இவர் சில காலத்துக்கு முன்னர் வரை சிங்கப்பூரில் இருந்து இயங்கும் நான்யாங் தொழிநுட்ப பல்கலைக்கழகத்தின் சர்வதேச வன்முறை தொடர்பான கற்கை மையத்தின் தலைமைப் பொறுப்பை வகித்தவர்.

அமெரிக்க இராணுவ மையங்களாலும் ஊடகங்களாலும் சர்வதேசப் பயங்கரவாதம் தொடர்பான நிபுணராகக் கையாளப்படுபவர். பயங்கரவாதம் தொடர்பான அமெரிக்கப் பாதுகாப்பு நிறுவனங்களில் ஆய்வாளராகக் கடமையாற்றியவர். "அல்குவைடா அமைப்புக்கு உள்ளே" என்ற நூல் உட்பட பல நூல்களைத் தயாரித்தவர் இந்த குணரட்ணா.

இவர் தற்போதைய இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நீண்ட காலமாக நெருங்கிய ஆலோசகராகவும் இருந்துவருகிறார்.

வெவ்வேறு நாடுகளிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அப்பட்டியலில் இருந்து நீக்கிவிடுமாறு புலம்பெயர் அமைப்புகள் ஐரோப்பிய, பிரித்தானிய நீதிமன்றுகளை கடந்த சில வருடங்களாக அணுகிவரும் நிலையில், மேற்குலக இராணுவத்தரப்புகளோடும் உளவுத்துறைகளோடும் நெருங்கிய உறவைப் பேணும் குணரட்ணாவின் கருத்து வெளிவந்திருக்கிறது.

இதேவேளை, கூட்டு நிகழ்வாக மாவீரர் நாளைக் கடைப்பிடிக்காதவாறு கொழும்பு அரசு மேற்கொண்ட சட்ட நடவடிக்கைகளுக்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் அறிந்தோ அறியாமலோ பலியாகியுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்குள்ள சிறப்பு உரிமையைப் பயன்படுத்தி ஒரு கூட்டு நிகழ்வை நடத்தத் தவறியதன் சட்ட, சர்வதேசப் பின்னணியை ஏற்கனவே ஒரு கட்டுரையில் கூர்மை இணையத்தளம் விளக்கியிருந்தது.

அமெரிக்காவில் இருந்து இயங்கும் சமூக வலைத்தளங்களில் ஏற்கனவே விடுதலைப் புலிகளின் அடையாளங்களுடன் வெளியிடப்படும் பல இடுகைகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதற்குக் காரணம், உலகில் எங்கிருப்பவர்கள் இந்த வலைத்தளங்களில் இடுகைகளை இட்டாலும் அவை அமெரிக்க இறைமைக்குட்பட்ட சட்டத்துக்கு உட்படுவதாலும், அமெரிக்காவில் புலிகள் மீது தடை இருப்பதாலும் அவற்றை அகற்றிவிடுமாறு ஏனைய நாடுகள் கேட்கும்போது அந்த நிறுவனங்கள் அவற்றை அகற்றுவதற்கான பொறிமுறைகளைச் செய்துவிடுவதே ஆகும்.

ஆக, அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் முகநூல் நிறுவனத்தாலும் சுந்தர் பிச்சை என்ற தமிழகத் தமிழர் முக்கிய பதவி வகிக்கும் கூகுள் நிறுவனம் நடாத்தும் யூரியூப்பிலும் விடுதலைப் புலிகள் சார்ந்த இடுகைகள் அகற்றப்பட்டு வருவதற்கும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா மற்றும் இந்தியா ஆகிய இடங்களில் விடுதலைப் புலிகள் தடைப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருப்பது ஒரு முக்கிய காரணமாகும்.