இந்தோ பசுபிக் பிராந்திய அரசியல்

கொழும்புத் துறைமுக கிழக்குக் கொள்கலன் முனைய அபிவிருத்தியும் இந்தியாவும்

அமெரிக்க ஆதரவுடன் ஜப்பானையும் துணைக்கு அழைத்துள்ள புதுடில்லி
பதிப்பு: 2020 நவ. 06 21:46
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 07 19:43
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#indianocean
#region
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் குழறுபடிகளுக்கு மத்தியில் எவர் பதவியேற்றாலும் இந்தியாவைப் பொறுத்தவரை பெரியளவில் மாற்றங்கள் இருக்காது. ஏனெனில் இந்தோ- பசுபிக் பிராந்திய அமெரிக்க நலன் சார்ந்த விடயங்களைச் சாதகமாகப் பயன்படுத்தியே தென் ஆசியாவில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த வேண்டிய தேவை இந்தியாவுக்கு உண்டு. அத்துடன் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் இந்தோ- பசுபிக் பிராந்தியச் செயற்பாடுகள் என்பது அமெரிக்கக் கொள்கை வகுப்பாளர்கள், தீர்மானம் எடுப்பவர்களின் கைகளிலேயே உண்டு. ஆகவே யார் ஆட்சிக்கு வந்தாலும் ஆசியப் பிராந்தியச் செயற்பாடுகளில் மாற்றங்கள் இருக்காதென்றே கூறலாம்.
 
பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளதால் கோட்டாபய அரசாங்கத்தினால் இந்தத் திட்டத்தைச் செய்து முடிக்க முடியுமென இந்தியா நம்புகின்றது. ஆனால் கொழும்புத் துறைமுகத்தின் கிழக்குக் கொள்கலன் முனையம் நூறு வீதமும் இலங்கையின் திட்டமாகவே இருக்க வேண்டுமென துறைமுக ஊழியர்கள் கோரிக்கையுள்ளனர். எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்

நரேந்திரமோடி அரசாங்கத்தைப் பொறுத்தவரை டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பதவிக்கு வரவேண்டுமென அது எதிர்ப்பார்க்கிறது. ஏனெனில் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளோடு ட்ரம் மல்லுக்கட்டும் அரசியலால், மோடிக்குக் கொஞ்சம் லாபம் உண்டெனலாம். அதனால் ட்ரம்பை விரும்பக் கூடும்.

டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பதவிக்கு வரவேண்டுமென புதுடில்லியில் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. இதன் பின்னணியில் மோடியின் ஆதரவாளர்கள் உள்ளனர் என்பது வெளிப்படை. ஆனால் இந்தியக் கொள்கை வகுப்பாளர்களும் தீர்மானம் எடுக்கும் இராஜதந்திரிகளும் அமெரிக்காவின் ஆசியக் கொள்கைகளை உள்வாங்கியே செயற்பட விரும்புவர். அமொிக்கத் தேர்தலில் யார் வெல்வதென்பது அவர்களைப் பொறுத்தவரை சமய நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்ட விவகாரம்.

இந்த நிலையிலேயே அமெரிக்காவில் யார் ஆட்சி அமைத்தாலும் அமெரிக்க இந்திய வெளியுறவுக் கொள்கைகளில் மாற்றங்கள் இருக்காதென இந்திய வெளியுறவுச் செயலாளர் ஹர்ஷ் சிரிங்லா புதுடில்லியில் ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கூறியுள்ளார். நீண்டகாலமாக அமெரிக்காவுக்கு இந்து சமுத்திரப் பிராந்திய நலன் சார்ந்து இருக்கும் அக்கறை இந்திய ஆளும் தரப்புக்கும் தேவையானதாகவே அமைந்திருக்கிறது. நீண்டகாலமாக அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளின் ஒத்துழைப்பை இந்தியா எப்போதும் தக்க முறையில் பயன்படுத்தியிருக்கிறது என்ற தொனியிலேயே ஹர்ஷ் சிரிங்லா வெளியிட்ட கருத்தும் உள்ளது.

