இலங்கை ஒற்றை ஆட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தல்

வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சஜித் பிளவுபடாத இலங்கைக்குள் தீர்வு என்கிறார்

நீண்ட இழுபறிக்கு மத்தியில் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய குழு வேட்பாளர் பிரச்சினைக்கு முடிவு
பதிப்பு: 2019 செப். 26 22:36
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: செப். 28 02:12
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#PresPollSL
#LKA
#ranilwickremesinghe
#SajithPremadasa
இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச வேட்பாளராக போட்டியிடவுள்ளார். இன்று வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனை அறிவித்தார். வேட்பாளராகப் போட்டியிடுவதில் கடந்த சில வாரங்களாக கட்சிக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன. ஆனாலும் சஜித் பிரேமதாசவே பொருத்தமான வேட்பாளரெனக் கட்சி உறுப்பினர்கள் பலர் அழுத்தம் கொடுத்திருந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ச்சியாகச் சந்தித்து உரையாடிய ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச ஆகிய இருவரும் முரண்பாட்டில் உடன்பாட்டை ஏற்படுத்தினர்.
 
வேட்பாளர் தெரிவில் நேற்றுப் புதன்கிழமை மாலை முடிவுக்கு வந்தனர். அந்த முடிவு குறித்து மத்திய குழுவுடன் இன்று கலந்துரையாடிய பின்னர் சஜித் பிரேமதாசவே ஜனாதிபதி வேட்பாளரென ரணில் விக்கிரமசிங்க அறிவித்தார்.

வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட சஜித் பிரேமதாச பிளவுபடாத ஒன்றிணைந்த இலங்கைக்குள் அதியுச்ச அதிகாரப் பகிர்வை வழங்குவதே தனது நோக்கமெனக் கூறினார்.

Sajith-26
இலங்கை ஒற்றையாட்சியின் அடுத்த ஜனாதிபதியாகப் பதவி வகிப்பதற்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக சஜித் பிரேமதாச அறிவிக்கப்பட்டதும் கிளிநொச்சியில் ஐக்கிய தேசியக் கட்சியின் முகவர்களினால் பொங்கல் பெங்கி இனிப்புப் பண்டங்களும் வழங்கும்போது எடுக்கப்பட்ட படம் இது. கொழும்பில் செயற்படும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பீடம் வடக்குக்- கிழக்குத் தாயகப் பகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சிகான ஆதரவைப் பெறத் தமது முகவர்கள் மூலம் நிதி வழங்கி இவ்வாறான களியாட்டங்களைச் செய்வதாக மக்கள் கூறுகின்றனர். கொழும்பில் இயங்கும் சிங்களப் பெரும்பான்மைக் கட்சிகளுக்கு ஆதரவளிக்கும் அரசியல் கலாச்சாரம் பலாத்காரமாகவும் நிவாரணங்கள் மூலமாகவும் திணிக்கப்படுவதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். சஜித் பிரேமதாசவிடம் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான நிலைப்பாடுகள் எதுவுமே இல்லையென கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன். கடந்த வாரம் ரணில் விக்கிரமசிங்கவை இலங்கை நாடாளுமன்றத்தில் சந்தித்தபோது கூறியிருந்தார். இந்த நிலையில் சஜித் வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டு மைத்திரி- ரணில் அரசாங்கத்தின்போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவது மற்றுமொரு நோக்கம் என்றும் சஜித் பிரேமதாச கூறினார்.

அதேவேளை, 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பத்தாம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலின்போது ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில், வடக்குக் கிழக்கு உள்ளிட்ட பிரதேசங்களில் ஆயிரம் விகாரைகள் கட்டப்படுமெனக் கூறப்பட்டிருந்தது.

இந்தத் திட்டத்தை சஜித் பிரேமதாச தனது வீடமைப்புத்துறை அமைச்சின் ஊடாக நிறைவேற்றி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இலங்கை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதம் ஒன்றில் குற்றம் சுமத்தியிருந்தார்.

இதேவேளை, இனப்பிரச்சினை தீர்வு விவகாரத்தில் சஜித் பிரேமதாசவிடம் உருப்படியான திட்டங்கள் எதுவுமேயில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன் கடந்த வாரம் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் தொடர்பாக உரையாடியபோது கூறியிருந்தார்.

இந்த நிலையில் சஜித் பிரேமதாச வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று அறிவிக்கப்பட்டார். சிங்கள பௌத்த ஆட்சியே தற்போது இலங்கைக்கு அவசிமானதென்று சஜித் பிரேமதாச அம்பாந்தோட்டையில் சென்ற 17 ஆம் திகதி இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கூறியிருந்தார்.

மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சியின் வேட்பாளராக இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச கடந்த ஓகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்தார்.

அதனையடுத்து மக்கள் விடுதலை முன்னணியெனப்படும் ஜே.வி.பியின் வேட்பாளராக அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கா அறிவிக்கப்பட்டார்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 17 பேர் போட்டியிடலாமென இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுத் தகவல்கள் கூறுகின்றன. எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி சனிக்கிழமை இலங்கை ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது.