யாழ்ப்பாணத்தில்

அலுவலகம் திறக்கப்பட வேண்டுமா இல்லையா- தீர்மானிக்க வேண்டியது யார்?

காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கத்தின் இணைப்பாளர் கண்டனம்- பயனற்றது என்கிறார்
பதிப்பு: 2019 ஓகஸ்ட் 26 22:51
புலம்: கிளிநொச்சி. ஈழம்
புதுப்பிப்பு: செப். 05 10:12
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#OMPSL
#Tamil
#LKA
#SriLanka
இலங்கை அரசாங்கம் தங்கள் தேவைக்காக யாழ்ப்பாணம் ஆடியபாதம் வீதியில் அவசரமாகத் திறக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய அலுவலகத்திற்கு (Office on Missing Persons) (OMP) எவரும் சென்று முறையிடமாட்டார்களென்று, இலங்கைப் படையினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கத்தின் வடக்குக்- கிழக்கு மாகாண இணைப்பாளர் யோகராசா கனகரஞ்சினி கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார். இலங்கை இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்ட ஐந்துபேரின் விபரங்களை ஆதாரங்களுடன் இந்த அலுவலகத்தின் தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸிடம் கையளித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தமது சங்கம் கேட்டிருந்ததாகவும் ஆனால் இதுவரையும் நடவடிக்கை எதுவுமே எடுக்கப்படவில்லை என்றும் அவர் இன்று திங்கட்கிழமை கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
 
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளில் ஐந்து பேரின் விபரங்களை ஆதாரங்களுடன் கையளித்தும் நடவடிக்கை எடுக்கத் தவறிய இந்த அலுவலகத்தின் மீது எவ்வாறு நம்பிக்கை வைப்பது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

வடக்குக்- கிழக்கு மாகாணத்தில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு இந்த அலுவலகம் தேவையென்று இலங்கை அரசாங்கம் உண்மையாகவே கருதியிருந்தால், உறவினர்கள் அனைவரையும் அழைத்து அவர்கள் முன்னிலையிலேயே இந்த அலுவலகத்தைத் திறந்திருக்க வேண்டும்.

ஆனால் அவ்வாறு செய்யவில்லை. சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்த இந்த அலுவலகத்தை இலங்கை அரசாங்கம் திறந்துள்ளது. இந்த அலுவலகம் திறக்கப்பட்டதை தமது சங்கம் வன்மையாகக் கண்டிப்பதாக அவர் கூறுகின்றார்.

பாதிக்கப்பட்ட உறவுகள் எவரும் இந்த அலுவலகத்திற்குப் போகமாட்டார்கள். இந்த அலுவலகம் கொழும்பில் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் எமது சங்கம் எதிராகப் போராட்டம் நடத்தியுள்ளது. இந்த அலுவலகத்தை திறப்பதா இல்லையா என்பதை எமது சங்கமே தீர்மானிக் வேண்டும் என்றும் அவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

இந்த அலுவலகத்தை சென்ற சனிக்கிழமை அதிகாலை கொழும்பைத் தலைமையகமாக் கொண்டியங்கும் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய அலுவலகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி சாலிய பீரிஸ் திறந்து வைத்தார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடும் என்ற அச்சத்தினாலேயே சனிக்கிழமை அதிகாலை நான்கு மணிக்கு அலுவலகத்தை திறந்து வைத்ததாக மக்கள் கூறுகின்றனா்.

இந்த அலுவலகத்தின் செயற்பாடுகளுக்காக கடந்த 2018 ஆம் ஆண்டுக்கான வருடாந்த செலவாக 1.3 பில்லியன் (1.3 billion INR) நிதி இலங்கை நாடாளுமன்றத்தினால் ஒதுக்கப்பட்டிருந்தது.

2017 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் இந்த அலுவலகத்தை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றது. 2018 பெப்ரவரி மாதம் இந்த அலுவலகத்திற்கான ஆணையாளர்களின் நியமனத்தோடு பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இந்த அலுவலகம் தமது இடைக்கால அறிக்கையை கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் ஐந்தாம் திகதி புதன்கிழமை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்திருந்தது.

இதேவேளை காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கத்தின் செயற்பாட்டாளர் ஒருவர் கடந்த வியாழக்கிழமை விபத்தில் உயிரிழந்துள்ளார். அவருடைய மனைவி காயமடைந்துள்ளார்.

அதேபோன்று மட்டக்களப்பில் பெண் செயற்பாட்டாளரும் அவருடைய மகளும் கடந்த நான்காம் திகதி ஞாயிற்றுக்கிழமை விபத்தில் சிக்குண்டு படு காயங்களோடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.