இந்து சமுத்திரத்தில் அமெரிக்கா,இந்தியா அவுஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நான்கு நாடுளின் கடற்படையினரின் மலபார் கூட்டுப் பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம் நிர்வாகம் இருந்தாலென்ன வேறு எவராவருடைய நிர்வாகம் இருந்தாலென்ன அந்த நிர்வாகம் எல்லாமே தம்முடன் ஒத்துழைத்துச் செயற்படும் என்ற நம்பிக்கை இந்தியாவுக்கு உண்டு. இரண்டு வேட்பாளர்களில் யார் வெற்றிபெற்றாலும் இந்தியா அதனை வரவேற்கும்.

அமெரிக்க இந்திய வெளியுறவுக் கொள்கைகள் ஏற்கனவே எழுதப்பட்டவை.

ஆட்சியாளர்களின் தன்மைக்கு ஏற்ப வெளியுறவுக் கொள்கை மாறக் கூடியவையும் அல்ல. அதற்கான சமீபகாலத்து உதாரணமாக கொழும்புத் துறைமுகத்தின் கிழக்குக் கொள்கலன் முனைய அபிவிருத்தித் திட்டத்தை இந்தியா ஜப்பானுடன் சேர்ந்து மேற்கொள்ள எடுத்த முயற்சிக்கு அமெரிக்கா உந்து சக்கதியாக நின்றதைக் கூறலாம்.

அத்துடன் இந்தியா ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் அமெரிக்காவைத் தங்கள் பக்கம் வைத்திருக்கும் நோக்கிலும் அவ்வாறான வெளியுறவுக் கொள்கைகளை வகுத்துள்ளதென்ற கருத்துக்களும் உண்டு. இந்தியா அயல்நாடு என்பதால், ஈழத் தமிழர்கள் விடயத்தில் அமெரிக்காவும் இந்தியா சொல்வதைக் கேட்டே அனைத்துச் செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருவது அமெரிக்க சோவியத் பணிப்போருக்குப் பின்னரான வரலாறு.

ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் அமெரிக்காவைத் தங்கள் பக்கம் வைத்திருக்கும் நோக்கிலும் இந்தியா தனது வெளியுறவுக் கொள்கைகளை வகுத்துள்ளதென்ற கருத்துக்களும் இல்லாமில்லை. இந்தியா அயல்நாடு என்பதால், ஈழத் தமிழர்கள் விடயத்தில் அமெரிக்காவும் இந்தியா சொல்வதைக் கேட்டே அனைத்துச் செயற்பாடுகளிலும் ஈடுபட்டிருந்தமை 1984ஆம் ஆண்டின் பின்னரான வரலாறு

2012ஆம் ஆண்டு இலங்கை தொடர்பாக ஜெனீவா மனித உரிமைச் சபையில் பராக் ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் சமர்ப்பித்திருந்த பிரேரணைகூட இந்தியாவின் ஆலோசனையுடனேயே அமைந்திருந்தது.

2002ஆம் ஆண்டு நோர்வேயின் ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்த சமாதானப் பேச்சுக்கள்கூட அவ்வப்போது இந்தியாவுக்கு தெளிவுபடுத்தப்பட்டிருந்தன. அதாவது நோர்வே சமாதானத் தூதுவர் கொழும்புக்கும் வன்னிக்கும் வந்து திரும்பும்போது புதுடில்லிக்கும் செல்வது வழமை.

ஆகவே இலங்கை விவகாரத்தில் அமெரிக்கா, இந்தியா சொல்வதைக் கேட்டே செயற்பட்டதுடன், இந்தோ- பசுபிக் பிராந்திய நலன்சார் விடயங்களில் அமெரிக்க விரும்பத்துக்கு ஏற்பவே இந்தியாவும் செயற்பட்டு என்பது வருகிறது என்பது கண்கூடு.

இதன் பின்னணியிலேயே இந்தோ- பசுபிக் பிராந்திய நலன்கள் தொடர்பாக அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ ஆசிய நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருந்த நாட்களில், இலங்கையின் கொழும்புத் துறைமுகத்தின் கிழக்குக் கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்யும் விடயத்தில் கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே இலங்கை அரசாங்கத்துக்குக் கடும் அழுத்தம் கொடுத்ததை நாம் பார்க்க வேண்டும்.

இலங்கையின் கொழும்புத் துறைமுகத்தின் கிழக்குக் கொள்கலன் முனையை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தம் ஒன்றில் இந்தியாவும் ஜப்பானும் இலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்து கைச்சாத்திட்டிருந்தபோதும், அந்தத் திட்டம் இதுவரை செயற்படுத்தப்படவில்லை. இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு எதிராக சீன சார்பு நிலைப்பாட்டைக் கைக்கொள்வததான் இதற்கான காரணமென்று நாம் இலகுவாக விளங்கிக் கொள்ளக் கூடாது. மாறாக இலங்கை இந்தியாவிடம் இருந்து எதிர்பார்க்கும் வேறு ஏதோவொரு விடயம் இன்னும் அதற்குக் கைகூடவில்லை என்றே அதை விளங்கிக் கொள்வது பொருத்தமானது.

2015ஆம் ஆண்டு 500மில்லியன் டொலர்களில் இத் திட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தபோதும், 2016ஆம் ஆண்டு மைத்திரி- ரணில் அரசாங்கதில் உருவான குழப்பங்களினால் அது கைவிடப்பட்டிருந்தது. ஆனாலும் 2019ஆம் ஆண்டு மே மாதம் இந்தத் திட்டத்திற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தது. ஆனால் அதே ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னரான சூழலில், அந்த ஒப்பந்தம் பற்றி எதுவுமே பேசப்படவில்லை.

இந்தவொரு நிலையிலேயே இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே கோட்டாபய ராஜபக்சவுக்குக் கடும் அழுத்தம் கொடுத்திருக்கிறார். அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ இந்தியாவில் உயர்மட்டச் சந்திப்புகளில் ஈடுபட்டிருந்தபோதும், கொழும்புத் துறைமுகத்தின் கிழக்குக் கொள்கலன் முனைய விவகாரம் கலந்துரையாடப்பட்டிருந்ததாக டில்லி உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.

பொம்பியோ ஆசிய நாடுகளுக்கான விஜயத்தின்போது. சென்ற 29ஆம் திகதி வியாழக்கிழமை இது தொடர்பான இணையவழிக் கருத்தரங்கு ஒன்றில் இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்திருந்தார்.

ஏசியன் இந்திய நிலையம், உலக விவகாரங்களுக்கான இந்தியக் கவுன்சில், பாத்ஃபைண்டர் உட்பட பல ஆய்வு நிறுவனங்கள் கூட்டாகச் சென்ற வியாழக்கிழமை தமக்குள் ஏற்பாடு செய்திருந்த இணையவழிக் கருத்தரங்கில் கொழும்புத் துறைமுகத்தின் கிழக்குக் கொள்கலன் முனைய அபிவிருத்தித் திட்டத்தின் அவசியம் தொடர்பாக இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே விரிவாக எடுத்து விளக்கியிருக்கிறார். அந்தத் திட்டத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டுமென அழுத்தமாகக் கூறப்பட்டுள்ளது.

சீனாவின் மண்டலமும் பாதையும் என்ற செயற்திட்டத்தின் வரைபடத்தில் கொழும்புத் துறைமுகத்தின் கிழக்குக் கொள்கலன் முனையம் இடம்பெற்றுள்ளது. இதனாலேயே கிழக்குக் கொள்கலன் முனையத்தின் அபிவிருத்தி வேலைகளை 2019ஆம் ஆண்டு மே மாதம் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் செய்து முடிக்க வேண்டுமென இந்தியா அழுத்தம் கொடுத்துள்ளது.

ஆனால் இதற்கு பௌத்த குருமாரின் எதிர்ப்புகள் இருந்ததால், தேர்தல் காலத்தில் இந்தத் திட்டம் கைவிடப்பட்டிருந்தது. எனினும் தற்போது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுள்ளதால் கோட்டாபய அரசாங்கத்தினால் இந்தத் திட்டத்தைச் செய்து முடிக்க முடியுமென இந்தியா நம்புகின்றது.

