இலங்கையின் 2019 ஆண்டு நிதியாண்டுக்கான

வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய்கள் ஒதுக்கீடு- மதிப்பீட்டு அறிக்கை தயாரானது

அமெரிக்கா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகள் மீது நம்பிக்கை அதிகரிப்பு
பதிப்பு: 2018 ஒக். 01 00:08
புதுப்பிப்பு: ஒக். 02 21:46
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை அரசாங்கத்தின் 2019 ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக இலங்கை நிதியமைச்சின் மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திற்கு முன்னோடியான மதிப்பீட்டு அறிக்கை, அடுத்த சபை அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஏனைய அமைச்சுக்களை விட பாதுகாப்பு அமைச்சுக்கே அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலிலும் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்படுவதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சட்டத்தரணி சுமந்திரன், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்ற வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது குற்றம் சுமத்தியிருந்தார்.
 
2018 ஆம் ஆண்டில் பாதுகாப்பு அமைச்சுக்கு 29 ஆயிரத்து 71 கோடியே 13 இலட்சத்து 75 ஆயிரம் (29,071,13,75,000) ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன.

ஆனால், இது பாதுகாப்பு அமைச்சுக்கென 2017 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட 28 ஆயிரத்து 404 கோடியே 43 இலட்சத்து 44 ஆயிரம் (28,404,43,44,000) ரூபாய்களிலும் பார்க்க 666 கோடியே 70 இலட்சத்து 31 ஆயிரம் (666,70,31,000) ரூபா அதிகமாக இருந்தது.

அடுத்த ஆண்டு அல்லது 2020 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எவர் பதவிக்கு வந்தாலும், உதவிகள் தொடரும் என இலங்கை அரசு என்ற கட்டமைப்புக்கு அமெரிக்கா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகள் உறுதியளித்துள்ளன.

இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திலும் பாதுகாப்பு அமைச்சுக்கு மேலும் ஆயிரம் கோடி ருபாய்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் இராணுவம், விமானப்படை, கடற்படை, கடலோரக்காவல் படை, சிவில் பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றை உள்ளடக்கிய பாதுகாப்பு அமைச்சுக்கே இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை அரசின் 2018ஆம் ஆண்டின் மொத்த செலவினமாக மூன்று இலட்சத்து 98 ஆயிரத்து 236 கோடியே 78 இலட்சத்து 18 ஆயிரம் (398,236,78,18,000) ரூபாய்கள் என மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.

இது 2017 ஆம் நிதியாண்டின் இலங்கை அரசின் மொத்த செலவினத்திலும் பார்க்க 35 ஆயிரத்து 425 கோடி ரூபா அதிகமாக காணப்பட்டிருந்தது.

இலங்கை அரசின் 2018 ஆம் ஆண்டுக்கான மொத்த வருமானமாக 2175 பில்லியன் மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், 2019 ஆம் ஆண்டின் நிதியாண்டுக்கான இலங்கை அரசின் மொத்த செலவினம் மேலும் அதிகரிக்கும் எனவும் மொத்த வருமானம் மேலும் குறைவடையலாம் எனவும் நிதியமைச்சின் உயர்மட்ட அதிகாரியொருவர் கூறினார்.

முன்னோடி மதிப்பீட்டு அறிக்கையில் இலங்கை அரசின் மொத்த செலவினம் வெளியாகும் என்றும் அந்த அதிகாரி கூறினார்.

அதேவேளை அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனம் (Millennium Challenge Cooperation) (MCC) 480 மில்லியன் டொலர் நிதியை வழங்க தானகவே முன்வந்துள்ளது.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அமெரிக்காவில் வைத்து கடந்தவாரம் உறுதியளிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் அந்த நிதி வழங்கப்படவுள்ளது.

இலங்கை இராணுவத்திற்கு 39 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியை வழங்கவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், கடந்த ஓகஸ்ட் மாதம் வெளியிட்டிருந்த அறிக்கையில் கூறியிருந்தது.

அமெரிக்க நிறுவனம் ஒன்றின் ஏற்பாட்டில் திருகோணமலையின் கடல்ப் பகுதியை மையப்படுத்திய எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் பற்றிய ஆய்வு நடவடிக்கைகள் செப்ரெம்பர் மாதம் இரண்டாம் திகதி ஆரம்பித்துள்ளது.

திருகோணமலை- சீனக்குடாவில் உள்ள 85 எண்ணெய்த் தாங்கிகளை இந்திய அரசின் உதவியோடு அபிவிருத்தி செய்வதற்கான யோசனைக்கு மைத்திரி-ரணில் அரசாங்கத்தின் அமைச்சரவை கடந்த வாரம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம் ஜப்பான் வெளிவிவகார மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் கொழும்புக்கு வந்து சென்ற பின்னர் செப்ரெம்பர் மாதம் அமெரிக்காவின் எண்ணெய் வள ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

ஆகவே இலங்கையின் பாதுகாப்பு அமைச்சுக்குத் தேவையான நிதியுதவிகள் மற்றும் இலங்கைப் படையினருக்கு அவசியமான பயிற்சிகள், தொழில்நுட்ப உதவிகளை அமெரிக்கா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகள் வழங்கும் என இலங்கை அரசு மேலும் எதிர்பார்க்கின்றது.

அடுத்த ஆண்டு அல்லது 2020 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எவர் பதவிக்கு வந்தாலும், இந்த உதவிகள் தொடரும் என இலங்கை அரசு என்ற கட்டமைப்புக்கு இந்த நாடுகள் உறுதியளித்துள்ளன.

இறுதிப் போருக்கு உதவியளித்த இந்த நாடுகள், திருகோணமலை உள்ளிட்ட வடக்கு- கிழக்கு தமிழர் தாயகத்தை மையப்படுத்திய கடற்பகுதிகள், நிலங்கள் போன்றவற்றை பிரதானமாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றன.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு முன்னரான அரசியல் சூழலில் இந்த நாடுகளுக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைத்திருக்கவில்லை.

தற்போது இந்துமா சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துவதாகக் கூறிக் கொண்டு அமெரிக்கா, ஜப்பான, இந்தியா ஆகிய நாடுகள் இலங்கை மீது செலுத்தும் ஆதிக்கம், ஈழத் தமிழர்களின் இறைமைக்கு மாத்திரமல்ல, இலங்கைத் தீவின் இறைமைக்கே ஆபத்து என அவதானிகள் கூறுகின்றனர்.

இந்த நாடுகளின் இலங்கை மீதான ஆதிக்கம் குறித்து ஜே.வி.பி உறுப்பினர் பிமல் ரத்னாயக்க, ஐக்கிய சோசலிச முன்னணியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய ஆகியோர் அதிருப்தி வெளியிட்டிருந்தனர்.

எதிர்வரும் நவம்பர் மாதம் ஐந்தாம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் மங்கள சமரவீர, 2019 ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.