ஆனால் கொழும்புத் துறைமுகத்தின் கிழக்குக் கொள்கலன் முனையம் நூறு வீதமும் இலங்கையின் திட்டமாகவே இருக்க வேண்டுமென துறைமுக ஊழியர்கள் கோரியுள்ளனர். எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். தொடர்ந்து போரடியும் வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியில் தேசிய பாதுகாப்பு மற்றும் உபாய மார்க்க ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையின் தேசிய சொத்துக்களை வெளிநாடுகளுக்குத் தாரைவார்த்துக்கொடுக்கும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு சிங்களே என்ற அமைப்பின் பொதுச்செயலாளர் மடில்லே பன்னலோக தேரர் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவிடம் கோரியுள்ளார்.

சீனாவின் மண்டலமும் பாதையும் என்ற திட்டத்தின் மூலமாக இலங்கைக்குள் அதிகரித்து வரும் சீன ஊடுருவல்களைத் தடுப்பதற்கான எதிர்ச் செயற்பாடாகவே கொழும்புத் துறைமுகத்தின் கிழக்குக் கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வது என்ற போர்வையில் கால்பதிக்க வேண்டிய அவசியத் தேவை அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் உண்டு

சிங்களே என்ற அமைப்பால் நேற்று 5ஆம் திகதி வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே தேரர் இவ்வாறு கோரியதோடு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

இதனால் ஊழியர்கள், பௌத்த குருமாரின் கோரிக்கையை மீறிச்செயற்பட முடியாதவொரு நிலைமை இருப்பதாவே இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்குச் சொல்லியிருக்கிறது. ஆனால் அதனை ஏற்கும் நிலையில் இந்தியா இல்லை என்பதையே கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரின் அழுத்தம் எடுத்துக் காட்டுகின்றது. அமெரிக்க ஆதரவோடுதான் இத் திட்டத்திற்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதைத் தூதுவரின் முனைப்புக் காண்பிக்கிறது.

ஆகவே அமெரிக்காவில் ஆட்சி மாறினாலும் இத் திட்டத்திற்கு அமெரிக்க நிர்வாகம் ஒத்துழைப்பு வழங்கும். ஏனெனில் சீனாவின் மண்டலமும் பாதையும் என்ற திட்டத்தின் மூலமாக இலங்கைக்குள் அதிகரித்து வரும் சீன ஊடுருவல்களைத் தடுப்பதற்கான எதிர்ச் செயற்பாடாகவே கொழும்புத் துறைமுகத்தின் கிழக்குக் கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வது என்ற போர்வையில் அதற்குள் கால்பதிக்க வேண்டிய அவசியத் தேவை அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் உண்டு. அதற்கு ஆதரவாகவே ஜப்பானையும் இந்தியா கூட்டுச் சேர்த்துள்ளது.

ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் அமெரிக்கா மீண்டும் மீண்டும் இந்தியா சொல்வதைக் கேட்டே செயற்படும் என்பதில் சந்தேகமேயில்லை. ஏனெனில் மேற்படி சுட்டிக்காட்டப்பட்ட இந்தோ- பசுபிக் பிரந்திய நலன் என்பது அமெரிக்க இந்திய அரசுகளுக்கு முக்கியமானது என்ற அடிப்படையில், இந்தியாவைக் கடந்து ஈழத்தமிழர் விவகாரத்தில் அமரிக்கா கால் பதிக்காது.

அதேவேளை கோட்டபாய அரசு சிங்கள பௌத்த கடும் போக்காளர்களையும் ஊழியர்களின் போராட்டத்தையும் காரணம் காட்டி இந்தியாவிடம் இருந்து வேறு விட்டுக்கொடுப்புகளைச் சாதிக்க முற்படுகிறதென்பதும் தெளிவாகிறது. அந்த விட்டுக் கொடுப்புகள் ஈழத் தமிழர்களின் தேசிய அபிலாஷைகளுக்குக் குந்தகமாகவே இருக்கும் என்று நாம் ஊகிக்கலாம்.